புதன், ஜூன் 18, 2025

ஆலமரம்

படத்தில் இருக்கும் ஆலமரம் என் அலுவலகத்தில் இருக்கும் பல ஆலமரங்களில் ஒன்று. இது போல ஒரு சில இடங்களில் தான் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போதெல்லாம் ஆச்சர்யம், பிரமிப்பு, மோன நிலை, சந்தோசம் எனப் பல நேர்மறை உணர்வுகளை

அள்ளித் தெளித்துவிடும்.
ஓங்கு தாங்காக வளர்ந்திருக்கும். இந்த வட்டாரத்திலேயே நான் தான் என்பது போல் அதன் வளர்ச்சி இருக்கும். கேட்டால் அதன் வயதை குறைந்தபட்சம் இருநூறு வருஷம் என்று கூறுவார்கள். விழுதுகள் அவ்வளவு பெரிய உயரத்திலிருந்து விழுந்து அந்த விழுதுகளிலிருந்து பல கிளைகள் கிளைத்தோங்கி இங்கு எத்தனை மரங்கள் இருக்கின்றன என்ற ஒரு புதிரை கிளப்பிவிடும்.





இந்த ஆலமரங்களை பார்க்கும்பொழுதெல்லாம் பால்ய வயதில் சென்ற பள்ளி சுற்றுலா தான் நினைவுக்கு வருகிறது. நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு. மஹிந்திரா மாட்டடோர் ஸ்டேண்டர்டு வேனில் பயணம். இரண்டு வேன்கள் இருக்கலாம். எட்டயபுரத்திலிருந்து கோவில்பட்டிக்கு அருகில் கூட்டிச்சென்றார்கள். சென்ற இடத்தின் பெயர் நினைவில்லை. இரைச்சல் மிகுந்த சாலையிலிருந்து அமைதியாய் செல்லும் ஒரு கிராமத்து வழி என்பது மட்டும் நினைவில் இருக்கிறது.
சிறு மைதானம் போன்ற ஒரு இடத்தில் நிப்பாட்டினார்கள். பத்து படிகள் ஏறிச்செல்லும் அளவில் ஒரு கோவில். அதற்கு அருகில் அப்படி ஒரு பெரிய ஆலமரம். அதனைச்சுற்றி அத்தனை விழுதுகள் மேலிருந்து தொங்கிக்கொண்டிருந்தன. அத்தனை பிள்ளைகளும் வேனிலிருந்து இறங்கி வரிசையாக சென்று அமர்ந்தார்கள். அமர்ந்தோம். ஐந்து அல்லது பத்து நிமிடம் தான் போயிருக்கும். காற்று வீசும் பொழுது கீழே விழுந்து கிடந்த ஆல மரத்தின் இலைகளின் சருகு சத்தம், தொங்கிக்கொண்டிருந்த விழுதுகளின் ஆட்டம், குளிர்ந்த காற்று, கட்டி எடுத்து வந்திருந்த லெமன் சாதம் என அது ஒரு ரம்யமான குதூகலத்தை தந்து கொண்டு இருந்தது. மெல்ல எந்திரித்து ஒருவன் ஒரு கிளையைத் தொட்டான். அவ்வளவுதான். கல்லெறிந்து பறந்த காக்கை கூட்டம் போல் அத்தனை பேரும் திசைக்கொன்றாக ஓடி அந்த விழுதுகளில் ஊஞ்சல் ஆட ஆரம்பித்து விட்டோம். அதட்டி பார்த்து சிறிது நேரத்தில் அத்தனை மிஸ்களும் ஒரு மரத்தின் நிழலில் உட்கார்ந்து கொண்டார்கள். கொஞ்ச நேரம் ஆட்டம். பிறகு கூட்டமாக சேர்ந்து உணவு உண்டு பிறகு ஒரு ஆட்டம். ஓடி பிடித்து, ஊஞ்சல் ஆடி, பந்து எரிந்து, கண்ணாமூச்சி, குதிரை, நாடு பிரித்து என தெரிந்த எல்லா ஆட்டமும் ஆடினோம். களைப்படைந்து கிளம்பியாகிவிட்டது. ஆட்டம் மூன்று மணி நேரம் இருக்கலாம். போட்ட ஆட்டத்திற்கு ஏறி உட்கார்ந்து தான் தாமதம். எல்லோரும் உறங்கிக் கொண்டே தான் வீடு வந்து சேர்ந்தோம்.
ஆலம் விழுது ஆட...
அதில் ஆசை ஊஞ்சலாட...
இப்பொழுதும் கூட நான் பார்க்கும் ஆலமரங்கள் அதே ஞாபகத்தை கொடுத்து விடுகின்றன. மெட்டடார் வேன், சுப்பு லட்சுமி மிஸ் என் கிளறிவிட்டு தான் செல்கின்றன. எந்த ஆலமரத்தைக் கடந்து சென்றாலும் ஒரு நொடியாவது நின்று அண்ணாந்து பார்க்காமல் செல்வதில்லை. இன்னும் சில ஆலமரங்கள் இருக்கின்றன. அதனைச்சுற்றி ஒரு திண்டு கட்டி வைத்திருப்பார்கள். ரவுண்டாக. கிராமங்களில் எல்லாம் பெரிதாக வட்டம் இருக்கும். பஞ்சாயத்து திண்ணை. தி பெஸ்ட் பிளேஸ் டு ஸ்லீப். அன்னை மடி போல். ஒரு டீ வாங்கி வந்து உட்கார்ந்து கொண்டால் அது ஒரு சுகம். அளவளாவ உற்ற நண்பன் அமைந்து விட்டால் அது ஈடு இணையற்ற தனி சுகம்.
ஒரு நாளில் ஐந்து நிமிடமாவது இதுபோல் ஆலின் மடியில் உக்கார்ந்து சென்றோமென்றால், அது தான் சொர்க்கம். வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில்??
வாழ்ந்துவிட்டு தான் போவோமே.

கருத்துகள் இல்லை: