மணிகண்டன். படத்தின் போஸ்டரிலேயே, மணிகண்டன் in குடும்பஸ்தன் என்று போட்டிருந்தார்கள். அசுர வளர்ச்சி. ஒரு வசனகர்த்தாவாக உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் தன்னை தகவமைத்துக்கொண்ட மணிகண்டன், ஒரு நடிகனாக குறுகிய காலத்தில் தொட்டிருக்கும் உயரம் அசாத்தியமானது. எட்டு தோட்டாக்கள் ஜெய், காலா லெனின்,ஜெய் பீம் ராஜ்கண்ணு, குட்நைட் மோகன், லவ்வர் அருண் மற்றும் குடும்பஸ்தன் நவீன் என மணிகண்டன் ஏறி வந்த இந்த படிகள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவின் செல்லுலாய்டு ஓவியங்கள். அத்தனை உணர்ச்சி வெளிப்பாடுகளை அனாயசமாக கடத்துகிறார். ரொமான்ஸாகட்டும், பதட்டம், அழுகை, சோகம், கோபம், இயலாமை என நவரசமும் ததும்பி வழிகிறது. சுற்றி கடன்காரர்கள் துரத்த, யாருமே நுழைய முடியாத வெகு நாள் அடைப்பு எடுக்கப்படாத நாற்றமடிக்கும் பப்லிக் டாய்லட்டுக்குள் அடைக்கலம் தேடி நுழையும் மணிகண்டன் காட்டும் உணர்ச்சிகள் ஒரு பானை சோறு பதம். காட்சியும் தான். என்னை பொறுத்தவரையில், நெகட்டிவ் உணர்ச்சிகளான, கோபம், இயலாமை, அழுகை, பதட்டம், படபடப்பு போன்றவற்றில் மணி ஸ்பெஷலான ஒரு உயரம் தொட்டிருக்கிறார். கலைஞன்.
நாயகியாக சான்வெ மேகனா. தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கென்று அளந்து வைத்திருக்கும் ரோலில் கனகச்சித பொருத்தம். லவ்வராக, மனைவியாக, மருமகளாக என மூன்று ரோல்களில் தனக்கென்று கொடுக்கப்பட்டதை செவ்வெனே செய்திருக்கிறார்.
குறு சோமசுந்தரம். நிறை குடமாக நிற்கும் அவரிடம் இருந்து வெகு குறைவாகவே தமிழ் சினிமா உபயோகித்துக்கொண்டிருக்கிறது. தேர்ந்தெடுத்த கூத்து பட்டறைக் கலைஞன். ஜோக்கர் படத்திற்கு முன்னும் பின்னும் அவரை முழுதாய் உபயோகித்தவர் இல்லை எனலாம். அக்காவின் கணவனாய் வரும் குரு செய்யும் அலப்பறைகள் அதகளம். டைம்டேபிள் போட்டு மனைவியை சமைக்கச்சொல்லும் சாவனிச ரோலாகட்டும். கீழே குனிந்து சலாம் போடும் ஆபிஸ் ரோலாகட்டும், மச்சானிடம் மட்டம் தட்டி எள்ளி நகையாடும் மாப்பிளை ரோலாகட்டும், எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். இந்த குரு என்னும் அக்ஷய பாத்திரத்திடம் எடுத்துக்கொள்ள தமிழ் கலையுலகத்திற்கு இன்னும் நிறைய இருக்கிறது.
சுந்தரராஜன். 'அதுல ஒன்னும் இல்ல. கீழ போடுங்க' என்று ஒரு பழைய காமெடி உண்டு. அதே ரவுசான ரோலில் சுந்தரராஜன். மணிகண்டனின் அப்பாவாக வருகிறார். இதுபோன்ற குணச்சித்திர நடிகர்களை தமிழ் சினிமா பெரிதும் மிஸ் செய்கிறது. திரையில் மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி.
மணிகண்டனின் அம்மாவாக கனகம். ஜெய ஜெய ஜெய ஹே மாமியார். ரவுசு டு தி கோர். மதுப்பிரியர்களாக வரும் நக்கலைட்ஸ் பிரசன்னா, ஜென்சன் திவாகர் காமெடி திரையில் சரவெடி. தனம், சாவித்திரி, நிவேதிதா என நக்கலைட்ஸ் யூட்யூப் பட்டாளம் இங்கு ஆஜர். அனைவருமே கொடுத்த பாத்திரத்தில் நச்சென்று பதிந்துபோயிருக்கிறார்கள்.
வீட்டிற்கு வீடு வாசப்படி என்று அன்றாடம் நடக்கும் காட்சிகளைத் தான் கோர்த்து பூமாலையாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர். அவருடன் உறுதுணையாக பிரசன்னா. கதை, திரைக்கதை, வசனம் என அனைத்திலும் இந்த கூட்டணி அமர்க்களப்படுத்தியிருக்கிறது. யூட்யூப் சேனல் அனுபவம். ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து பதமாக பரிமாறியிருக்கிறார்கள். கடன் மேல் கடன் வாங்கி தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு
கஷ்டத்தில் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையை இந்த அளவுக்கு டார்க் ஹ்யுமராக வெகு ஜனமும் ரசித்து ஏற்றுக்கொள்ளும் வகையில் எழுதி இயக்க முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த அளவுக்கு எழுத்து மற்றும் நடிப்பு பரிமளிக்கிறது.
முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை தியேட்டரில் வெடிச்சிரிப்பு. கிடைக்கும் இடங்கள் எல்லாம் காமெடி தான். சொல்லப்போனால் முதல் பாதி முழுவதும் சிரித்து சிரித்து வயிறு வலிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஒரு நொடி கூட தவற விடாமல் கவனித்தால் பல இடங்களில் கன்னி வெடி போல் சிரிப்பை புதைத்திருக்கிறார்கள். 'பக்கத்து வீட்டுல கர்ரன்ட் இருக்கா, பிரேக் வேண்டாம். கண்ட எண்ணைல பொரிச்சிருப்பாங்க, 'செருப்பை பாத்துக்கோங்க. ஐயோ இவர் பொண்ணோட தம்பி. அப்படியா அப்ப பத்திரமா பாத்துக்கோங்க', கார் எங்க கிடந்துச்சு?, வச்சி மட்டும் சாப்பிடாதீங்க, பிராடு வேலைக்கு ஏண்டா மோட்டிவேஷன்?, இல்ல இன்னைக்கு மாமியார் பெர்த்டே. விசுக்கு விசுக்குனு கேக்கணும், மூடிய ஆர்கானிக் வழியா எடுக்க முடியுமான்னு பாக்கறேன், தேவி சில்க்ஸ் & brand ஷூ புறம் பேச்சு, காந்திநகர், என்ன சொன்னீங்கன்னு FM சவுண்ட் குரைக்கிறது என படம் முழுக்க கிடைக்கும் இடங்களில் எல்லாம் காமெடி கதக்களி. காரில் தெரியும் available balance tag நல்ல ஈர்ப்பு யுக்தி. அதே நேரத்தில், 'SC கேட்டரிங், சோறு தான சமைச்சேன்' போன்ற வசனங்களில் சாதித்திமிரை சாடத் தவறவில்லை. போலவே, 'எந்த பக்கம் இருந்து பாக்கறோம்ங்கிறது தான் பாய்ண்ட்', 'இயந்திரத்துக்கு இதயம் இல்லை. எத்தனை தடவை போட்டாலும் அதைத்தான் காமிக்கும்', 'பணம் கடவுள், compromise வழிபாடு' போன்ற வசனங்கள் வாழ்க்கைப்பாடமாக விரிகின்றன.
என்னதான் செய்தாலும் நிமிர்த்த முடியாத வாலாக இருக்கும் குரு சோமசுந்தரம் ஆபிசில் நடக்கும் துரோகத்தில் ஒரேடியாக மாறுவது, சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மகனின் தட்டை தாய் எடுத்துச் செல்வது, குடும்பமே நடுத்தெருவில் நின்றாலும் மன்னிப்பு கேட்காத தன்மானமிக்க ஒருவன் மானமிழந்து ஊரு முழுக்க கடன் வாங்குவது, ஒரே மாதத்தில் எல்லாக்கடனையும் அடைத்தது (சான்வெயின் நிறைமாத வயிறு சாட்சி) என நெருடல்கள் சில இருக்கின்றன.
சுஜித்தின் ஒளிப்பதிவு, கண்ணனின் கத்திரி மற்றும் வைசாகின் இசை, படத்தின் டெம்போவை ஜானரை நேர்கோட்டில் பயணிக்கவைக்கிறது. அதிலும் லேசா லேசா பாட்டு பயன்படுத்தப்பட்ட இடங்கள் எல்லாம் 1000 வாலா சரவெடி.
வெகு நாட்கள் கழித்து குடும்பத்துடன் வயிறு வெடிக்க சிரித்து மகிழும் ஒரு பிளாக் பஸ்டர் மூவி தான் இந்த குடும்பஸ்தன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக