மூத்த நண்பர் ஒருவர் கூறிய இரண்டு விஷயங்கள் கீழே.
அலுவலகத்தில் ஒத்திசைந்து செய்ய செயல்படும் ஒரு சிறு அமைப்பின் செயலாளராக இருக்கிறேன். பொது வாழ்வு என்றாலே பிரச்சினைகள் அணுகத்தானே செய்யும். ஒரு முறை பெரும் பஞ்சாயத்தாகிப் போனது. இரண்டு மூன்று பேர் காரணமாக லேசாகப் புகைந்து கொண்டிருந்தது மெல்லமெல்ல காட்டுத்தீ போல ஒரு மாத அவகாசத்துக்குள் அந்தக் குழுவே செயல்பட முடியாதபடிக்கு ஒரு நிலைமை உண்டாகியிருந்தது.
பொதுவாகவே வாதத்தில் கூட பங்கெடுக்க யோசிக்கும் நிலைமையை மாற்றி, செயலாளர் என்ற முறையில் இறங்கி முறைப்படுத்த பணித்திருந்தது. எந்த முடிவு எடுத்து எங்கு போனாலும் முட்டிக்கொண்டு இருந்தது. முடிவுக்கு வரமுடியவில்லை. ஒன்றரை மாதத்தில் நொந்து நூடுல்ஸ் ஆகியதுதான் மிச்சம். துவண்டிருந்த என்னை மீண்டும் எழ வைத்தது ஒரு முறை கூறிய அவர் வார்த்தைகள் தான். 'பிரச்சினைகளை ஆழமாக உள் வாங்கியிருக்கிறாய். ஆனால் சீர்படுத்தும் முயற்சியில் don't hurt yourself, உன்னை நீ காயப்படுத்திக்கொள்ளாதே' என்றார். இத்தனை ஆண்டுகாலம் இந்த வார்த்தைகளை கேட்டதே இல்லை. don't hurt others என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன். don't hurt yourself என்பது எனக்குப் புதியது. மிகப்புதியது. 'தாமரை இலை தண்ணீர்போல், don't participate but witness போன்ற சித்தாந்தங்களுக்கு அருகில் இது நின்றாலும் அன்றிலிருந்து அதற்குப்பிறகு நான் பிரச்சினையாக கருதிய பல நிகழ்வுகளுக்கும் ஒரு புது பரிணாமத்தை கொடுத்திருக்கிறது இந்த don't hurt yourself.
மற்றொன்று தினசரி வாழ்வில் நம்மை மட்டுமே மையப்படுத்தி நாமே எழுதிக்கொண்டு கடைபிடிக்கும் போலி சித்தாந்தங்கள். டெபினிஷன்ஸ். ரூல்ஸ்.
உதாரணமாக, இன்னது இன்னது போல் தான் செயல்படும் என்ற விதிக்கு கட்டுப்பட்ட ஒரே ஒரு பொருள் இயந்திரம் மட்டுமே. எந்த ஜீவனும் அதற்குள் வராது. நமது எதிர்பார்ப்பை கோட்பாட்டைத் தாண்டி செயல்படுவதால் தான் அது ஜீவன் என்றே அழைக்கப்படுகிறது. அந்த ஜீவன் உங்கள் சகோதரனாகவோ, நண்பனாகவோ, அலுவலக சக ஊழியனாகவோ, அண்டை வீட்டுக்காரராகவோ, பெற்றோராகவோ, துணையாகவோ அல்லது குழந்தையாகவோ என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். நமது விதிகள் காயப்படுத்துவது நம்மைச் சார்ந்தவரை மட்டும் அல்ல. நம்மையும் சேர்த்துதான். நினைத்தபடி நடக்கவில்லை என்று ஒருமுறை துக்கப்பட்டுக் கொண்ட தருணத்தில் அவர் கூறிய வார்த்தைகள் தான் இவை. 'நாம் ஏதோ இங்கு ஆண்டாண்டு காலமாக வாழப்போகிறோம் என்று நோக்கில் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் விதிகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறோம்' என்றார். உண்மைதானே.
காலத்துக்குமான சொற்கள் இவை. வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி என்பதை நித்தம் நித்தம் அவதானித்துக் கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக