செவ்வாய், செப்டம்பர் 24, 2024

பிரென்ட் பாட்டி

ஐந்தாவது படித்து கொண்டிருந்த போது அம்மை போட்டது.

வீட்டில் தனியாக பாய் போட்டு வேப்பிலை சூழ படுத்துக் கொண்டிருந்தேன். தொற்று என்பதால் வீட்டில் போக்குவரத்து இல்லை. மம்மி, இளநீர், சந்திரகாந்தா, தூக்கம். அவ்வளவே. சரியான பின்பும் ஓரிரு நாள் ஒய்வு. அப்போது வீட்டிற்கு அருகில் இருக்கும் பாட்டி ஒருவர் மதிய நேரம் [போல பார்க்க வந்திருந்தார். பாட்டி என்றால் மிக வயதான பாட்டி. பிரென்ட் (friend) பாட்டி என்று அழைப்போம். தனியாக ஒரு ஒட்டு வீட்டில் வசிப்பவர். 'எண்ணைலாம் சேத்துக்கக்கூடாதுன்னா கேக்க மாட்டேங்குறான். வடை வேணும்னு அழறான்'. பத்தியச் சாப்பாடு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு வேறு ஏதேனும் கிடைக்காதா என்று ஏங்கிக்கிடந்த நேரம்.
அன்று மாலையே ஒரு கிண்ணத்தில் ஐந்தாறு உளுந்து வடை போட்டு எடுத்து வந்திதிருந்தார். 'கடைல சுத்தமா இருக்குமான்னு தெரியாது. அம்மை உம்மேல வந்திருக்கால்ல. அதான் நானே வீட்டுல மாவரைச்சு எடுத்துட்டு வந்திருக்கேன்'. வடையை விழுங்கினேனே ஒழிய அந்த வயதிற்கு எனக்கு அப்போது தெரியவில்லை எந்த ஒரு கடினமான சூழ்நிலையில் அதை செய்திருப்பார் என்று?.
என் ஞாபகச்சுவடுகளில் அறிந்தவரை அவருக்கு ஒரு தங்கையோ சகோதரியோ இருந்தார். அவரும் வயதானவர். ஒரு முறை உடல் நலிவுற்று அங்கிருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். மருத்துவமனை வழியாக நாங்கள் வரும்பொழுது அந்த பிரென்ட் பாட்டியை பார்த்தோம். அவர் ஒரு தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். நான்கு ஐந்து தண்ணீர் குடங்கள் வைத்து தள்ளக்கூடிய வண்டி. 'என்ன?' என்று விசாரித்த பொழுது, மருத்துவமனையில் இருந்த தங்கை இறந்துவிட்டார் எனவும் அவரது உடலை வண்டியில் அமர்த்தி எடுத்துவரும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என்பதால் இந்த தள்ளு வண்டியில் தள்ளி வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார். அப்பொழுதுதான் அந்த வண்டியில் குனிந்து பார்க்கிறோம். கூனிக் குறுகி ஒரு உடல் போர்வையால் மறைக்கப்பட்டிருந்தது. இறந்த அவரது சகோதரியின் உடல். அந்த உடலைத் தள்ளிக்கொண்டு அவர் நடந்த குறை தூரம் அவர் தன் எழுபது வயது வாழ்க்கையை அசை போட்டிருக்கக்கூடும். வீட்டிற்கு எடுத்துப் போன பின் அந்த உடலை எவ்வாறு அடக்கம் செய்தார் என்பது தெரியவில்லை.
அப்படி ஒரு ஏழ்மை நிலையிலும் அவ்வளவு சிரத்தையுடன் சிறு பிள்ளை கேட்கிறானே என்று பாசமாக அன்று வந்து வடை கொடுத்தது அவர்களுக்கு எவ்வளவு பெரிய விஷயம் என்பது எனக்கு அப்போது உரைக்கவில்லை அல்லது புரியவில்லை. இன்று நினைத்து பார்க்கையில், அன்றாட உணவிற்கே தட்டுப்பாடு இருக்கும் நிலையில் எவ்வாறு உளுந்து வாங்கி ஊர வைத்து எண்ணெய் தனியாக வாங்கி சுத்தபத்தமாக கொடுக்க வேண்டும் என்று மெனெக்கெட்டு செய்திருப்பார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. சரியான பின் தெருவில் உள்ள குழந்தைகளுடன் விளையாடச் சென்றேனே ஒழிய அந்த பாட்டியிடம் சென்று 'தேங்க்ஸ்' என்று ஒரு முறை கூடச் சொன்னதாக நினைவில்லை. வயது அவ்வளவுதான் என்று எளிதாகக் கடந்து விட முடியவில்லை. ஒரு சிறு குற்ற உணர்வு இன்றளவும் தேங்கி நிற்கிறது.
நினைத்துப் பாருங்கள். யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அலுவலக நண்பர், கல்லூரி, பள்ளித்தோழர்கள், அண்டை அயலார். நம்மை உதாசீனப்படுத்தும் அல்லது பொருட்டென்றே மதியாத அவர்களை துரத்தி துரத்தி செல்பேசியில் அழைத்துக் கொண்டிருப்போம். நேரில் சென்று பார்க்க முயல்வோம். பேச யத்தனிப்போம். ஆனால் நாம் எதிர்பார்த்த அந்த உணர்வு அவர்களிடம் பிரதிபலிக்காது. ஆனால் நம்மிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்யும் மக்களை நாம் சட்டை கூட செய்திருக்க மாட்டோம். இதைப் பொருளாதாரப் பின்புலத்திலும் பொருத்திப் பார்க்கலாம். நம்மை விட அந்தஸ்து அதிகம் உள்ள உறவினரிடம் நாம் நம்மை நிலை நிறுத்திக்கொள்ளப் போராடும் சிரத்தையில் கிஞ்சித்தாவது நம்மை விடப் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் உறவினரிடமோ, வெள்ளேந்தியாய் பழகுபவரிடமோ காட்ட முயன்றிருப்போமா? இராது. ஏனென்றால் நம்மைப் பொறுத்தவரை அவர்கள் ஆதாயத்துக்காக நம்மிடம் வருகிறார்கள் என்று எண்ணியிருப்போம். இதே எண்ணம் தான் நம்மை பற்றியும் நமது மதிப்புமிக்க உறவினர் அல்லது நண்பரும் வைத்திருப்பார் என்பதை உணர்கிறோமோ?
வலியவர்களை ஈர்க்கும் போராட்டத்தில் அன்பானவர்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
❤️❤️❤️

கருத்துகள் இல்லை: