கலைவாணி தியேட்டர் என்றவுடன் அகமகிழ்ந்து வாசிக்க வந்த பண்பான அன்பு உள்ளங்களுக்கு காக்டெயில் வெல்கம். தியேட்டர் மாதிரியே சொல்லப்போற மேட்டரும் குஜால் தான்.
அவர் அலுவலக சீனியர். கலகலப்பான மனிதர். ஜகதலப்ரதாபர். சிறந்த கதை சொல்லி. சொல்லப்போகிற anectode அவர் ஒருமுறை பகிர்ந்துகொண்டது. நடந்த வருடம் 1975 சமீபத்தில் இருக்கலாம்.
அவரது பதின் பருவப்பிராயம். பத்தாம்
வகுப்பு படிக்கும்போது இருக்கலாம். அரும்பு மீசையும் குறும்பு பார்வையும்
கலந்தோடும் நாட்கள் அவை. முருகன்குறிச்சியில் இருக்கும் கலைவாணி பேருக்கேற்றார்
போல் அல்லாமல் 'அஜால்
குஜால்' படங்களுக்கு
பிரபலம். கலைவாணிக்கு டப் கொடுக்கும் ஒரே யோக்கியதை டவுணில் இருக்கும் சிவசக்தி
தியேட்டருக்கு மட்டுமே உண்டு. சம்பவத்திற்கு வருவோம். என்னதான் இருக்கிறது என்று
தெரிந்துகொள்ள மிகுந்த பிரயாசைப்பட்டு கலைவாணிக்கு அவர் சென்றிருக்கிறார்.
ஒரு ஹிந்தி படம் தான்.
போஸ்டர் தான் ஹிந்தி படமே தவிர சின்னக்கலைவாணர் விவேக் சொல்வது போல் அஞ்சாவது ரீல்
அஞ்சரைக்குள்ள வண்டி பிட்டு தான். ஸ்கூலுக்கு போவது போல் கிளம்பி அங்கு இல்லாத
உறவினரை கொன்றுவிட்டு ஸ்கூலுக்கு கட்டடித்து தியேட்டர் வந்து விட்டார். திரை
அரங்கிற்குள் விஜயம். அரசு விளம்பரங்களுக்கு பிறகு ஹிந்தி படம் ஆரம்பமாகிவிட்டது.
எல்லோரும் 'ஆ'
வென்று வாயை பிளந்து
ஆவலாய் ஐந்தாவது ரீலுக்கு வெய்டிங். அந்த காலத்தில் எல்லாம் எல்லா படத்திலும் பிட்
சேர்த்துவிடுவதில்லை. போலீஸ் கெடுபிடிகள், ப்ரொஜெக்டர் ஓட்டுபவனின் மூடு என பல influencing
factors பொறுமையை
சோதிக்கும். இவர் படம் பார்த்த நாள் அன்று இவர் தலையில் சுக்கிரன் சம்மனமிட்டு
உட்கார்ந்திருப்பான் போல. அவர் வாயாலேயே அடிக்கடி " வருஷம் 40
தாண்டிடுச்சுடே. இன்னும் அவளையோ
அந்த காட்சியையோ மறக்க முடியல. அடேங்கப்பா." என்று
சொல்லும்போதே பெருமூச்சு விட்டார்.
படம் முடிந்துவிட்டது. எதிர்பார்த்தது போல திகட்ட திகட்ட படம் பார்த்த்துவிட்டார். இப்பொழுது தான் ஹைலைட்டே. உள்ளே நுழையும்போது யார் கண்ணிலும் படாமல் முன்னே பின்னே நுழைந்து வந்து விடலாம். ஆனால் வெளியே போகும்போது அக்கம் பக்கம் பார்த்து போக வேண்டும். தெரிந்தவன் கையில் மாட்டிவிடக்கூடாது. படம் முடிந்து லைட் போட்டவுடன் சுற்றி முற்றி பார்க்கிறார். இவர் பயந்தது போலேயே இரண்டு வரிசை தள்ளி அவரது ஸ்கூல் வாத்தியார். 'ஏலே, இவர் எங்கல இங்கு வந்து தொலைஞ்சாரு?" என்று விசனப்பட்டுவிட்டு முன்னாடி திரும்பினால் அங்கு ஒரு அதிர்ச்சி. அவ்ருடைய மாமா முன் வரிசையில். அவரும் யாரும் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று திருட்டு பார்வை பார்க்க, இவரும் சீட்டுக்கடியில் ஒளிந்துகொண்டார். குனிந்து குறுகி சீட்டை ஒட்டியே மறைந்து மறைந்து வெளியே செல்லும் இரும்பு கதவு வரை வந்துவிட்டார்.
தியேட்டர் வாசல் வரை இருட்டாயிருந்தது. தியேட்டருக்கு வெளியே சுட்டெரிக்கும் நண்பகல் வெளிச்சம். எப்படி வெளியே போவதென்று யோசனை செய்திருக்கிறார். படாரென்று கெட்டப் சேஞ்ச். போட்டிருந்த சட்டையை கழட்டி இடுப்பில் கால்சராய்க்கு மேலே சுற்றிவிட்டு, பனியனை கொஞ்சம் கிழித்துவிட்டு, கைகுட்டையால் ஒரு கண் மட்டுமே தெரிவது போல் கட்டிக்கொண்டு கால் முட்டியின் மேல் ஒரு கையை வைத்து ஒரு காலால் தாங்கி தாங்கி நடந்து வெளியே வந்திருக்கிறார். பார்ட்டி எஸ்கேப்.
"அதெல்லாம் ஒரு காலம். செம
த்ரில்லிங்கான அனுபவம்பா. இப்போ எல்லாமே கைக்கு அடக்கமாயிடுச்சு. ஆறு இன்ச்
திரையில ஆறு வினாடில பாக்குற உங்களுக்கு இந்த 'அடேங்கப்பா'வை பீல் பண்ண முடியாது பா" என்று
அங்கலாய்த்து கொண்டு கிளம்பிவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக