வியாழன், மார்ச் 14, 2013

திருவரங்கன் உலா


திருவரங்கன் உலா படித்து பாருங்களேன் என்று அவர் சொன்னபொழுது, அது ஏதோ ஆழ்வார், திருப்பள்ளியெழுச்சி போன்ற வகையரவாக இருக்கலாம் என்று கணித்திருந்தேன். அந்த கணிப்பை அடித்து நொறுக்கியது போல் இருந்தது அதை பற்றி தெரிந்து கொண்டபோது. திருவரங்கன் உலா ஒரு காரணப்பெயர். திரு அரங்கனின் உலாவே திருவரங்கன் உலா. அரங்கன்- ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவன். உற்சவர். எழுதியவர் ஸ்ரீ வேணுகோபாலன். இந்த பெயர் புதியதாக தோன்றினால், புஷ்பா தங்கதுரை என்ற பெயர் கேள்விபட்டது போல் இருக்கிறதா? அவரே தான் இவர். புஷ்பா தங்கதுரை இவரது புனை பெயர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்.

திருவரங்கன் உலா என்றதும் ஏதோ உற்சவரை பல்லக்கில் உட்காரவைத்து அதன் பின் பாசுரங்கள் பாடிச்சென்றதை பற்றி என்று நினைத்தால், இல்லை. கி.பி. 1300 ஆம் ஆண்டு, சுல்தானியர்கள் படை தெற்கே படையெடுத்து வந்தபோது, நாட்டை கைப்பற்றியதோடல்லாமல் கண்ணில் தென்பட்ட கோவில் கோட்டை என்று எல்லாவற்றையும் சூறையாடினார்கள். குழந்தைகள் பெண்கள் என்று பாகுபாடின்றி துவம்சம் செய்தார்கள். அவர்களிடமிருந்து விக்கிரகங்களை காப்பாற்றி சிலர் மண்ணில் புதைத்து வைத்தார்கள், சிலர் கையில் தூக்கிக்கொண்டு கண் காணாத இடத்திற்கு ஓடினார்கள்  திருவரங்கத்தில் இப்பொழுது நீங்கள் தரிசிக்கும் அரங்க விக்கிரகம் அவ்வாறு தூக்கி செல்லபட்டு சுமார் அறுபது ஆண்டுகள் பல இடங்களில் சுற்றி திரிந்து பின்னர் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளப்பட்டது. இதுவே திருவரங்க உலாவக வடித்திருக்கிறார் ஸ்ரீ வேணுகோபாலன்.

முதல் இரண்டு பாகம் திருவரங்கன் உலாவாகவும், அதைத்தொடர்ந்து பின்னிரு பாகங்கள் மதுரா விஜயமுமாக படைத்திருக்கிறார். ஆரம்பித்த இரு பக்கங்களிலேயே குதிரை பாய்ச்சலாக கதை செல்கிறது. ஒரு இடமேனும் தொய்வில்லை. பொன்னியின் செல்வன் மற்றும் சிவாகமியின் சபதம் தொடர்ந்து மிக ஆவலுடன் படித்த ஒரு வரலாற்று பெட்டகம்.

குலசேகரன், திருவரங்கன் உலாவின் கதாநாயகன்.. குலசேகரனின் எச்சரிக்கையின் (சுல்தானியர்கள் படையெடுப்பு) பேரில் ஸ்ரீரங்கமே அரங்கனை தூக்கி கொண்டு ஓடுகிறது. ஒரு குழு ஸ்ரீரங்கத்து கோவிலை காக்க பின் தங்கி விடுகிறது. அடுத்த நூறு பக்கங்களுக்கு, ஒரு சிறு படையை வைத்து கொண்டு, சுல்தானியர்களின் படையிடம் அவர்கள் போரிட்ட விதத்தை மயிர் கூச்செரியும் விதத்தில் ஸ்ரீ வேணுகோபாலன் விளக்கியுள்ளார். கோவில் மதில் சுவரை கோட்டையாக, கொதிக்கும் எண்ணை மற்றும் தீப்பந்தத்தை ஆயுதமாக, முள்செடியே அரணாக, சாதாரண பாமர மக்களின் போருதவி என பல விடயங்கள் ஆச்சர்யத்தை அளிக்கின்றன.

இந்த சுல்தானியர்கள் திருவரங்கத்தின் மீது படையெடுத்ததற்கான காரணமே அலாதியானது. கி.பி. 1300 ன் ஆரம்பத்தில் சுல்தானியர் படையெடுத்து வந்து தெற்கை நாசபடுத்தி பல ஆபரணங்களை கொள்ளை அடித்து சென்றனர். அவ்வாறு எடுத்து செல்லபட்டவையில் திருவரங்கனின் விக்கிரகமும் ஒன்று. கொள்ளையடிக்கபட்ட பொருள்களெல்லாம் தில்லி கோட்டையில் பத்திரப்படுத்தபட்டன. சுரதானி என்று அழைக்கபடும் ஒரு சுல்தானிய இளவரசி, அந்த விக்கிரகத்தை பார்த்துவிடுகிறாள். அதன் சௌந்தர்யத்தின் மீது தீராக்காதல் கொண்டு அதையே நினைத்து உருகுகிறாள். அல்லும் பகலும் அதனுடனே கழிக்கிறாள். இவ்வாறு இருக்கையில் திருவரங்கனை இழந்து தவிக்கும் திருவரங்க வாசிகள் தில்லிக்கு வருகிறார்கள். ஆடல், பாடல் என்று சுல்தானை மகிழ்விக்கிறார்கள். அதில் மயங்கிய சுல்தான் என்ன பரிசு வேண்டும் என்று கேட்க, தாங்கள் எங்களிடமிருந்து எடுத்து சென்ற பொருள் வேண்டும் என்று சொல்ல, சுல்தானும் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்து கொள்ளுங்கள் என்று உத்தரவிடுகிறார். இதனை பயன்படுத்திக்கொண்ட திருவரங்க வாசிகள், விக்கிரகத்தை தூக்கி கொண்டு ஓட்டமும் நடையுமாக திருவரங்கத்திற்கு வந்து சேருகிறார்கள். திருவரங்க விக்கிரகம் காணாது திகைக்கும் சுரதானி, ஒருவாறு உண்மையை தெரிந்து கொண்டு, ஒரே ஓட்டமாக திருவரங்கத்திற்கு வந்து சேர்க்கிறாள். அங்கே ஜோதியாய் வீற்றிருக்கும் அரங்கனை தரிசித்து அதே இடத்தில் மாண்டு விடுகிறாள். இதை கேள்விபட்ட சுல்தான், அந்த விக்கிரகத்தில் ஏதோ வசியம் இருக்கிறது என்று, அதை மீண்டும் கைப்பற்ற படையெடுத்து வருகிறார். அதன் பின்பு அரங்கனது விக்கிரகம் எவ்வாறு தப்புவிக்கபட்டது என்பதே திருவரங்க உலாவின் கதை. இல்லை இல்லை. வரலாறு. இந்த சுரதானியே, துலுக்க நாச்சியார் என்று பெயர் பெற்று கோவில் மதில் சுவரில் காட்சி தருகிறாள். Wiki Link

திருவரங்கனை தப்புவிக்க எவ்வாறெல்லாம் பிரயத்தனபட்டார்கள் என்று படித்தறியும்பொழுது சொல்லோன்னா வியப்பை அளிக்கிறது. ஆரம்பத்தில் ஒரு சிறு கிராமமாக அரங்கனை தூக்கி சென்றவர்கள், பின்னாளில் போரில் அடிபட்டோ, வயதான காரணத்தினாலோ, ஒவ்வொருவராக மடிந்து, இறுதியில் ஐந்து பேர் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள். அந்த ஐவரும் கொடவர்கள் என்று அழைக்கபடுகிறார்கள். சிங்கழகர், ஸ்ரீ வில்லிபுத்தூர் தாசர் என அந்த ஐவரின் பெயரையும் குறிப்பிடுவது, ஸ்ரீ வேணுகோபாலின் அற்பணிக்கபட்ட ஆராய்ச்சியை பறை சாற்றுகிறது.

ஒரு கட்டத்தில் அரங்கனை தூக்கிக்கொண்டு அவர்கள் மலை மீது ஏற முற்பட, சுல்தானிய படைகள் பார்த்துவிடுகிறார்கள். எப்பாடுபட்டாவது அரங்கனை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் இலை, கொடிகளை கயிராக திரித்து தன் உடம்பில் அரங்கனை அணைத்துக்கொண்டு கயிரை கட்டி, மலை மீதிருந்து உருண்டு மாண்டு விடுகிறார், ஒரு கொடவர். அவரது பிராயம் சுமார் எண்பது ஆண்டுகள். அதன் பிறகு கீழ் வரும் கொடவர், அந்த அரங்கனை எடுத்துக்கொண்டு சுல்தானிய படைகளிடமிருந்து தப்பித்து காட்டுக்குள் சென்று விடுகிறார். சுமார் இருபது ஆண்டுகள் தன்னந்தனியாக அரங்கனோடு, நிதமும் காட்டு கனிகளை கொண்டு நிவேதனம் செய்து, சித்தப்ரம்மையுடன் அரங்கனை போற்றி காத்து வருகிறார். ஆசைகளை அறவே அறுத்து அரங்கன் மீது அவர்கள் கொண்டுள்ள பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது.

அரங்கனை மீண்டும் கோவிலில் எழுப்ப ஒய்சள வள்ளலார், மதுரை மீது தொடுத்த படையெடுப்பின் மூலம் அவரது வீரமும் (சுமார் எண்பது பிராயம்) மற்றும் சுல்தானின் வஞ்சகத்தால் ஏமாற்றபட்டு கொலை செய்யப்பட்டதையும் வரலாற்றை ஒட்டியே பயணித்து ஆசிரியர் விவரிக்கிறார்.

முதல் இரு பாகத்தில் குலசேகரன் மற்றும் ஹேமாலேகாவின் பிரேமையும், பிந்தைய இரு பாகங்களில் வல்லபன் மதுராவின் பிரேமையும் கண்ணில் நீர் சொறியவைக்கின்றன. இருவரது காதலும் நிறைவேறவில்லை. மதுரா வல்லபனை மணக்காது ஒரு இளவரசனை மணந்து கொண்டதை கண்டு துக்கிக்கும் வல்லபன் மற்றும் வாசகர்களை, மதுரா சொல்லும் காரணங்கள் சமாதானபடுத்துவதோடு மட்டுமில்லாது மதுராவின் நியாயங்களையும் நிலை நாட்டிவிடுகின்றன. தூய பிரேமையை வெளிபடுத்துகின்றன.

திருப்பதியில் கட்டப்பட்டிருக்கும் அரங்க மண்டபம், அரங்கன் சில நாட்கள் திருப்பதியில் தங்கியிருந்த காரணத்தினால் எழுப்பபட்டிருக்கிறது. மேலும், சுல்தானை மது மாதுகொண்டு மயக்கி, அவரை பலவீனமாக்கிய கங்கணர் (விஜயநகர அரசர்), கண்ணனூர் மீது படையெடுத்ததின் (இப்போதைய சமயபுரம்) காரணமும், அரங்கனை மீண்டும் ஸ்தாபிக்கத்தான் என்று தெரிய வருகிறது.

அரங்கனை ஸ்தாபித்த பின், விஜயநகரம், மதுரயை நோக்கி படையெடுத்து செல்கிறது. மதுரையை கைப்பற்றி, மீனாக்ஷி கோவிலை மீட்டெடுத்து, இப்போதிருக்கும், பல கோபுரங்களை ஸ்தாபித்தனர்.

அரங்கன் இல்லாத நாற்பது வருடங்களும், திருவரங்க மக்கள் இன்னொரு அரங்க மூர்த்தியை வழிபட ஆரம்பித்திருந்தார்கள். முதல் தலைமுறை அழிந்து இரண்டாவது தலைமுறை நடந்து கொண்டிருந்தது. அரங்கனது கதையை எடுத்து சொல்ல ஊர் பெரியவர்கள் யாருமில்லை. இதன் காரணத்தினால், நாற்பது வருடங்கள் கழித்து மீண்டும் திருவரங்கம் வந்த மூர்த்தியை, இவன் நமது அரங்கன் தானா என்று சந்தேகிக்கிறார்கள். அச்சமயம், அங்கு வந்து தேசிகர், ஒரு உபாயம் கூற, அவ்வூரிலேயே மிக வயதான ஒருவரை அழைத்து வருகிறார்கள். ஆனால் அவருக்கோ கண் பார்வை பறி போயிருக்கிறது. இருந்தும் அவர் அரங்கனை கண்டுபிடிக்க ஒரு வழி சொல்லுகிறார். அரங்கனின் அபிஷேக நீரை தீர்த்தமாக பருகியிருப்பதால் இரண்டு மூர்த்திகளையும் நீராட்டி, அதை கொணர சொல்லுகிறார். அரங்கனது மூர்த்தியில் இயல்பிலேயே ஒரு சுகந்தம் பரவியிருப்பதை அறிந்திருந்த அவர், திருவரங்கனை சரியாக அடையாளம் கண்டதையடுத்து வல்லபன் மற்றும் விஜயநகர சாம்ராஜியமே (போர் எடுத்த) சந்தோஷப்படுகிறது. இன்றும் அரங்க சன்னிதியில் இரு மூர்த்கிகளை தரிசிக்கலாம்.

மேலே கூறிய அனைத்தும் திருவரங்கன் உலா புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பெரியீர்காள்’, தேவரீர்’, பிள்ளைக்காள்’, சேவார்த்தி’, தேவர்மீன்’, பிள்ளைக்காள்’, என கி.பி. 1300 ஆம் ஆண்டுக்கு ஒரு முறை சென்று வந்த அனுபவத்தையும் அரங்கனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலையும் தருகிறது, திருவரங்கன் உலா.

திங்கள், பிப்ரவரி 25, 2013

சில இத்யாதிகள்


உலகில் இருக்கும் அனைத்து பொறியியல் பிரிவுகளிலும், மிக மோசமான ஒரு சுற்றுப்புறம் மற்றும் சூழ்நிலையில் வேலை செய்வது கட்டுமான பொறியாளர்கள் மட்டுமே என்பது எனது தாழ்மையான கருத்து. கவனிக்க பொறியியல் துறை மத்தியில் மட்டுமே இந்த ஒப்பீடு.. சுட்டெரிக்கும் வெயில், புயல் மழை, குப்பை, மண், தூசி, மற்றும் இயற்கை சீற்றங்களை உள்வாங்கிக்கொண்டோ அல்லது சகித்து கொண்டோ வேலை செய்தாகவேண்டிய கட்டாயம் கட்டுமான பொறியாளர்களை மட்டுமே சாரும். கட்டுமான பொறியாளர்கள் என்று நான் இங்கு பொதுவாக குறிப்பிடுவது சிவில், மெக்கானிக்கல், மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளை. மின் நிலையங்களோ, கப்பல் கட்டுமான தளங்களோ, தேசிய நெடுஞ்சாலை, மெட்ரோ என எந்தவொரு வேலையாகட்டும் இவர்களின் பாடு சொல்லி மாளாது.
வாரத்திற்க்கு ஐந்து நாள் மட்டும் கம்ப்யூட்டர் பொட்டியை தட்டும் வேலையை விட்டுவிட்டு, வாராத்தின் ஏழு நாளும் வேலை செய்யவேண்டிய கட்டாய நிலையை எண்ணி நொந்து கொள்ளாத நாளே இல்லை எனலாம். வாரத்தின் எல்லா நாட்களும் திங்கள் கிழமையாகவே தோன்றுவது ஒரு நரக வேதனை. இக்கரைக்கு அக்கரை பச்சை தானேன்றாலும், இங்கு கரையே இல்லையே காலூன்ற. வந்து பார்த்தாலன்றி முழுவதும் உணர்ந்து கொள்ளல் சிரமம். அதுவும் கார்பரேட் வசதிகளை சில காலம் அனுபவித்து விட்டு இந்த கச்சடாவில் மீதி வாழ்வை கழிப்பது நித்தம் நித்தம் ஒரு சாதனையாகவோ அல்லது சோதனையாகவோ இருக்கிறது. தற்சோதித்ததில் சில.

1.   கட்டுமான தளங்களில் இருக்கும் இந்நிறுவனங்களில், இயற்கை உந்துதலை கழிப்பதற்கு ஏதேனும் அடிப்படை வசதிகள் இருந்ததேயானால் அதை உலக அதிசயங்களில் ஒன்றாக கருதலாம். ஏனெனில் ஒரு நாளின் தொண்ணூறு சதவீதத்தை பகலவனின் நேர் கண்காணிப்பில் கழிப்பதால், அங்கு வளரும் மரம் செடிகளுக்கு இயற்கை உரம் கிடைக்கப்பெறுவதற்கு இதை ஒரு மறைமுக ஏற்பாடாக இந்நிறுவனங்கள் கருதுகின்றன.

2.   தண்ணீர் தண்ணீர் என்று ஒரு படம் கி.மு. வில் வந்தது. படத்தை பார்த்த எல்லோருக்கும் தாகத்தை உணர வைத்திருப்பார் இயக்குனர் சிகரம். அது போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீர் தண்ணீர் என்று தேடி பார்த்தாலும் 105 டிகிரியின் கானல் நீரைத்தவிர வேறெதுவும் தென்படாது. வருடத்தின் 365 நாளும் மேன் Vs வைல்டு பியர் கிறில்ஸ் போல தண்ணீர் பாட்டிலுடன் அலைவது சாத்தியப்படாத ஒன்று.

3.   நம்ம வீட்ல ஒருத்தர் நான் தூங்கின பிறகு வந்துட்டு காலைல எந்திக்கிறதுக்கு முன்னாடி போறாரே? அவரு யாரு மம்மி?. அவர் தான்மா உங்க அப்பா. சிவில் இஞ்சினியரா வேல பாக்குறாரு.

இது ஏதோ மிகைபடுத்தபட்ட நகைச்சுவையாக தோன்றலாம். ஆனால் வாரத்தின் ஏழு நாட்களும் விடுமுறையே இன்றி காலை ஏழு முதல் இரவு வரை சைட்டில் காலம் தள்ளும் அனைவரும் இந்த கேள்வியை அனுபவித்திருப்பார்கள்.

4.   Social Life’ என்று அழைக்கபடும் சமூக வாழ்க்கைக்கு சிறிதும் இடம் கொடுக்காத தொழில் இது. ஏன்? குடும்ப உறுப்பினரிடம் கூட நேரம் செலவிட முடியாது. உறவினரின் நல்லது கெட்டது என்று எதுவானாலும் கேள்விக்குறிதான். 90 சதவீத கட்டுமான பணிகள் நகரத்தின் எல்லைக்கு பல மைல் தொலைவில் அமைந்திருப்பதால் (சுற்றுப்புற சூழல் காரணமாக) ஒரு முறை வேலைக்கு சென்று வருவதற்கே நித்திய கண்ட பூர்ணாய்சாகிவிடுகிறது. வீட்டிற்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்குவதற்கே அல்லாத வேண்டியுள்ள நிலைமையில் மற்றவைக்கு போதிய நேரம் கிட்டுவதில்லை.

5.   முன்பு பார்த்த மென்பொருள் வேலையில் நானும் கம்ப்யூட்டர் பொட்டியும் சில எருமை மாடுகளுடன் (டேமேஜர்) அன்றைய பொழுது கழிந்துவிடும். ஆனால் இங்கு வந்த பிறகு ரெட்டேரி லாரி டிரைவர் முனியாண்டி முதற்கொண்டு நொய்டா பொது மேலாளர் தாஸ் வரை பாலோ அப் என்ற பெயரில் போனை போட்டு அவனுக்கு நமைச்சல் கொடுத்து பின் பன் வாங்குவது அலாதி எரிச்சல்.

6.   லஞ்சத்தின் புகலிடம் இந்தத்துறையே. நுழையும் வாயிலில் இருந்து வெளியேறும் கழிவு வரை லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பத்து ரூபாயிலிருந்து பத்து கோடி வரை. ஒரு டீயிலிருந்து கார் வரை கூச்சமின்றி பிச்சையெடுக்கிறார்கள். அதுவும் செய்வதையெல்லாம் செய்துவிட்டு, நெற்றியில் திருநாம பட்டை, கழுத்தில் ருத்திராட்ச கொட்டை, சீசன் தவறாது மாலை, அன்னை தெரசா காந்தி போல அறிவுரை சஷ்டியை நோக்க’, ‘முருகனை கூப்பிட்டு என்ற மொபைல் ரிங்க்டோன்கள். அப்பப்பா இவர்கள் அட்ராசிட்டி தாளவில்லை.

7.   ஒருவேளை நீங்கள் ஹரிச்சந்திரன் போல் நேர்மை சத்தியம் நியாயம் என்று சூளுரைப்பவரா? இந்த தொழிலுக்கு சற்றும் லாயக்கில்லாதவராக அறியப்படுவீர்கள். விடுகிற ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு பொய். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே இறக்க கடவது. நாளையே தாஜ்மஹால் கட்ட முடியுமா என்று கேட்டால், நாளைக்கு என்ன, இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள முயற்சி பண்றேன் என்ற சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கேட்டால், ட்ரைனிங் கொடுக்கறாராம். போடா ங்கோ....

8.   திட்டியவுடன் கோவம் வருகிறதா? சுடுசொல் சொன்னால் பதிலடி கொடுக்க தோன்றுகிறதா? இது போல் வேறு ஏதாவது, வெக்கம் மானம், சூடு, சுரணை இத்தியாதி என இருந்தால் தயவு செய்து அதை வீட்டில் வைத்துவிட்டு வரவும். அதையும் மீறி எடுத்து வந்தால் நாலாக மடித்து சட்டை பைய்யில் போட்டுக்கொள்ளவும். பின் விளைவுகள் விளக்கமுடியாதது. வஞ்சம் வைத்து காலை வாரும் ஓநாய் கூட்டம் இங்கு அதிகம்.

9.   உலகத்தில் ஏதோ எல்லா பெண்களுமே மாயமாய் மறைந்து ஆண்கள் மட்டுமே இருப்பது போன்ற ஒரு மாய தோற்றத்தை தருவது. ஏற்கனவே ஆணாதிக்க மிக்க சமுதாயத்தில், சிறிதும் பெண்களை சீண்டாத அல்லது கருத்துக்கு மதிப்பு கொடுக்காத களம். அதிகமாக இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பெண்களை கொண்டது இந்த கட்டுமானத்துறை. .

இவற்றை நினைத்து தினம் நொந்து கொண்டிருக்கும் அதே வேளையில், பூங்கா ஸ்டேஷன் சப்வேயில் நாள் முழுதும் நின்றுகொண்டு காலை நான்கு பத்து ரூபாய், மதியம் ஐந்து பத்து ரூபாய் இரவு ஆறு பத்து ரூபாய் என்று விற்கும் சமோசாக்காரனும், சேத்பட் ரயில்வே ஸ்டேஷனின் பிளாட்பார்மில் இரவு வெறுந்தரையில் படுத்துறங்கும் நாடோடி மக்களும், சத்யம் தியேட்டர் அருகில் இருக்கும் உஷா அப்லயன்சஸ் கடைக்கு எதிரில் தார் ரோட்டில் கொசுக்கடியில் புட்டி பாலை குடித்து கொண்டே வெட்டவெளியில் தூங்க முயற்சிக்கும் கைக்குழந்தையும், ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தட்டு தடுமாறி ரயில் பெட்டியை தடவிக்கொண்டே ஏறி இறங்கி கட்டை குரலில் ஒருவ்ர் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டே மொபைல் கவர், டார்ச் லைட் என விற்கும் கண் தெரியாதவர்களும், காலை ஐந்து மணிக்கே பஸ் வசதியில்லாமல் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து மீஞ்சூரில் ரயிலை பிடித்து அத்திப்பட்டில் இறங்கி ஷேர்ஆட்டோவை பிடித்து வெறும் இருநூறு ரூபாய்க்கு சித்தாள் வேலை பார்க்கும் என் அம்மா வயதுடைய பெண்கள், அங்கேயே நான் மினரல் வாட்டரில் தண்ணீர் குடிக்கும்பொழுது டேங்கர் லாரியின் பைப்பை திறந்து தண்ணீர் குடிக்கும் மேஸ்திரி வரை ஒவ்வொருவரும் தலையில் குட்டி நிதமும் ‘You are Gifted’ என்று ஞாபகப்படுத்துகிறார்கள்.

திங்கள், பிப்ரவரி 04, 2013

யு ஹெவ் நாட் சீன் லைஃப்


புத்தகம் நல்ல நண்பன் மட்டும் அல்ல, நல்ல நண்பர்களையும் பெற்று கொடுக்கும் என்பதை சில காலமாக எனக்கு உணர்த்தி வருகிறது. தினமும் வீட்டிலிருந்து  மின்சார ரயிலில் அலுவலகம் சென்றடைய குறைந்தது ஒன்றரை மணிநேரம் பிடிக்கும். கவனிக்க, குறைந்தது. அதிகபட்சம் இரண்டு மணிநேரம். இரு வேளையும் கணக்கில் கொண்டால் சுளையாக நான்கு மணிநேரம். பயண நேரத்திற்க்கு துணையாக அன்றைய நாளிதழ் மற்றும் புத்தகம் சிற்சில அரட்டைகள். அப்படி ஒருமுறை சதுரகிரி என்ற புத்தகத்தை படித்து கொண்டிருந்த போதுதான் ஒருவர் அறிமுகமானார்.  

இதுல சதுரகிரி பத்தி எல்லா விவரமும் இருக்கா?’.

ஆமா, சதுரகிரிக்கு எப்படி போகணும், எப்போ போகணும்னு பல விஷயம் இதுல கொடுத்துருக்காங்க. ஒரு ட்ரிப் அடிக்றதுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.

சதுரகிரி போறது நம்ம கைல இல்லை சார். அழைப்பு வந்தா மட்டும் தான் சித்தியாகும் என்று மேலே கை காமித்தார்’.

ஆமோதிக்கும் விதமாக புன்னகைத்தேன்.

இப் யு டோன்ட் மைண்ட், கொஞ்சம் படிச்சிட்டு தரேளா?.’

சந்தோஷமா கொடுக்றென் என்று இப்படியாக ஆரம்பித்தது தான் அந்த உரையாடல்.

அதன் பின்பு, பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு டாபிக்கை நான் கிளறிவிட, அன்று முழுதும் அக்னிபுராணம், மகாபாரதம், ராமாயணம், தேவி மகாத்மியம், எரிக் வான் லஸ்ட்பேடர் நிஞ்சா, ராபர்ட் லூட்லமின் பார்ன் சீரிஸ், விதெரிங்க் ஹைட்ஸ், பொன்னியின் செல்வன், கல்கி, திருவரங்கன் உலா, யுக்தி கல்பதாரு என்ற இந்திய கப்பல் கட்டுமான நுண்கலை, ஹராகே என்ற ஒரு ஜப்பானிய கலை, யோகாசனம், டெலெஸ்கோப், பிரணாயாமா, சாய்பாபா, அஸ்ட்ரோலோஜி, ராசிக்கல், தபேலா, இந்திரா சௌந்தராஜன், புக் ஃபேர், என்று அந்த நாள் கழியும்.

அதேன் போன்று இன்னொரு முறை சிவகாமியின் சபதம்- ஒன்றாம் பாகம் படித்து கொண்டிருந்த நேரம்.

அருகில் அமர்ந்திருந்தவர் அந்த புத்தகத்தையே முறைத்து கொண்டிருந்தார். அது ஒரு அரத பழைய புத்தகம். கல்கியில் கி.பி யில் வெளிவந்த சிவகாமி சபதத்தின் தொகுப்பு. தாளை மடக்கினால் ஒடிந்து விடுமோ என்று ஒரு பயம் ஏற்படும்.

அடுத்த நாளும் அதே போல் அந்த புத்தகத்தை முறைத்து பார்த்தவர்,

இது என்ன புக் சார்? என்றார்.

சிவகாமியின் சபதம்- தொகுப்பு ஒன்று சார்.

இது எங்க கிடைக்கும் சார்’.

இத நான் ஒரு லைப்ரேரில எடுத்தேன். முருகன் லைப்ரேரினு ஆர்யா கவுடா ரோட்ல இருக்கு என்றேன்.

எனக்கு ரொம்ப நாள உங்க கிட்ட கேக்கணும்னு ஆசை. இது மாதிரி பழைய புத்தகங்கள் கிடைக்குமா சார்.? என்றார்

நீங்க ரொம்ப பொதுவா கேக்றீங்க சார். என்ன புத்தகம்னு சொல்லுங்க. கிடைக்குமானு பாக்ரேன்.?

ரொம்ப நன்றி சார். நான் ஏன் பிறந்தேன் அப்டினு எம்.ஜி.ஆர். எழுதின சுயசரிதம். கொஞ்சம் கிடைக்குமானு பாருங்க என்றார்.

எங்க வேலை பாக்றிங்க சார்?’

இதோ இந்த பார்க்ல இறங்கி கொஞ்ச தூரம் போனவுடனே வருதே, கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல். அங்க தான். என்றார்.

சரி சார். கிடைச்சா சொல்றேன் என்று செல் நம்பர் வாங்கி கொண்டு ஸ்டேஷனில் இறங்கி விட்டேன்.

அந்த புத்தகத்தை பற்றி லைப்ரேரி, புத்தக சந்தை மற்றும் நெட்டில் தேடிய பிறகுதான் தெரிந்தது, அந்த புத்தகத்தின் பதிப்பு ஒனர்ஷிப் ப்ராப்ளத்தால் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று.

அந்த தகவலை ஒரு சில நாட்கள் களித்து அவரிடம் பகிர்ந்து கொண்டபோது, பரவால்ல சார். நானும் கேள்விபட்டேன். பட், இந்த புத்தக சந்தைல அவரோட எல்லா புக்கும் எடுத்துட்டு வந்துட்டேன் என்றார்.

கே.பி..ராம்கிருஷ்ணனுடைய (மெய்க்காப்பாளர்) இரண்டு மூன்று புத்தகங்கள், மற்றும் சில ஆசிரியர்களின் (எம்.ஜி‌.ஆர்) புத்தகங்கள் என்று வாங்கி வைத்திருந்தார்.

வேணுமா சார்?’ என்று இரண்டு புத்தகத்தை நீட்டினார்.

அப்பா வயதை ஒட்டியிருந்தார். அடுத்த தலைமுறையின் விளிம்பு. நான் இந்த தலைமுறையின் தொடக்கம். இந்த தலைமுறை இடைவெளியை கூட இந்த புத்தகம் அநாயசமாக நிரப்பி விடுகிறது.

வாங்கி புரட்டிக்கொண்டே, நீங்க ஹாஸ்பிட்டல்ல என்னவா இருக்கீங்க சார்?’

நுரையீரல் பாத்துகிறேன் சார்.

ஒரு கவர்ன்மெண்ட் டாக்டர், அதுவும் எம்.டி,, ஸ்பெஷலிஸ்ட் இவ்வளவு அடக்கமாக தன்னை தெரிவித்துக்கொண்டது சற்றே அதிர்ச்சியாக இருந்தது. ஏதேனும் நிர்வாக வேலையில் இருப்பார் என்றே கணித்தேனே தவிர, ஒரு ஸ்பெஷலிஸ்டாக எதிர்பார்க்கவில்லை. ஆளை பார்த்து எடை போட கூடாது என்று தலையில் குட்டி கொண்டேன்.

பேச்சு வெவ்வேறு களங்களை சந்தித்து கடந்தபொழுது, அவரது கை விரல் சற்றே வளைந்திருப்பதை கவனித்தேன்.

, இத பாக்கிறீங்க்ளா சார், அதுய் ஒரு பிளேன் ஹைஜக்லா மாட்டிக்கிச்சு என்றார் சாதாரணமாக.

என்னடா இவர், அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கிறாரே என்று, எப்போ சார்?’ என்றேன்.

இந்த கந்தஹார் ஹைஜக், ஞாபகம் இருக்குதா? என்றார்.

ஏதோ மேகமூட்டமாக நினைவில் நின்றது.

அது தான் சார். இந்த அம்ரிட்சர், லாகூர், துபாய்லாம் சுத்திட்டு போயி கந்தாகர்லா நிப்பாட்னானே? அது.

ஓரளவு ஞாபகம் வந்தது. அதுல எப்டி சார் நீங்க?’

ஹாஹாஹா என்று சிரித்தார். முதல்ல இந்தியன் ஆர்மில இருந்தேன் சார். குடியில்லாம குளிர சமாளிக்க முடியல. நான் குடிக்காத குடிமகன். வெளிலே வந்துட்டேன்.

சற்றே இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

இதற்கே இப்படி திகைச்சுட்டா எப்டி என்றவர் தொடர்ந்து, இங்க பரவால்ல சார். வெறும் பாலைவனத்துல சுட்டெரிக்கிற வெயில்ல முடியல சார்.

அடுத்த அதிர்ச்சியாக இருந்தது. ஏதேனும் ஒரு கினிக்கை போட்டு காலை மாலை காசை கல்லாவில் கட்டுவதை விட்டுவிட்டு, ஆர்மி, பாலைவனம் என்றே திகில் கொடுத்துக்கொண்டிருந்தார்.

கேள்வி கேட்குமுன் அவரே தொடர்ந்தார்.

ருசியா ஆப்கான் போர் இல்ல. அது சம்பந்தமா NATO Peace Keeping Force ல போய்ட்டு வந்தேன் சார். விருப்ப சேவை. நானா விரும்பி போனது. இந்தியா அரசாங்கம் கேட்டுச்சு.


ஷெல் பாம்ப் கேள்வி பட்டதுண்டா? அப்டியே சுத்தி சுத்தி வந்து அடிக்கும். ஒரு முறை என்னாச்சு பாருங்க, போர் நடந்துட்ருக்க இடத்துல குழந்தைங்க டிஸ்டர்ப் ஆக கூடாதுணு தனி கேம்ப் வச்சிருப்போம். லேடீஸ் கூட இருப்பாங்க. அப்போதான் பிஸ்கட் கொடுத்துட்டு அந்த குழந்தைங்க தாங்க்ஸ் சொல்லிட்டு சாப்பிடுதூங்க. திரும்பி ஒரு பத்து தப்படி எடுத்து வச்சிருப்போம், ஒரு ஷெல். அப்டியே சுத்தி வந்து அந்த குழந்தைங்க கேம்ப்ல விழுது. ஒரு பசங்க இல்லாம, ஒருத்தர் பாக்கி இல்லாம எல்லாம் பீஸ் பீஸா சிதறிடுச்சுங்க. கொஞ்ச நேரம் முன்னாடி சிரிச்சுட்டு இருந்த பசங்க. ரெண்டு நாள் தூங்கல சார்.

கொஞ்ச நேரம் வெளியே பார்த்து கொண்டிருந்தார்.

முடியல சார். வந்துட்டேன். பகல்ல தகதகக்கும். ஒட்டகத்த கொன்னு தண்ணி குடிப்பாங்க சார். நைட்டான குளிரு ஒடம்ப கிளிச்சுட்டு போகும். ஒரு போர் பாத்துட்டு வந்தா போதும் சார். இந்த வாழ்கயெல்லாம் என்ன சார். அடுத்த வாரம் படத்துக்கு போலாம்னு டிக்கட் போட்ரோம் நம்ம. அங்க இன்னைக்கு மதியம் சாப்பிட உயிரோட இருப்போமானு தெரியாது சார். மனசு ரொம்ப கஷ்டபட்டுச்சு சார். வந்துட்டேன்.

இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்திருந்தது. அப்போது தான் கவனித்தேன். கொஞ்சம் நிதானமாக நடந்தார். நான் பார்த்ததை புரிந்து கொண்டு,

வினோஸ் கஞ்சஷன் சார். மைன் பாம்ப். நாங்க இந்தியா திரும்பிட்ருக்கோம் சார். நடந்து வரப்ப இந்த பாம்ப் மிதிச்சிட்டேன். ஒரு நாள் முழுக்க அங்கேயே நின்னேன் சார். கொஞ்சம் கூட நகரல. மூத்திரம் எல்லாம் அங்கதான். ஒரு கிளிக் எல்லாம் முடிஞ்சிடும். அடுத்த நாள் வந்து நம்ம ஆளுங்க தான் காப்பத்துனாங்க.

வாய் பிளந்து நின்றிருந்த என்னை பார்த்து கேட்டார். உங்களுக்கு என்ன வயசு ஆகுது சார்.?’

இருபத்தேழு முடியுது சார்.

ஹாஹாஹா என்று சிரித்தார். எனக்கு அம்பத்தெழு சார். யு ஹெவ் நாட் சீன் லைஃப்'.

ஒரு கணம் பின் தங்கினேன்.

போன வாரம் கூட எங்கள் ஆபீஸில் ஒருவரோடு (59 வயது) பேசிக்கொண்டிருந்தேன். அந்த காலத்துல சார், பத்ராவதில என்று ஆரம்பித்தார் என்றால்,’ ஒரு நாள் முழுக்க கேட்டு கொண்டிருக்கலாம். தென்கச்சி கோ. ஸ்வாமிநாதன் போல.

இன்னைக்கு என்ன சார் லேட்டு?’

சாவதானமாக ஒரே வார்த்தையில் சொன்னார்.

ஆமா சார். ஒரே கூட்டம். அதுல பாருங்க நீங்க, அதுவும் சென்ட்ரல்ல, திபுதிபுனு ஓடி வராணுங்க.  ஆபீஸ் போராணுங்க. ஆபீஸ் முடிஞ்ச கையோட திரும்பியும் திபுதிபுனு ஓடிபோய் ஏறுறோம். வீட்டுக்கு குடுகுடுனு ஒடுறோம். நான் ரிட்டைராக போறேன் நீங்க ஜாயின் பண்ணிருக்கீங்க. அவ்ளோதான்.

அவர் சொல்லி இரண்டு வாரமாகியும் இந்த அதிர்ச்சி குறையவில்லை.

சனி, டிசம்பர் 29, 2012

மகேந்திரனின் முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்கள்


                     உலக அளவில் சில பல (??!!) புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்து வாயைப்பிளந்திருந்த நேரங்களில், நமது இயக்குனர்களான கே.பி, பாரதிராஜா, மகேந்திரன் போன்றோரின் காவியப்படைப்புகள் பார்க்காதிருப்பது ஒரு வித குற்ற உணர்வை ஏற்படுத்தி கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு மேடையில் கே.பி அவர்கள் நமது சூப்பர் ஸ்டாரை ஒரு கேள்வி கேட்பார். ரஜினி, நீ மீண்டும் நடிக்க விரும்பும் இயக்குனர் யார்?’ என்று. அதற்கு ரஜினி கூறிய பதில், மகேந்திரன். அப்பொழுதுதான் முள்ளும் மலரும் பார்க்க தோன்றியது. ஜானி ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில காட்சிகள் பார்த்திருக்கிறேன். அதேபோல், Conversations with ManiRatnam’ by ‘Bharadwaj Rangan’ என்ற ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தபொழுது, ‘உதிரிப்பூக்கள் படத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். அவர் சினிமா உலகிற்கு வந்ததற்கு உதிரிபூக்களும் ஒரு காரணம் என பேட்டியளித்திருந்தார். அடடே என்று விக்கியை சுட்டியதில், ‘நான் எடுக்கும் ஏதேனும் ஒரு படம், உதிரிபூக்களின் தரத்துக்கு அருகில் வருமானால், நான் மிக மகிழ்ச்சியடைவேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், ரத்னம். பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் வாங்கிய ஒரு independent style மற்றும் freelance director மூலமாக நான் தெரிந்துகொண்டது தி கிரேட் மகேந்திரன்.

                    ஆக மகேந்திரனின் படைப்புகளை தேடியதில் முதலில் பார்க்க முடிவெடுத்தது முள்ளும் மலரும் (1978) மற்றும் உதிரிப்பூக்கள் (1979). படங்களும் இதே வரிசைக்கிரமாக தான் வெளிவந்தது. முதலில் முள்ளும் மலரும்.


                             ரஜினியின் நடிப்பிற்கு தீனி போட்டு சான்றிதழ் கொடுக்கும் மிகச்சில படங்களில் முக்கியமான படம். மொத்தமே நான்கு கதாபாத்திரங்கள் தான். ரஜினி, அவர் தங்கை ஷோபா, ஜெயலக்ஷ்மி மற்றும் சரத்பாபு. பதினேழு வயது மட்டுமே நிரம்பிய நிலையில், பல படங்களின் தனது நடிப்பை நிரூபித்து ஒரு தேசிய விருது மற்றும் பல மாநில விருதுகளை குவித்து அந்த இளம் வயதிலேயே சாவைத்தேடியே ஒரு அபாராமான நடிகை. சோகமான காட்சிகளில்,  கிளோசப் ஷாட்டில், தனது கண்களால் மட்டுமே சோகத்தை காட்டும் அசாதாரணமான ஒரு நடிகை. கதை மிக எளிது. தனது உயரதிகாரியான சரத்பாபுவிற்கு தனது தங்கையை மணமுடித்து தர தயங்கும் அல்லது ஈகோ தடுக்கும் ஒரு விஞ்ச் ஆபேரட்டரின் கதை. விஞ்ச் ஆபரேட்டராக ரஜினி. தங்கைக்காக உயிரே கொடுக்கும் ஒரு கேரக்டர். ஷோபாவிற்கு அண்ணன். ஊருக்கு சண்டியர்.



                       
                       ஊருக்கு புதிதாக வரும் சரத்பாபுவிடம் முதல் நாள் அன்றே உரசிக்கொள்கிறார். உயிர் காப்பாற்ற வேண்டிய ஒரு தருணத்தில், விஞ்ச் அருகில் இல்லாமல் ஊருக்கே வெளியே இருந்தது, அவர் வேலையை பறித்துக்கொள்கிறது. வேலையை பறித்தவர் சரத்பாபு. அந்த சோகத்தில் மது அருந்திவிட்டு சாலையில் விழுந்துகிடக்கும் நேரத்தில் ஒரு லாரி அவர் கை மீது ஏறிவிட, சரத் பாபு, ரஜினிக்கு வைத்திய உதவி செய்கிறார். அந்த விபத்தின் காரணத்தினால் அவர் கையை துண்டிக்க நேரிடுகிறது. அதன் பின் வீட்டிற்கு வரும் ரஜினி, தான் தங்கைக்கு உதவ முடியாது பாரமாக இருப்பதாக நினைத்து நினைத்து உருகுகிறார். அந்த சமயத்தில் சரத்பாபு ஷோபாவை பெண் கேட்டு வர, ரஜினியின் ஈகோ அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஊரில் போக்கிரியாய் திரியும் வெண்ணிறாடை மூர்த்திக்கு மணமுடிக்க சம்மதம் தெரிவிக்கவைக்கிறது. இதை ஊர் எதிர்க்க ரஜினி பிடிவாதமாக இருக்கிறார். ஊரில் உள்ளவர்கள் சேர்ந்து, ஷோபாவை அழைத்துக்கொண்டு, சரத்பாபுவிற்கு மணமுடிக்க செல்கிறார்கள். ரஜினி அங்கு வர, அண்ணனா, தனக்கு அமையப்போகும் நல்ல வாழ்க்கையா என்று முடிவெடுக்கும் தருணத்தில், அண்ணன் தான் வேண்டும் என்று ஷோபா ஓடி வந்து ரஜினியை கட்டிக்கொள்கிறார். அந்த இடத்தில் பெருமிதமாக சிரித்துவிட்டு ரஜினி, சரத் பாபுவிற்கு தான் தங்கையை மணமுடிப்பதோடு கதை நிறைவடைகிறது.

                     சரத்பாபுவிடம் முறைத்துக்கொள்வதாகட்டும், ‘என்ன பயபுள்ளைகளாஎன்று அடிக்கடி சொல்வதாகட்டும் அல்லது அந்த க்ளைமேக்ஸ் காட்சியில் தான் தங்கை தன்னிடம் வந்துவிட்டதை உணர்த்தும் அந்த சிரிப்பாகட்டும், ரஜினி மிளிர்கிறார். ஒரு காட்சியை சொல்லாமல் இருக்க முடியவில்லை. தன் வேலை பறிபோனபின், சரத்பாபுவை சந்தித்து, ‘காளி கெட்டவன் சார். அவன் எப்டி வேணாலும் பொழைச்சுக்குவான்என்ற ரஜினியின் டயலாக் டெலிவரிக்காகவே படத்தை பல முறை பார்க்கலாம். சோகமான பாத்திர படைப்புக்காகவே மட்டுமே கண்டுபிடிக்கபட்டவர் போல, பல காட்சிகளில் பேசாது ஸ்கோர் செய்கிறார். தீம் மியூசிக் கேட்கவே வேண்டாம். காட்சியுடன் இணைந்து பலம் சேர்க்கிறது. அதுவும் அந்த மலை முகட்டில், ரஜினியை நோக்கி ஷோபா ஓடி வரும் நேரத்தில் இசைக்கும் பின்னணி ஒன்றே சாட்சி சொல்ல போதும்.



             

                    உதிரிப்பூக்கள் பார்க்கும் முன், படத்தின் கதையை தெரிந்து கொள்ள விரும்பவில்லை. ஆதலால் உதிரி பூக்கள் என்ற படத்தலைப்பின் அர்த்தம் முதலில் விளங்கவில்லை.  படம் பார்த்து முடிந்த பின், இந்த தலைப்பு எவ்வளவு பொருத்தமாக தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. விஜயன், அஸ்வினி, சரத்பாபு, அவர் மனைவி, சாருகாசன், மாஸ்டர் ஹாஜாஷெரீப் மற்றும் பேபி அஞ்சு என்று மொத்தமாக ஏழு அல்லது எட்டு பாத்திரங்கள் தான். இவர்களை சுற்றியே கதை நகருகிறது. தன் மனைவி அஸ்வினியை கொஞ்சம் கூட மதிக்காத, ஆண் ஆதிக்கம் மிகுந்த கேரக்டர் விஜயனுக்கு. ஊரில் முக்கிய புள்ளி. தன் கணவனை மட்டுமே தெய்வமாக நினைக்கும் ஒரு நோயாளியாக அஸ்வினி. அவரது தந்தையாக கடனாளியான சாருகாசன். ஊருக்கு புது ஹெல்த் இன்ஸ்பெக்டராக வரும் சரத்பாபு. இவர்களுடன் அந்த இரு குழந்தைகள். நோயாளியான அஸ்வினியை வெறுக்கும் விஜயன் அவரது தங்கையான மதுமாலினியை மணக்க யத்தனித்து, சாருகாசனிடம் பெண் கேட்கிறார், அவர் அதை மறுத்துவிட, அஸ்வினியிடம் தன் ஆசையை கூறுகிறார். இதர் நேரத்தில் சரத்பாபு அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார். பத்து வருடம் முன்பு அவர் சாருகாசனிடம் அஸ்வினியை பெண் கேட்கிறார். ஆனால் விஜயனுக்கு நிச்சயபட்டதால், சாருகாசன் மறுத்துவிட கண்ணியமாக விலகுகிறார். அந்த நட்பில், அவர் அஸ்வினி மற்றும் அவர் குழந்தைகளுக்கு உதவ, இதை தவறாக எடுத்துக்கொண்டு விஜயன் அஸ்வினியை சந்தேகத்தோடு பேசுகிறார். இந்த வருத்தம் மற்றும் நோய் காரணமாக அஸ்வினி இறந்து விட, விஜயன் வேறு ஒரு பெண்ணை மணமுடித்து ஊருக்கு அழைத்து வருகிறார். ஊரார் அனைவரும் விஜயனை வெறுக்கிறார்கள். இந்த நேரத்தில் அஸ்வினியின் தங்கைக்கு திருமணம் நிச்சயமாகிறது. தனக்கு கிடைக்காத கோபத்தில் விஜயன், மதுமாலினியை மானபங்கபடுத்துகிறார். இது ஊருக்கே தெரியவர, ஊர் விஜயனை துரத்துகிறது. விஜயனை ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய நிர்பந்திக்கிறது. லாங் ஷாட்டில் குழந்தைகள் இரண்டும் ஆற்றின் கரையோரம் நடக்க, உதிரிப்பூக்கள் என்ற  கார்டுடன் படம் நிறைவடைகிறது. படத்தில் மொத்தமாக ஒரு ஐந்து அல்லது ஆறு காட்சிகள் மட்டுமே இந்த இரு குழந்தைகள் வருகிறார்கள். ஆனால் படம் பார்த்து பத்து வருடமானாலும் அதிக பாதிப்பை தருவது அந்த இரு குழந்தைகளின் அப்பழுக்கற்ற முகமும், சிரிப்பும் தான். க்ளைமாக்ஸ் காட்சியில் கண்ணில் நீர் வழிவதை தவிர்க்க முடியவில்லை.


                  ஷோபாவை போன்றோரு கண்டுபிடிப்பு அஸ்வினி. அழுத்தமான பாத்திரங்களில் 
மிகையின்றி செவ்வேனே நடித்திருக்கிறார். இதன் பிறகு நண்டு என்றொரு படம் மகேந்திரன் 
இயக்கத்தில் நடித்திருக்கும் இவர், அதன் பின்பு நடித்த படங்களின் விபரங்கள் தெரிந்து கொள்ள
முடியவில்லை. முடிவெட்டுபவராக வரும் கதாபாத்திரம் அடிக்கடி அஸ்வினியிடம்,  ‘தம்பிக்கு (மாஸ்டர் ஷெரீப்) எப்போ முடி எடுக்கலாம்என்று கேட்கிறார். அதற்கு அஸ்வினி ஒவ்வொருதடவையும், ‘நேரம் வரும்போது எடுக்கலாம்என்று சொல்வதும், பின்பாதியில் அஸ்வினியின் இறப்பிற்கு, அவர் மொட்டை அடிக்க உட்காரும்போது, நெஞ்சை உருக்கும் காட்சியாக அமைகிறது. உதிரிப்பூக்கள் படம் முழுவதும் உயிர் நாடியாய் இருப்பது இளயராஜாவின் இசை. அதுவும் அந்த தீம் மியூசிக் இப்பொழுதும் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

                     படம் முழுக்க யாரும் அதிர்ந்து பேசுவதில்லை. கோபாமானாலும் கூட சத்தம் போடாது அமைதியாய் பேசுகிறார்கள். அனைவருமே கம்போஸ்ட் கேரக்டராக படைத்திருக்கிறார் இயக்குனர். மகேந்திரனின் படைப்புகளில் இது அவரது ஸ்டைல் என சொல்லலாம். எந்த ஒரு கதாபாத்திரமோ அல்லாதோ காட்சியோ மிகைபடுத்தபடாது எடுத்திருக்கிறார். உணர்வுகள் திணிக்கபடவில்லை. உணர வைக்கிறார். ஐந்தாறு பாத்திரங்களில் அதன் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை வைத்து இரண்டு மணி நேரம் நம்மை கட்டிபோடும் ஆற்றல் மகேந்திரனின் படைப்பாற்றலுக்கு ஒரு சான்று.