வீட்டுக்கு முன்னாடி நிக்கிற வாதாங்கொட்டை மரத்துல, வெள்ளை ஈக்கள் னு சொல்லப்படுற ரூக்கோஸ் சுருள் பூச்சிகள் வந்துருச்சி. ஒரு இலை விடாம எல்லா இலையையும் பதம் பாத்துருச்சி. போதாகுறைக்கு பனி பொழியிற மாதிரி வெள்ளை பூச்சிகள் பறக்க ஆரம்பிச்சி ஒரே தொந்தரவு. மருந்து அடிக்க மனசில்லாம எல்லா கிளையையும் கழிச்சி விட்டுட்டோம். கீழே கிடந்த அந்த கிளை எல்லாமே காய்ஞ்சு நல்ல காய்ஞ்ச விறகா மாறிடிச்சு. அடுப்புல நின்னு எரியும். அந்த 1.5’C எரிடக்கூடாதேங்க்றதுக்காக (குளோபல் வார்மிங்) காரணமா, நம்ம விறகு எரிக்கிறது கிடையாது, பின்னாடி வீட்டுல கேட்டுப்பாக்கலாமேனு தோணுச்சு.
அங்க ஒரு பாட்டி இருக்காங்க. வீட்ட
சுத்தி முளுசாவே மூத்த குடி மக்கள் தான். நீங்க விறகு எரிப்பிங்களா பாட்டினு கேட்டேன்.
நமக்கு வயசாயிடுச்சு பா,
இப்போ லாம் எரிக்கிறது இல்லனு சுருக்கமா முடிச்ச பாட்டிகிட்ட, அடுத்ததா
ஒரு கேள்வி கேட்டேன்.
“உங்க பக்கத்து வீட்டுல விறகு எரிப்பாங்களானு”. அவ்ளோதான்.
"அந்த அம்மா வென்னி போடும். சில சமயம் போட மாட்டாங்க. மேல தண்ணி தொட்டிலேந்து தண்ணி நிரம்பி இங்க தான் கொட்டுது, ஈரமாய்டும். எப்படி இப்போ எரிக்கிறாங்கனு தெரில?
அந்த அம்மாவுக்கு இப்போ தான் ஒரு குழந்தை பிறந்துருக்கு. மூணு வயசாவுது. ஆனா அது வேலைக்கு போகுது. அதுங்க வீட்டுல வேல பாக்க ஒரு வயசான
ஆள வீட்டோட வச்சிருக்காங்க. அந்த ஆளுக்கு மூணு பொண்ணுங்க. மாசம் 15000 சம்பளம் கொடுக்குறாங்க போல. அந்த வேலையாளோட பொண்ணு இந்த அம்மாவுக்கு எப்பவும் போன் பண்ணி,
சம்பளம் போடா சொல்லிட்டே இருக்கும். அந்த ஆளு கடைக்கு போறது,
பிள்ளைங்கள பாக்குறது அப்டி
இப்டினு எடுபிடி வேல மாதிரி செய்யுறாரு. இதுக்கு முன்னாடி ஒரு அம்மாவ வேலைக்கு வச்சிருந்தாங்க. ஆனா அது காதுல கம்மல் போடாது. பாக்க பொம்பள மாதிரியே இருக்காது. இந்த குழந்தைய அது அடிச்சிருச்சி. அதனால இந்த குழந்தை
அந்த அம்மாட்ட போகாது. பாத்தாலே அழும் போல. அதனால அந்த அம்மாவை நிப்பாட்டி இந்த ஆள
வேலைக்கு வச்சிருக்காங்க. இந்த
வீட்ல இருக்குற அந்த அம்மாவோட புருஷன் சிவில் காண்ட்ராக்டர். கூட பொறந்தவங்க 5 பேர். அதுல ஒரு அக்காவோட வீடு தான் இது. இவரு இப்போ குடியிருக்கார். மாச வாடகைலாம் வாங்க மாட்டாங்க. அப்பப்போ அம்பதாயிரம் ஒரு லட்சம்னு கொடுப்பாங்க போல. இவரு கட்டியிருக்குற பொண்ணு மூத்த அக்காவோட பொண்ணு. அடிக்கடி சொந்தக்காரங்க வருவாங்க. எப்போ வராங்க போறாங்கன்னு தெரியாது. இந்த மாதிரி வந்துட்டு போறது இடைஞ்சலா இருக்கக்கூடாதுனு தான் அவரோட சொந்தத்துலேயே கல்யாணம் பண்ணிகிட்டார்னு
நினைக்கிறேன். நமக்கு எதுக்குப்பா வீண் பொல்லாப்பு"
அப்டினு முடிச்சிகிட்டாப்ல.
விறகு எரிப்பாங்களானு கேட்ட ஒரு கேள்விக்குத்தான் இவ்ளோவும்.
ஆனா ஒரு வகைல பாத்தோம்னா,
இப்போ இந்த மாதிரி ஆட்கள் இருக்கிறது
அபூர்வம். குறைஞ்சிட்டே வராங்க.
இப்போல்லாம் மூணு நாளுகப்புறமும் பக்கத்து வீட்டு கதவு திறக்கலான
கூட நாம கண்டுக்கிறது இல்ல. அதையும் மீறி ஒரு துர்நாற்றம் வந்துச்சுனா மட்டும் தான்
ஏதோ வாடை அடிக்குதேனு தான் ‘பக்கத்துவீட்ல என்ன ஆச்சுனு’ யோசிக்கிற ஒரு மோசமான சூழல
வளத்துக்கிட்டு வர்றோம்.
கொஞ்சம் பேசுங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக