புதன், ஜூன் 18, 2025

ஷகீலாவும் குழந்தை மன உளவியலும்


ஷகீலாவின் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார். படம் நடிப்பதற்காக இளம் வயதில் சான்ஸ் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். தோராயமாக அப்போது அவருக்கு இருபது இருபத்திரண்டு வயது இருக்கலாம். அலைந்து திரிந்து ஓய்ந்து போயிருந்த நேரம் ஒரு நாள் அவரது தந்தை ஒரு ப்ரொட்யூசரிடம் இருந்து அட்வான்ஸ் வாங்கி வந்திருக்கிறார். நாளைக்கு ஷூட்டிங் என்றதும் அவரும் அவரது தங்கையும் குஷியாகியிருக்கிறார்கள்.
அடுத்த நாள் சொல்லி வைத்தது போல் ஷூட்டிங் ஆரம்பித்திருக்கிறது. இரண்டு மூன்று நாட்கள் ஷூட்டிங் செல்ல செல்ல கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் ஆனது போல் ஆடை குறைந்து கொண்டே வந்திருக்கிறது. கிளாமர் படம் போல் என்று நினைத்த இவருக்கு அன்று அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அரை நிர்வாணமாக நடிக்க பணித்திருக்கிறார்கள்.
இவர் அதிர்ந்து நிற்கவும், 'உன் தந்தைக்கு எல்லாம் தெரியும். இது ஒரு பிரச்சினையும் இல்லை என்று கூறி அட்வான்ஸ் வாங்கி சென்றுவிட்டார்' என்று ப்ரொட்யூசர் அழுத்தமாகச் சொல்ல, இவருக்கு இருந்த தயக்கம் கொஞ்சமாய் அகல ஆரம்பித்திருக்கிறது. தந்தையே கூறிவிட்டார்...சரியாகத்தான் இருக்கும் என்று ஒரு மன நிலை. மேலும் அவர்கள் அதட்டவும் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாத ஒரு வயது. பணிந்து அவர்கள் சொல்வது போல் நடித்திருக்கிறார்கள். முதல் இரண்டு படங்கள் மட்டும் இதே போன்று நடக்க, வெளி அனுபவம் தெரியத் தெரிய அதன் பிறகு சுதாரித்து கொண்டதாய் கூறுகிறார். ஆனாலும் முத்திரை குத்தப்பட்டதால் வேறு வாய்ப்புகள் இல்லாமல் இதையே தொடர வேண்டிய நிலை.
ஷகீலா யார்? அவர் கூறுவதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கலாமா? இது உண்மை தானா? அவர் என்ன தொழில் செய்கிறார்? என்ற கேள்வி எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு அழுத்தி கூற விரும்பும் விஷயம் இதுதான். உங்கள் குழந்தையின் நண்பர்கள், ஆசிரியர்கள், அண்டை வீட்டார், ஸ்போர்ட்ஸ் கோச் என எல்லோர் மீதும் ஒரு கண் இல்லை இல்லை இரு கண் வைத்திருங்கள். ஒரு குறிப்பிட்ட வயது வரை அதாவது அவர்கள் முதிர்ச்சி அடையும் வரைக்கும் கண்காணிப்பு இருப்பது நல்லது. ஏனெனில் எல்லா குழந்தைகளும் தைரியமானவர்கள் அல்ல. நடந்ததை நடந்த படியே கூறும் வல்லமை மிக்கவர்கள் இல்லை. எது நன்று எது கேட்டது என்பது தெரியாத பருவத்தில் உள்ளவர்கள். குழந்தை மனத்துடைய அவர்கள் மற்றவர்களிடமும் அதே குழந்தை மனதை தான் எதிர்பார்ப்பார்கள். அனால் சுற்றிலும் இருப்பது மிருகங்கள்.
சொல்லுங்கள். இத்தனை வருடங்களில் உங்களுக்குத் தெரிந்த முகங்கள் எத்தனை முறை தாமாகவே முன்வந்து உதவி செய்திருக்கிறார்கள். நம்மை நாடி வருபவர்கள் எல்லாம் ஏதேனும் உதவி அல்லது காரியம் ஆக வேண்டும் என்றுதான் வருகிறார்களே தவிர ஒரு முறையாவது மனமுவந்து உதவினார்களா? என்று கேட்டு நீங்கள் தாடையில் கைவைத்து யோசித்தீர்கள் என்றால் நான் கூறுவது உண்மை. உற்றார் உறவினர், அண்டை வீடு, அலுவலகம் என்று எந்த இடத்திலும் இது பொருந்தும். நண்பர்கள் இதில் விதிவிலக்கு.




கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியவர்கள் என்ற லிஸ்டில் ஆசிரியர்கள் என்று நான் கூறுவதில் நெருடல் இருக்கலாம். ஆனால் லிஸ்டில் முதல் இடத்தில் இருக்க வேண்டியது ஆசிரியர்கள் மட்டுமே. ஏனெனில் நீங்கள் சொல்வதை கேட்காத குழந்தைகள் ஆசிரியர்கள் என்றவுடன் உடனே கீழ் படியும். நூறு சதவீதம். அதனால் பள்ளி, ட்யூஷன், ஸ்போர்ட்ஸ் கோச்சிங், ஸ்பெஷல் கோச்சிங் என்று எங்கு விட்டாலும் இருநூறு சதவீதம் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டியது ஆசிரியர்களிடத்தில் தான். இரண்டாம் மூன்றாம் வகுப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கண்காணிப்பை அதிகரித்து பன்னிரண்டாம் வகுப்பு வரை விழிப்புடன் இருக்க வேண்டியது பெற்றோரின் கடமை. ஓரளவுக்கு பக்குவம் கொண்டு தன்னைத்தானே காத்துக்கொள்ளும் அளவுக்கு இளநிலை படிப்பில் இவர்கள் முதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள்.
முகஸ்துதி செய்யும் அனைவரிடமும் ஒரு எச்சரிக்கையாய் இருத்தல் நலம் என்று சொல்லிக்கொடுங்கள். ஏனெனில் கயவர்களிடம் நாம் ஏமாந்து போகும் முதல் காரணம் இந்த முகஸ்துதி தான்.
90 சதவீத குற்றங்கள் தெரிந்த முகங்கள் மூலமாகவே நடக்கிறது. நம்பிக்கைத் துரோகங்கள்.
விழித்திருப்போம்.

கருத்துகள் இல்லை: