ஐம்பது ஐம்பத்தைந்து வயதை ஒத்த பெரியவர்களிடம் பேசினீர்கள் என்றால் ஜம்பமாக தங்களது பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள் அல்லது செட்டில் ஆகிவிட்டார்கள் என்று சொல்வதை பார்க்கலாம். சாரி. கேக்கலாம். இந்த ஜம்பங்கள் பொதுவாக கல்யாண வீட்டில் அல்லது ஏதேனும் விசேஷத்தில் நடக்கும்.
இந்த பெருமை பீதாம்பரம் எல்லாம் ஒரு வயது வரை தான். சிலருக்கு ஐம்பத்தி எட்டு. சிலருக்கு எழுபது. ஏன் ஐம்பத்தி எட்டு என்றால் வேலையிலிருந்து ஒய்வு பெரும் வயது அது. அதற்குப்பிறகு மாத சம்பளம் என்பது கிடையாது. பென்ஷன் என்பது 2005க்கு முன் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான். அதற்கு பிறகு சேர்ந்தவர்களுக்கு மூவாயிரம் சொச்சம் போல தான் வரும். அடுத்ததாக ஏன் எழுபது வயது என்கிறேன் என்றால் அந்த வயதில் உடல் தளர்ந்துவிடும். பென்ஷன்தாரராகவோ அல்லது ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவோ இருந்தாலும் அதாவது வெல்திற்கு (wealth) பஞ்சமில்லை என்றாலும் ஹெல்த் தன் வேலையை காட்டும் மூப்பு அது. உடலில் வலுவிருக்காது. யோகாசனம் உடற்பயிற்சி ஆரோக்யமான உணவு என இதையெல்லாம் பின்பற்றுகிற ஆள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து நாம் ஓடிக்கொண்டிருக்கும் ஓட்டத்தில் 'தன் உடல் பேணல்' என்னும் ஒரு சங்கதியே யாரிடமும் இல்லை. ஆகையால் அந்த தள்ளாத வயதில் ஓட்டம் எல்லாம் ஓடி முடிந்த பிறகு தன்னுடைய பிள்ளைகள் தன் அருகில் இருந்தால் தேவலாம் என்று தோன்றும். பெயரன் பெயர்த்திகளை கொஞ்சலாம் என்ற எண்ணம் தலைதூக்கும். ஆனால் நடப்பது என்ன?
உலகமயமாக்கலுக்குப் பிறகு ஒரே ஊரிலேயே படித்து அங்கேயே வேலை தேடி திருமணம் செய்து உற்றார் உறவினர் என்று சொந்தபந்தத்துடன் வாழ்ந்தோம் என்ற கொடுப்பினை 80க்கு பிறகு பிறந்தவர்களுக்கு இல்லை. படிப்பிற்கும் பரதேசம் செல்ல வேண்டும். திரவியம் தேடுவதற்கும் திரைகடல் ஓட வேண்டும். மணம். அது மனம் போன போக்கில். பெற்றோரின் நிலைமை? ஊனிற்கே ஊன்றுகோல் இல்லை எனும்போது மற்றவை கேள்விக்குறியாய் நிற்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.
இது நம் தலைமுறையின் எழுதப்படாத நியதி. குறை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எந்த பெற்றோரானாலும் தமது பிள்ளைகள் எங்கு சென்றாலும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரார்த்தனையாக இருக்கும். ஆகையினால் தற்போது பெற்றோரை விட்டு பிரிந்திருப்போர் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம். மாறாக ஓரிரு நாட்களுக்கு தொலைபேசியில் ஒரு உரையாடல் அல்லது குழந்தைகளை அவர்களிடம் வீடியோ காலில் அடிக்கடி காணித்தல் போன்று சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் பெற்ற கடனை முடிந்த வரை தீர்த்தல் நலம்.
ஆனால்,
ஆனால்,
இனிமேல் வெகு கவனமாக இருக்க வேண்டியது நீங்களும் நானும் தான். அதாவது நாற்பதை தொடும் பெற்றோர்கள் தங்களது ஆழ்மனதில் அச்சாரமிட்டு கொள்ளவேண்டியது இதைத்தான். உங்களது குழந்தைகள் முதுமையில் உங்கள் அருகில் இருக்காது. அட இது தெரிந்த விஷயம் தானே என்று நீங்கள் கேட்கலாம்?
தெரிந்தது தான். இல்லை என்று சொல்லவில்லை. இன்று நீங்கள் பரதேசம் சென்றிருப்பது உங்களது திறமையினால். அல்லது உங்களது முயற்சியினால். வெகு சிலர் மட்டுமே நமது தலைமுறையில் படிப்பிற்காக வெளியே சென்றிருப்பர். மற்றவரெல்லாம் பணியின் பொருட்டே உள்ளூரில் இருந்து வெளியேறுகின்றனர். ஆனால் நாளை உங்கள் பிள்ளை வெளியில் சென்று படிக்க போகிறது என்றால் அது உங்களது இருபது இருபத்தைந்து வருட உழைப்பின் ஊதியத்தில் தான். மெரிட் மற்றும் ஊக்கத்தொகை கேஸ்களை இதில் புறந்தள்ளி விடலாம். படிப்பதற்காக டாட்டா காட்டிவிட்டு செல்லும் பிள்ளைகள் மீண்டும் வருவது என்பது அவர்களுக்கு இயலாத காரியம். நாக்கில் தேன் தடவி விட்ட பிறகு சுவை தெரியாமல் இருக்குமா என்ன? தவிரவும் எப்பொழுதேனும் அவர்களை பார்க்க வேண்டும் என்று எண்ணி அவர்களை ஒருவேளை நீங்கள் அழைத்தால் 'யாரையும் சார்ந்து இருக்காமல் தைரியமாக தனித்து வாழுங்கள். முதுமையை என்ஜாய் செய்யுங்கள்' என்ற நமக்கே வாழும் கலையெல்லாம் சொல்லித் தருவார்கள்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். என்னுடன் பணிபுரியும் ஒருவர் தான் ஒய்வு பெரும் நேரத்தில் தன் பிள்ளையை கல்வி கற்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். அதுவும் எப்படி என்றால் தனது முப்பது வருட சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி அனுப்பினார். கிளம்பிய அந்த பிள்ளையோ படித்து முடித்த பின் குடியுரிமை கிடைக்கும் பொருட்டு அங்குள்ள வெளிநாட்டு பெண்ணை மணம் புரிந்து கொண்டான். மருந்துக்கும் இந்த பக்கம் எட்டி பார்க்கவில்லை. கடனை வட்டியுடன் இவர் கட்டிக் கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு ஒரு முறை மாரில் வலி வந்தபோது உடன் பணிபுரிந்த ஒய்வு பெற்ற ஊழியர்களின் பொருள் மற்றும் உடல் உதவியுடன் பிழைத்துக்கொண்டார். இது போன்றவைகள் உங்களைச்சுற்றியும் நடந்துகொண்டிருக்கும். அவசரகதியில் இதை உணரக்கூட நமக்கு நேரமில்லாமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிக்கொண்டிருப்போம்.
சரி. என்ன [பண்ண வேண்டும்?
1. உண்ணாமல் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து சேர்த்த செல்வத்தை முழுவதும் குழந்தைகளுக்கு என்று ஒதுக்கிவிடாதீர்கள். தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும். என் குழந்தை என் ரத்தம் என்ற ஈர வெங்காய செண்டிமெண்டெல்லாம் வேண்டாம். நாளை வயதான காலத்தில் துணையின்றி மகனோடோ மகளோடோ தள்ளாத வயதில் ஒரு வேளை உணவுக்கு கூச்சத்துடன் நிற்பதை மனதில் இருத்தி பாருங்கள். அவ்வாறெல்லாம் என் குழந்தை செய்யாது என்று நினைத்தால் நீங்கள் உங்கள் பெற்றோருக்கு அவர்களது கடைசி காலத்தில் என்ன செய்தீர்கள் அல்லது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு முறை நிறுத்தி கவனித்து பாருங்கள். இதில் பன் மடங்கு பெருகித்தான் நாளை நமக்கும் வரும் என்ற நிதர்சனத்தை அவதானியுங்கள். கர்மா ரிட்டர்ன்ஸ் போன்ற வஸ்துவுக்கே நான் போகவில்லை. தலைமுறை இடைவெளி அந்த அளவுக்கு இருக்கிறது.
2. ஓய்வுக்கு பின் மாத பென்சன் வந்தால், இறக்கும் வரை நீங்களும் உங்கள் துணையும் மூன்று வேளை உணவு, கோவில் மற்ற போக்குவரத்து செலவுகள் என ஒப்பேற்றிவிடலாம். தனியாரில் தான் வேலை பார்க்கிறேன் என்று நீங்கள் சொன்னால், ஓய்வுக்குப்பின் செலவழிப்பதற்காக இன்றே உங்கள் சம்பாத்தியத்தில் குறைந்தபட்சம் முப்பது சதவீதத்தை சேமித்து வைத்து விடுங்கள். இன்று மாதச்செலவு முப்பதாயிரம் என்றால் முப்பது வருடத்தில் மூன்று லட்சம் ஆகலாம். வெறுமே பணத்தை வைக்காமல் ம்யூச்சுவல் பண்ட், ஸ்டாக், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். 6% முதல் அதிகபட்சம் 15% தான் வட்டி கிடைக்கும். ஒன்றை இரண்டாக்குகிறேன் என்று வேறு எதிலாவது போட்டு ஏமாந்துவிடாதீர்கள். முதலுக்கே மோசம்.
3. முன்பே சொன்னது போல், பேங்க் பாஸ்வர்ட், பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றை துணையிடமோ உற்ற நட்புகளிடமோ சொல்லி வைப்பது மிக நன்று. எதிர்பாராத சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் இந்த தகவல் அவர்களை காப்பாற்றும். இன்றைய தேதியில் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அனாமத்தாக இந்திய வங்கிகளில் கோரப்படாமல் கிடக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
4. அறுபது வயதில் ஓய்வுபெற்ற பின் அதுவரை அறக்க பறக்க ஆறாவது கியரில் ஓடிய வாழ்க்கையாக இல்லாமல் மிக மெதுவாக நகரும் வாழ்க்கைக்கு தகவமைத்து கொள்ளுவது என்பது சிரமமான ஒன்று தான். செய்து தான் ஆக வேண்டும். அதுவரை அர்த்தம் இல்லாமல் பேசிய பேச்சுக்களை கேட்பதற்கு அலுவலகத்தில் ஒரு கூட்டம் இருந்திருக்கும். ஆனால் சாய்வு நாற்காலியில் நீங்களும் அருகில் உங்கள் துணையும் தான். இதுநாள் வரை உங்கள் துணையிடம் நீங்கள் எந்த அளவுக்கு அன்பு செலுத்தியிருக்கிறீர்கள் என்பதை ஓய்வுக்குப் பின் தெரிந்து கொள்ளலாம். எனக்கு தெரிந்த ஒருவர் ஒய்வு பெற்ற ஒரே வாரத்தில் சூசைட் அட்டெம்ப்ட் செய்தார்.
5. 'காஃபி போடவா?' என்று கேட்க யாரும் இல்லாமலோ அல்லது 'கிழம் இன்னும் இழுத்துட்ருக்கு' போன்ற வசவுச்சொல்லோ கேட்காமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் உயிருடன் இருக்கும்பொழுதே சொத்தை வாரிசுக்கு எழுதி வைத்து விடாதீர்கள். 'என்னுடைய இறப்புக்கு பின்' என்று தெளிவாக உயில் எழுதி வைத்துவிடுங்கள். அன்பு கின்பு என்றெல்லாம் கணக்கு போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. வாரிசுகளின் வாழ்க்கைத்துணையை பொறுத்துதான் அதெல்லாம்.
6. ஒருவேளை ஏதேனும் ஒரு காரணத்திற்காக துணை நம்முடன் இல்லையென்றால் மிச்ச சொச்ச வாழ்க்கையை தனிமையில் கழிக்க முடியாது. அது ஒரு கொடிய சாபம். முதுமையில் தனிமை என்பதைத்தான் வறுமை என்று குறிப்பிடுகிறேன். ஆதலினால் இப்பொழுதிருந்தே ஒரு ஆத்மார்த்தமான நட்பை மெனெக்கெட்டு வளர்த்து கொள்ளுங்கள். வயதான காலத்தில் பொலபொலவென்ற பேச்சுத்துணைக்கு உதவும். பேங்கில் ஏன் வயதானவர்கள் கூட்டம் என்று புரிகிறதா? அல்லது தனியே இருக்கும் போது படிப்பது, வரைவது படம் பார்த்தல் அல்லது தூங்குவது என ஏதேனும் ஒன்றை பழக்கி உங்கள் மனதை திசை திருப்பி வைக்க முயற்சி செய்யுங்கள். பின்னர் கடிவாளம் போடுவது என்பது கடினம். உதாரணத்திற்கு சேர்ந்தாற்போல் உங்களால் இரண்டு பக்கம் எந்தவித டைவெர்சனும் இல்லாமல் வாசிக்க முடிகிறதா?
7. இந்த ஸ்ட்ரெஸ் டென்ஷன் போன்ற நோய்களில் இருந்து தப்பித்தால் நாம் அறுபது வயதில் இருந்து அதிகபட்சம் தொண்ணூறு தொண்ணூற்றைந்து வரை உயிருடன் இருக்கலாம். இப்பொழுதிருந்தே செலவை முடிந்த மட்டும் சுருக்கிக் கொள்ளலாம். சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. வாழலாம். தலையை அடமானம் வைத்து வேண்டாம். ஆகையால் வருமானம் இல்லாமல் அந்த முப்பது வருடத்தை சமாளிக்க இப்போதே சேமிக்க ஆரம்பித்துவிட வேண்டும்.
8. அதிக நாட்கள் உயிரோடிருந்தாலும் எவ்வாறு வாழ்கிறோம் என்பது அதி முக்கியம். ஆதலால் கொஞ்சம் உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு, தியானம், யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி என்று உங்கள் உடலுடன் உரையாடி வலு சேர்த்துக்கொள்ளுங்கள். இறுதி வரை நம்முடன் பயணிக்க போவது நம்முடைய உடல் மட்டுமே. Wealthy health is a must.
9. இறுதியாக உங்கள் வீட்டில், வீட்டுக்கு அருகில் அல்லது நீங்கள் சந்திக்கும் வயதானவர்களுடன் அவ்வப்போது பத்து பதினைந்து நிமிடம் நேரம் செலவழியுங்கள். யாராவது பேச மாட்டார்களா என்று நாமே பின்னால் தேடப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.