வெள்ளி, மே 10, 2024

அரண்மனை 4

 

அத்துவானக் காட்டுல டபக்கின்னு ஒருத்தன தனியா விட்டுட்டு போறது மாதிரியான டிபிக்கல் பேய் பட சீன்கள் இருந்தாலும், பசங்க, அம்மா சென்டிமென்ட், தங்கச்சி பாசம் அது இதுனு கதை நல்லாருக்குது.  



தமன்னா ராக்ஷி கண்ணா ரெண்டு பேரு இருந்தாலும் கதைல மசாலா எலிமன்ட் ஃபுல்லா குறைச்சு த்ரில்லர் எலிமன்ட் சேர்த்துருக்காங்க.  

படம் முழுக்க சுந்தர் சி தான். காமெடிக்கு யோகி பாபு, கோவை சரளா, கணேஷ் இருந்தாலும் பல இடங்கள்ல 'எங்க முடிஞ்சா சிரிக்க வச்சி பாரேன்' ரகம் தான். ஆனா பூமர் குட்டிப்பசங்க (!!!) பல பேரு விழுந்து விழுந்து சிரிச்சாங்க. நமக்கு தான் ஒர்க் அவுட் ஆகலை.  

த்ரில்லர் சீன்ஸ் எல்லாம் செமத்தியா இருக்குது. அதுக்கு ஏத்த மாதிரி பக்கா bgm. ஆனா க்ளைமேக்ஸ்ல காதை மூடி பாக்குற அளவுக்கு அவ்ளோ இரைச்சல். 'ஜோ ஜோ' பாட்டு இதம் 

'என்னங்க நானும்' அப்டின்னு கேட்டு குஷ்பு அம்மன் பாட்டுக்கு ஆடிருக்காங்க. ஜோடிக்கு சிம்ரன். 53 அப்புறம் 48 வயசு. என்னா ஆட்டம்.

டைட்டில் போட்ட உடனே எந்திச்சு போய்டாதீங்க அப்பு. ரொம்ப எதிர்பார்த்த தமன்னா ராக்ஷி கண்ணா பாட்டு எண்ட் கிரெடிட்ல தான் வருது. ஒன் மோர் காவால சாங். 

இந்த வருஷ சம்மர் சீசனுக்கு படமே வர்ல. களை கட்டலை. இந்த கேப்ல அரண்மனை கல்லா கட்டப்போறது உறுதி. 

க்ளீன் ஃபேமிலி எண்டர்டெய்னர்

 

 

மார்கழி

 


 
காதலை தமிழ் சினிமா அணுகிய விதம் பல சமயங்களில் நகைப்புரியதாகத்தான் இருந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் பின்னாலே சுற்றுவது, கையை அறுத்துக்கொள்வது, மிரட்டி பணிய வைப்பது, கடத்திச் சென்று, கட்டாயத் திருமணம் என கோக்குமாக்குகள் இன்னும் பல.




ஒரு பெண்ணின் பார்வையில் காதலை நகர்த்திய படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் மாடர்ன் லவ் சென்னைத் தொடரில் 'மார்கழி' என்கிற எபிசோட் ஒரு மைல்கல். கமிங் ஆப் ஏஜ் வகையறா கதை. பெண்ணின் மனதை தொட்டு எழுதப்பட்ட ஒரு கவிதை.


பெற்றோரின் பிரிவினால் துயர்கொள்ளும் ஒரு பதின்ம வயது பெண், தனது மனதை திசை திருப்பி வலியைப் புறந்தள்ள தேவன் திருக்கோவிலில் choir வகுப்புக்குச் செல்கிறாள். அங்கு வரும் வேற்று மாநில இளைஞன் மீது மையல் கொள்கிறாள். என்னதென்று தெரியாது ஒரு இனம்புரியாத பரவசம் அவளது மனதில் மற்றும் உடலில். அவனை கவரும் பொருட்டு தன்னை அலங்கரித்துக் கொள்ளும் அந்த ஒரு நிமிட காட்சி பல உணர்வுகளை நம்மிடம் படபடவென கடத்தி விட்டுச் செல்கிறது. சோகமே உருவான முகம் முதல் காதலின் பட்டாம்பூச்சி பறக்கும் தருணம்வரை அவ்வளவு உணர்ச்சிகளை பாந்தமாக பரப்பி வைக்கிறார் சஞ்சுலா. எதிர் வீட்டுப் பெண் போல் இருக்கிறார். எங்கோ பார்த்த முகம் போல் உங்களுக்கும் தெரிந்தால் உங்கள் நினைவடுகளுக்குள்ளும் ஒரு ஜேஸ்மின்.


பொதுவாக இரண்டாம் முறை ஒரு படத்தைப் பார்ப்பதற்கு  என்றுமே விருப்பப்பட்டதில்லை. ஏனெனில் அந்த எக்ஸைட்மென்ட் இராது. ஆனால் மார்கழி எபிசோட் என்னுடைய அகராதி பிடித்த இந்த கட்டுக்கோப்பை பிடுங்கி எறிந்துவிட்டது. மூன்றாவது முறை பார்க்கிறேன். இன்னும் சில முறைகள் பாக்கி இருக்கின்றன. காரணம் ஒன்று படத்தின் நாயகி சஞ்சுலா சாரதி. இரண்டாவது காரணம் படத்தின் நாயகன் இளையராஜா. வழி நெடுகிலும் பன்னீர் பூக்கள் உதிர்ந்து உங்கள் தலையில் விழுந்து கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? அதுபோலதொரு உணர்வை மார்கழி முழுவதும் பனி போல விரவி இருக்கிறார். இதம். அது ஒரு சுகம். மீண்டும் மீண்டும் கேட்கும் போதை. மூன்றாவது காரணம் இந்த மார்கழி நம்மிடம் புதைந்து கிடக்கும் பால்யத்தை, முதல் காதலின் படிமங்களை, அந்த பட்டாம்பூச்சி தருணங்களை முடுக்கி எழுப்பி விடுகிறது.


அமேசான் பிரைமில் காணக்கிடைக்கிறது.

Reliance Digital

 

 

உறவினருக்கு AC வாங்குவதற்காக சென்றிருந்தோம். மூன்றாவது மாடியில் AC டிஸ்ப்ளே. போட்டோவைப் பாருங்கள். மேலே செல்வதற்கு லிஃப்ட், கடை முழுவதும் குளு குளு AC போன்று குறைவில்லை. 




ஆனால் சில நாட்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்ததால் அரை மணி நேரம் கூட நிற்க முடியவில்லை. உட்காரலாம் என்று சுத்தி சுத்தி பார்த்தால் எங்குமே நாற்காலி இல்லை. மாடிக்குச் செல்லும் படியில் சற்று நேரம் உட்கார்ந்து தான் L4, L5 டிஸ்கை ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். என்னுடைய நிலைமை பரவாயில்லை. கடையில் வேலை பார்க்கும் இளைஞர் இளைஞிகளை நினைத்துப் பார்த்தால் தான் பகீரென்றிருக்கிறது.  பில்லிங் கவுண்டர் கூட நின்ற நிலை தான். குறைந்த பட்சம் எட்டு ஒன்பது மணி நேர வேலை நேரம். உட்காரவே வழி இல்லை. அப்படியே உட்கார்ந்தாலும் கேமராவுக்குத் தெரியாமல் மறைந்து மறைந்து தான் உட்கார வேண்டும். 

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் நம்ம அண்ணாச்சி கடைகளுக்கும் வித்தியாசம் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அனைவரும் உருப்படிகள் தான் போலும். 😞😞

#RelianceDigital


செவ்வாய், மே 07, 2024

நிலாக் காய்கிறது

 


இசையை இன்ஜினீயரிங் என்று சொல்வதில் எனக்கு என்றுமே மாற்று கருத்து இருந்தது கிடையாது.  என்ஜினீயரிங் என்ன, பல படிகள் மேல் என்றே சொல்லலாம். அப்படி ஒரு செய்கை, தரம் அவ்வளவு பாடல்களில் பொதிந்து கிடக்கின்றன.



தனது பதினைந்தாவது வயதில் ஹரிணி பாடிய நிலா காய்கிறது பாடலின் வரிகள் கீழே,

நிலாக் காய்கிறது நேரம் தேய்கிறது

யாரும் ரசிக்கவில்லையே

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்

தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது

யாரும் சுகிக்கவில்லையே

இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்

காற்று வீசும் வெய்யில் காயும் காயும்

அதில் மாற்றம் ஏதும் இல்லையே

ஆஆஆ... வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும்

அந்த வாழ்த்து ஓயவில்லை

என்றென்றும் வானில்

 

இதில் ' மாற்றம் ஏதும் இல்லையே ' க்குப்பிறகு வரும் 'ஆ ஆ ஆ' ஆலாபனை தான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பாடலில் ஒரே ஒரு முறை மட்டுமே வரும் இந்த ஆலாபனை மற்றும் வரிகள் பிறகு வருவதில்லை. மத்தியஸ்தாயில் செல்லும் ' நிலாக் காய்கிறது முதல் உன்னைத் தீண்டும் ' வரிகள் பிறகு ' காற்று வீசும் ' இல் உச்சஸ்தாயிக்கு பயணிக்கிறது. அடுத்த வரிக்கு முன் லைட்டாக ஒரு breath எடுத்துக்கொள்ள இசைப்புயலால் கட்டமைக்கப்பட்டது இந்த ஆலாபனை என்பது அடியேனின் கருத்து.

' ஆ ஆ ஆ ' சின்னதாக போய்விட்டதே என்று பதறிய இசைப்புயல் இன்டர்லுடில் தரமான ஒரு கமகம் அதனூடே ஹரிணிக்கு திருப்தியாக ஒரு ஆலாபனை என்று விருந்தே படைத்திருப்பார். மேஜிக்.

நிற்க. ஹரிணி வெர்ஷன் பாடலில் மட்டும் தான் இது தகும். ஹரிஹரன் வெர்ஷனில் ஆல்ரெடி அவர் டீ குடிக்கும் அளவுக்கு ஒரு இடைவெளி விட்டுத்தான் ' ஆ ஆ ஆ ' க்கு வருகிறார்

கொட்டிக்கிடக்கின்றன. சுகித்திருப்போம்

வியாழன், மே 02, 2024

வீட்டு உபயோக பொருட்கள்



எது எதுக்குத்தான் ஒரு ரிவியூ போட்றதுன்னு இல்லையா.

இல்லை. எல்லாத்துக்கும் பண்ணுவோம். இந்த தடவை ஷார்ட்டா ஹோம் அப்லையன்சஸ் பத்தி.

மிக்சி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், ட்ரையர், டிஷ் வாஷர். அது என்ன ட்ரையர். சொல்றேன்.

 



ஜென்ரலா மிக்சி சவுண்ட் கம்மியா இருந்தா நல்லாருக்குனு நினைப்போம். ஆனா ப்ரீத்தி ஆல் இன் ஒன் வாங்கினபோது முத தடவ ஆன் பண்ணா, சவுண்ட் ஏழு ஊருக்கு கேட்டுச்சு. பரண்ல இருக்குற பழைய மிக்சியை எடுத்து ரிப்பேர் பண்ணிடலாம்னு தோன்ற அளவுக்கு சத்தம். ஆனா சர்வீஸ் பண்ண வந்த ஒருத்தர் தான் சமாதானப்படுத்தினாரு. 'சார், எந்த அளவுக்கு மிக்சி சவுண்ட் அதிகமா இருக்கோ அவ்ளோ நாள் மோட்டர் லைஃப். அதனால கவலைப்படாதீங்க' னார்.   ப்ராண்ட் உங்க விருப்பம்.  எதுனாலும் அதே கான்செப்ட் தான்.

பிரிட்ஜ் பொறுத்தவரை சிங்கள் டோர் பிரிட்ஜனா பின்னாடி இருக்குற தண்ணிய அடிக்கடி எடுத்து தூர ஊத்துற மாதிரி இருக்கும்.  டபுள் டோர்ல அந்த தொல்லை இல்லை. வசதியை பொறுத்து உங்க சாய்ஸ்.

வாஷிங் மெஷின்ல செமி, டாப் ஆட்டோ, பிரண்ட் ஆட்டோ இருக்குது. ஒவ்வொன்னுல ஒரு சவுகரியம். செமினா பிள்ளைக்கு சோறு ஊட்டுற மாதிரி கூடவே நிக்கணும். வாஷ்லேந்து ஸ்பின், தண்ணிய திறக்கிறது, ஆப் பண்றது எல்லாமே மேனுவல். ஒரு அவசரத்துக்கு ரெண்டு நிமிஷம் அலசுனா போதும்னு நினைக்கிறப்போ செமி கைகொடுக்கும். டாப் ஆட்டோமெட்டிக்ல ஒரு வசதி என்னன்னா துணி அதிகமா போடலாம். உள்ள போட்டு ஆன் பண்ணா போதும். ட்ரை ஆனப்புறம் எடுத்துக்கலாம். பக்கத்துல நிக்க வேண்டாம். ஆனா பிரண்ட் ஆட்டோமெட்டிக்ல  அவுக தான் பாஸ். மூடிட்டு ஆன் பண்ணிட்டா நாம மூடிட்டு நிக்க வேண்டிதான். அவுக மனசு வச்சி தான் திறக்க முடியும். ஒரு பெரிய டிரா பேக். உண்டியல்ல போடுற மாதிரி எண்ணி எண்ணி தான் துணியை போட முடியும். நிறைய போடணும்னா ரெண்டு மடங்கு செலவு பண்ணனும். ஆனா துணி தும்பைப்பூ மாதிரி துவைச்சு கொடுத்துடும். அப்படி ஒரு வாஷிங்.

ட்ரையர். இது என்ன புதுசா இருக்கே. நம்ம ஊர்ல ரொம்ப தெரிய மாட்டேங்குது. துணியை கம்ப்ளீட்டா ட்ரை பண்ணி கொடுத்துடும். அதான் வாஷிங் மெஷின்ல ஸ்பின் இருக்கே அப்படினு கேட்டா ஸ்பின் ஓடி முடிச்சப்புறம் காயப்போடணும். பட் இது உள்ள போட்டா துணிய அப்டியே எடுத்து மடிச்சு வைக்கலாம். கொடி கட்டவே தேவை இல்லை. ரெண்டு மணி நேரம் ஓடணும். இருக்குறதிலேயே குறைவா கரண்ட் யூஸ் பண்றது இவங்க தான். மெயின்டெனன்ஸ் கிடையாது. ஒரு வாரத்துக்கு ஒரு தடவ பில்டரை க்ளீன் பண்ணினா போதும். IFB ல மட்டும் தான் ட்ரையர் செப்பரேட்டா கிடைக்குது. ஒரு பேசிக் டாப் லோட் வாஷிங் மெஷின் ப்ரைஸ் இருக்கும். பட் செம ஒர்த்.

டிஷ் வாஷர். பாத்திரம் கழுவுற மெஷின். இருக்கறதிலேயே காஸ்டிலியான டிவைஸ் இதான். வாஷிங் பவுடர், ஷைன் லிகுய்ட், சால்ட் அப்டினு மூணு ஐட்டத்தை இது உள்ள கொட்டணும். ரெண்டு மாசத்துக்கு இதுக்கே ஐநூறு ரூபா ஆகும். காப்போர்ட்ல அடுக்கி வைக்கிற மாதிரி அழுக்கு பாத்திரங்கள்ல உள்ள அடுக்கி வைக்கணும். அது ஒன்னு பெரிய வேலை தான். ஆனா சும்மா கருக்க துலக்கி கொடுத்துடும். புதுசா வாங்கினா பாத்திரம் மாதிரி டால் அடிக்கும். அதான். இதுல பெரிய திருப்தி. பிளாஸ்டிக் அப்புறம் மண் சட்டியெல்லாம் வைக்க முடியாது. எல்லாம் சரி, பால் காய்ச்சின பாத்திரம் க்ளீன் பண்ணுமான்னா, சிம்ல வச்சி சைட்ல அடிபிடிக்காம காயவைச்சா பிரமாதமா கழுவி கொடுத்துடும். இல்லைன்னா கைல வச்சி கருக் கருக்னு தேய்ச்சி கழுவ வேண்டிதான்.

க்ளீனிங்ல ரேட்டிங் பண்ணா டிஷ் வாஷர் நம்பர் ஒன். மெயின்டெனன்ஸ் ஓரி பிரீ அப்டினு பாத்தா ட்ரையர் நம்பர் ஒன்னு. அவ்ளோதான்.