சோழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோழன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, நவம்பர் 30, 2012

தேடிக்கண்டுகொண்டேன்-3- ராஜராஜசோழன் சமாதி


                கும்பகோணத்தில் ஒரு திருமணம். அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலங்களை தரிசித்து வரலாம் என்று கிளம்பினேன். பொன்னியின் செல்வன் படித்து முடிதிருந்த நேரமது. கீழப்பழையாறை, குடந்தை, தஞ்சை, என்று படித்து படித்து அதை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற அவா நீண்ட நாட்களாக இருந்தது. தஞ்சை கோவிலை ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காது என்றாலும், இம்முறை ஒரு மாறுதலுக்காக குடந்தை அருகில் உள்ள கோவில்களை தரிசிக்கலாம் என்று ஓர் முடிவு.

           திருமணம் ஸ்வாமிமலை என்பதால் அருகில் உள்ள பட்டீஸ்வரம் சென்றோம். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூகுளை சொடுக்கியதில் மும்முடிச்சோழர், நமது கதையின் கதாநாயகர், மாமன்னன் ராஜராஜ சோழனின் சமாதி உடையாளுர் என்னும் கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. யதேச்சையாக கிடைத்த இத்தகவல் மகிழ்ச்சியை அளித்தாலும் அதை காண்பதற்க்கு எப்பொழுது நேரம் அமையுமோ என்ற எண்ணம் வருத்தத்தை கொடுத்தது.

           ஆனால் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக பட்டீஸ்வரத்திலிருந்து சரியாக மூன்று கிலோமீட்டரில் உடையாளுர் இருந்தது. தாமதிக்காமல் வண்டியை அந்த திசையில் திருப்பினோம். சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜா ராஜா சோழன் கட்டிய பல கோயில்களில் ஒன்று கைலாசநாதர் ஆலயம். இருக்குமிடம் உடையாளுர். கோயில் மிக சமீபத்தில் புணரமைத்திருக்கிறார்கள். அருகிலேயே ஒரு பள்ளி கட்டப்பட்டிருக்கிறது.
Udaiyaaloor Kailasaanathaar Aalayam
                  அங்கு இருந்த ஒரு முதியவரிடம் சந்தேகத்துடன், இங்கு ஏதோ ஓர் சமாதி என்று கேட்டதும் தான் தாமதம். எப்படி செல்ல வேண்டும் என்று வழியை கூறினார். பின்பு தான் தெரிந்தது, அந்த சமாதி அந்த கிராமத்திற்கே ஒரு அடையாளமாக இருக்கிறதென்பது.
           பண்டைய மன்னார் ஆட்சியின் போது, ராஜா வம்ஸத்தினர் யாரேனும் மரணித்தால் அவர்களை எரியூட்டி அவர்களின் அஸ்தியை கொண்டு ஓர் சமாதி அமைப்பார்கள். அதற்கு பள்ளிபடை என்று பெயர். அவ்வாறு ஏற்படுத்தபட்ட பள்ளிபடை வீடு தான் உடையாலூரில் இருக்கிறது.
           இவ்வுலகமே போற்றும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னனின் சமாதி இருக்கும் நிலைமை கண்களில் கண்ணீர் வரவழைத்து விடுகிறது. அதுவும் கல்கி, அனுஷா வெங்கடேசன், மற்றும் பாலகுமாரன் போன்றவர்களின் எழுத்துக்களை படித்து இவ்வாறெல்லாம் வாழ்ந்து ஆட்சிபுரிந்த மன்னரா, அவருக்கா இந்த நிலைமை என்பது சற்றே ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறது.
            குடிசை என்று கூட சொல்லமுடியாத ஒரு கூட்டடியின் கீழ் சாய்ந்த நிலையில் ஒரு சிவலிங்கம். நான்கு கழிகள் ஊன்றபட்டு, அதன் மேல் சில ஓலையை வேய்ந்துள்ளார்கள். அதன் அருகில் இருக்கும் குடிசையில் வாழும் ஒரு ஏழை விவசாயியின் தயவில் இருக்கிறார், மாமன்னர்.







           நாங்கள் உள்ளே சென்றதும் அவராக வரவேற்று, வயது எண்பதை கடந்திருக்கும், பேச ஆரம்பித்தார். ராமன் சேதுராமன் அய்யர் (இவர் யாரென்பது தெரியவில்லை) என்பவர் அந்த ஊருக்கு விஜயம் செய்திருந்த வேளையில், சமாதி இருந்த இடத்தை வந்து பார்த்ததாகவும், பின்பு அருகில் இருக்கும் பால்குளத்தி அம்மன் கோவில் இருக்கும் கல்வெட்டை ஆராய்ந்ததாகவும் சொல்கிறார்.அக்கல்வெட்டின் எழுத்துக்களை மை தடவி பின் ஒரு காகிதத்தில் எடுத்து தஞ்சை மற்றும், சென்னை சென்று அந்த சமாதி ராஜா ராஜனின் சமாதி தான் என்பதை உறுதி செய்துள்ளனர். பின்பு ஊராரிடம் விசாரித்த போது, சமாதியில் இருந்த இரண்டு கல் தூண்களை எடுத்து சென்றுதான் பால்குளத்தி அம்மனின் கோவிலில் வாசலில் முட்டுக்கொடுத்துள்ளனர் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. கல்வெட்டு கரந்தை மொழியில் இருப்பதாக சொல்கிறார்கள்.

           கி.பி. 1300 சமீபத்தில் பாண்டிய மன்னர் ஆட்சியில் அல்லது மாலிக் படை எடுத்து வந்த காலங்களில் இப்பள்ளிபடை சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று வரலாறு கணிக்கிறது. மேலும் சுமார் ஒரு அம்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெள்ளத்தில் மிச்சம் மீதி இருந்த சுவர்கள் மற்றும் தூண்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. அதுபோக அருகில் உள்ளவர்கள் அங்கிருக்கும் கற்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சென்றுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார். இன்று வெறும் கொட்டடியும் சிவலிங்கமும் மட்டுமே மீதியுள்ளன.

           ராஜராஜ சோழனின் சமாதியை உள்நாடு மட்டும் வெளிநாட்டில் இருந்தும் வந்து பார்த்து செல்கிறார்கள் என்பது அவர் வைத்திருக்கும் நோட்டில் விட்டு செல்லப்பட்டிருக்கும் கைய்யொப்பத்தில் தெளிவாகிறது. உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மன்னனுக்கு ஒரு மணிமண்டபம் அமைக்கும் முயற்சி நடக்கிறது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

           விடைபெறும் நேரத்தில் சமாதியை திரும்பி பார்த்த பொழுது மனது கனத்துவிட்டதை தவிர்க்க முடியவில்லை.


தேடல் தொடரும்.


திங்கள், ஆகஸ்ட் 01, 2011

பொன்னியின் செல்வன்



பொன்னியின் செல்வன் வரலாற்று பெட்டகத்திற்கு இது ஒரு பாத மலர்.


முதன் முதலாக தஞ்சாவூர் கோவில் எனக்கு பரிச்சயமானது பன்னிரெண்டாம் வகுப்பில் தான். ஒரு பேருந்தில் மொத்தமாக அறுபது பேர் ஏறிக்கொண்டு நான்கு நாளில் இருபது இடம் சுற்றி வந்தோம். பத்தோடு பதினொன்றாக தான் அந்த கோவில் அறிமுகமானது. ஆனாலும் அந்த இருபதில் இன்று வரை நினைவில் நிற்பது அது ஒன்று மட்டுமே. எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத்த் தூண்டும் ஒரு அதிசயம். அதை ஸ்தாபித்தவர் பெருங்கோ ராஜ ராஜ சோழன் தான் என்பதும் பொன்னியின் செல்வன் வரலாற்றுப்புதினமும் அவரை பற்றி தான் என்பதும் சமீப காலம் வரை தெரியவில்லை. பொன்னியின் செல்வனை பற்றி பல முறை கேள்வி பட்டிருந்தும் அதை படிப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை. இன்னொரு காரணம் அதனுடைய பிரமாண்டமான் தொகுதிகள். மொத்தம் ஐந்து பாகங்கள். இரண்டாயிரத்து நானூறு பக்கங்கள்.

கதை மொத்தமாக ஐந்து மாதங்களில் நடக்கிறது. சக்கரவர்த்தி சுந்தர சோழர். அவருடைய புதல்வர்கள் ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மர்(பிற் காலத்தில் ராஜ ராஜ சோழர்), புதல்வி குந்தவை நாச்சியார். சுந்தர சோழரின் மந்திரி அநிருத்த பிரம்மராயர். அவருடைய சீடன் ஆழ்வார்க்கடியான், கோட்டையின் தன அதிகாரி பழுவேட்டரையர். இதைத்தவிர வானதி தேவி, மணிமேகலை, ஒடக்காரப்பெண் பூங்குழலி.
கதையின் நாயகி நந்தினி. நமது கதாநாயகன் வந்தியத்தேவன். முக்கியமான பாத்திரங்கள் இவ்வளவே.

சுந்தர சோழருக்கு பிறகு அரியாசனம் ஏறப்போவது யார், அதை தடுக்கும் பாண்டிய நாடு ஆபத்துதவிகள், அதை லாவகமாக முறியடிக்கும் வந்தியத்தேவனின் சாமர்த்தியம்,இவ்வளவுதான் கதை. கல்கியின் ஒவ்வொரு வரியும் முத்து முத்தாக உள்ளது. ஐந்து மாதங்கள் தான் கதை என்றாலும் அவர் அதை எடுத்து செல்லும் பாங்கு வியக்க வைக்கிறது. எந்த பக்கதிலேனும் சலிப்பு தட்டவில்லை. உதாரணத்திற்கு அருள்மொழிவர்மர் கடலில் விழுவதிலிருந்து அவர் படகில் ஏறும் வரைக்கும் நாமும் அந்த சுனாமியில் அகப்பட்டது போல் திக் திக் என்கிறது. கதையில் அதிகமான திருப்புமுனைகள். கதாபாத்திரங்கள் முழுவதும் நமக்கு வந்தியத்தேவனாலேயே அறிமுகபடுத்த படுகின்றன. கதையின் விறுவிறுப்பிற்கு காரணம் நந்தினி தேவி. வில்லி. அழகான வில்லி. எந்த வீரன் முன் வந்தாலும் மயங்கி விடும் அழகு. விரசமில்லாத விவரிப்புகள். கல்கியின் தனித்துவங்களில் இது ஒன்று. கதை முழுக்க வரும் ஆழ்வார்கடியான் நமது கதாநாயகனுடன் அடிக்கும் நகைச்சுவைகள் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. லூட்டி டைப். சில நேரங்கள் மட்டுமே வரும் கரிகாலன் மீது நமக்கு மாபெரும் வீரனுடைய மரியாதை வருகிறது. ஆனாலும் அவன் இறந்த மர்மம் விலகவில்லை. அதை நேயர்களின் முடிவிற்கு விட்டுவிட்டார்.

அந்த காலத்தில் நடைபெற்ற அரசியல், அரியாசனம் ஏற நடக்கும் சூழ்ச்சிகள், எதிரிகளின் சதி, அதை தடுக்கும் ஆலோசனைகள் ஆகியவை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர்களின் கோட்டை, சுரங்கப்பாதைகள், ஆற்றுபடுகை, கடல் பிரயாணம், குதிரை பயணங்கள் எல்லாமே ஒரு முறையாவது அந்த ராஜ்யத்தை பார்த்து விட வேண்டும் என்ற உவகையை ஏற்படுத்துகிறது. பாரத கண்டத்தில் பாதியை தன் கட்டுக்குள் வைத்திருந்த சோழ சாம்ராஜ்யத்தில் மேல் தனி மதிப்பு வருகின்றது.
இத்தனை பெரிய கோபுரம் எழுப்ப அவருக்கு எப்படி தோன்றிருக்கும்? பொன்னியின் செல்வர், காவிரியின் புதல்வர், ஈழங் கொண்ட கோப்பெருமான், அருமொழி வர்மர், ஸ்ரீ ராஜா ராஜ சோழருக்கு இந்த யோசனை எப்படி வந்தது. ஈழத்து போரின் பொது அங்கு அவர் புத்த விகாரங்களை காண்கிறார். புத்தருக்கே இவ்வளவு பெரிய சிலை என்றால் அதிகார நந்தியிடம் அனுமதி வாங்கி நாம் தரிசிக்கும் லிங்கத்திற்கு எவ்வளவு பெரிய சிலை வடிக்க வேண்டும் அதனுடைய கோபுரம் எப்படி இருக்க வேண்டும் என்ற அவாவில் பிறந்து தான் தஞ்சை கோவில்.

1950 முதல் 1955 வரை இப்புத்தகம் எழுதபட்டிருக்கிறது. அதுவும் சுருக்கென்று கதையை முடித்திருக்கிறார். இன்னுமொரு ஐந்து பாகம் எழுதியிருந்தாலும் வாசகர்களின் ஏகோபித்த ஆதரவு இருந்திருக்கும். அனால் சற்றென்று நம்மை விட்டு வந்தியதேவனும், அருள்மொழி வர்மரும் பிரியும் துக்கத்தை போக்க அனுஷா வெங்கடேஷின் 'காவிரி மைந்தன்' மூன்று பாகங்களாக எழுத பட்டிருக்கிறது. வாசகர்களுக்கு அது ஒரு ஆறுதல் . மேலும் தஞ்சை கோவில் எப்படி கட்டப்பட்டது, அதற்கு போட்டியாக ராஜேந்திர சோழன் ( ராஜ ராஜருடைய புதல்வர்) கங்கை கொண்ட சோழபுரம் எழுப்பியது எவ்வாறு என்பதை பாலகுமாரன் 'உடையாரில்' ஆறு பாகங்களில் விவரிக்கிறார்.

எது எப்படியானாலும் பொன்னியின் செல்வன் படிக்கும் பொழுது தஞ்சை அரண்மனை மற்றும் கோவிலை பார்த்து வர வேண்டும் என்று எழும் ஆசையை மறுதலிக்க முடியாது