புதன், ஜூன் 18, 2025

பணிவு அல்லது சம மரியாதை கொடுத்தல்

பணிவு அல்லது சம மரியாதை கொடுத்தல்

பார்த்தவரையில், மூத்த நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்களிடம் ஏதேனும் ஒரு கேள்வி அல்லது தகவல் டைப் செய்து அலைபேசியில் கேட்கும் அல்லது சொல்லும் பொழுது ப்ராம்ப்ட்டாக ஒரு பதில், ஏற்றுக்கொண்டதாகவோ அல்லது மறுதலித்தோ, என்று ஏதேனும் ஒரு மறுவினை கிடைத்துவிடுகிறது. அதே எதிர்வினையை, சம வயது அல்லது இளையோரிடம் எதிர்பார்க்க முடியவில்லை. அது அவர்களுக்கான உதவியாகக் கூட இருந்தாலும். குறிப்பாக இந்த ஜென் Z கிட்ஸ் இதில் பிரதமம். ஒன்று இரண்டு பேரிடம் பேசி இந்த முடிவுக்கு வரவில்லை. 90 சதவீதம் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்ளேயும் இதே போல் தான் நடந்து கொள்ளுகிறார்கள். டெதரிங் என்பது துளியும் இல்லை. அதாவது ரிலேஷன்ஷிப்பில் ஒரு பிடிப்பு அல்லது பிணைப்பு. 'நீ பூமர் ஆகிவிட்டாய். இவ்வளவு குழப்பிக்கொள்ளத் தேவையில்லை' என்று கூறினால், கண் முன் இருக்கும் சக மனிதர்களிடம் சொந்தம் கொண்டாட முடியாதவர்கள் எங்கு போய் நிற்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாமே மெய்நிகர் என்றாகிவிட்டது போல. ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
சைதாப்பேட்டையில் இருந்து பார்க் வரை செல்லும் தாமப்ரம் பீச் வண்டி. தினமும் 7 .17க்கு சைதாப்பேட்டையில் ஏறினால் 7.40க்கு பார்க். அங்கிருந்து இறங்கி சென்ட்ரல் சபர்பன் ஸ்டேஷன் மாற வேண்டும். பார்க் ஸ்டேஷனில் அவ்வப்போது டிக்கட் செக்கிங் நடக்கும். கம்பெனியில் இருந்து பர்ஸ்ட் கிளாஸ் சீசன் டிக்கட் கொடுத்து விடுவார்கள். பர்ஸ்ட் க்ளாசில் நான்கே நான்கு சீட் தான் இருக்கும். குஷன் சீட். அது ஒன்று தான் வித்தியாசம். மற்றபடிக்கு கூட்டம் கம்மி என்பதைத்தவிர அதில் வேறு எந்த வித்தியாசமம் கிடையாது. லேடிஸ் கோச்சுடன் அட்டாச் ஆகியிருக்கும். முக்கால் வாசி லேடிஸ், கால் வாசி பர்ஸ்ட் க்ளாஸ் என்று ஒரு அமைப்பு அது. அந்த கோச் எல்லா ஸ்டேஷனில் படிக்கு அருகில் அளந்து வைத்தாற் போல் நிற்கும்.
ஏன் இதை சொல்கிறேன் என்றால் அவ்வப்போது இது பர்ஸ்ட் கிளாஸ் என்று தெரியாமல் சிலர் ஏறிவிடுவார்கள். படியில் இருந்து இறங்கி ஓடி வந்து வண்டி பிடிக்கும் அவசர கதியில் இதை பார்க்காமல் ஏறி விடுவார்கள். டாஸ்மாக் தெரு மூக்கில் நின்று பிடிக்கும் போலீஸ் போல டிக்கட் செக்கிங்கும் சரியாக இந்த கோச் அருகில் தான் நடக்கும். கேஸ் பிடித்தால் 500 ரூபாய் அபராதம். அதானே அவர்கள் வேலை.
ஒரு முறை என்னை பிடித்துவிட்டார்கள். பிடித்தார்கள் என்றால் நிப்பாட்டி கேட்பது. அவ்வளவே. அதுவே எனக்கு சுரீரென்றது. டிக்கட் வைத்திருக்கிறேனே என்னை ஏன் கேட்கிறார் என்ற ஒரு சலிப்பு நான் பர்ஸ்ட் க்ளாஸ் டிக்கட்டை எடுத்து காண்பிக்கும்போது எனது முகத்தில் இந்த உணர்வு அவருக்கு தெரிந்திருக்கிறது. அகத்தின் அழகு முகத்திலே. டிக்கட்டை வாங்கி பார்த்த அவர் என்னை அழைத்து அருகில் இருக்கும் ஒரு பென்ச் பக்கமாக நிற்க வைத்தார். ஒரு நிமிடம் என்றவர் இன்னும் இரண்டு மூன்று பேரிடம் சோதனை செய்த்துவிட்டு என்னிடம் திரும்பினார். 'என்ன படித்திருக்கிறாய்? எங்கு வேலை பார்க்கிறாய்?' போன்ற கேள்விகளை கேட்டுவிட்டு 'படித்த பண்புள்ளவனுக்கு அழகு பணிவு தான். எவ்வளவு உயரம் சென்றாலும் பணிவாக இருப்பதை மறக்காதே' என்று திருக்குறள் போல் இரண்டே வரிகளில் கூறிவிட்டு அகன்று விட்டார். கேட்டபொழுது கடுப்பாக இருந்தாலும் அவர் கூறிய விதம், அங்கிருந்து வெளியே செல்லும் படிகளில் இறங்கும் நேரம் யோசிக்க வைத்தது.
இந்த அனுபவ பாடத்தை அந்த வயதில் அந்த நேரத்தில் அந்த பிளாட்பாரத்தில் அவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றிருந்திருக்கிறது. பதினாறு வருடங்கள் கடந்தோடிவிட்டாலும், பசுமரத்தாணி போல் இன்றும் மறவாமல் இருக்கிறது. அலுவலகம் உள்ளே வெளியே, பேருந்து, சாலை, ஆட்டோ, பால்காரர், துப்புரவு தொழிலாளர்கள், டேபிள் துடைப்பவர், வாட்ச்மென், தள்ளுவண்டி வியாபாரி, மேலே கீழே என எல்லாரிடமும் ஒரே மாதிரியான பணிவுடன் உரையாட கற்றுத்தந்திருக்கிறது. இந்தப் பணிவே பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் அனுகூலமாய் இருந்திருருக்கிறது.
கற்றல் இனிது.

கருத்துகள் இல்லை: