புதன், ஜூன் 18, 2025

An Idle mind is the devil’s workshop

ஓய்வு பெற்ற உயரதிகாரி அவர். 60 வயதிலும் பம்பரம் போல் வேலை செய்பவர். மிகைக்காக சொல்லவில்லை. ஓய்வு பெற்று நான்கு வருடங்கள் ஆன பின்னும் தன்னை ஒரு அமைப்பில் இணைத்து, கடைசியாக வாங்கிய சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு வாங்கிக்கொண்டு அங்கும் பம்பரம் போல் சுழன்று சுழன்று வேலை செய்து கொண்டிருக்கிறார். அவருடன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தருணங்களில் அடிக்கடி கூறிய வார்த்தைகள் எப்பொழுதும் நினைவுக்கு வருவதுண்டு.
‘எதுக்கு சார் இந்த வயசிலேயும் இவ்ளோ ஓட்டம் ஒட்றீங்க. கீழ அத்தனை பேரு இருக்கான். அவங்க கிட்ட சொன்ன செய்யமாட்டாங்களா?’




‘கீழ இருக்குறவனை நம்பினா நான் மோசம் போக வேண்டிதான். அதைவிட முக்கியம் என்கிட்ட இருக்குற இந்த எனர்ஜிய கரெக்ட்டா சேனலைஸ் பண்ணலேன்னா மது, மாது, பொன், பொருள்னு ஏதோ ஒரு வழில போய் இப்போ நாசமா போயிருப்பேன்’ என்பார்.
அவர் கூறியது உண்மைதான். ஓய்வு அடைந்து ஏதோ ஒன்றில் தங்களை இணைத்துக்கொண்டு பிஸியாக இருக்கும் முதியவர்கள் நோய் நொடியின்றி ஆரோக்யமாக ஓடிக்கொண்டே இருப்பார்கள். Wealthy health.
இதை ஓய்வு பெற்றவர்களுக்கு என்று மட்டும் கூற வரவில்லை. இளந்தளிர்கள் கூட இதை கடைபிடிப்பது ஆகச்சிறந்தது. ஏதோ ஒன்றில் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். பள்ளி கல்லூரி படிப்பவர்கள் என்றால் காலை ஒரு விளையாட்டு, ஓட்டம், ஜிம், மாலையில் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு திறமையை மெருகேற்றிக்கொள்ள பயிற்சி. ஓவியம், இசைக்கருவி வாசித்தல், வீடியோ எடிட்டிங், எழுத்து, வாசிப்பு, திரைப்படங்கள் என இன்னும் சில பல. பள்ளி கல்லூரிகளில் போதை வஸ்துக்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. அறுபது வயதில் அந்த உயரதிகாரியிடம் அத்தனை எனர்ஜி இருக்கிறது என்றால், இளைஞர் இளைஞிகளிடம் எத்தனை மடங்கு அதிகமாக இருக்கும்? அவ்வளவு எனெர்ஜியையும் ஆக்கப்பூர்வமாக செல்வழித்து drain செய்துவிட்டால் இழிவான செயல்கள் செய்வதற்கு தெம்பு இருக்காது.
மதுப்பிரியர்களையும் போதைப்பிரியர்களையும் பார்த்து இவர்கள் இழிவானவர்கள் என்று சொல்வது போல் இன்னொரு கேட்டகரி இருக்கிறது. அவர்களை நாம் அவ்வாறு சொல்வதில்லை. அந்த கேட்டகிரி ரீல்ஸ் ஷார்ட்ஸ் என்று ஸ்க்ரீனிலேயே வாழ்க்கையைத் தொலைக்கும் ஒரு கும்பல். எப்படி போதைக் கும்பலால் தம் குழந்தைகள், பிஸினஸ், நற்பெயர், அடுத்த தலைமுறை என எல்லாம் சீரழிகிறதோ, அதே போல இதுவும் சமுதாய சீர்கேடு தான். வேலை மற்றும் படிப்புக்கு நடுவில் பொழுதுபோக்கு என்றால் பரவாயில்லை. பொழுதுபோக்குக்கு நடுவில் தான் வேலை மற்றும் படிப்பு என்பது தான் பிரச்சினையே.
ஸ்கிரீன் டைம், கத்தி போல ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்கு என்றால் பிரச்சினை இல்லை. ஏழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்துவைத்து விட்டு சும்மா இருப்பது போல இவர்கள் பொழுது மூச்சுடும் ஸ்க்ரீனில் நேரத்தை செலவு செய்வதை பார்க்கும்பொழுது பதைபதைப்பாக இருக்கிறது. குழந்தைகளை ஸ்க்ரீனில் இருந்து காப்பாற்றுவதே பெரும்பாடாக இருக்கும் நேரத்தில், பெரியவர்களும் இதற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பது கொடூரம். திருடனாய் பார்த்து திருந்தாவைட்டால்....
கெட்டுப்போக ஆயிரம் வழிகள் இருக்கின்றன. ஏதேனும் ஒரு உருப்படியான காரியங்களில் இணைத்துக்கொளும் வேளைகளில் உங்களுக்கு கெட்ட விஷயங்களை நினைத்துப் பார்க்கவோ, செய்யவோ நேரமும் சக்தியும் இருக்காது. அந்த ஈடுபடுத்துதலே ஆபத்பாந்தவன். ஒன்றும் முடியவில்லையா. வெறுமே தூங்கிவிடுதல் சாலச்சிறந்தது.
ஞாபகம் வைத்துக்கொள்ளவும். An Idle mind is the devil’s workshop

கருத்துகள் இல்லை: