புதன், ஜூன் 18, 2025

மன்னிப்பு


விஜயகாந்த் சொல்வது போல் ‘மன்னிப்பு’. எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை என்று சொல்ல வரவில்லை. இன்ஃபாக்ட், கொண்டாடப்படேவேண்டிய ஒரு வார்த்தை ஒன்று உண்டென்றால் அது மன்னிப்பு தான்.
இரண்டு கேட்டகிரியில் இதை அணுக விரும்புகிறேன்.




முதலாவது. ஒருவருக்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ தீங்கிழைத்துவிடுவது. அல்லது நம்மை மற்றவர்கள் காயப்படுத்திவிடுவது. கேலியோ, கடுஞ்சொல்லோ அல்லது உடலால் புண்படுவது போல் ஏதேனும் ஒரு செயல். தவறை உணர்ந்து மன்னிப்பு கோரிய பின்னும் நம்மை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். விட்டுத்தொலைத்தல் நலம். இதே போன்று, மற்றவர்களை நாம் அணுகும் விதம். ‘அறியாமல் செய்த பாவத்தை மன்னியும் பிதாவே’ என்பது போல், இவர்களின் குற்றங்களை நாம் அவ்வப்போது மன்னித்து விடுவது, அவர்களை விட நமது மனதிற்கு மிகவும் நல்லது. ஏனென்றால் ‘இவன் இதை எனக்கு எப்படிச் செய்யலாம்?’ போன்ற கிரட்ஜ் பீலிங்கை சுமந்து கொண்டே வாழ்நாள் முழுமைக்கும் செல்வது நமக்கு அழுத்தத்தையும் நோயையும் கொடுத்து விடும். அழுகிய தக்காளியை தூக்கிக்கொண்டே திரிவோமா அல்லது தூர எறிந்து விடுவோமா? இந்த எதிர்மறை எண்ணங்களை ‘ராட்டன் டொமெட்டோஸ்’ என்று சொல்கிறார்கள். தூக்கி எறிந்துவிடுதல் நலம். நலம்.
இரண்டாவது கேட்டகிரி. இதைத்தான் அழுத்தமாக இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நாம் ஒரு சிறு தவறு செய்திருப்போம். தேர்வில் ஒரு கேர்லஸ் மிஸ்டேக், அலுவலகத்தில் சிறு கவனக்குறைவு, அன்பானவர்களிடத்தில் கடிந்து பேசியிருப்பது, காலை செய்த உணவில் உப்பைத் தெரியாமல் அதிக அளவில் தூவியிருப்பது, குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பேருந்தை தவறவிட்டது, தெரியாத ஷேரில் முதலீடு செய்து பணத்தை இழந்திருப்பது இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம். ஒரு சிறு கவனக் குறைவு, சலிப்பு அல்லது அலட்சியம், என எதுவானாலும் காரணமாக இருக்கலாம். இன்று செய்ததோ இல்லை பல வருடங்களுக்கு முன்னோ, அந்த தவறுக்காக நாம் நம்மை நொந்து கொண்டும் தண்டித்து கொண்டும் நாமே நம்மை காயப்படுத்திக் கொண்டே இருப்போம். நம்மை அறியாமலேயே. அதுவே பெரும் மனச்சோர்வாக இருக்கும்.
இந்த உலகில் சரி தவறென்று எதுவும் இல்லை. மற்றவர்களை உடலாலோ மனதாலோ துன்புறுத்தாத வரை நாம் எதற்கும் வருந்த வேண்டிதில்லை. முதலில் உங்களை நீங்கள் மன்னியுங்கள். உங்களுக்குள் இருக்கும் அந்த ஆன்மாவை நீங்கள் நேசிக்கவேண்டும். உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும். எந்த ஒரு நிலையிலும் உங்களை நீங்களே விட்டுக்கொடுக்காதபடி நடந்து கொள்ள வேண்டும். நம்மை நாமே மன்னிக்காதபோது அல்லது நேசிக்காதபோது மற்றவர்களிடத்தில் இதை எதிபார்ப்பது எவ்வகையில் நியாயம்.
Forgive Yourself. Love Yourself!!!

கருத்துகள் இல்லை: