வியாழன், பிப்ரவரி 02, 2017

அரிது அரிது...

மதியம் சாப்பாடு முடிச்சிட்டு ஹாயா சேர்ல சாஞ்சிட்டு அந்த ஓரடி ஸ்கேல வச்சிட்டு முதுகு சொறிஞ்ச சமயம் பார்த்து மேனேஜர் வந்து கேட்டாரு.
என்னது? நீ முதுகு சொறிஞ்சத பாத்ததுக்கு அப்புறமும் அந்த ஸ்கேல கேட்டாரா?
சீ. சீ. அத கேட்டா கூட குடுத்துடலாமே.
பின்ன?
கொடுத்த வேலய முடிச்சிட்டியானு கேட்டாரு.
முடிச்சிட்டியா?
இல்லையே?
என்ன பண்ணின?\
நானா? அவ்வையாறு, மாமியாருக்கு அட்வைஸ் சொல்லிருக்காரு. அத பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்.
என்ன உளர்ர? அவ்வயாறு எப்போ மாமியாரா பத்தி பேசினாரு?
பேசிருக்காரே?
அதான் எப்டின்றேன்?
நீ அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது பாட்டு கேட்டிருக்கியா?
ஆமா. முருகராண்ட பாடிகாமிப்பாரே. அதா?
ஆமா. அதேதான்.  அதுல கொடிது கொடிதுனு ஒரு லிஸ்ட் வருமே? ஞாபகம் இருக்குதா?
எனக்கா? டங்கா மாரி பாட்டு வேணா கேளு சொல்றேன்.
சரி நானே சொல்றேன் கேளு. 
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது
இன்புற அவர்கையில் உண்பது தானே.
அந்த லிஸ்ட்ல பாத்தேன்னா, முதல்ல வறுமை, அதவிட மோசம் இளமையில் வறுமை, அதையும் விட மோசம் குணப்படுத்த முடியாத தொழு நோய், அப்புறம் அன்பில்லா பெண்கள், அப்டின்னு வரிசையா சொல்லிட்டு இதெல்லாத்தையும் விட மோசம் அந்த அன்பில்லாத பெண்கள் கையில சாப்பிடுறது னு முடிக்கிறார்.

ஆமாப்பா. அவ்வையார் சொல்றது கரெக்டு தான். திட்டிட்டே சாப்பாடு போட்ரவட்ட எவன் குடும்பம் நடத்துறது. .
அதில்ல அர்த்தம்.
பின்ன?
உனக்கு பாசமா சமைச்சு போட்றவங்க கிட்ட மனசு கோனாமா நடந்துக்கணும். இல்லேன்னா இந்த கழிசடை ஜென்மத்துக்கெல்லாம் வடிச்சு கொட்டனுமே திட்டிக்கிட்டே சாப்பாடு போடுவாங்க. அத உக்காந்து சாப்பாடுற கீழ்தரமான நிலைக்கு நம்ம ஆளாக்கக்கூடாது னு சொல்றார்.
ஓ....ஆனா இது எல்லா பொண்ணுங்களுக்கும் பொருந்துமே.
எல்லா பொண்ணுங்களும் கடைசில மாமியார்தானே?
ஓ.....இப்டிதான் அர்த்தம் பன்னிக்கணுமா?
வேற எப்டி?....இப்டிதான்ன்ன்ன் அர்த்தம் பன்னிக்கணும்.






நையாண்டி தர்பார்

ஸ்டார் விஜய் நைய்யாண்டி தர்பார் தொடங்கியபோது, யூகி சேதுவை பரிச்சயபடுத்தியது. சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, ஒரு டாக் ஷோ அல்ல்து கரண்ட் அப்ஃபைர்சில் கலாய்த்தல், ஒரு பி‌ஜி‌எம் மியூசிக் குழு என்று வித்தியாசமான கான்செப்டில் கவர்ந்திழுத்தவர். வார்த்தை ஜித்தர். ரசிக்கும்படியான சிலேடை, அனாயாசமான பேச்சு என்று ஆயிரம் வாலாவாக வெடித்தவரை அதன் பிறகு அதிகமாக காணவில்லை. நிரம்ப நாள் கழித்து நேற்று காபி வித் டி‌டி ப்ரோக்ராமில் பிரதாப் போத்தனுடன் விருந்தினராக கலந்து கொண்டார். ஷோவை தனது அடுக்குமொழி பேச்சால் கலகலக்க வைத்தார். மிகப்பெரிய ஆளுமையாக கொண்டாடப்பட்ட பிரதாப் போத்தனால் சேது அளவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. Non Expressive. ஒரு வேளை அவரது படங்கள் அதிக  Expressive ஆக இருந்த காரணம் இருக்கலாம். 

ரேபிட் பயர் ரவுண்டில், ராதிகா என்றால் கொச்சைத்தமிழ், ராதா என்றால் Born Beauty மற்றும் ஸ்ரீப்ரியாவை, ஆண்கள் வரிசையில் நின்று காதல் சொல்லவைக்கும் அழகு என்று தனது ஸ்டைலில் பட படவென்று தெறிக்க வைத்தார். பிரதாப் போத்தன், தான் சிறு வயதில் கொஞ்சம் வைல்டு என்று சொன்னதும், ஆமா மைல்டா வைல்டு என்று ரைமிங் கட்டி கலங்கடித்தார். பாலசந்தர் பற்றிய கேள்விக்கு தன் பேனாவால் பெண்மைய்யை பற்றி எழுதி எழுதி தன் ஆண்மையை நிலை நாட்டியவர் என்றும், அஜித்தை பற்றிய கேள்விக்கு,’ Why don’t you love cinema?’ என்று பொட்டில் அடித்தார் போல் பதில் கூறியதும், அக்னி நட்சத்திரம் ரீமேக் பற்றிய கேள்விக்கு, அதை தொந்தரவு செய்ய வேண்டாம், A Perfect Film which has got Frozen in Time” என்று பழைய நைய்யாண்டி தர்பார் யூகி சேதுவாக பரிமளித்தார். டென்னிஸில் பல நாட்டு வீரர்கள் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவின் மகேஷ் பூபதியின் ட்ராப் ஷாட் மிக பிரபலம். ‘Killer’ என்று ஒருமுறை பெடெரரால் பாராட்டபட்டவர். மாய்ந்து மாய்ந்து தேடினாலும் யூட்யூபில் பூபதியின் வீடியோ கிடைப்பதில்லை. போலவே இந்த யூகி சேதுவின் நிலையும். நையாண்டி தர்பாருக்கு பிறகு ஒரு அற்புதமான டாக் ஷோ கலைஞனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டோம். அவருக்கென்று தனியொரு ப்ரோக்ராமை ஸ்டார் விஜய் ஏற்பாடு செய்யும் என்றே தோன்றுகிறது. அல்லது இந்த காபி வித் டி‌டி ப்ரோக்ராமையே யூகி சேதுவுக்கு கொடுத்தால் தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சுவார். 

நீயா நானா

நேற்றைய நீயா நானாவில்...

தனிக்குடித்தனமா அல்லது கூட்டுக்குடித்தனமா என்ற தலைப்பில், தனிக்குடித்தனத்தில் இன்றைய நவ நாகரீக கன்னிகள் ஒரு புறம் மற்றும் இரு தலைமுறை அனுபவம் உள்ள மாமியார்கள் எதிர்புறத்தில். ஷோவின் ஆரம்பித்திலேயே கோபிநாத் முடுக்கிவிட்ட உங்கள் திருமண வாழ்க்கையின் எதிர்பார்ப்பு என்ன?’ என்ற கேள்விக்கு பதிலளித்த பெண்களின் ஆசைகள் தொண்ணூறு சதவீதம் நடைமுறைக்கு அப்பாற்பட்டே இருந்தன.  முழுக்க முழுக்க கனவுத்தொழிற்சாலை என்றழைக்கப்படும் சினிமாவை போன்றே தங்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்ற எதிபார்ப்பு திகிலையே தருகிறது. கிராமத்து பின்புலம் சார்ந்த பெண்களாவது பரவாயில்லை, எக்ஸ்போஷர் கம்மியென்று அவர்களை கனவு காணவிடலாம். நகரத்தில் வாழும் பெண்கள் கூட ஆனந்தம் ப்ரூவுடன் ஆரம்பம்ம்ம்ம்ம் என்ற ஜிங்கில்ஸ்க்கு பிறகு செட்டையே கலைத்துவிட்டு அடுத்த ஷூட்டிங்கிற்கு தயாராகும் நடிகர் நடிகைகளின் வாழ்க்கை சாத்தியம் என்று எவ்வாறு கனவு காண்கிறார்கள் என்ற விஷயம் புரிபடவில்லை. அதிலும் சில பெண்கள் சில்லுனு ஒரு காதல் மாதிரியான வாழ்க்கை, ஆர்யா போன்ற ஃப்ரெண்ட்லியான ஹஸ்பண்ட், ஏதேனும் ஆர்.ஜே போன்ற செலிப்ரிடியுடனான வாழ்க்கை என்று சொல்ல கேட்டு மயக்கம் வராத குறைதான். காலையில் ஒரு ஹக், ஈவினிங் ஒரு ஹக், ஃப்ரைடே கம்பல்சரி அவுட்டிங்க், ஃபோர்ஹெட்டில் கிஸ், அலுவலகத்துக்கு பிக்கப் மற்றும் டிராப் செய்யும்பொழுது பை டார்லிங்க் என்று சொல்லிக்கொள்ளும் கியூட் ஃபீலிங்க் (மண்டையை பிளக்கும் வெயில் மற்றும் டிராபிக் ஊசலாட்டத்தில்), இவை எல்லாமே நித்தமும் நடக்கவேண்டுமென்று என்று சினிமாவை பார்த்து பார்த்தே ஒரு கோட் புக் எழுதி வைத்துள்ளார்கள்.  குறிக்கோள்  நூறு சதவீதம் இருந்தால்தான் எண்பது சதவீதத்தையாவது எட்டலாம் என்ற வாதம் சரிதான் என்றாலும், தங்களுடைய கனவு வாழ்க்கை எதிர்ப்பார்த்தது போல் நிறைவேறாத பட்சத்தில் நிதர்சனத்தை ஏற்று கொண்டு  அனுசரித்து செல்லும் பக்குவம் பெண்களிடத்தில் ஏன், இருபாலரிடமுமே குறைந்துகொண்டே வருகிறது தற்போது வெட்டவெளிச்சமாகிறது. விவேக் ஒரு படத்தில் சொல்வதை போல, லாங் ஷாட்டில் கைகோர்த்து கடற்கரையில் காதலர்கள் செல்வதுடன் எண்ட் கார்ட் போட்டு படம் முடிகிறது. ஆனால் அதன் பின் அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டத்தை இயக்குனர் சொல்ல மறந்துவிட்டார் என்பதே நிஜ வாழ்க்கை. .

இதற்கெல்லாம் உங்கள் பதில் என்ன மாமியார்களிடத்தில் கோபிநாத் கேட்க, வயிறெரிந்து மண் தூற்றி சாபம் விடாத குறைதான். இவர்களுக்கெல்லாம் கல்யாணமே ஆகக்கூடாது என்ற விதத்திலேயே பல மாமியார்களின் பதில் இருந்தது. ஒருவாராக தனிக்குடித்தனத்திற்கான எதிர்ப்பு ஏன் என்ற கேள்விக்கு ஒட்டுமொத்த மாமியார்கள் அனைவருமே, தங்கள் பைய்யனை மருமகள் தன்னிடமிருந்து பிரித்துவிடுவாள் என்ற காரணத்தையே முன் வைத்தனர். சில மாமியார்கள் எதிர்புறத்தில் அமர்ந்திருந்த இளம் பெண்களின் கோரிக்கைகள் நியாயமாகத்தான் தெரிகிறது என்றதுமே, கோபிநாத், மாமியார்கள் முன்பு போல் இல்லை. இப்போதெல்லாம் இறங்கிவருகின்றனர், விட்டுக்கொடுக்கின்றனர். என்ற கைத்தட்டலை பரிசாக கொடுக்க, மாமியார்களின் ரியாக்க்ஷனை பார்த்தால், அவ்வாறு தெரியாவில்லை. இருங்கடி, எப்படியும் எங்க வீட்டுக்கு மருமகளா வராமையா போய்டுவீங்க. அப்போ பாத்துக்கலாம் என்று புலி பதுங்குவது பாய்வதற்காகவே எனும் ரேஞ்சிலேயே அவர்கள் முக மற்றும் மனோபாவம் இருந்தது.

ஆண்டாண்டு காலமாக மணமாகிய பெண்கள் பிறந்த வீட்டை பிரிந்து, புகுந்த வீட்டுக்கு சென்று, அங்குள்ள புதுப்புது மனிதர்களுடன் பழகி சகித்துக்கொண்டு ஒரு ஆணாதிக்க சமூகத்தின் வாழ்க்கையை கழித்ததற்கான ஒரு பழி வாங்கும் படலமாகவே தனிக்குடித்தனம் என்ற ஆயுதத்தை, பெண்கள் சமூகம் கையில் எடுத்துள்ளதோ என்ற கேள்வி தொக்கி நின்றதை தவிர்க்க முடியவில்லை


எது எப்படியோ, நாளை திருமணமாக காத்திருக்கும் புது மாப்பிள்ளைகளான இன்றைய பேச்சிலர் சிங்கங்கள், இருதலை கொல்லி எறும்பாய் தவிக்க போவதை நினைக்கும் போது சற்றே கண்கள் வேர்க்கிறது. 

சாமி - சூட்டிங்

பதினோறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நேரம். சாமி பட சூட்டிங். திருநெல்வேலி முழுவது அதகளப்படுத்தியிருந்தார்கள்.  டேய், விக்ரம சுமோல பாத்தேன். ஹைகிரவுண்ட் ரவுண்டானால அருவா வச்சிட்டு சண்ட போட்றாணுங்க, சோடா பாட்டில் பறக்குது. கிறிஸ்துராஜா ஸ்கூல்ல தான் விவேக் காமெடி எடுக்குறாங்க. வெள்ள வெள்ளெனு இருக்கான்ல. இப்படி ஏகத்துக்கு உசுப்பேத்தல். போதாக்குறைக்கு த்ரிஷா வேறு ஷூட்டிங்கில் இருப்பதாக பெட்ரோல் ஊற்றினார்கள்.

என்ன செய்யலாம் என்று மூளையை கசக்கி பிழிந்ததில், சயின்ஸ் சென்டர் எக்சிபிஷன் ஞாபகம் வந்தது. நானும் நண்பனும் நேராக பிசிக்ஸ் வாத்தியாரான சாத்ரக் சாரிடம் சென்றோம்.

சார், சயின்ஸ் சென்டர்ல ஒரு ப்ரோக்ராம் போட்டுருக்காங்க. நாங்க ரெண்டு பேரு போயி பாத்துட்டு நம்ம ஸ்டூடண்ட்ஸ்க்கு ஓகேவா இல்லையானு செக் பன்னிட்டு டிக்கட் எவ்ளோனு விசாரிச்சிட்டு வரோம் சார். என்றோம்.

இவனுங்க பெரிய விஞ்ஞாஞி. அப்படியே விசாரிச்சு கிழிச்சிட்டாலும்.?’ என்று இழுத்தார்.

சார், ப்ளீஸ் சார்.

டேய். ஏதோ பிளான் போடுட்டீங்க. போயி தொலைங்கலே. என்று தண்ணி தெளித்து விட்டார்.

நண்பனின் XL சூப்பரில் புல்லட் போல பறந்து நேராக மார்க்கெட் நோக்கி ஒட்டினோம்.

நண்பன்,’ டேய் அவங்க ராஜா டவர்ஸ்ல தான் தங்கிருக்காங்க. நான் கூட்டிட்டு போறேன். அங்க போயி பாத்துக்கலாம் என்றான்.

வண்டியை நிப்பாட்டி ஐந்து நிமிடம் அவனை பாராட்டி அடுத்த பத்தாவது நிமிடத்தில் ராஜா டவர்ஸ்.

ரிசெப்ஷன் என்று எதுவும் இருந்ததாக ஞாபகம் இல்லை. நேராக லிஃப்டில் சென்று, எந்த ப்ளோர் டா?’

மூணாவது. கிங் சூட்ல விக்ரம். க்வீன் சூட்ல த்ரிஷா.

எப்பூடி ட இப்படி?’

நேத்துதாண்டா பசங்க பாதுட்டு வந்து சொன்னாங்க.

லிஃப்டில் இருந்து இறங்கிய பிறகு நேராக கிங் சூட் நோக்கி நடந்தோம். ஆனால் தெரியவில்லை.

ஒரு ரூம் திறந்திருந்தது. கொஞ்சம் பேர் சீட் ஆடிக்கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்து, சார், விக்ரம் சார் இருக்குற கிங் சூட் எங்கே இருக்கு?’

நேர போய் லெப்ட்ல திரும்புங்க.

தேங்க்ஸ் என்று சொல்லி பத்து தப்படிகள் நடந்தபொழுது,

தம்பி, நில்லுங்க ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கீங்க  இங்க என்ன பண்றீங்க.?’

சற்றும் எதிர்ப்பார்க்காத தோரணையில் நண்பன், எங்க அப்பா டி.எஸ்.பி. மெட்ராஸ்ல தான் இருக்கார். விக்ரம் சார் எங்க அப்பா ரொம்ப ஃப்ரெண்ட். அதான் பாத்துட்டு வர சொன்னார். என்றான்.

, அப்பிடியா?, சரி போங்க.

ரூமை விட்டு வெளியே வந்து நண்பனின் சம்யோஜிதத்தை மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் பாராட்டி, கிங் சூட்டை நோக்கி நடந்தோம்.

இன்னும் ஒரு ஐந்து நிமிடத்தில் விக்ரமுடன் ஒரு ஆட்டோக்ராப், ஒரு போட்டோக்ராப், கைகுலுக்கல் போன்ற வரலாற்று நிகழ்வுகளெல்லாம் மனதில் அசைபோட்டுக்கொண்டே கிங் சூட்டை அடைந்து கதவை தட்டும் நேரத்தில், நண்பன் ‘The seven Habits of Highly effective People’ புக்கை படித்தது போல சொன்னான்.

டேய், அவங்க சூட்டிங்க்லாம் போய்ட்டு வந்து டயர்டா இருப்பாங்க. இப்போ கதவ தட்டி டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். அவங்க வெளில வரட்டும் என்றான்.

இவ்ளோ தூரம் வந்தாச்சு இனிமே என்னடா?. காதவ தட்டிடலாம். விக்ரம் குரல் கூட கேக்குது.

அதெல்லாம் வேண்டாம்.

தட்டப்போன கையை பிடித்து நிறுத்தி, இப்படியே ஒரு ஐந்து நிமிடம் வியாக்யானம் பேச, ஹோட்டல் சிப்பந்தி வந்தான்.

தம்பி, கீழ போங்க. இங்க நீக்காதீங்க.

நண்பன், மெட்ராஸ்ல எங்க அப்பா டி.எஸ்.பி என்றதும்,

தம்பி, நீங்களா போறீங்களா? இல்ல செக்யூரிடிய கூப்டனுமா?’ என்றதும் தலையை தொங்க போட்டுக்கொண்டே கீழிறங்கி நடக்க ஆரம்பித்தோம்.

வண்டியை ஸ்டார்ட் பன்னும்போது கூட டேய் அவங்க டயர்டா இருப்பாங்க. டிஸ்டர்ப் பண்ண கூடாதுடா என்றான், சீரியசாக, மீண்டும்.

அண்ணல் காந்தியடிகளின் வழி பற்றி போற்றி நடக்கும் அந்த அன்பிற்குரிய தன்மானச்சிங்கம் திரு  ,அவர்களே.




மெடிக்கல் சீட்

மெடிக்கலுக்காக முட்டி மோதி படித்து கடைசியில் உதடு பிதுங்கி இஞ்சினியரிங்கில் சேர்ந்து ஒரு மாதம் மெடிக்கல் கிடைக்காத துக்கத்தை அழுது ஒழித்து கழிந்த பிறகு, ஓர் இரவு. அதே டேபிள். அதே டிவி. அதே சேனல். அதே காட்சி. கே டிவியில் மௌன ராகம் சூப்பர் ஹிட் இரவுக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அம்மாவும் நானும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

ரேவதி படியில் மேலேறும்போது மோகன் பின்னடியே ஓடிச்சென்று கையை பிடிப்பார்.

கைய பிடிக்காதீங்க. ரேவதியின் டயலாக்.

மோகன், ஏன்?’

கைய பிடிக்காதீங்கனா பிடிக்காதீங்க. மறுபடியும் ரேவதி.

அதான் ஏன்?’, மீண்டும் மோகன்.

அதற்கு ரேவதி பதில் சொல்லும் முன்பு, நான் முந்திக்கொண்டேன்.

நீங்க தொட்டா கம்பளிப்பூச்சி ஊறுர மாதிரி இருக்குது.

பக்கத்தில் படம் பார்த்துக்கொண்டிருந்த என் அம்மா, மெடிக்கல் சீட் உனக்கு ஏன் கிடைக்கலனு இப்பதான் புரியுது.


ராணுவ மரியாதை

தூங்கிவிட்டாள் என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது அப்பா இன்னொரு கதை?’ என்றாள்.

ஒரு ஊர்ல காக்கா இருந்துச்சாம்.

ம்.

அது காலைல சீக்கிரமா எழுந்துச்சி பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு அப்புறமா சாமி கும்ப்டுட்டு இட்லி சாப்பிடுச்சாம்.

ம். அப்புறம் ஸ்கூல் பேக் எடுத்துட்டு ஆட்டோல கிளம்பிபோச்சாம். ஏ, பி, சி டி படிச்சிட்டுவீட்டுக்கு வந்துச்சாம்.

ம்.

அப்புறமா சாப்டுட்டு பிரிட்ஜ் திறந்து ஆரஞ்ச் ஜூஸ் எடுத்து,

கதை சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஏனோ மேஜர் முகுந்தின் இறுதி அஞ்சலி புகைப்படங்கள் கண்முன் நிழலாடின. அனைத்து போட்டக்களிலும் மேஜர் முகுந்தின் குழந்தை மட்டும் சிரித்து கொண்டிருந்தது. மற்றைய இறப்பு போல வெடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது துக்கத்தை மனதினுள் இறுக்கிக்கொண்டு ஒரு அரசின் மாபெரும் நிகழ்வாக நடைபெறும். படார் படாரென்று துப்பாக்கி குண்டுகள் முழங்க ஏதோ வான வேடிக்கை போன்று அதனை அக்குழந்தை பார்த்துக்கொண்டிருக்கலாம். அந்த குழந்தை அழுது விடக்கூடாது என்பதற்காக தன் மகனின் இறுதி அஞ்சலியிலும் துக்கத்துடனே சிரிக்க முயன்றுகொண்டிருந்தார் வயதான அப்பா. ஒளிவிழந்த மனைவியின் முகம். ஒருவேளை அன்றிரவு கதை கேட்கவேண்டுமென்று தோன்றினால் யாரிடம் கேட்கும் என்று கேள்வி எழுந்த போது, கண்ணில் நீர் கோர்த்ததை தவிர்க்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சவப்பெட்டியின் அருகிலேயே குழந்தை விளையாண்டு கொண்டிருந்தது மனதை உருக்கும் நிகழ்வாக இருந்தது.

காக்கா ஆரஞ்ச் ஜூஸ் குடிச்சிட்டு....

பாப்பா.....பாப்பா


தூங்கிவிட்டிருந்தாள்

ருசி

என்னதான் ஓசியில் சாப்பிட்டாலும் அல்லது ஸ்டார் ஹோட்டலில் நான்கு மடங்கு அதிகமாக காசு கொடுத்து ஏசியில் சாப்பிட்டாலும், கல்யாண வீட்டு சாப்பாடு போலிராது. அதிலும் தாலி கட்டும் பொழுது அட்சதை பாதி போட்டும் போடாமலும் கையை கழுவாது அடித்துபிடித்து பந்தியில் சொந்த பந்தங்களுக்கு  இடம் போட்டு இடம் பிடித்து இலை கழுவும போது அப்படியே கொஞ்சம் கைக்கும் சேர்த்து தண்ணீர் விட்டு இலை கழுவி சாப்பிடும் சுவையே அலாதிதான்.

ஒவ்வொரு மாவட்டதிற்கும் ஒரு சுவை. அனைத்தையும் ருசிக்காது பிறவிப்பயன் கழியாது. ஒருமுறை கும்பகோணத்திற்கு போயிருந்தபோது பரிமாறப்பட்ட கத்திரிக்காய் கொத்சு(அல்லது அவியல் அல்லது ஒரு கறி) சுவை தூக்கலாக இருந்தது. மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிட்டு நானும் மனைவியும் சமையல்காரரை தேடி கண்டுபிடித்து கைகுலுக்கி அகமகிழ்ந்தோம். மாஸ்டருக்கும் சந்தோஷம் தாளவில்லை.கத்திரிக்காயை அவித்து தேங்காய் திருவி தாளிக்கும் முன் பின் என செய்முறையை ஹேப்பியாக பகிர்ந்துகொண்டார். “விஷேஷம்னா மறக்காம கூப்டுங்கோ” என்று விசிட்டிங் கார்ட் கொடுத்தார்.

போலவே ரசத்திற்கும் தனி சுவையுண்டு. அதுவும் முந்தைய ஆஃபிஸில் சாதத்தை தட்டில் போட்டவுடனையே ஒரு பெரிய வாளியை தூக்கிக்கொண்டு வந்து முகத்தில் காண்பித்து ஊத்தாத குறையாக சாம்பாரா ரசமா சார் என்று டரியில் காமிப்பார்கள். சாம்பார் நெடி முகர்ந்த மறுகணமே மயக்கம், வாந்தி பேதி போன்ற அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். மூன்று முறைக்கும் மேலாக மயக்கம் வரலாம். இதற்காக பயந்து கொண்டே, “தம்பி, இந்தாங்க கும்மிடிபூண்டி டிக்கட். சாம்பார் வாளியோட போயி டிரைன் ஏறிடுங்க. அதுக்கு முன்னாடி தயிர் மட்டும் கொடுத்துட்டு போங்க. என்று தயிருடன் கைகழுவிவிடுவோம்.

காய்ந்தாமாடு போல் திரிந்துகொண்டிருந்த வேளையில் ஊரில் ஒரு திருமணம். பால்யகால நண்பன். அதே பாதி அட்சதை. அடித்துபிடித்து பந்தி. சாம்பார் சுமார். ரசம் தேவாமிர்தமாக இருந்தது. மறுக்கா மறுக்கா கேட்டு சாப்பிட்டு டம்ப்ளரில் ஊற்றி குடித்து அருகில் இருந்த நண்பனிடம் அவன் டயர்ட் ஆகும் வரை அரை மணி நேரம் ரசத்தைப்பற்றி சிலாகித்து பேசி , டேய் ஆள விடுடா என்று ஓடிவிட்டான்.

சமையல்காரரை தேடி கண்டுபிடித்து மாஸ்டர். நீங்க தான் சமையலா? சூப்பர். அதுவும் அந்த ரசம்...?’

தம்பி இங்க வாங்க என்று இடைமறித்து கையை பிசைந்து கொண்டே ஓரமாக கூட்டிப்போனார்.

முததடவையா நடந்துடுச்சு தம்பி, சாம்பார், வத்தக்குழம்பு, அவியல், பாயாசம் எல்லாம் நல்லாருந்துருக்குமே?’ என்றார்.

அத விடுங்க மாஸ்டர். அந்த ரசம்தான்....,”

“மன்னிச்சிடுங்க தம்பி புதுசா ஒரு பய சேந்துருக்கான். அவன்தான் படிக்கதெரியாம சாம்பார் பவுடர தூக்கி ரசத்துல போட்டுட்டான். கோவிச்சுக்காதீங்க”

நான். ஙே



ரிலயன்ஸ்.

சிட்டியிலிருந்து ஆறேழு கிலோமீட்டர் தொலைவில் சில மாதங்களாக ஃபேக்டரி ஷெட்டை போன்று மஞ்சள் வண்ணத்தில் அஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்து கொண்டிருந்தார்கள். வீட்டிற்கு முன்நிற்கும் கிரில் கதவோ அல்லது கோயில் வாசலில் இருக்கும் ரேழி போன்ற அமைப்போ அல்லது காண்டாமணி போன்ற ஏதோ ஒரு சமாச்சாரத்தை வைத்து வெல்ட் அடிக்கும் பட்டறையாக இருக்கலாம் என்று சந்தேகித்த பொழுது திறந்தேவிட்டார்கள். ரிலையன்ஸ் ஷாப்பிங் மால். பூரண மஞ்சள் வண்ணம்.

ஓரளவு விசாலமான கார் பார்க்கிங் மற்றும் கவர்ந்திழுக்கும் வாயில் தோரண விளக்குகள் சகிதமாக ஒருவாரம் களைகட்டியிருந்தது. ஒரு புனித புதனில் விசிட் அடித்தோம். வாயிலில் குறைந்தது ஐநூறு டிராலி நிறுத்தப்பட்டிருந்தது. கூடையை மட்டுமே தூக்கிக்கொண்டு சின்ன சின்ன ஷாப்பிங் மாலில் முட்டு சந்து  போல உலா வந்த குடும்பங்களுக்கு, இது குட்டீஸோடு குதூகலமாய் ஷாப்பிங் செய்வதற்கான புது அனுபவம். நுழையும் பொழுதே குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு பில் என்றும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ சர்க்கரை இனாம் போன்ற பஞ்ச் டிஞ்ச்களோடு நோட்டீஸ் பேனர்கள் வரேவேற்றன.. டிவி, பாத்திரங்கள், கார்பெட்கள், பல்புகள், சோப்பு, மசாலா, காய்கனிகள், அய்ஸ்க்ரீம் என்று வகை தொகையில்லாமல் அடுக்கியிருந்தார்கள். நம்மவர்களும் சளைத்தவர்களில்லை. ஷெல்ஃபில் குனிந்து பார்த்து அடியில் தோண்டித்துருவி ஆஃபர் அதிகமாக உள்ள பொருட்களாக சல்லடை போட்டு கரடி கூட உட்காரும் டிராலியில் பத்து ரூபாய் சாக்கோஸ் எடுத்துபோட்டுவிட்டு கிங்பிஷர் ஏர்லைன்சில் துபாய் செல்வதற்கு போர்டிங்க் போவது போல் உற்சாகமாக நடை பயின்றுகொண்டிருந்தனர்.

ஏ.சி. இன்னும் போடவில்லை. பனிவிழும் மலர்வனம் அல்லது உயிரே  போன்ற பாட்டுகளோ இன்ஸ்ட்ரூமென்ட் மியூசிக் வகைகளோ ஒலிக்கவில்லை. இதயம் நல்லெண்ணை எங்கே? என்ற கேட்ட பெண்மணியிடம், ஸ்டோர் அசிஸ்டண்ட் ஒருவர் பருத்திவீரன் சித்தப்பு குரலில், அங்க மேல இருக்குல்ல என்று மீசை முறுக்கிக்கொண்டிருந்தார். இவை முழுதும் சரிசெய்ய இன்னும் சில வாரங்களாகலாம்.

நூற்றி பத்து ரூபாய் என்றால் கூட அசாதாரணமாக கார்ட் தேய்க்கும் மால்கள் வரிசையில், இங்கு கார்ட் தேய்க்கும் மெஷின்கள் தேமே என்று வாய் மூடி உட்கார்ந்திருந்தன. கௌண்டரில் மங்கள் அண்ட் மங்கள் ஜூவல்லரியில் இனமாக கொடுக்கும் சிறு மணிபர்ஸில் இருந்து எவ்வளுப்பா?, நானூத்தி முப்பெத்தெழு ரூபா அம்பது காசா?’ என்று ஒரு பெண்மணி சில்லறை தேடிக்கொண்டிருந்தார். லெகிங்க்ஸ் மற்றும் ஒரு சைஸ் கம்மியான குர்தி போட்டு பிதுங்கிக்கொண்டு, மாஸ்டரா? விசாவா?’ என்று பெண்கள் கேட்பதற்கு ஓரிரு வருடங்கள் பிடிக்கலாம்.


எது எப்படியோ? பாருங்க சார். ரிலையன்ஸ் மால் வந்துருச்சு. நாளைக்கு ஏர்போர்ட் வரும்னு சொல்றாங்க  விலையெல்லாம் ஏறிப்போச்சு என்று ஸ்குயர்ஃபீட்டில் நூறு இருநூறு ஏற்ற காத்திருக்கும் ரியல் எஸ்டேட்காரர்களுக்கு கொண்டாட்டம் தான். 

மனிதம்

கடந்த வாரத்தில் நடந்த இரு வேறு சம்பவங்கள். இவை இரண்டும் இன்னும் மனிதம் தேய்ந்துவிடவில்லை என்று மிகைப்படுத்துவதற்காகவோ அல்லது கடவுள் இருக்கான் கொமாரு என்று சொல்வதற்காகவோ எழுதப்பட்டவை அல்ல. சொம்மா ஒரு பகிர்தல். அவ்வளவே.

முதல் சம்பவம்.

வண்டி ஒட்டப்பழகிய இரண்டாவது வாரமே ஒழுங்காக ரோட்டை பார்க்காது இடப்புறமாக பார்த்துக்கொண்டே வலப்புறமாக ஸ்டியரிங்கை ஒடித்ததில் சாலை நடுவில் டிவைடர் என்று சொல்லப்படும் கற்களில்  (ஒரு ரெண்டடி உசரம்) வண்டி ஏறி, மூளையிலிருந்து (இருக்கா??) அனுப்பப்ட்ட சமிக்னைகளை மெதுவாக உள்வாங்கி கால்கள் பிரேக் போட்ட சமயத்தில், வண்டியின் இரண்டு டயரும் காற்றின் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன. கதவைத்திறந்து இறங்கி பார்த்தபொழுது கருப்பாக ஏதோ ஒரு வஸ்து (ஆயிலா??) இஞ்ஜினு\க்கடியிலிருந்து பிசிறிக்கொண்டிருந்தது. (கொஞ்ச நேரத்தில் பெய்ய ஆரம்பித்தது). அதற்குள்ளாகவே சாலை ஓரங்களில் கூட்டம் கூடி (பத்தில் ஐந்து பேர் என்னாச்சு? டைப்) வண்டிக்கு அருகில் வந்து நின்றனர். ஒருவர் டிக்கியை திறந்து ஜாக்கி எடுங்க என்றார். ஏற்கனவே காதல் பரத் போல ஙே என்று பேந்தபேந்த விழித்து கொண்டிருந்த நான், டிக்கியை திறந்து தடவி ஏதோ ஒன்றை எடுத்தேன். அலேக்காக ஒரு ஐந்து பேர் அந்த ஒரு டன் வண்டியை முட்டு குடுத்து தூக்க அடியில் பூந்து கல்லை நகட்டி டயரை தரையோடு ஒன்றா வைத்தபோது உஸ் என்று காற்றை கக்கியது. ஸிடெப்னி இருக்கா சார்? என்றார் ஒருவர். இன்னொருவர் டிக்கியை திறந்து ஸிடெப்னியை எடுத்துக்கொடுக்க மற்றொருவர் ஸ்பேனர் கொண்டு டயரை கழட்ட ஆரம்பித்திருந்தார். வண்டி ஒட்டிட்டு வந்தது யாருங்க?’ என்று இடையில் ஒருவர் இன்டர்வியூ எடுக்க நாந்தேன் என்று சப்ஜார்டாக ஆஜராகினேன். எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியாத அளவுக்கு கால் டாக்சி டிரைவர்கள், கம்பெனி டிரைவர்கள், கம்பெனி ஊழியர்கள் என்று பலரும் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தனர். நான் அதே ஙே’. படபடவென்று ஸ்டெப்னி மாட்டி பின் பார்த்தால் அதுவும் காயமே இது பொய்யடா வெறும் காற்றிழந்த பய்யடா என்று இளித்து கொண்டிருந்தது.

சார், அது இன்ஜின் ஆயில் போல தெரிது. நீங்க வேண்டி ஓட்ட வேணாம், ஓரம் கட்டிட்டு மெக்கானிக் கூப்டு பாருங்க என்றார் ஒருவர்.

கொடுங்க சார். நீங்க பதட்டமா இருக்கீங்க. நானே பார்க் பண்ணிட்றேன். இன்னொருவர்.
பேந்த பேந்த விழித்து கொண்டிருந்த போதே நன்றியை கூட எதிர்பாராது கடகடவென்று கலைந்து சென்று விட்டது கூட்டம்.

அடுத்த நாள் வண்டி எடுக்க வந்த மெக்கானிக், சார் நீங்க பூஜை போட்டிங்க்ளா? என்றார்.
இல்ல சார். பழைய வண்டிக்கு போய் எதுக்குனு?....’

என்ன சார் நீங்க. பழைய வண்டி வாங்கிருக்கீங்க. அதுவும் பாய்டேந்து. நம்ம பாய் வண்டிய ஒரு இந்து வண்டியா மாத்தணும்னா எப்படி? ஒரு பூஜை போட்டே ஆகணும் என்றார். 
லாஜிக்காக கூறினாரோ, அனுபவத்தில் கூறினாரோ அல்லது வெள்ளேந்தியாக சொன்னாரோ தெரியவில்லை. எது எப்படியோ வண்டி திரும்பி வரும் பொழுது நான்கு எழுமிச்சம் பழம் நசுக்கப்படும்.

இரண்டாவது சம்பவம்

பேங்கில் சேஃப்டி லாக்கர் திறக்கும் பொருட்டு நான்கைந்து முறை அலைந்து அன்று கீ வாங்க வந்துருங்க சார் என்று நான் எதிர்பார்த்திருந்த வார்த்தைகளை முத்து போல உதிர்த்தார் மேனேஜர். பேங்க் சென்று சில பல நிமிடங்கள் விட்டத்தை பார்த்து, தண்ணீர் குடித்து, கைக்குட்டையில் விசிறி, ஒருவழியாக உள்ளே கூப்பிட்டு இந்தாங்க சார் என்று சாவியை கொடுக்கும் பொழுது தான், ஆஆ...போனு...காணோம். பேங்கில் சல்லடை போட்டு தேடி, வண்டி பார்க் செய்த இடத்தில் தேடி உதட்டை பிதுக்கிய பிறகு, வந்த வழியாகவே (அதே ஙே லுக்கில்) தேடிபார்த்து இல்லை. யாரோ ஆட்டையை போட்டுவிட்டார்கள். மலேசியா விமானம் மிஸ்டரி போல கால் செய்து பார்த்ததில் இன்னும்  ரிங்கிக்கொண்டிருந்தது. கம்பெனி செக்யூரிட்டியிடம் சொல்லி, ஜிமெயில், FB, பேங்க் பாஸ்வார்டை மாற்றி வீட்டில் புயலாய் பூந்து IMEI நம்பரை தேடி போலீஸ் ஸ்டேஷன் அடைந்தபோது கால் செய்து பார்த்தேன். Switch Off. ஓகே. தூக்கிட்டான். போலீஸ் ஸ்டேஷனில் டிபிக்கள் தமிழ் சினிமா சீன் போல இருந்தது.

சார், கம்ப்ளேண்ட் கொடுக்கணும்.

என்ன விஷயம்?’

மொபைல் தொலைஞ்சு போச்சு.

ஏதோ எழுதிக்கொண்டிருந்தவர் (ஏட்டய்யா) இப்போது தலையை தூக்கி பார்த்து, அதுக்கு?’  என்று முறைத்தார்.

சார், 18000 ரூவா, மொபைலு. இந்த இடத்துல தொலைஞ்சுபோச்சு.

அதுக்கு நீங்க் அந்த ஸ்டேஷன் போகணும் சார்.

ஜஸ்ட் (அங்க தான் பிரச்சினை) ஒரு கம்ப்ளைண்ட்.

ஏட்டய்யா, மீசையை முறுக்கி தொப்பையை இறுக்கி, இங்க பாருயா. இவரு சும்மா ஒரு கம்ப்ளைண்ட் கொடுப்பாராம். நம்ம அத கிளோஸ் பண்ண நாக்கு தள்ளனுமாம். நல்லலாருக்குங்க. நீங்க பேசறது.

எங்கள் கம்பெனி இன்ஸ்பெக்டரின் பெயரை சொன்னவுடன்

, நீங்க முன்னாடியே சொல்லிருக்கலாமே சார், என்று சிரித்துக்கொண்டே உக்காரவைத்து, எங்கே, எப்படி என்ற விவரங்களை கேட்டுக்கொண்டு ஒரு ஒயிட் பேப்பரில் ஹிஸ்டரி ஜாகிரபி எல்லாம் எழுதிக்கொண்டனர். ஒருவழியாக சலாம் அடித்து கிளம்பி வீட்டுக்கு வந்த பொழுது அப்பா நம்பருக்கு கால் வந்தது.

சார், ஒரு பொன் பேங்க் வாசல்ல கடந்துச்சு. அது ஆபரேட் பண்ணவே தெரில. டிஸ்ப்லே வேற கீறிடுச்சு. சிம்ம கழட்டி நம்பர் தேடி என் மொபைல்லெந்து கூப்டுறேன்.

கும்பிடப்போன தெய்வம்....அட குறுக்கே குறுக்கே ...

குலதெய்வத்திற்கு நன்றி சொல்லி மொபைலை கண்டெடுத்தவருக்கும் நன்றி சொல்லி, பேரை கேட்டு குறித்து வைத்து கொண்டேன்.

சார், சைட் ஸ்டேண்ட் என்று கத்தும் ஒருவரிலிருந்தே ஆரம்பிக்கிறது. நம்முடைய அன்றாட அலுவல்களும் நடவடிக்கைகளும் பல யாரோ மற்றும் எவரோக்களால் இடைவெளியில்லாது செம்மைய்யாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அடிக்கோடிட்டு உணர்த்திய சம்பவங்களே இவை.

அவ்ளோதான்