வியாழன், ஏப்ரல் 07, 2022

கொஞ்சம் பேசுங்க

 வீட்டுக்கு முன்னாடி நிக்கிற வாதாங்கொட்டை மரத்துல, வெள்ளை ஈக்கள் னு சொல்லப்படுற ரூக்கோஸ் சுருள் பூச்சிகள் வந்துருச்சி. ஒரு இலை விடாம எல்லா  இலையையும் பதம் பாத்துருச்சி. போதாகுறைக்கு  பனி பொழியிற மாதிரி வெள்ளை பூச்சிகள் பறக்க ஆரம்பிச்சி ஒரே தொந்தரவு. மருந்து அடிக்க மனசில்லாம எல்லா கிளையையும் கழிச்சி விட்டுட்டோம். கீழே கிடந்த அந்த கிளை எல்லாமே காய்ஞ்சு நல்ல காய்ஞ்ச விறகா மாறிடிச்சு. அடுப்புல நின்னு எரியும். அந்த 1.5’C எரிடக்கூடாதேங்க்றதுக்காக (குளோபல் வார்மிங்) காரணமா, நம்ம விறகு எரிக்கிறது கிடையாது, பின்னாடி வீட்டுல கேட்டுப்பாக்கலாமேனு தோணுச்சு.


அங்க ஒரு பாட்டி இருக்காங்க. வீட்ட சுத்தி முளுசாவே மூத்த குடி மக்கள் தான்.  நீங்க விறகு எரிப்பிங்களா பாட்டினு கேட்டேன்.

நமக்கு வயசாயிடுச்சு பா, இப்போ லாம் எரிக்கிறது இல்லனு சுருக்கமா முடிச்ச பாட்டிகிட்ட, அடுத்ததா ஒரு கேள்வி கேட்டேன்

 

“உங்க பக்கத்து வீட்டுல விறகு எரிப்பாங்களானு”. அவ்ளோதான்.


"அந்த அம்மா வென்னி போடும். சில சமயம் போட மாட்டாங்க. மேல தண்ணி தொட்டிலேந்து தண்ணி நிரம்பி இங்க தான் கொட்டுது, ஈரமாய்டும். எப்படி இப்போ எரிக்கிறாங்கனு தெரில? அந்த அம்மாவுக்கு இப்போ தான் ஒரு குழந்தை பிறந்துருக்கு. மூணு வயசாவுது. ஆனா அது வேலைக்கு போகுது. அதுங்க வீட்டுல வேல பாக்க ஒரு வயசான ஆள  வீட்டோட வச்சிருக்காங்க. அந்த ஆளுக்கு மூணு பொண்ணுங்க. மாசம் 15000 சம்பளம் கொடுக்குறாங்க போல. அந்த வேலையாளோட பொண்ணு இந்த அம்மாவுக்கு எப்பவும் போன் பண்ணி, சம்பளம் போடா சொல்லிட்டே இருக்கும். அந்த ஆளு கடைக்கு போறது, பிள்ளைங்கள பாக்குறது அப்டி இப்டினு எடுபிடி வேல மாதிரி செய்யுறாரு. இதுக்கு முன்னாடி ஒரு அம்மாவ வேலைக்கு வச்சிருந்தாங்க. ஆனா அது காதுல கம்மல் போடாது. பாக்க பொம்பள மாதிரியே இருக்காது. இந்த குழந்தைய அது அடிச்சிருச்சி. அதனால இந்த குழந்தை அந்த அம்மாட்ட போகாது. பாத்தாலே அழும் போல. அதனால அந்த அம்மாவை நிப்பாட்டி இந்த ஆள வேலைக்கு வச்சிருக்காங்க. இந்த வீட்ல இருக்குற அந்த அம்மாவோட புருஷன் சிவில் காண்ட்ராக்டர். கூட பொறந்தவங்க 5 பேர். அதுல ஒரு அக்காவோட வீடு தான் இது. இவரு இப்போ குடியிருக்கார். மாச வாடகைலாம் வாங்க மாட்டாங்க. அப்பப்போ அம்பதாயிரம் ஒரு லட்சம்னு கொடுப்பாங்க போல. இவரு கட்டியிருக்குற பொண்ணு மூத்த அக்காவோட பொண்ணு. அடிக்கடி சொந்தக்காரங்க வருவாங்க. எப்போ வராங்க போறாங்கன்னு தெரியாது. இந்த மாதிரி வந்துட்டு போறது இடைஞ்சலா இருக்கக்கூடாதுனு தான் அவரோட சொந்தத்துலேயே கல்யாணம் பண்ணிகிட்டார்னு நினைக்கிறேன். நமக்கு எதுக்குப்பா வீண் பொல்லாப்பு" அப்டினு முடிச்சிகிட்டாப்ல.

விறகு எரிப்பாங்களானு கேட்ட ஒரு கேள்விக்குத்தான் இவ்ளோவும்.

ஆனா ஒரு வகைல பாத்தோம்னா, இப்போ இந்த மாதிரி ஆட்கள் இருக்கிறது அபூர்வம். குறைஞ்சிட்டே வராங்க.

இப்போல்லாம் மூணு நாளுகப்புறமும் பக்கத்து வீட்டு கதவு திறக்கலான கூட நாம கண்டுக்கிறது இல்ல. அதையும் மீறி ஒரு துர்நாற்றம் வந்துச்சுனா மட்டும் தான் ஏதோ வாடை அடிக்குதேனு தான் பக்கத்துவீட்ல என்ன ஆச்சுனு யோசிக்கிற ஒரு மோசமான சூழல வளத்துக்கிட்டு வர்றோம்.

கொஞ்சம் பேசுங்க.



வியாழன், மார்ச் 17, 2022

சஸ்டைனபிள் சாத்தான்

Sustainable  என்கிற வார்த்தை சமீப காலமாக அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. அதுவும் கடந்த 7 வருடங்களாக கொஞ்சம் ஜாஸ்தி. Sustainable  என்ற வார்த்தைக்கு விலாவரியாக நூறு பக்க அளவில்  விளக்கம் கொடுக்க முடியும் என்றாலும், ரத்த்தினச்சுருக்கமாக சொல்வதென்றால், எதிர்கால சந்ததியை மனதில் வைத்துக்கொண்டு இன்றைய தேவைகளைச் சுருக்கிக்கொள்ளவேண்டும் என்பதே. Less Consumerism அல்லது மினிமலிஸ்டிக் கான்செப்ட் போன்று சொல்லலாம். விஜய், இட்லி மூலம் விளக்கும் அந்த கம்மியூனிச சித்தாந்தம் என்றும் கூட சொல்லாம்.  

இவர்கள், அதாவது Sustainable  என்ற வார்த்தையை அதிகம் உபயோகிக்கும் மிராசுதாரர்கள் குறி வைப்பது 'கார்பன் உமிழ்வுகளை'. பெட்ரோல் டீசல் உபயோகப்படுத்தும் அனைத்து வாகனங்கள் இதில் குறிவைக்கப்படுகின்றன. மேலும் நிலக்கரி உபயோகித்து மின்சாரம் தயாரிக்கும் டெக்னலாஜியை பெட்ரோல் ஊற்றி கொழுத்த வேண்டும் என்பது இவர்களது கட்டுக்கடங்காத அவா. புரியும்படி சொல்வதென்றால் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியான 4 லட்ச மெகாவாட்டில். 2.75 லட்ச மெகாவாட்டை உமிழ்ந்து கொண்டிருக்கும் Thermal power plantகளை அனைத்து வைக்க சொல்கிறார்கள். அணைத்து வைத்துவிட்டு சோலார், காற்று, கடல் அலைகள், நீர் மின் நிலையம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரித்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். 2030 க்குள் 50 சதவீத உற்பத்தி இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக மட்டுமே தயாரிக்கப்படும் என்று பாரிசில் கையெழுத்தாகி விட்டது.

ஒருவேளை அனைத்து வாகனங்களையும் EV ஆக மாற்றினால், அவை அனைத்திற்கும் சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயிண்ட்கள், பெருகி கொண்டிருக்கும்  ஜனத்திரளுக்கான மின் தேவைகள் என  அதற்கான மின் உற்பத்தி கட்டுமானத்தில் நாம் வலுப்பெற்றிருக்கிறோமா என்றால் இல்லை. இவற்றையெல்லாம் 2030 க்குள் எப்படி செய்யப்போகிறோம் என்பது million dollar கேள்வி.

ஆனால்,

மேற்சொன்ன அந்த sustainable  என்ற வார்த்தையை உரக்கக்கூறிக்கொண்டிருக்கும் மிராசுதாரர்கள் அதிகமாக இருப்பது நம் நாட்டில் இல்லை. வெளிநாடுகளில். அதுவும் எந்த மாதிரியான நாடுகள் என்றால், வருடத்தின் பெரும்பாலான நாட்கள் பனி படர்ந்து மைனஸ் டிகிரியில் இருக்கும் மற்றும் வாழவே சாத்தியமற்ற மற்றும் வாழத்தகுதியே இல்லாத வெளிநாடுகள்.  ஒரு சராசரி மனிதன் மிகக்குறைந்த மினிமலிஸ்டிக் வாழ்க்கை வாழ்வதற்கும் அருகத்தையே இல்லாத நாடுகள் அவை. கிழக்கில் இருக்கும் ஜப்பான் நாடு மினிமில்ஸ்டிக் விஷயத்தில் கிங். அப்படியே  கிழக்கிற்கு முற்றிலும் எதிர்முனையில் நிற்பது மேற்கத்திய நாடுகள். ஜப்பானில் ஒரு மனிதருக்கு சராசரியாக 150 கிலோ குப்பை என்று கணக்கிலிட்டால், அமெரிக்கா, கனடா, UK போன்ற நாடுகளில், இது 1000 கிலோவாக இருக்கிறது. அங்கிருக்கும் ஒவ்வொரு வீட்டை பார்த்தாலே தெரியும். குளிர்காலங்களில் வீட்டை வெதுவெதுப்பாக வைப்பதற்கு பேஸ்மெண்டில் ஜெனெரேட்டர்கள். அவை ஒரு மாதத்திற்கு விழுங்கும் மின் சக்தி அல்லது எரிசக்தி என்பது இங்கு வாழும் மக்கள் ஒரு வருடத்திற்கு உபயோகப்படுத்தும் ஆற்றல். ஆனால் கிஞ்சித்தேனும் வெட்கமின்றி இந்த வளர்ந்த நாடுகள், அதாவது developed nations தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளை பார்த்து கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த சொல்வது நகை முரண். உண்டு களித்து மீதம் இல்லை என்ற பதபதைப்பு. அதனால் தான் சாத்தான் வேதம் ஓதுகிறது. 

இருபது வருடங்களுக்கு முன், எவ்வாறு அழகு சாதனங்களை சந்தைப்படுத்த, உலக அழகி,பிரபஞ்ச அழகி என்று பத்து பன்னிரெண்டு இந்தியப்பெண்களை தேர்வு செய்து நூறு கோடி இந்தியர்களை   ஏமாற்றினார்களோ அது போலவே இவர்கள் இப்போது குறி வைத்திருப்பது பள்ளி கல்லூரி மாணவர்கள் போன்ற இளம் தலைமுறைகளை. Sustainabale என்ற தலைப்பில் போட்டி வைப்பது, தீ பற்றி எரிய கூடிய எதையாவது ஒன்றை பேட்டரியில் ஓட வைத்துவிட்டால் ஆஹா ஓஹோ என்று புகழ் பாடி ஒரு இன்னோவேஷன் அவார்டை அளிக்கவேண்டியது. அந்த பேட்டரிக்கு மின்சாரம் எங்கிருந்துஹ் என்று பார்த்தால், அந்த பக்கம் ஜெனரேட்டர் இருக்கும். 

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் சக்தி என்ற தத்துவம், வளரும் மற்றும் ஏழை நாடுகள் மீது பெருத்த நிதிச்சுமையைத்தருகிறது என்று ஆப்பிரிக்க கண்டத்தின் உள்ள ஒரு நாட்டின் பிரதமர் அறைகூவல் விடுக்கிறார். கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இங்கிதமே இல்லாமல் இந்த சாத்தான்கள் நமக்கு சொல்லிக்கொடுப்பது தான் கடுங்கோபத்தைத்தருகிறது. குறைந்தபட்ச குற்ற உணர்வு கூட இல்லாத கயவர்கள். 

வடக்கு வாழ்கிறது. தெற்கு என்றுமே உழைத்து தேய்கிறது.

ஹேப்பினஸ் இன்டெக்ஸ்


ஹேப்பினஸ் இன்டெக்ஸ் அப்டினு பாத்தோம்னா இந்தியாவுக்கு 139வது இடம் கொடுத்துருக்காங்க.

'என்னத்தே' கண்ணையா  மாதிரி நம்மாளுங்க எப்பவும் என்னத்த என்னத்தனு ஒரு சலிப்புல இருப்பாங்க. வேலைக்கு போற மனநிலைல இருக்கிறவங்களோட நிலைலேந்து பார்த்தா, இந்த ஹேப்பினஸ் இன்டெக்ஸ் 139வது இடத்துலலாம் இருக்கக்கூடாது. அப்டியே அலேக்கா தூக்கி கடைசி இடத்துல உக்கார வச்சிரணும். 

ஏன் சொல்றேன்னு கேட்டீங்கன்னா, வாரத்துல ஆறு நாளும் வேலை. கூப்டா ஏழாவது நாளும் போய்ட்டு வரணும். IT (அது தனி கஷ்டம்) தவிர்த்து பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் மற்றும் மத்திய அலுவலகங்கள் பூராவும் இப்படியேதான் இயங்கிட்ருக்கு. வீட்டுல இருக்குறவங்களோட நேரத்தை எப்படி செலவு பண்றது. இதுல பாத்தீங்கன்னா வேலைக்கு போறதுல பாதிபேர் வீட்டுல தொல்லை அதிகமா இருக்குன்னுதான் ஆறு நாள் வேலைக்கு ஓகே னு சொல்லிடறான். அவன் கவலை அந்த ஏழாவது நாள வீட்டுல எப்படி கழிக்கிறதுனு

உலகமே மூணு அல்லது நான்கு நாள் வேல பாத்தா போதும். மித்த நாள் வீட்டுல உக்காந்து எதையாவது நோண்டுனு யோசிக்கிற நேரத்துல இங்க நம்மள பாடப்படுத்துறாய்ங்க. ஒரு வருஷத்துக்கு 52 சனிக்கிழமை காலி. இப்டியே ஒரு 30 வருஷம் வேலை பாத்தா, தோராயமான 1500 நாள் காலி. சம்பளம் வருதுல்ல அப்டினு கேக்குறவங்களுக்கு, அதை வச்சிட்டு என்ன பண்றது. காலத்தோட செலவு பண்றதுக்கு நேரமும் இல்லை. உடம்புல தெம்பும் போயிருக்கும். 

கண்ணதாசன் சொன்னமாதிரி 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி' அப்டினு வாரத்துல ஏழு நாளும் (பால், பேப்பர், கடைகள்) வேலைக்கு போறவங்கள நினைச்சிட்டு நம்மல நாமே ஆத்துப்படுத்திக்க வேண்டிதான்.

 

2) 

இந்த whatsapp, facebook, twitter லாம் ஆப் பண்ணி வச்சா எதோ உலகமே அமைதியா இருக்குற மாதிரி ஒரு feeling  கிடைக்கும்ல. அதுமாதிரி, ஆபிஸ்லேயும் ஒருத்தன் இரெண்டுபேரு இருப்பாங்க. ஹாய், எப்படி இருக்கீங்க அப்டினு குசலம் விசாரிச்சிட்டு, அவனுக்கு promotion  குடுத்திருக்காங்க, இவனுக்கு அப்ரைசல்ல நல்ல மார்க் குடுத்திருக்காங்க, அவ பாரின் டூர் போனா, அந்த கேபின் ல ஒரு புது ஜோடி உருவாகிருக்குனு வந்து நியூஸ் வாசிச்சிட்டு நம்மல வேல பாக்க விடாம ஏதாவது யோசிக்க வச்சிட்டு போய்டுவாய்ங்க. இவங்கள கண்டுபிடிச்சு அந்த hai லேயே ஒரு bye சொல்லி அனுப்பிச்சிட்டோம்னா, வலம்புரி ஜான் சொல்றமாதிரி, 'வருடத்தில் இந்த நாள் மட்டுமல்ல. எல்லா நாளும் பொன்னாளே', அப்டினு சொல்லிடலாம்.

 


3)

ராஜராஜேச்சோழன் வர்ணாஸ்ரமத்தை கடைபிடித்தாரா என்ற கேள்வி எழப்போய், ஒரு நண்பனிடம் அளவளாவிய ஐந்து நிமிடங்களில், முத்தரையரின் வரலாறு மற்றும் அவர்கள் 300 ஆண்டுகள் டெல்டா நிலங்களை ஆண்ட விவரங்கள், களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்ட 350 ஆண்டுகள்பூம்புகாரை தலைமையிடமாகக்கொண்டு தென் தமிழகத்தை கட்டுக்குள் வைத்த சோழர்கள்கொடும்பாளூரில் பெண் எடுத்தது, திருப்புறம்பியம் போர், பாண்டியர்கள், வைதீகத்திற்கு எதிர்ப்பாக இருந்த சமண மற்றும் பௌத்தர்கள், சரபோஜி, சிதம்பரத்தில் வாழும் ராஜராஜ சோழனின் வம்சாவளிகள் என உரையாடல் ஜெட் வேகத்தில் எங்கெங்கோ போய் வந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் பேசிய மற்றொரு நண்பன் வாயிலாக, போர்காலத்தில் பங்குச்சந்தை நிலவரம், கடந்த காலங்களில் பங்குச்சந்தை எப்பொழுது எவ்வளவு சரிவைச்சந்தித்தது. எவ்வாறு பணமுதலைகள் ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்து அதை பற்றி மாய்ந்து மாய்ந்து பாராட்டி பங்கை manipulate செய்கிறார்கள், அதன் மூலம் எவ்வாறு பங்கின் மதிப்பை கூட்டுகிறார்கள், பின்பு  சம்பாதித்து சத்தம் காட்டாது பங்கை விட்டு வெளியேறுகிறார்கள், அதே பங்கு எவ்வாறு வீழ்ச்சி அடைகிறது, volume of transactions இன் முக்கியத்துவம் என்ன என்று ஒரு குட்டி உரை நிகழ்த்தி விடைபெற்றான்.

கற்றது கைமண் அளவு என்றும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றும் நினைக்கத்தூண்டிய ஒரு பாசிடிவ் விடியல்.

நட்பை பகிர்ந்து போற்றுவோம்.

 

 


ஞாயிறு, ஜனவரி 23, 2022

பாண்டிராஜ்


விக்ரமனின் சூர்யவம்சம், லிங்குசாமியின் ஆனந்தம் படத்திற்கு பிறகு  நல்ல குடும்ப சித்திரம் 'நம்ம வீட்டு பிள்ளை'. மேலே சொன்ன படங்களில் இல்லாத ஒரு விஷயம் இதில் என்னவென்றால், வத வத வென்று ஊருபட்ட கதாபாத்திரங்களை உள்ளே நுழைத்து எல்லோரையும் தேமே என்று திரியவிடாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அழுத்தமான ஸ்பேஸ் என்று ஒரு பக்காவான கமெர்சியல் ஸ்க்ரிப்ட்டிற்கு அருமையான எடுத்துக்காட்டு 'நம்ம வீட்டு பிள்ளை'. 

 

எல்லோருக்கும் எல்லாமே வந்துவிடுவதில்லை. சைல்டு சைக்காலஜியை அலசும் பசங்க, பசங்க 2, கோலி சோடா படங்களையும் எடுக்கத்தெரியும். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் காமெடியும் சென்டிமென்டும் போட்டிபோடும். அதற்கு பின் அந்த ஜானருக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத அதிரடி ஆக்ஷன் சரவெடி 'கதகளி'. இப்பொழுது ஒளிப்பரப்பினாலும் 'ராட்சஸன்' படம் போன்ற விறுவிறுப்பு.  இறங்கி தான் பார்க்கலாமே என்பது போல 'கடைக்குட்டி சிங்கம்' மற்றும் 'நம்ம வீட்டு பிள்ளை'. கடைக்குட்டி சிங்கம் படத்தில் அதிகமாக சீரியல் வாடை என்ற கம்ப்ளெய்ண்ட்டை சரியாக கவனித்து அடுத்த படத்தில் கொஞ்சமும் மிகாமல் ஒரு பக்காவான ஸ்க்ரிப்ட். வெறும் ஸ்க்ரிப்ட் மட்டும் என்று சொல்லிவிடாதபடிக்கு காஸ்ட்டிங்கிலும் சரியான கவனம்.  மாமாவாக வேல ராமமூர்த்தியும் தாத்தாவாக பாரதிராஜாவும் எல்லார் வீட்டிலும் ஈசியாக கனெக்ட் செய்யக்கூடிய கதாபாத்திரங்கள். 



மாஸ் எலிமெண்ட்டுக்கு ஹீரோயிச சண்டைக்காட்சி, காமெடிக்கு சூரி மற்றும் குழந்தைகளை கவர 'கும்முறு டப்பறு' பாடல், முந்திரிக்கொட்டை பைய்யன் கதாப்பாத்திரம், எல்லை மீறாத ரொமான்ஸுக்கு மாங்கனி, எமோஷனலுக்கு எல்லா கேரக்டரும் என மீண்டும் மீண்டும் ஆச்சர்யப்பட வைக்கும் ஸ்க்ரிப்ட். வசனங்கள் ஒவ்வொன்றும் தேர்ந்தெடுத்து கோர்க்கப்பட்ட மொட்டுக்கள் போல அவ்வளவு ஈர்ப்பு. இதையெல்லாம் எழுதி பக்காவாக கனெக்ட் செய்த மாயாஜாலம், அட போடவைக்கிறது. அந்த எமோஷனலில் அழுகை வரவில்லையா, இமானின் பக்காவான BGM பிழிந்து விடும்.  படம்தானே என்று சாதாரணமாக கடக்க முடியவில்லை. அத்தனை பேரின் ஒருமித்த உழைப்பு. அவ்வளவு திட்டமிட்ட உழைப்பு. வெற்றியடைய வேண்டும் என்ற முனைப்பு.  

தங்கச்சி சென்டிமென்ட் என்று அண்ணாத்த படத்தில் ரஜினியை டரியலாக்கும் முன், சிறுத்தை சிவா இந்த படத்தை ஒரு முறை பார்த்திருக்கலாம். 

இது சீரியல் காபி, பழைய படங்களை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள் என்று என்னதான் பேசினாலும், கமர்சியல் படத்திற்கு அதுவும் குடும்பத்தை வரவழைக்கும் கமர்சியல் ஸ்க்ரிப்ட்டிற்கான பக்காவான எடுத்துக்காட்டு 'நம்ம வீட்டு பிள்ளை'. ஆஸ்கர் வாங்கினால் தான் ஆச்சர்யப்படவேண்டுமா? பெரும்பாரியான வெகுஜனமும் ரசிக்கும் வகையில் எடுத்தாலும் அது ஆஸ்கர் தான்.  

'எதற்கும் துணிந்தவன்' இல் என்ன மேஜிக் பண்ணிருக்கீங்க பாண்டிராஜ் சார்?

புதன், ஜனவரி 12, 2022

புராரி மரணங்கள்



2018 இல் நடந்த புராரி மரணங்களை அவ்வளவு எளிதாக அன்று ஜீரணித்து விட முடியவில்லை. ஏனெனில் அன்று மொபைலில் வலம் வந்தவை எல்லாமே சென்சார் செய்யப்படாத ரா (raw) புட்டேஜ்கள். சாதாரணமாக ஒரு வீட்டின் மாடிக்கு செல்லும் படி மேல் ஏறி வருவது போல் ஆரம்பிக்கும் அந்த வீடியோவில், மாடியில் இருக்கும் அறைக்குள் நுழைந்த பின்பு இறந்து போயிருக்கும் 11 சடலங்களை, அதுவும் உத்தரத்தில் தொங்கி ஊசலாடிக்கொண்டிருக்கும் சடலங்களை பார்த்தபின் மறந்தும் சில நாட்கள் இருட்டில் இருந்தது கிடையாது. அப்படி ஒரு காட்சி அது. தற்கொலையா கொலையா என்று போலீசாரே தலையை பிய்த்துக்கொண்ட நேரம்.

 

மறதி ஒரு அற்புதமான மருந்து என்பது போல, அந்த நிகழ்வை நன்றாகவே மறந்து விட்ட தருணத்தில், 2021 இல் House of Secrets வெப் சீரிஸ் வெளிவந்திருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது. கடமைக்கேனும் வழக்கை பற்றி ஆராயாமல் ஆதியோடு அந்தமாய் துப்பு துலக்கி இருக்கின்றனர். மூன்று எபிசோட்கள். தரமான கவரேஜ். முதல் எபிசோடில் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை பற்றியும், இரண்டாவது எபிசோடில் துப்பு துலக்குவதற்கு மிகவும் உதவிய ஆதாரமான டயரி குறிப்புகள் பற்றியும், மூன்றாவது எபிசோடில் இந்த விபத்து நடப்பதற்கான காரணங்கள் என்ன போன்றவற்றையும் பதிவு செய்துள்ளனர். அதிலும் அந்த மூன்றாவது எபிசோடில் உபயோகப்படுத்தப்பட்ட 'psychological anatomy ' என்ற வார்த்தை மிகவும் புதிதாகவும் அடர்த்தியான அர்த்தம் நிறைந்ததாகவும் விளங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டாலும், மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க பரிந்துரைக்கிறேன்.

 

ஒவ்வொரு எபிசோடை பற்றியும் நீண்ட பதிவு எழுதலாம் என்ற திட்டத்தை தற்போது எழுதும்பொழுது முற்றிலுமாக தவிர்க்க நினைக்கிறன். பிரச்சினை என்னவென்றால் அதை பற்றிய நீண்ட பதிவிற்காக ஒவ்வொரு எபிசோடின் காட்சிகளையும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டித்துள்ளது. அந்த காட்சிகளுக்குள் மீண்டும் சென்று விட்டு வெளிவருவதற்கு மனதளவில் நான் தைரியமாக இல்லை. என்ன நடந்தது என்பதையும் அதனால் தோன்றும் உள்ளக்கிடக்கைகளையும் சுருக்கமாக பதிவு செய்கிறேன்.

 

சம்பவம் நடந்து விட்டது. போலீசார் அந்த வழக்கை விசாரிக்கும் பொழுது தடுமாறுகின்றனர். அந்த டைரி கிடைத்த மறு நிமிடம் தான் இந்த வழக்கில் ஒரு தெளிவான பாதை கிடைத்திருக்கிறது. அன்று இரவு மட்டும் அல்ல சில நாட்களாக ஏன் வருடங்களாகக்கூட அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்யவேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் சைக்கலாஜிக்கல் அனாடமி செய்து இதை தற்கொலை என்று நிரூபிக்கின்ற்னர். விஷயம் இதுதான். அந்த குடும்பத்தின் முதியவரான தாத்தா இறந்து விடுகிறார். அவரது பிரிவை தாள முடியாத அவரது குழந்தைகள் (எல்லோருமே 50 வயதை நெருங்குகிறவர்கள்) வருத்தப்படுகின்றன. அதிலும் மூத்த மகனுக்கு ஒரு விபத்தின் போது வாய் பேச முடியாமல் போகிறது. மருத்துவம் பார்த்தும் பலனில்லை. இவர் மீண்டும் வாய் பேச வேண்டுமென்றால் வீட்டில் உள்ள எல்லோரும் இணைந்து 'அனுமான் சாலிசா' படிக்க வேண்டும் என்று அவரது இறந்து போன தந்தை சொன்னதாக குடும்பத்தினரிடம் தெரியப்படுத்துகிறார். அனைவரும் படிக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு நாள் 'அனுமன் சாலீஸாவை' பாடிக்கொண்டிருக்கும்போதே மூத்தவருக்கு பேச்சு வந்துவிடுகிறது. இவரும் இறந்து போன தனது தந்தையின் ஆசை இன்னது தான் என்றும் அவர் தன்னுடன் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அவர் சொன்னது போல் நடந்தவுடன் குடும்பமே அவரது வார்த்தையை தெய்வ வாக்காக நினைக்கிறது.

 

இப்படியாக குடும்பத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை மூத்தவர் சொல்வதை மட்டுமே மறுபேச்சின்றி கேட்டுக்கொண்டு அதன்படி நடக்கின்றனர். 70 வயது முதல் பத்து வயது வரை என எல்லா வயதினரும் இதில் அடக்கம். சம்பவம் நடந்த சில நாட்கள் முன்பு, அதாவது 2018ல் தனது பெண்ணுக்கு மணமுடிக்க ஏற்பாடு செயகின்றார். திருமணம் நெருங்கி வரும் வேளையில் இந்த சம்பவம் நடக்கிறது. இதை banyan tree பூஜை என்று டைரியில் குறிப்பிட்டிருக்கின்றனர். அதாவது ஆலமரத்தின் விழுதுகள் போல எல்லோரும் கயிற்றில் தொங்கி கொண்டு பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு பிறகு எல்லோரும் மீண்டும் உயிர்த்துவருவோம் என்று நம்பிக்கையூட்டியிருக்கிறார். இதை நம்பியே எல்லோரும் அவர் பேச்சை கேட்டு இதுபோன்ற முடிவை எடுத்திருக்கின்றனர்.

 

மனநல மருத்துவர்கள் எல்லோரும் இணைந்து ஒரு முடிவு எட்டிய பின் இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. அதாவது அதுவரை தன பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அந்த குடும்பம், தனது பெண் இன்னொரு வீட்டிற்கு மருமகளாக சென்ற பின் எங்கே அந்த மரியாதை கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில், மூத்தவர் எடுத்த முடிவு என்று அனுமானிக்கினறனர். இதில பொதிந்திருக்கும் ஆச்சர்யம் என்னவெனில் அந்த வீடு ஒன்றும் தனித்திருக்கவில்லை. அடர்த்தியான ஜன நெருக்கடி உள்ள ஒரு தெரு. ஒரு வீடு கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக எவ்வாறு இயங்குகிறது என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாத சமூகத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பது மிகப்பெரிய சாபக்கேடு. விபத்து நடக்கும் முன்பு ஒரு வாரத்திற்கும் மேலாக இதற்கான திட்டமிடலை அந்த குடும்பம் மேற்கொண்டுள்ளது. அந்த குடும்பத்தாரும் இதை பற்றி வெளியில் தெரிவிக்கவில்லை. அந்த சிறு குழந்தை உட்பட. புறத்தில் உள்ளவர்களும் விசாரிக்கவில்லை.  அந்த குடும்பத்தை மட்டும் 'சைக்கலாஜிக்கல் அனாடமி' செய்தால் பத்தாது. மொத்த சமூகத்தையும் 'சைக்கலாஜிக்கல் அனாடமி' செய்து நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்ற அடிப்படை மனித உணர்வுகளாவது இருக்கிறதா என்று டைசெக்ட் செய்து பார்க்க வேண்டிய தருணமிது.

 

நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள விழைவது இதுதான். இருபது வருட பழைய நட்பென்றாலும் தயங்காமல் பேசுங்கள். வேலையிலேயே ஒருவர் மூழ்கி கிடைக்கிறார் என்றால் அவரை தொந்தரவு செய்தாவது அளவளாவுங்கள். ஏனெனில் மனச்சோர்வு என்பது நம்மை அறியாமலேயே நம்மை விழுங்கும் ஒரு கொடிய நோய். பல நாட்கள் கழித்து பேசிய பள்ளி தோழி ஒருத்தி, யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத தனது தோல்வியுற்ற பழைய காதலை பற்றி பகிர்ந்துகொண்டாள். ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் விளித்த அவள்வெகு நாட்களாக சுமந்துகொண்டிருந்த, என்னவென்று அறியாத ஒரு வகை பாரம் தற்போது தன்னிடம் இல்லை என மகிழ்ச்சியாக கூறினாள். கொரோனா காலத்தில் மனச்சோர்வின் காரணமாக தான் பார்த்துக்கொண்டிருந்த அரசு வேலையை விடுத்து கால் தோன்றின போக்கில் பாத யாத்திரை மேற்கொள்ளுவதாக முடிவு செய்திருந்த நண்பன் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பேசிய பிறகு சற்று தெளிச்சியாக இருப்பதாக உணர்வதாக கூறினான்.  தொடர்ந்த தவறான புரிதல்களால் முடிவு பெற இருந்த மணவாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கிறது. எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம். அருகில் இருக்கும் நபர் என்ன உணர்வில் இருக்கிறார் என்ற ஒரு அடிப்படை மனிதாபிமான உணர்வு கூட இல்லாமலா நாம் பொழுது மூச்சுடும் வேலை செய்துகொண்டிருக்கிறோம்? அப்படியே செய்தாலும் யாருக்காக அந்த வேலை? நமக்கும் நம் குடும்பத்திற்கும் என்றால் நமது குடும்பம் மற்றும் தனியாக இருந்து என்ன சாதித்துவிடப்போகிறோம். சுற்றம் சூழ  இருப்பதுதான் என்றுமே இன்றிமையாதது. இன்றும் நாம் புரிந்து வைத்திருக்கும் 'நாமில்' பலர் கண்ணுக்கு புலப்படாமல் பொதிந்திருக்கின்றனர். அந்த பலர் இங்கு இல்லையென்றால் நம்முடைய 'நமக்கு' இங்கு அர்த்தம் இல்லை. நம்முடைய மனது சமநிலையில் இருப்பதற்கும் சுற்றம் சமநிலையில் இருப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய தருணமிது.

 

பேசுங்கள். தொடர்பில் இருங்கள். முடிந்த வரை ஆறுதலான சில வார்த்தைகள். கடும் கோடையில் பெய்யும் சிலநிமிட மழைத்துளி போல உங்களின் அந்த ஓரிரு வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையை குளிர்விக்கும்.

 

அன்பை பகிர்ந்து வாழ்வோம். 

திங்கள், ஜனவரி 03, 2022

திருநெல்வேலி முருகன்குறிச்சி கலைவாணி தியேட்டர்


கலைவாணி தியேட்டர் என்றவுடன் அகமகிழ்ந்து வாசிக்க வந்த பண்பான அன்பு உள்ளங்களுக்கு காக்டெயில் வெல்கம். தியேட்டர் மாதிரியே சொல்லப்போற மேட்டரும் குஜால் தான்.


அவர் அலுவலக சீனியர். கலகலப்பான மனிதர். ஜகதலப்ரதாபர். சிறந்த கதை சொல்லி. சொல்லப்போகிற anectode அவர் ஒருமுறை பகிர்ந்துகொண்டது. நடந்த வருடம் 1975 சமீபத்தில் இருக்கலாம். 


அவரது பதின் பருவப்பிராயம். பத்தாம் வகுப்பு படிக்கும்போது இருக்கலாம். அரும்பு மீசையும் குறும்பு பார்வையும் கலந்தோடும் நாட்கள் அவை. முருகன்குறிச்சியில் இருக்கும் கலைவாணி பேருக்கேற்றார் போல் அல்லாமல் 'அஜால் குஜால்' படங்களுக்கு பிரபலம். கலைவாணிக்கு டப் கொடுக்கும் ஒரே யோக்கியதை டவுணில் இருக்கும் சிவசக்தி தியேட்டருக்கு மட்டுமே உண்டு. சம்பவத்திற்கு வருவோம். என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள மிகுந்த பிரயாசைப்பட்டு கலைவாணிக்கு அவர் சென்றிருக்கிறார்.  ஒரு ஹிந்தி படம் தான். போஸ்டர் தான் ஹிந்தி படமே தவிர சின்னக்கலைவாணர் விவேக் சொல்வது போல் அஞ்சாவது ரீல் அஞ்சரைக்குள்ள வண்டி பிட்டு தான். ஸ்கூலுக்கு போவது போல் கிளம்பி அங்கு இல்லாத உறவினரை கொன்றுவிட்டு ஸ்கூலுக்கு கட்டடித்து தியேட்டர் வந்து விட்டார்.  திரை அரங்கிற்குள் விஜயம். அரசு விளம்பரங்களுக்கு பிறகு ஹிந்தி படம் ஆரம்பமாகிவிட்டது. எல்லோரும் '' வென்று வாயை பிளந்து ஆவலாய் ஐந்தாவது ரீலுக்கு வெய்டிங். அந்த காலத்தில் எல்லாம் எல்லா படத்திலும் பிட் சேர்த்துவிடுவதில்லை. போலீஸ் கெடுபிடிகள், ப்ரொஜெக்டர் ஓட்டுபவனின் மூடு என பல influencing factors பொறுமையை சோதிக்கும். இவர் படம் பார்த்த நாள் அன்று இவர் தலையில் சுக்கிரன் சம்மனமிட்டு உட்கார்ந்திருப்பான் போல. அவர் வாயாலேயே அடிக்கடி " வருஷம் 40 தாண்டிடுச்சுடே. இன்னும் அவளையோ  அந்த காட்சியையோ மறக்க முடியல. அடேங்கப்பா." என்று சொல்லும்போதே பெருமூச்சு விட்டார்.


படம் முடிந்துவிட்டது. எதிர்பார்த்தது போல திகட்ட திகட்ட படம் பார்த்த்துவிட்டார். இப்பொழுது தான்  ஹைலைட்டே. உள்ளே நுழையும்போது யார் கண்ணிலும் படாமல் முன்னே பின்னே நுழைந்து வந்து விடலாம். ஆனால் வெளியே போகும்போது அக்கம் பக்கம் பார்த்து போக வேண்டும். தெரிந்தவன் கையில் மாட்டிவிடக்கூடாது. படம் முடிந்து லைட் போட்டவுடன் சுற்றி முற்றி பார்க்கிறார். இவர் பயந்தது போலேயே இரண்டு வரிசை தள்ளி அவரது ஸ்கூல் வாத்தியார். 'ஏலே, இவர் எங்கல இங்கு வந்து தொலைஞ்சாரு?" என்று விசனப்பட்டுவிட்டு முன்னாடி திரும்பினால் அங்கு ஒரு அதிர்ச்சி. அவ்ருடைய மாமா முன் வரிசையில். அவரும் யாரும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று திருட்டு பார்வை பார்க்க, இவரும் சீட்டுக்கடியில் ஒளிந்துகொண்டார். குனிந்து குறுகி சீட்டை ஒட்டியே மறைந்து மறைந்து வெளியே செல்லும் இரும்பு கதவு வரை வந்துவிட்டார். 


தியேட்டர் வாசல் வரை இருட்டாயிருந்தது. தியேட்டருக்கு வெளியே சுட்டெரிக்கும் நண்பகல் வெளிச்சம். எப்படி வெளியே போவதென்று யோசனை செய்திருக்கிறார். படாரென்று கெட்டப் சேஞ்ச். போட்டிருந்த சட்டையை கழட்டி இடுப்பில் கால்சராய்க்கு மேலே சுற்றிவிட்டு, பனியனை கொஞ்சம் கிழித்துவிட்டு, கைகுட்டையால் ஒரு கண் மட்டுமே தெரிவது போல் கட்டிக்கொண்டு கால் முட்டியின் மேல் ஒரு கையை வைத்து ஒரு காலால் தாங்கி தாங்கி நடந்து வெளியே வந்திருக்கிறார். பார்ட்டி எஸ்கேப்


"அதெல்லாம் ஒரு காலம். செம த்ரில்லிங்கான அனுபவம்பா. இப்போ எல்லாமே கைக்கு அடக்கமாயிடுச்சு. ஆறு இன்ச் திரையில ஆறு வினாடில பாக்குற உங்களுக்கு இந்த 'அடேங்கப்பா'வை பீல் பண்ண முடியாது பா" என்று அங்கலாய்த்து கொண்டு கிளம்பிவிட்டார்.

சனி, ஜனவரி 01, 2022

விக்ரம் - 1986


விக்ரம் - 1986 இல் அதாவது எனக்கு வயது இரண்டு மாதங்கள். அப்போது வெளிவந்த ஒரு ஐகானிக் மூவி.

ஆனால் அதே கதை முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு தற்போது வெளிவந்திருந்தாலும் கனெக்ட் செய்துகொள்ளுகிற அளவுக்கு டெக்னாலஜிக்கல் அட்வான்ஸ்மென்ட்ஸ்.

டெக்னாலஜியை பார்க்கும் முன் நம்மவரின் குறும்புகள்.

ஆரம்பத்தில் கமல் அம்பிகாவுடன் பேசிக்கொள்ளும் இல்லை இல்லை சரசமாடிக்கொள்ளும் காட்சிகள் தற்போது பார்த்தாலும் நமக்கே கூச்சம் தெரிக்கிற அளவுக்கு கமலின் பெர்பார்மன்ஸ். இப்பொழுது தான் தெரிகிறது 'வனிதாமணியில்' ஜானகியிடம் இருந்து ஏன் அவ்ளோ முனகல் என்று? கண்ணே ஒட்டிக்கவா?

போதாக்குறைக்கு 35000 அடியில் free fall செய்யும்பொழுது சுகிர்தராஜூவை அடித்து கீழே தள்ளிவிட்டு இருக்கும் ஒரே பாரச்சூட்டுடன் விக்ரம் ப்ரீத்தியை (லிஸ்ஸி) அணைத்து கீழிறங்குகிறார். பாரச்சூட்டில் இருவரும் இறங்கி கொண்டிருக்கும்போதே ப்ரீத்தி டூயட் பாட ஆரம்பிக்க விக்ரம் அவரை லிப் லாக் செய்ய.....அடேங்கப்பா அந்தரத்தில் ஒரு ரொமான்ஸ். பாம்பு கடியிலிருந்து தப்பியபின் ஸலாமி அரசி டிம்பிளுடனும் ஒரு அதரச்சேர்க்கை. காதல் மன்னன். ஜேம்ஸ் பாண்டே இரவல் கேட்கவேண்டும்.

2000இல் வெளிவந்த ஹேராம் படத்தில் இடம்பெற்ற பெங்காலி ஹிந்தி மற்றும் ஆங்கில வசனங்களேயே நம் மக்கள் புரியவில்லை என்று தலையை சொரிந்துகொண்டனர். அதற்கும் பதினைந்து வருடங்கள் முன்னாலேயே ஸலாமி நாட்டின் பாஷை என்று மனோராமாவும் ஜனகராஜூம் பிளந்துகட்டியிருப்பது நம் மக்களுக்கு வெகுவாக அந்நியப்பட்டிருக்க வேண்டும்.

டைட்டில் சாங் விக்ரம். மூன்று தலைமுறைகள் தாண்டியும் ஈர்க்கிறது. அதிலும் அவர் வாய்ஸ். 300 அடி பாதாளத்தில் இருந்தாலும் விக்ரம் வெளியே வந்துவிடுவான். கோரஸ், இன்ஸ்ட்ருமென்ட்ஸ் என அப்படி ஒரு ஆர்கெஸ்ட்ரேஷன். ராஜா ராஜா தான்.

முன்னமேயே சொன்ன அந்த டெக்னிக்கல் சமாச்சாரங்கள்.

உலத்துக்கே தாதாவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அமெரிக்காவிலேயே 1985 இல் தான் CCTV பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் நம்மவர் படத்திலோ சுகிர்தராஜ் (தகிடு தகிடு) விக்ரமை (கமல்) அசாதாரணமாக CCTVயில் சர்வைலென்ஸ் செயகிறார்.

அது போல, கம்ப்யூட்டர்கள் அந்த காலகட்டத்தில் பிரபலாமகவில்லை. ஆனால் விக்ரம் படத்திலோ கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங், ராக்கெட் லாஞ்சிங், ஆட்டோ இஃனைடிங் என அரசடிக்கின்றனர்.




முத்தாய்ப்பாக 'ஓகே கூகிள்' என்று நாம் சொல்ல பழகியே மூன்று நான்கு வருடங்கள் இருக்கலாம். ஆனால் சுகிர்தராஜோ 'whether the agniputra rocket is redirected?" என்று கம்ப்யூட்டரிடம் வாய்ஸ் கமெண்ட் செய்கிறார். அதற்கும் கம்ப்யூட்டர் டெக்ஸ்ட் மெசேஜில் ரெஸ்பாண்ட் செய்கிறது. வாட் எ தொலைநோக்கு பார்வை சர்ஜி.

சுஜாதா இன்னும் இருபது வருடங்கள் உயிரோடிருந்திருக்கலாம்.

சனி, டிசம்பர் 18, 2021

சௌபாக்யா அபார்ட்மென்ட்


ராஜாவுக்கு உள்ளூர 'திக்' என்றிருந்தது. கடந்த மாதம் தான் போய்விட்டு வந்திருந்தான். இப்பொழுது மீண்டும் கிளம்பவேண்டும் என்று சொன்னால் ஆஷா கோவித்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.  அதுவும் மூன்று நாள் ஆபிஸ் விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டும் என்பதை அவளிடம் பொறுமையாக சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும். கடந்த முறையும் தகராறு ஆகிவிட்டது.  இந்த முறையாவது பிழைப்போமா என்று  ஒரு வித குழப்பத்திலிருந்தான்.


அந்த சௌபாக்யா அபார்ட்மென்டின் மூன்றாவது மாடியில் கொஞ்சமே கொஞ்சம் வெயில் படுமாறு இருந்தது அவனது வீடு. படியேறும் பொது என்ன பேச வேண்டும் என்று ஒரு முறை சொல்லிப்பார்த்துக்கொண்டான். காலிங் பெல் அடிக்கலாமா என்று யோசிக்கும் வேளையில் ஆஷாவே கதவை திறந்துவிட்டாள். 


ஆஷா அவனுடைய இளம் மனைவி. இருபத்தைந்து வயது மதிப்பிடலாம். ஒருவேளை வீட்டில் அனுமதி கிடைத்திருந்தால் மாடெலிங் துறையில் சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் போல ஒரு  பிரபலமான பெர்ஸனாலிட்டியாக இருந்திருக்கும் அளவுக்கு ஒரு வனப்பு அவளிடமிருந்தது. பாலு மகேந்திரா, சந்தோஷ் சிவன் போன்ற ஒளிப்பதிவாளர்களின் கேமராவுக்குள் அழகாக தஞ்சமடையவேண்டியவள்.கடந்து செல்லும் ஆடவர்களை ஒரு முறையேனும் கண்டிப்பாக திரும்பி பார்க்க வைக்கும் சுந்தர ரூபம் அவளுடையது. 'அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்' என்பது போல ராஜா அவளை திருமணம் செய்து எட்டு மாதங்கள் முன்பு கூட்டி வந்துவிட்டான்.  


ஆஷா, "என்னங்க, இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க. அதிசயமாயிருக்கு. எப்பவும் ஆறு மணியாகும்."


ராஜா, "ஆமா செல்லம். ஆபிஸ்ல இன்னைக்கு கொஞ்சம் பிரச்சனையிடுச்சு. அதான் அப்சட் ஆயிட்டேன். என்ன பண்றதுன்னே தெரியாம முழிச்சிட்ருக்கேன்"


ஆஷா, "என்ன பெரிய பிரச்சினை. நீங்க தான் எல்லாத்தையும் அசாதாரணமா டீல் பண்ற ஆளாச்சே. அப்புறம் என்ன அப்படி கவலை?"


ராஜா, "ஆபிஸ்ல என்னோட ஒருத்தன் இருக்கானே, பேரு கூட ஆனந்த். ஞாபகம் இருக்கா?"


ஆஷா, "ஆமா. சொல்லிருக்கீங்க. டைவர்ஸ் ஆக போதுனு சொல்லிருக்கீங்க"


ராஜா, "எக்ஸாக்ட்லி. அவனேதான். அவனுக்கு கோர்ட்ல ஹியரிங். அதனால அவன் மதுரைக்கு போறமாதிரி ஒரு நிர்பந்தம். கிளம்பி போய்ட்டான். மூணு நாள் ஆகிடும்"


"அவன் இல்லனா என்ன இப்போ. போய்ட்டு தான் வரட்டுமே. அதனால என்ன பிரச்சினை உங்களுக்கு?"


"அதுதான் பிரச்சினையே குட்டி. அவன் ஊருக்கு போய்ட்டானா. அந்த ப்ராஜெக்ட்ல நாங்க ரெண்டு பேருதான். இப்போ கிளையண்ட் வேற அவசரமா ஒரு மீட்டிங் கூப்பிட்றாங்க. கண்டிப்பா அட்டென்ட் பணியே ஆகனும். அவன் இல்லாததுனால என்னைய போகச்சொல்றாரு மேனஜர்"


சொல்லிவிட்டு ஒரு தயக்கத்துடன் ஆஷாவை ஏறிட்டு பார்த்தான். 


செயற்கை அறிவு தொழில் நுட்பத்தில் இளங்கலை பொறியியல் முடித்த ஆஷா அவனுக்கு ஸ்ட்ராங்கான ஏலக்காய் டீ போட்டுக்கொண்டிருந்தாள். இவன் கூறிய விஷயத்தை கேட்டதும் இவனை ஒரு முறை திரும்பி பார்த்தாள்.


ஆஷா, "அப்போ நீங்க வெளியூர் போகனும்னு சொல்றீங்களா?"


"ஆமா ஆஷா, ஒரு மூணு நாள் தான். வேலை முன்னடிஞ்சிடுச்சுனா ரெண்டே நாள்ல திரும்பிவந்துடுவேன். நான் இல்லன்னா இந்த மீட்டிங் கரெக்ட்டா கன்வெர்ஜ் ஆகாது. ப்ராஜெக்ட் டிலே ஆயிடும்"


"நீங்க வேல பாக்றத பத்தி எனக்கு ஒண்ணுமில்லைங்க. ஆனா அடிக்கடி இதே மாதிரி போறீங்க. போன மாசம் கூட போய்ட்டு வந்தீங்க. அதுக்கப்பறம் ஆறு மாசம் வெளியூர் போற மாதிரி இருக்காதுன்னுதானே சொன்னீங்க. இப்போ திரும்பவும் போறேன் சொல்றீங்க."


"நான் என்ன பண்ணுவேன் செல்லம். இந்த ஒரு தடவ கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சுக்கோயேன். நான் போய்ட்டு உடனே வந்துடுவேன். இதுக்கப்றம் வெளியூர் ட்ரிப் ஒரு வருஷத்துக்கு இருக்காது."


ராஜா கெஞ்சினான். ஆஷா அழுவது போல முகத்தை வைத்துக்கொண்டாள். கொதித்துக்கொண்டிருக்கும் ஏலக்காய் டீயை வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தவளின் அருகில் வந்து அவளை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டான். காதோரமாக "ஸாரி" என்று கிசுகிசுத்தான். தன் இடுப்பை வளைத்திருந்த ராஜாவின் கையை இருக்க பற்றிக்கொண்டே கொஞ்சும் குரலில் ஆஷா பேசினாள்.


"நீங்களே யோசிச்சு பாருங்க. ரோபோடிக்ஸ் படிச்சிட்டு வேலைக்கு போணும்ன்றது என்னோட ரொம்ப நாள் ஆசை. ஆனா வீட்ல பெர்மிஷன் கிடைக்காததுனால நான் வேலைக்கு போக முடியல. நீங்க வந்து என்ன கொத்திட்டு வந்துட்டீங்க. அபார்ட்மெண்ட் நல்லாதான் இருந்தாலும், நீங்க காலைலே போனீங்கன்னா ராத்திரி தான் வர்றீங்க. துணைக்கு இருக்கட்டுமேனு ஒரு மெக்காவ் பறவைய அவ்ளோ காசு கொடுத்து வாங்கி வச்சிருக்கீங்க. அது கிட்ட நான் எவ்ளோ தான் பேசுறது. அது எப்படி கூண்டுல அடைஞ்சி கிடைக்குதோ அதே மாதிரி நான் இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கிறேன். இந்த மாதிரி லோன்லியா பீல் பண்ற டைம்ல நீங்க வேற இதேமாதிரி அடிக்கடி ஊருக்கு போறேன்னு சொல்றது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலங்க."

 

ஆஷா அவளின் குறைகளை ஒரேடியாக கொட்டி தீர்த்தாள். ராஜாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளை முதலில் சமாளித்தால் போதும் என்று நினைத்தான். பின்புறமாக கட்டிக்கொண்டிருந்தவன் கையை விடுவித்து மெதுவாக அவளின் முன்னாள் வந்து நின்றுகொண்டான். அவளின் பஞ்சு போன்ற தாடையை தன் இரு விரல்களால் தூக்கி கோலிக்குண்டு போலிருந்த அவள் இரு கண்களை நேராக பார்த்தான். செர்ரி பழத்தின் சிவப்பை ஓத்திருந்த அவளது இதழ்களை இரு விரல்களால் நீவி விட்டுக்கொண்டே மற்றொரு கையால் அவளை இழுத்து தன பக்கம் அணைத்து கொண்டான். கொஞ்சம் வெட்கம் வந்து சிரித்தவளின் கண்ணா குழிகளை பார்த்து "இங்கே ஒரு ஸ்டராபெரி நட்டு வைக்கலாமா ஸ்வீட்டி?" என்று கொஞ்சவும் தேநீர் பொங்கி ஸ்டவ்வை அணைத்துவிட்டது.


ஆஷா அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டே "கொஞ்சம் விட்டா இந்த சமயலறையை, பெட்ரூமா மாத்திடுவீங்க போலேயே" என்று சிணுங்கிக்கொண்டாள். 


"ஆஷா, நீயே எனக்கு கொஞ்சம் ட்ரெஸ்லாம் எடுத்து வச்சிடேன். நீ போனதடவ செலெக்ட் பண்ணிகொடுத்த மெரூன் ஷர்ட் ரொம்ப நல்லா இருந்துச்சின்னு க்ளையண்ட் சொன்னாங்க தெரியுமா?"


"அப்போ இந்த தடவையும் அதே மெரூன் எடுத்துவச்சிடவா" என்றால் ஆஷா. 


அவள் ஆசுவாசமாகிவிட்டாள் என்பதை தெரிந்துகொண்ட இவன் சற்றே பெருமூச்சு விட்டான்.  குளியலறையை நோக்கி நகர்ந்தான். ஆஷா அவனது உடைமைகளை சூட்கேசில் பேக் செய்ய ஆரம்பித்து கொண்டே இரவு உணவுக்கு தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன வைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். பாக்கெட் பெர்பியும், லேப்டாப், பவர் பேங்க் என ஒவ்வொன்றாக எடுத்துவைத்தாள். அடுத்த அரை மணி நேரத்தில் வெளியே வந்தான் ராஜா. வெகுவேகமாக உடலை காயவைத்துவிட்டு ஆஷா எடுத்துவ வைத்திருந்த உடைகளை உடுத்திக்கொண்டான். ஆஷாவும் கொஞ்சமே கொஞ்சமாக ரெபிரஷ் செய்திருந்தாள். இவன் வருவதற்குள் இரவு உணவை உணவு மேஜையில் எடுத்துவைத்திருந்தாள். 


"ஏங்க. சாப்பிட வரீங்களா. டைம் ஆகுதுல. கார்ல தான் போறீங்க. சீக்கிரமா கிளம்பினாதான் நேரத்தோட போக முடியும்."


"வந்துட்டேன் மை டியர். இன்னைக்கு என்ன ஸ்பெஷல். தினம்தினம் நீ புதுசா ஏதாவது செஞ்சு அசத்துவியே. இன்னைக்கு என்ன செஞ்சிருக்க ?"


"இன்னைக்கு ஒன்னும் ஸ்பெஷலா செய்யலைங்க. கோதுமை தோசையும் தக்காளி சட்டினியும். மனசு சரியில்ல. நீங்க ஊருக்கு போறத நினச்சு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குங்க."


"நீ எது செஞ்சாலும் ஸ்பெஷல் தான் எனக்கு. ரொம்ப வருத்தப்படாத கண்ணு. இன்னைக்கு போய்ட்டு ரெண்டே நாள் தான். திரும்பி வந்துடுவேன். ஒரு பெரிய டெட்டி பியர் இருக்குல்ல. அத நான்தான்னு நினைச்சு கட்டி பிடிச்சு தூங்கிடு. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ போன்ல பேசுறேன். கவலைப்படாத ஆஷா" என்று ஏதேதோ சொல்லி தேற்றினான்.


அரை மணி நேரத்தில் சாப்பிட்டு எல்லாம் .சூட்கேசில் சரியாக இருக்கிறதா என்று செக் செய்துவிட்டு கிளம்ப யத்தனித்தான். 


"என்னங்க, போயே ஆகனுமா?" என்ற ஆஷாவை ஒரு முறை இறுக்க அணைத்து இதழோடு இதழ் சேர்த்து ஊமையாக்கினான். 


மூன்றாவது மாடியிலிருந்து படியிலேயே இருவரும் இறங்கி வந்தனர். பார்க்கிங்கில் இருந்த காரின் டிக்கியில் சூட்கேஸை வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்துவிட்டு ஒருமுறை ஆஷாவிடம் "லவ் யூ" என்றான். ஆஷா கையசைத்து வழியனுப்பினாள். கார் அபார்ட்மெண்டை விட்டு வெளியேறி அந்த தெருவை கடந்து திரும்பியபின் நின்றது. மேனேஜரை விளித்தான். 


"என்ன ராஜா. ஆபிஸ்லேந்து சீக்கிரம் கிளம்பிட்டீங்க. ஒன்னும் ப்ராபளம் இல்லையே."


"ஊர்ல தாய் மாமாக்கு உடம்பு சரியில்ல சார். அதான் உடனே கிளம்புறமாதிரி ஆகிடுச்சு. ஒரு ரெண்டு நாள்ல வந்துடுவேன். எல்லா விஷயத்தையும் ஆனந்த்ட்ட சொல்லிருக்கேன். அவரு மேனேஜ் பண்ணிப்பார் சார்"


"ஓகே ராஜா. யூ ப்ளீஸ் .டேக் கேர். நான் இங்க பாத்துக்குறேன்" என்று மேனேஜர் கூறினார்.


ராஜா பெருமூச்சுவிட்டான். போனை எடுத்து அடுத்த கால் செய்தான். எதிர் முனையில் மீனா. "ரெண்டே நிமிஷத்துல வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.


மூன்று தெரு தள்ளி தனித்திருந்த வீட்டில் காரை நிப்பாட்டினான். தயாராக இருந்த மீனா வந்து ஏறிக்கொண்டாள். மீனா அவனது அலுவலகத்தில் வேலை பார்ப்பவள்.  


"என்ன ராஜா, இவ்வளவு நேரம்?" 


"அத ஏன் கேக்குற மீனா? நான் என் பொண்டாட்டிய சமாளிச்சுட்டு வெளிய வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. ஓரளவு சமாளிச்சுட்டேன். டோன்ட் ஒரி" என்றான்.


மீனாவை ஏற்றி கொண்ட அந்த கார் கொடைக்கானல் செல்லும் ரோட்டை நோக்கி வேகமாக ஓடியது. ராஜா ஒரு முறை ஆஷாவை நினைத்து கொண்டான். மனசாட்சி கொஞ்சம் அவனை பிராண்டியது. என்ன தான் இருந்தாலும் தன்னையே நினைத்து உருகும் ஆஷாவிற்கு துரோகம் செய்வது அவனுக்கு நெருடலாயிருந்தது. எனினும் அந்த எண்ணங்களை தவிர்த்துவிட்டு மீனாவின் கையை தனது மடியில் எடுத்து வைத்து கொண்டு காரின் வேகத்தை அதிகரித்தான். 


அதே வேளையில் சௌபாக்கியா அபார்ட்மெண்டில் ராஜாவை வழியனுப்பிவிட்டு படியேறும் முன் ஆஷா, எதிர் வீட்டு கார்த்தியை எதிர்கொண்டாள். "அவர் மூன்று நாள் வெளியூர் போயிருக்கிறார்" என்று சொல்லிவிட்டு வேகமாக படியேறத்தொடங்கினாள் .