திருச்சிக்கு பஞ்சம் பிழைக்க வந்த முதல் வருடம் படு சிரமமாக இருந்தது. பிப்ரவரி மத்தியில் ஆரம்பிக்கும் வெயில் கிட்டதட்ட நவம்பர் இறுதி வரை பிளந்து கட்டும். எப்ரல் மாதத்தில் அக்னி நட்ச்சத்திரம் என்று ஒன்று சொல்வார்களே. அது திருச்சியில் கிடையாது. ஏனென்றால் எல்லா மாதமும் அக்னி நட்சத்திரம் தான். அப்படி ஒரு அமைப்பு. டெக்கான் பீடம்.
காற்று காலம். சரியாக ஜூன் மாதத்தில் தொடங்கும் காற்று குறைந்தபட்சம் ஒரு மாத காலம் நின்று வீசும். அந்த காற்று ஒன்று தான் இந்த ஹாட் சம்மரின் நடுவே சின்ன ஆறுதல்.
மழை. பெரிதாக சொல்வதற்கில்லை. 'அய்யய்யோ, இந்த பக்கம் தெரியாம வந்துட்டோமோ?' என்று மேகமே யோசிக்கும் அளவுக்கு அவ்வப்போது தான் பெய்யும். இல்லை சொட்டும். தஞ்சாவூரில் புயல் சூறவாளி என்றால் இங்கு சாரல். அவ்வளவே. மற்றபடிக்கு புயல் நேராகத் தாக்கினால் தான் ஊர் குளிக்கும்.
ஆனால், ஆனால் பனிக்காலம் என்று ஒன்று இங்கு உண்டு. தனி ரகம். தனி சுகம். அதற்காகவே பேறு காலம் போல் பத்துமாதம் காத்திருக்கலாம். அவ்வளவு குளிர். தமிழநாட்டில் சமவெளி ப்ரதேசங்களில் எங்கும் இல்லாத இந்தச் சிறப்பு திருச்சிக்கு உண்டு. டிசம்பர் மற்றும் ஜனவரி, இரண்டு மாதங்களும் குளிர் துளைக்கும். மாலை ஐந்து ஆறு மணிக்கெல்லாம் வண்டியில் 20km வேகத்துக்கு மேல் போக முடியாது. வெடவெடத்துவிடும். அதிகாலை நேரம் கேக்கவே வேண்டாம். சீலிங் fan போடத் தேவையிருக்காது. அதிகாலை மூன்று மணி போல் மாடியைத் துளைத்து இறங்கும் பனி கொடைக்கானல் குளிரை ஞாபகபடுத்தும். குறைந்த பட்சம் 20 டிகிரி வரை செல்லும் குளிர் பகலிலும் வாடைக்காற்றை தந்து கொண்டிருக்கும். அதிகாலை உதயமே 6.30 போல் தான். இந்த இரண்டு மாதங்களில் எப்பொழுதேனும் மழை வந்துவிட்டால் போதும், குற்றால சீசன் போல் சாரல் மற்றும் வாடைக் காற்றுடன் அமர்க்களப்படுத்தும்.
நாளையுடன் இந்த அருமையான குளிர் சீசன் முடிவடிந்துவிடும். இன்னும் சரியாகச் சொன்னால் சிவராத்திரிக்கு மறு நாளிலிருந்து மீண்டும் சம்மர் தான்.
அடுத்து பத்து மாதம் காலம் காத்திருந்தால் அருமையான குளிர் சீசன் அனுபவிக்க திருச்சியில் ரெடி. வீ ஆர் வெயிட்டிங்.
ஶ்ரீருத்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக