அதிகாலை 5.30 இருக்கும். எழுந்து பார்த்தால் ஒரு மெசேஜ். அமெரிக்காவிலிருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் நண்பனிடமிருந்து வந்திருந்தது.
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வரும்போதெல்லாம் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டு வேலை நடக்கவில்லை. இந்த முறை பார்க்க வருவதற்கு முயற்சி செயகிறேன் என்று சொல்லியிருந்தான். வரும் பத்து நாட்களில் ஆயிரம் வேலை இருக்கும் என்பதால் நானும் அதிகம் தொந்தரவு பண்ணியதில்லை.
'எந்திச்ச உடனே கால் பண்ணு.' இந்த மெசேஜ் படிக்கும் போதே அவனிடமிருந்து கால் வந்தது.
'டேய் எந்திரிச்சிட்டியா?'
'என்னடா இவ்ளோ காலைல. எங்க இருக்க?'
'இங்க தான். திருவெறும்பூர் ஸ்டேஷன் பக்கத்துல இருக்கிறேன். போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ண விரும்பலை. தூங்கிட்ருப்ப. வாட்சப்ல ரெண்டு டிக் வந்ததும், சரி பைய புள்ள எந்திச்சிட்டானு நினைச்சு போன் பண்ணிட்டேன். கரெக்ட்டா வீடு தெரியல. அதான். வரியா?'
மொபைலுக்கான பெரேடேஸ் கவர் என்று ஒன்று உண்டு. இவன் கிளம்பும் சமயம் அந்த கவர் ஞாபகத்துக்கு வந்து, இவனிடம் வாங்கி வருமாறு சொல்லியிருந்தேன். அமெரிக்காவில் சல்லிசான விலையில் கிடைத்தது. எப்படியும் வழக்கம் போல் நேரே பார்க்க வாய்ப்பிருக்காது என்பதினால் அதனை இந்தியா வந்த பிறகு கொரியர் செய்வதற்கு அட்ரஸ் அனுப்பியிருந்தேன். அதை ஞாபகம் வைத்துக்கொண்டு, சென்னையிலிருந்து மதுரை செல்லும் வழியில் திருச்சியில் அதிகாலை மூன்று மணிக்கு இறங்கி விட்டான்.
'பிளான் பண்ணினா பாக்கவே முடில. அதான். ட்ரைன்ல ஏறி ஊருக்கு போய்ட்ருந்தேன். காலைல முழிப்பு வந்துச்சு. மூணு மணி இருக்கும். என்ன ஸ்டேஷன்னு பார்த்தா திருச்சி. சரி ஒரு எட்டு பாத்துடுவோம்னு இறங்கிட்டேன்'
'டேய் நீ பாட்டுக்கு இங்கிருக்க. அதுவும் திருச்சில இறங்கி திருவெறும்பூர் வரைக்கும் வந்திருக்க. நான் ஊர்ல இல்லன்னா என்ன பன்னிருப்ப?. நான் ஒரு வேலை போன் எடுக்கலன்னா என்னடா பன்னிருப்ப?'
'இந்தா. 7 மணி இன்டர்சிட்டியை புக் பண்ணிட்டு தான் இறங்கினேன். நீ ஒரு வேல இல்லன்னா போனை எடுக்கலைன்னா திருப்பியும் சென்ட்ரல். அப்புறம் ட்ரெயின். ரிட்டர்ன் மதுரை'
என்னதான் பால்ய கால நட்பாக இருந்தாலும், கல்லெறிந்து ஓடுகிற நாய் போல் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நாம் மற்றவருக்காக அதிகபட்சம் செலவு செய்யும் காஸ்டலியான விஷயம் என்று ஒன்று உண்டென்றால் அது நம்முடைய நேரம். அந்த நேரத்தை ஒதுக்குவதற்கு ஆதாரமான அவர்களின் ஞாபக அலைகள் மற்றும் தயக்கமில்லாத உரிமை. இது அனைத்தையும் நீங்கள் ஒருவரிடம் சம்பாத்தித்து விட்டால்..... எனக்கு நெகிழ்ந்து விட்டது.
'வந்துட்டேன். அங்கேயே வெய்ட் பன்னு'
குடுகுடுவென்று வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் நின்று கொண்டிருக்கிறான். ஐந்து நிமிடம் தான் பயண நேரம் என்றாலும் மனது 25 வருடங்கள் பின்னோக்கி சென்றது.
படிப்பு விளையாட்டைத் தவிர வேறு எந்த ஒரு பொறுப்புணர்வும் இல்லாது பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் நேரம். திருநெல்வேலி அன்பு நகர் காலனியில் வீடு. 98 அல்லது 99 இருக்கும். அப்பொழுதெல்லாம் பரவலாக மொபைல் கிடையாது. லேண்ட்லைன் போன் தான். ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தோம். அன்புநகரிலிந்து சைக்கிளில் சென்றால் ரயில்வே கேட் உழவர் சந்தை வழியாக அண்ணா ஸ்டேடியம் ஏஆர் லைன் தாண்டி குலவர்ணிகபுரம் நுழைந்து மெய்ன் ரோடு பிடித்து எஞ்செலோ ஸ்கூல் தாண்டினால் ஜான்ஸ்.
சில நேரங்களில் கோயில்மணி சார் டியூஷனுக்கும் இதே ரூட் தான். சமாதானபுரம் மார்க்கெட்டில் அவருடைய வீடு இருக்கும். இங்க்லிஷும் ஹிஸ்டரியும் அவர் பேவரைட். அன்புநகரிலிருந்து கிளம்பும்போது ஒரு மிஸ்ட் கால். இப்போது போல் நொடிக்கு நொடி எங்கு இருக்கிறார்கள் என்ற அப்டேட் கிடையாது. மிஸ்ட் கால் கொடுத்து கிளம்பினால் மூன்று கிலோமீட்டர் தாண்டி அவன் வீட்டுக்கு அருகில் வரும்போது சரியாக அவனும் மெய்ன் ரோட்டிற்கு வருவதற்கும் சரியாக இருக்கும். வருடங்களாக இது நடந்தது. ஒரு முறை கூட சந்தித்துக்கொள்ளும் நேரம் தப்பியதில்லை. ஆச்சர்யம் தான். இப்பொழுதெல்லாம் லைவ் லொகேஷன் போட்டு சென்றால் கூட அரை மணி நேர தேவுடு காக்க வேண்டியிருக்கிறது. சைக்கிளில் இரண்டு பேர் சேர்ந்தார் போல் சென்றாலும் நான் எப்போதுமே லெஃப்ட் சைட் தான். ரைட் சைட் என்றால் லாரி ஏறி விடுமோ என்று பயம். இப்போது வரை அந்த பயம் போகவில்லை.
ஒரு முறை ட்யூஷன் போய்விட்டு வந்து கொண்டிருந்தோம். என்னுடைய சைக்கிள் பஞ்சர் என்று நினைக்கிறேன். அதனால் அவனுடைய சைக்கிளில் டபுல்ஸ். சமாதானபுரம் போலீஸ் கேண்டீன் வரும் பொழுது பஸ் ஸ்டாப்பில் ADJ பஸ் நின்று கொண்டிருந்தது. சில் சில் என்று வாலியில் வரும் ஓ சோனா பாட்டை ட்வீட்டரில் அலற விட்டுக்கொண்டிருந்தார்கள். நின்றுகொண்டிருந்த பஸ் தானே என்று நண்பன் பெடலை அழுத்தி முன்னால் முந்திச்செல்ல ADJ பஸ் அதை பார்க்காமல் நகரத்தொடங்கிவிட்டது. பஸ்ஸை இன்னும் முந்தவில்லை. பஸ்ஸின் பாதி தூரம் அழுத்திவிட்டான். சரியாக அதே நேரம் எதிர்த்தாற்போல் LION பஸ் வருகிறது. அந்த பஸ்ஸும் நாங்கள் எதிர்த்தாற்போல் வருகிறோம் என்று கருணை காட்டி நிற்கவில்லை. அதுவும் மேலே ஏறி வர, ADJ வும் நகர சரியா இரண்டு பஸ்ஸுக்கும் நடுவில், இப்பொழுதெல்லாம் படத்தில் காமிக்கிறார்களே, அது போல் மாட்டிக்கொண்டோம். எனக்கா, லெப்ட்டா ரைட்டா எந்த பஸ் சக்கரத்தில் விழப்போகிறோம் என்று உதற ஆரம்பித்துவிட்டது. பஸ்சிற்கு பெயிண்ட் கிடையாது. கண்ணாடி போல் தகரம் பிரதிபலிக்கும். தோள்பட்டையை ஓட்டினாற் போல இரண்டுபக்கமும் பஸ் நகர பேய் அறைந்தது போல என் முகம் அதில் தெரிகிறது. நண்பனோ அப்பொழுதுதான் சாமி விக்ரம் போல் ‘பஞ்சாலை சங்கு சத்தம் கேக்காத தூரம் போறேன்’ என்கிற ரீதியில் சைக்கிளில் ஏறி நின்று பெடலை அழுத்துகிறான். இரண்டு மூன்று நொடிதான். வைரமுத்து சொன்னது போல் வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருண்டு விளையாடிவிட்டது. ஒரு வழியாக இரண்டு பஸ்களும் கடந்து போக, நடு ரோட்டில் நாங்கள் சைக்கிளில் நிற்க. ‘எலே..அறிவிருக்கால்ல...கோட்டிப் பயலுவளா?’ என்று இளநீர் கடைக்காரர் கத்த, அப்பொழுது தான் உயிர் வருகிறது. மயிரிழையில் The Great Escape.
டெக்ஸ்டைல் கடை அவர்கள் வீட்டு குஷன் ஷோபா கேடிசி நகர் வீடு ஸ்நேகாக்கா அவன் அப்பா அணிந்திருக்கும் ரோப் மூக்குக் கண்ணாடி என்று நியாபாகம் சுத்தி வர, பஸ் ஸ்டாப்பை அடைந்துவிட்டேன். வீட்டிற்கு கூட்டி வந்து ஒரு கப் காபி. வீடை, அருகில் இருக்கும் ஊரகத்தைச் சுற்றி பார்த்துவிட்டு அரை மணி நேரத்தில் மீண்டும் சென்ட்ரல் கிளம்பி இன்டர்சிட்டியில் ஏற்றி விட்டேன். திடீர் விசிட் என்பதால் பேரெடெஸ் கவரை எடுத்து வரவில்லை. வழக்கம் போல் கொரியர் செய்தான்.
ஆனால் ஆயுளுக்கும், இது போல் அக்கறைச் சீமையிலிருந்து ஒரு நண்பன் உரிமையுடன் வந்து என்னைப் பார்த்துவிட்டுச் சென்றான் என்று என் குழந்தைகள் பெயரன் பேர்த்திகிளிடம் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது. தேங்க்யூடா.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக