புதன், ஜூன் 18, 2025

ஒரு நல்ல எழுத்து

ஒரு நல்ல எழுத்து என்ன செய்ய வேண்டும். சிந்தனையைத் தூண்ட வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஒரு நல்ல உதாரணம் வெ. நீலகண்டன் அவர்கள். மற்றவர்கள் எல்லாம் தேடித்தேடி பிரபலங்களை பேட்டி எடுக்கும் வேளையில், எளிய சாதனை மனிதர்களின் விலாசமாக இவர் பரிமளிக்கிறார். பேட்டி கொடுப்பவருக்கு மட்டுமல்ல, வாசிப்பவருக்கும் ஒரு உந்துதல் கொடுப்பது தான் இவரது எழுத்து. Weekly motivation.
அப்படியான ஒரு எழுத்தை கடந்த வாரம் வாசிக்க நேர்ந்தது.
Nokiya Medha என்பவர் விகடனில் எழுதிய 'அந்தக் கண்ணீர் தான் தொடர்ந்து இந்த வேலையை செய்ய வைத்தது' என்னும் கட்டுரை தான் அது.







சென்னை கோட்டூரில் உள்ள புற்றுநோய் மைய்யத்தில் ஸ்ரீ கோமதி என்னும் பெண்மணி பல வருடங்களாக அங்கு சிகிச்சைக்கு வருபவர் மற்றும் உறவினர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கணவர் இல்லாமல் மூணு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டிருக்கிறார். கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை தன் குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்து பின்பு தண்ணீரை மட்டும் குடித்து விட்டு அடுத்த பொழுது நல்ல படியாக புலராதா என்னும் நிலையில் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட வறுமையிலும் ஒரு நாள் ஒரு பாட்டிக்கு உணவு அளித்திருக்கிறார். அதுவே இரண்டு மூன்று என்று மாறி இன்று 150 பேர் என்றாகியிருக்கிறது. தினமும் தருகிறார். நோய் வாய்ப்பட்டவர்களுக்கு வெண்ணை கலந்த தயிர் சாதம். மற்றவர்களுக்கு மிளகு புதினா கறிவேப்பிலை என்று ஒரு கலவை சாதம். முகம் தெரியாதோர் மளிகை சாமான் கொடுக்க இவரது அரும்பணி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. குறைந்த பட்சம் 500 பேருக்காவது கொடுக்க வேண்டும் என்று உயரிய நோக்கத்தினுடன் செயல்படுகிறார்.


இதன் உந்துதல் பேரில் இன்று முதல் முறையாக 30 தயிர் சாதம் பாக்கெட்டுகள் பேக் செய்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தோம். வாங்க ஆள் இருப்பார்களா என்று சந்தேகத்துடன் சென்ற நிலையில் முப்பது நொடிகளுக்குளாக எல்லாம் காலி. சிலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு பக்கம் கட்டிச்சென்ற சாதம் வீணாகவில்லை என்ற மகிழ்ச்சி இருந்தாலும் மறுபக்கம் இத்தனை பேர் உணவில்லாமல் தவிப்பது துயரம். புத்தாண்டு அன்று நூறு கட்டிச் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறோம்.
இந்தக்கட்டுரை என்னில் எப்படி ஒரு மாற்றத்தை உண்டு செய்ததோ அது போல் உங்களிடம் இந்த பதிவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தட்டும்.
இயலும் வரை தர வேண்டும். ஒரு வகையில் அது தானே சமநிலை.

கருத்துகள் இல்லை: