ஏதேனும் கிரிக்கட் ஓடுகிறதா என்று ஒருமுறை ஸ்போர்ட்ஸ் சேனலை அலசிக் கொண்டிருந்தபோது ஒரு சேனலில் இந்த கேம். எதற்கு அதை பார்க்க ஆரம்பித்தேன் என்று புரியவில்லை. இரண்டு நிமிடம் பார்த்திருப்பேன். ஸ்கொர் என்று ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். லவ் தேட்டி, டியூஸ் என்று என்னவெல்லாமோ. ஒன்று விளங்கவில்லை. ஆனால் கேமை கவனித்துக்கொண்டிருக்கிறேன். யார் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் கண் அசைக்கவில்லை. காரணம் ரோஜர். எலிகன்ஸ் என்று ஒரு வார்த்தை உண்டு. அது ரோஜர் ஆடும் அந்த ஸ்டைல் தான். முதலில் அவர் யார் என்பதை தெரிந்துகொண்டு பின்பு டென்னிஸ் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டேன்.
ஆஸ்திரேலியன் ஓபன், ரோலண்ட் கேரோஸ், விம்பிள்டன், யூஎஸ் ஓபன் என வருடத்தின் நான்கு கிராண்ட்ஸ்லாமும், அதனுடன் ATP 1000, ATP 500, ATP 250, ATP ரேங்கிங்ஸ் என ஒவ்வொன்றாக புரிய வந்தது. 2003இல் யாரென்று அறிந்திராத ரோஜரை பிடிக்க ஆரம்பித்து அதன் பிறகு டென்னிஸ் என்ன என்பதை தெரிந்து கொண்டு, அன்றிலிருந்து கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள், 2022இல் அவர் ரிட்டையர் ஆகும் வரை, ரோஜரை பின்தொடர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட டிஜிட்டல் ஸ்டாக்கிங் போல்.
பள்ளியோ, கல்லூரியோ அல்லது வேலைக்கு வந்த பிறகோ, எல்லா நாட்களிலும் காலையில் சிஸ்டம் ஆன் செய்தவுடன் முதல் வேலை கூகிளில் ரோஜர் பெடரர் என்று தேடுவது தான். அதிகாலை எழுந்தவுடன் முதல் வேலையே அதான். கூகிள் நியூஸ் டேபில் அவர் சம்பந்தமான செய்திகளை படித்துவிட்டு தான் மறு வேலை. 2003 என்று சொன்னேன் அல்லவா? அது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் வருடம். விம்பிள்டன் கோப்பை. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, 2005 முதல் 2007 வரை அவரது ப்ரைம் வருடங்கள் என்று சொல்லலாம். அவரது முழு கேரியர் ஹிஸ்டரியில் இந்த மூன்று வருடங்கள் என்பது ரத்தினக்கற்கள் போல. யார் என்றாலும் துவம்சம் தான். அலட்டிக்கொள்ளாமல் விளையாடுவது அவரது தனித்துவமான ஸ்டைல். கிரேஸ், ச்சார்ம், எலிகேன்ஸ என எதுவேண்டுமானாலும் சொல்லலாம். இந்த மூன்று வருடங்களில் இவர் விளையாடும் போட்டிகள் எல்லாம் எனக்கு போரடித்துவிட்டது. ஆமாம். பின்னே, விளையாடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால். போட்டியின் முடிவுகள் தெரிந்த பின் அதில் உள்ள சுவாரசியம் என்ன? இரவு இவரது போட்டி லைவ் வருகிறது என்றால், டிவியை ஆப் செய்து பதட்டமில்லாமல் தூங்கிவிடுவேன். மறுநாள் பெடெரர் ஆறுக்கு மூன்று, ஆறுக்கு நான்கு, ஆறுக்கு இரண்டு என்கிற நேர் செட்களில் வென்றார் என்கிற ரீதியில் நியூஸ் இருக்கும்.
இவரது வெற்றிக்கான செய்திகள் எனக்கு தனி உத்வேகத்தை அளித்தன. வெற்றி பெற்றால் அந்த செமஸ்டர் பரீட்ச்சை ஈஸி. இல்லையென்றால் கொஸ்டின்ஸ் டப் என்று ஒரு அர்த்தம் பொதிந்து வைத்திருந்தேன். அதே போல் அவரது தோல்விகள் செமஸ்டர் தேர்வு மட்டுமல்ல மற்ற எல்லாவற்றிலும் ஒரு இம்பேக்ட் கொடுத்தது. கிட்டத்தட்ட வேலைக்கு சென்று இரண்டு மூன்று வருடங்கள் வரை இதே பேட்டர்னில் தான் இருந்தேன். பிறகு மெல்ல மெல்ல இந்த OCD குறைந்தது.
2003 முதல் 2007 வரை இவர் துவம்சம் செய்திருந்தார் என்று சொன்னேனல்லவா?. அதில் ஒரு விதிவிலக்கு. அது நடால்.
பெடரரின் சரித்திரம் நடாலின்றி எழுத முடியாது. 2004 இல் இரண்டு பெரும் முதல் முறையாக மியாமியில் மீட் செய்கிறார்கள். காற்றில் பறக்கும் இறகைப் போல் லகுவாக விளையாடிக்கொண்டிருந்த பெடரருக்கு நடாலின் அதி தீவிரமான அல்லது பவர்புல் கிரவுண்ட் ஸ்ட்ரோக்ஸ்சுக்கு பதில் இல்லை. இரண்டு பெரும் இரண்டு வெவ்வேறு விதமான ஸ்டைல். அனல் பறந்த அந்த மீட்டில் நடால் நேர் செட்டுக்களில் இவரை வெல்கிறார். அதற்குப் பிறகு அதே மியாமியில் 2005இல் மீண்டும் பெடரர் நடால் ரீமேட்ச். பெடரர் போராடி வெல்கிறார். கொஞ்சம் நம்பிக்கை மிளிரும் நேரத்தில் காட்சிகள் மீண்டும் மாறுகின்றன. அதற்குப் பிறகு சந்தித்த மேட்ச்களில் எல்லாம் நடாலின் ஆதிக்கம் தான். 2005 முதல் 2008 வரையிலான பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் எல்லாவற்றிலும் நடால் பெடெரர் தான் பைனலில் மீட் செய்கிறார்கள். அத்தனையிலும் நடால் தான் சேம்பியன். சரி clay கோர்ட்டில் மட்டும் தான் இந்த தோல்விகள் என்று ரசிகர்களும் பெடரரும் ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.
ஆனால், மனதளவில் பெடரர் உருக்குலைந்தது 2008 விம்பிள்டன் மேட்சை நடாலிடம் தோற்ற தருணத்தில். அதன் பிறகு நடந்த ஆஸ்திரேலியன் ஒபெனிலும் பெடரரை வீழ்த்தியிருப்பார். எப்பொழுது நடாலை மீட் செய்தாலும் பெடரர் choke ஆக ஆரம்பித்தார். அரிதிலும் அரிதாக வெற்றி கிட்டியது. இதுவரை இவர்கள் இரண்டு பெரும் 40 முறை மீட் செய்திருக்கிறார்கள். 16 முறை பெடரர், 24 முறை நடால். அதில் அதிகபட்சம் clay கோர்ட் தான். அதில் முடிசூடா மன்னன் நடால். 2017 இல் இறுதியாக இவர்கள் இருவரும் விளையாடிய ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை மறக்க முடியுமா. மூன்று முறை மூட்டு அறுவை சிகிச்சை செய்த பிறகு வெகுண்டெழுந்து அந்த பட்டத்தை கை பற்றியிருப்பார். ஓன் ஆப் தி பெஸ்ட் பைனல்ஸ். அந்த உத்வேகம் அவரை மேலும் இரண்டு கிராண்ட்ஸ்லாம் வெல்ல வைத்தது. மொத்தமாக 20 ஸ்லாம்கள்.
ஒரு காலத்தில் பீட் சாம்பராசின் 14 ஸ்லாம்கள் ரிக்கார்ட் முறியடிக்கப்படுமா என்ற சந்தேகத்தை 2009 இல் பிரெஞ்சு ஓபன் ஸ்லாம் வென்று சமன் செய்திருப்பார். அதன் பிறகு ஆடிய பதிமூன்று வருடங்களில் ஆறு ஸ்லாம்கள். நடால் மற்றும் ஜோகோவிக் காலம் அவை. கிட்டத்தட்ட 86 ஸ்லாம்களில் இவர்கள் கூட்டாக 66 ஸ்லாம்கள் வென்றிருக்கிறார்கள். The big three. இவர்களுடன் முர்ரே உண்டு. மூன்று ஸ்லாம்கள். ஆனால் மூன்று பேருக்கும் நெருக்கமாக டஃப் கொடுத்து விளையாடி இருக்கிறார். இதில் யார் GOAT என்ற விவாதத்திற்கு என்றுமே செவி சாய்த்ததில்லை. அவரவர் விளையாட்டில் அவரவர் the best. ஒன்று மட்டும் நிச்சயம். இவர்கள் டாமினேட் செய்தது போல் எந்த ஒரு விளையாட்டிலும் எவரும் இருபது வருடங்களுக்கு மேல் கோலோச்சியது இல்லை.
237 வாரங்கள் தொடர்ந்து நம்பர் ஒன் பிளேயராக பெடெரர் இருந்தார். கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள். இந்த ரிக்கார்ட் இது வரை முறியடிக்கப்படவில்லை. இனிமேலும் வாய்ப்பில்லை. ஏனெனில் ஆக்டிவ் பிளேயராக இருக்கும் ஜோகோவிக் 122 வாரங்கள் மட்டும். தற்போது சின்னர் 53 வாரங்கள். ஆனால் இவர்களால் தொடர்ந்து ஆடும்பொழுது காயம் அடையாமல் இருக்க முடியாது. ஸ்பேனிஷ் காளை மாடை அடக்குவது போல் இவர்கள் டென்னிஸ் கோர்ட்டில் ஆக்ரோஷமாக விளையாடுவது ஒரு மேஜர் காரணம். பெடரர் balet டேன்ஸ் போல் தனது டெக்கினிக்குகளை தகவமைத்திருந்தார். அது அவரது உடலுக்கு நீண்ட காலம் ஒத்துழைத்தது. அதேபோல் இதுவரை ஆடிய 1251 மேட்ச்களில் எந்த ஒரு மேட்சிலும் அவர் retired hurt என்று ஒய்வு பெற்றதில்லை. மிகப்பெரிய ரிக்கார்ட். நம்ப முடியாத பல ஷாட்கள் இன்றும் காண ஆச்சர்யமாக இருக்கும். டென்னிஸில் மட்டுமா ரிக்கார்ட். இவரது நான்கு குழந்தைகளும் ட்வின்ஸ் தான். முதலில் இரு பெண்குழந்தைகள். அதன் பிறகு இரண்டு ஆண் குழந்தைகள். இவரது மனைவியின் பெயர் மிர்கா. அவரும் ஒரு டென்னிஸ் பிளேயர். இவரது கேரியருக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டு தன்னை டென்னிஸில் இருந்து விடுவித்துக்கொண்டு இவர் செல்லும் இடங்கள் முழுவதும் கூடவே இருந்தார். பெடரரின் உண்மையான பலம். அதுபோல் உறுதுணையான அவரது பெற்றோர்கள். இதை ஏன் கூறுகிறேன் என்றால் 2009 இல் நடால் சற்றே மனதளவில் உருக்குலைந்து இருந்தார். காரணம் அவரது பெற்றோர் பிரிவு. அந்த பிரிவு தான் நடாலைத் தோல்வியில் தள்ளியது. பெடரருக்கு 2009இல் பிரெஞ்சு ஓபன் பட்டம் ஜெயித்து கொடுத்தது. elusive grandslam title.
வெற்றியோ தோல்வியோ குழந்தை போல் இவர் அழுவது உண்டு. ஆன் தி கோர்ட் மட்டுமல்ல ஆப் தி கோர்ட்டும் இவர் மேல் மக்களுக்கு மிகப்பெரிய கிரேஸ் உண்டு. உதாரணமாக இவரது கேரியரில் இவர் நடாலை மீட் செய்தது 40 முறை. அதில், 24 முறை பைனல் போட்டிகள். அதில் ஒன்பது மேஜர் (கிராண்ட்ஸ்லாம்) பைனல் போட்டிகள். அதில் மூன்றில் மட்டுமே பெடரர் வெற்றி. மீதி ஆறு நடால். அதாவது 26 கிராண்ட்ஸ்லாம் வெல்லும் வாய்ப்பு, வெறும் 20 ஆக சுருங்கக் காரணம், நடால். ஆனால் கோர்ட்டுக்கு வெளியே இவர்கள் இருவரும் நட்பு பாராட்டும் அழகே அழகு தான். அதனால் தான் ஒய்வு பெரும் நாளில் தனக்கு அருகில் நடால் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
சமீபத்தில் இவரது 'ட்வெல்வ் பைனல் டேஸ்' பார்க்க வாய்ப்பு கிட்டியது. அமேசான் பிரைமில். ஒரு விளையாட்டு வீரர் தன வாழ்வில் இரண்டு முறை இறக்கிறார். முதல் இறப்பு அவர் அந்த விளையாட்டில் இருந்து ஒய்வு பெரும் பொழுது நேர்கிறது என்ற ரோஜர் பேசுவதிலிருந்து டாகுமெண்டரி ஆரம்பிக்கிறது. அதற்கேற்றாற் போல் அவரது ஒய்வு செய்தியை அறிவிக்க அவரது டீம் ரெடியாகிறது. பன்னிரண்டு நாட்கள் முன்பிலிருந்து அவர் ஒய்வு பெரும் அன்று வரை, என்ன என்ன எண்ண ஓட்டங்கள். மன வேதனைகள். ஹய்ஸ் அண்ட் லோஸ் கவரேஜ் தான் இந்த ட்வெல்வ் பைனல் டேஸ். தனது சக போட்டியாளரான நடாலுடன், தான் ஒய்வு பெரும் அந்த நாளை பகிர்ந்து கொண்டார். சிறு குழந்தை போல் இருவரும் அழுதனர். பார்க்கும் எவருக்குமே நீர் கோர்த்துவிடும். அந்த அளவுக்கு அவர்களின் நட்பு தீவிரமானது.
போலவே, ஒய்வு அறிவித்த பின் பல வீரர்கள் காணாமல் போய்விடுவார்கள். பொது இடங்களில் பார்க்க முடியாது. அவர்களை பற்றிய ஒரு செய்தி வெளிவராது. கோஸ்ட் போல் மறைந்து விடுவார்கள். கோடானு கோடி ரசிகர்களுக்கு பெரும் கவலையாக இருக்கும். அதுபோல் தான் இருக்க விரும்பவில்லை என்றும் அவ்வப்போது exhibition மேட்ச், விழாக்கள், ட்ரைனிங் கோர்ட் என வளைய வருவதை விரும்புவதாக ரோஜர் தெரிவித்திருப்பது மிகவும் ஆழமான ஒரு கருத்து. பரவலாக அவர் விரும்பப்படுவதற்கான காரணம் இதுதான். ஒரு பள்ளியின் Graduation Day அன்று ஒரு உரை நிகழ்த்தியிருப்பார். வாய்ப்பிருந்தால் பாருங்கள். The finest speech,
பெடெரரின் டாகுமெண்டரி என்றவுடன் அவரது கேரியர் முழுவதும் அலசியிருப்பார்கள் என்று எண்ணினேன். ஆனால் ஒய்வு பெற்ற இறுதி பன்னிரண்டு நாட்கள் மட்டுமே என்பது சற்று ஏமாற்றம். அவரின் கேரியர் முழுவதும் அலசி, முக்கியமான மேட்ச்களை, ஷாட்களை கம்பைல் செய்து ஒரு டாகுமெண்டரி எடுப்பார்கள் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
பெடரர் தான் வளர்ந்தது மட்டுமின்றி டென்னிஸ் கேமையும் வளர்த்து எடுத்தார். பிக்காஸோ தூரிகை எடுத்து ஓவியம் தீட்டுவது போல் அவரது டென்னிஸ் கேம் தனித்துவமானது. அதற்கென்று ஒரு புதிய பரிமாணத்தையும் அளித்தார். ஒரு திறமையான விளையாட்டுவீரர் மட்டுமின்றி மிகச்சிறந்த மனிதரின் சகாப்தத்தில் வாழ்ந்தோம் என்பதே பெருமை தான்.
லவ் யூ ரோஜர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக