ஒரு வாட்ச்மேனின் பையன் தனது மகளை காதலிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு ஆணாதிக்க சாதி மற்றும் பணத் திமிர் பிடித்த பெண்ணின் மாமா, போக்சோ சட்டம் மூலம் அவனைத் தண்டிக்க நினைக்கிறார். வென்றது பொய்யான போக்சோ புகாரா அல்லது அந்த Nobody ஆ என்பதை ஒரு த்ரில்லிங்கான கோர்ட் டிராமா மூலம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ராம் ஜெகதீஷ்.
வெகு இயல்பான விடலைப் பருவ காதல் காட்சிகள் மூலம் முதல் பாதியின் முதல் பாதி நகர்கிறது. அதன் பின் வருபவை அனைத்தும் கோர்ட் காட்சிகள் தான். இறுதி வரை அதே டெம்போ. சாட்சிகளின் அடிப்படையில் ஒரு நிரபராதியைத் தண்டிக்க முடியும் என்பதில் தொடங்கி, அதே சாட்சிகள் மற்றும் வலுவான வாதங்களின் (கிராஸ் எக்ஸாமினேஷன்) மூலம் பொய்ப் புகாரை உடைத்தெறிந்து காப்பாற்றவும் முடியும் என்று விறுவிறுப்பான காட்சிகள் மூலம் பதிந்திருக்கிறார் இயக்குனர்.
ப்ரியதர்ஷி புலிகொண்டா என்பவர் தான் தேஜா என்னும் கதாநாயகன். நம்மூர் சந்தானம் போல. காமெடியன் மற்றும் ஹீரோ பிரெண்டாக நடித்து தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார். விடலைக் காதலர்களாக ஹர்ஷ் ரோஷன் மற்றும் ஸ்ரீதேவி. தேஜாவின் சீனியராக சாய் குமார். 'சார் file பார்த்துவிட்டு கூப்பிடுவார்' என்ற கௌரவ வேடம். இவர்கள் அனைவரின் நடிப்பையும் தாண்டி நம்மை வெகுவாக ஈர்ப்பது கதை செல்லும் பாங்கு, வசனங்கள், திரைக்கதை, கோர்ட் காட்சிகள் மற்றும் இறுதியாக convict இல் இருந்து acquit ஆக மாறும் தருணம்.
தேஜாவின் சீனியராக வரும் சாய்குமாரின் ஒரு வசனம் பளிச் மற்றும் புதுசு. கேசில் ஒரு தருணத்தில் தோற்று போய் விட்டோம் என்று சோர்ந்து இருக்கும் நேரத்தில், 'நீ impulsive ஆக முடிவு எடுக்கிறாய். நீ மிகவும் புத்திசாலி. கிரகிப்புத் தன்மை அதிகம். அவ்வாறிருப்பவர்கள் impulsive ஆக முடிவு எடுப்பது தவறு. நிறுத்தி நிதானமாக யோசி', என்று வசனம் தேஜாவின் கேரியருக்குத் திருப்புமுனையாக அமைகிறது.
தேஜாவின் தமிழ் டப்பிங் வாய்ஸ் மட்டும் அவர் படத்தில் எடுத்திருக்கும் அவதாரத்திற்கு சம்பந்தம் இல்லாமல் கீச் கீச் என்று இருக்கிறது. மற்றபடிக்கு வெகு நாள் கழித்து ஒரு நல்ல கோர்ட் ரூம் டிராமா.
நெட்பிளிக்ஸ்ல் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக