புதன், ஜூன் 18, 2025

டிரவுசர் பாக்கெட் துக்கடா

கிரிக்கெட் எல்லாம் அப்போது விளையாடத் தெரியாது. அப்போது மட்டும் இல்லை இப்போதும் தான்.

வாழ்நாளிலே இதுவரை இரண்டே இரண்டு முறை தான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். ஸ்கூல் அனுவல் லீவில் இருக்கிறவர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு வீட்டு பக்கத்தில் இருக்கும் கிரவுண்டில் இல்லையென்றால் கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஒரு கூட்டம் விளையாடும். அதுபோல் இரண்டு முறை.
ஹைகிரவுண்ட் அன்புநகர் ஹவுசிங்க் போர்ட் பின்னாடி இருக்கும் ஒரு கிரவுண்ட். பாளையம்கோட்டை GH இல் இருந்து அங்கு வந்து தான் உடலை புதைப்பார்கள் அல்லது எரிப்பார்கள் என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறோம். அது ஒரு முற்காடு. ஆனால் எங்களைப் பொறுத்தவரை அது ஒரு சுடுகாடு. ஹவுசிங்க் போர்டிலிருந்து பெருமாள்புரம் நீச்சல் குளம் வரை செல்லுவதற்கு அந்த முற்காட்டில் மணலில் ஒரு பாதை இருந்தது. ஒத்தையடி பாதை போல இருக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக விசாலமாகி ஒரு மைதானம். அதில் தான் கிரிக்கெட் விளையாடுவார்கள். உச்சி வெயில். இப்போது தான் வெயில் எல்லாம். அந்த வயதில் வெயில் எல்லாம் உடலுக்கும் தெரியாது. மனதிலும் உரைக்காது. வீட்டை விட்டு வெளியே வரும் ஒரு சுதந்திரம். அது மட்டும் தான். அதற்கான விலை எதுவென்றாலும் தரக்கூடிய வயது.


அப்பொழுது அந்த டீம் சேஸிங் செய்து கொண்டிருந்தது. எல்லோரும் அவுட். கடைசி ஒருவன் நின்று கொண்டிருக்க, பதினோராவது ஆள் அங்கு இல்லை. திசை தெரியாமல் அங்கே நான் போய் நிற்க, டீமில் ஆள் இல்லை என்று என்னை இழுத்து விட்டார்கள். பேட்டிங். நான் வலது கை பழக்கமுடையவன். ஆனால் பேட்டை வாங்கி நின்ற பொழுது இடது கை தான் வாகாக வந்தது. சரி அடிப்போம் என்ற தொனியில் நான் நிற்க, அதுவே அவர்கள் அனைவருக்கும் ஒரு ஷாக். பெரிய ஆட்டக்கார புலியாக இருப்பனோ என்று. முதல் பந்து எதிர்கொண்டேன். மட்டை காற்றில் சுழன்று, பந்து கீப்பர் கையில் தஞ்சம் புகுந்தது. கீப்பர் நன்றாக காத்து வருகிறது என்றான். அதில் உள்ள வஞ்ச புகழ்ச்சி எனக்கு புரியவில்லை. இரண்டாவது பந்து, மூன்றாவது பந்து என எல்லாமே எப்படி என்னைத் தாண்டி பின்னால் சென்றது என்றே தெரியவைல்லை. எதிர் சைடில் நின்றவன் ‘டேய் தொட்டு விட்டு ஓடு. போதும்’ என்றான். வச்சிக்கிட்டா வஞ்சனை செய்றேன் என்று நான். ஐந்தாவது பால் என்று நினைக்கிறேன். பந்தை குறி பார்த்து முட்டி போட்டு ஒரே சாத்து. சிக்சர். டீம் ஜெயித்துவிட்டது. எதிர் அணியில் இருந்து இரண்டு மூன்று பேர் ‘அது எப்படி நீ லெஃப்ட் ஹேண்டில் சிக்சர் அடிக்கலாம்?’ என்று அவர்களுக்கு இறுதி வரை பொறுக்கவே இல்லை.
இரண்டாவது முறை ஹவுசிங் போர்ட் காலனிக்குள்ளாகவே விளையாடிய ஞாபகம். மரத்துக்காக இருக்கும் சிமிண்ட் தொட்டியில் கரிக் கோடு கிழித்து. இப்பொழுது வலது கை பேட்டிங். எப்படி ஒரு கண்சிஸ்டன்சி பாருங்கள். எறிபந்து தான். கண்ணை மூடி சுழற்று சுழற்று என்று சுழற்றியதில் எக்குதப்பாக இரண்டாவது மாடி வீட்டுக்குள் கிச்சன் வழியாகப் போய் விழுந்தது. அவ்வளவுதான். பந்தை தரமாட்டேன் என்று கூறி அன்று ஆட்டம் கிளோஸ். இரண்டாவது விக்கி பந்து வாங்குவதற்கெல்லாம் காசு கிடையாது. ‘நீ தாம்ல வாங்கித் தரணும்’ என்ற பஞ்சயாத்துக்காகவே அதற்குபின் விளையாடியதில்லை.
ஹவுசின் போர்ட் வருவதற்கு முன், EB காலனி ரோட்டில் வைத்தியநாதன் வீட்டில் வாடகைக்கு இருந்தபோது தென்னை மட்டை மற்றும் தென்னங்குறுத்து வைத்தெல்லாம் விளையாடிய ஞாபகம் வருகிறது. விசாலம் மாமி வீட்டில் வாடகைக்கு இருந்த கார்த்தி தான் பார்ட்னர். சக்தி சக்தி சக்திமான் ஒளிபரப்பான காலம். ஞாயிறு தோறும் விசாலம் மாமி கூப்பிட்டு ஒரு மணி நேரம் ஸ்லோகம் பாட வைப்பார். ‘சுக்லாம் பரதரம் விஷ்ணும், ஓம்காரம் பிந்து சம்யுக்தம், உபாஸ்மகே’ என்று முக்கால் மணி நேரம் ஸ்லோகம் கிளாஸ். வாசித்து முடித்தால் கற்கண்டு, அவல், பொறி என்று ஏதாவது ஒரு பிரசாதம். மாமா ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து ஹிந்துவை விடாது வாசித்து கொண்டிருப்பார். கார்த்தி பன்னிரெண்டாவது முடித்து திருச்சி பாரதிதாசன் கல்லூரியில் பொறியியல் சேர்ந்தான். அங்கு சேரக் காரணம் என்னவென்று அவர்கள் அம்மாவிடம் கேட்ட போது பாரதிதாசன் என்று பெயர் வைதிருக்கிறார்கள். நன்றாகத்தான் இருக்கும் என்றார். அந்த அளவிற்கு தான் அப்போது எக்ஸ்போசர் (இணையம் பரவலாகா நேரத்தில்).
வைத்தியநாதன் சாரின் பஜாஜ் ஸ்கூட்டர் வீட்டிற்கு வெளியில் நிற்கும். பெட்ரோல் மூடியைத்திறந்து அதை வாசனை பிடிப்பது ஒரு அலாதி அனுபவம். டுர் டுர் என்று ஸ்டாண்ட் போட்ட வண்டியை ஓட்டிக்கொண்டு. ஸ்கூல் வாத்தியார் பிச்சை ஜெபராஜின் LML வெஸ்பா. பில்லியனில் உக்காறுபவர்கள் முதுகை சாய்ப்பதற்கு ஏதுவாக ஒரு பேக் ரெஸ்ட் இருக்கும். அந்த பேக் ரெஸ்டை அட்ஜஸ்ட் செய்து முன்னாடி கொண்டு வந்து ஓட்டுபவருக்கு மட்டும் வைத்துகொள்ள முடியும். இப்பொழுது அது போன்ற வண்டிகள் இல்லை. பில்லியன் சீட் இல்லாத புல்லட்டை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். தனிமையிலே இனிமை போல.
சொல்லவந்தது, இந்த கிரிக்கெட் விளையாடும்போது மாது என்றொரு அண்ணன் இருப்பார். மாதவன் முழுப் பெயர். அன்புநகர் ஏ பிளாக்கிலிருந்து வருவார். பன்னிரெண்டாவது வகுப்பு படித்து கொண்டிருந்தார் என்று ஞாபகம். வெள்ளை வெளேரென்று. ரிச்சி ரிச் அண்ணன். காட்டன் டிரவுசர். பீச் ஷர்ட் என்று அப்போதே ட்ரெண்ட். டிரவுசர் பாக்கெட்டில் தீனி ஐட்டங்கள் இருக்கும். விளையாடும் பொழுது அவ்வப்போது பாக்கெட்டில் கையை விட்டு ஓரொரு அயிட்டமாக எடுத்துக் கொடுப்பார். முறுக்கு, சேவ், தட்டை, பக்கோடா. பந்தைத் தொடுகிறோம் மண்ணில் கை வைக்கிறோமே என்றெல்லாம் சுத்தம் பார்த்ததில்லை. வாங்கி ‘லபக்’ தான்.
அதில் ஒரு கார வகை. டைமண்ட் ஷெப்பில் இருக்கும். கொஞ்சம் ஊதினாற் போல. என்ன பெயர் என்று தெரியவில்லை. திருச்சியில் பல கடைகள் எறிபார்த்து அவர்களிடம் இது போல விளக்கி, அங்கு கண்ணாடி பேட்டியில் இருக்கும் தீனிக்களை எல்லாம் வெறிக்க வெறிக்க பார்த்து, ம்ஹூம். கிடைக்கவில்லை. நிரம்ப நாள் கழித்து அதன் பெயரை கண்டுபிடித்தேன். துக்கடா. இங்கு கிடைப்பதில்லை. நெல்லையில் இருக்கும் நண்பனிடம் பார்சல் கேட்டு மெசேஜ் அனுபியிருந்தேன். இரண்டு வருடமாக பேக் செய்து கொண்டிருக்கிறான். டன் கணக்கில் அனுப்புகிறான் என்று நம்புகிறேன்.
நேற்று ரோட்டில் செல்லும்போது ஒரு சிறுவன் பாக்கெட்டில் கைவிட்டு எதையோ எடுத்து சாப்பிட்டதை பார்த்ததன் விளைவு, இந்த டிரவுசர் பாக்கெட் துக்கடா, பஜாஜ் பெட்ரோல் வாசனை, தென்னங்குறுத்து கிரிக்கெட், ஸ்லோகம் சொல்லும் விசாலம் மாமி, அன்புநகர், ஹைகிரவுண்டு என்று நினைவுகள் அலைபுரண்டுவிட்டது.
நம்மிடம் மிச்சம் இருப்பது இந்த நினைவுகள் மட்டும் தானே !!!

கருத்துகள் இல்லை: