செவ்வாய், செப்டம்பர் 24, 2024

கேயாஸ் - காதல் - திருமணம் - கள்ளக்காதல் - முறிவு

 

ஓரொரு சின்ன விஷயமும் ஒரு தாக்கத்தை கொடுக்கும். நாளைக்கு என்ன நடக்கப்போது அப்படிங்கறது விதிப்படி இல்லை. நம்ம நடந்துக்கிட்டது விதம் நம்ம சுத்தி உள்ளவங்க நடந்துக்கிட்ட விதம் ஏன் உங்க பக்கத்துல இருக்குற காக்கா குருவிக்குக் கூட இதில பங்கு இருக்கு. இதை ஒவ்வொரு புள்ளியா இணைச்சு பாத்தா ஏன் இப்படி நடந்தது, எதுக்கு இப்படி நடக்குது, என்ன நடக்கப்போது அப்டிங்கறத யூகிச்சிடலாம். ஒவ்வொரு நொடியும் முடியாட்டியும் முக்கியமான பல தருணங்கள் தெரிஞ்சிடும். ஆனா ரொம்ப கஷ்டமான விஷயம். 1008 காம்பினேஷன் இருக்கும். ரோடை க்ராஸ் பண்ணும்போது அடிபட்டு செத்துப்போய்ட்டான் ஒருத்தன். அவன் மேல அந்த வண்டி வந்து மோதுற அந்த நொடிக்கு பல காரணங்கள் இருக்கலாம். வீட்லேந்து கார் கிளம்புன நேரம், மெதுவா ரோடை க்ராஸ் பண்ற பாட்டி அன்னைக்கு இந்த காருக்கு வழிவிட்டு க்ராஸ் பண்ணாம விட்டது, இவரு ரோடை க்ராஸ் பண்ணி வராரு அப்டிங்கறதுக்காக அந்த பக்கம் அவருக்கு வெயிட் பண்ற மொபஸ்ஸில் பஸ், நடக்குறவர் மொபைல் வந்த குறுஞ்செய்தி அப்டியே அடுக்கிட்டு பின்னாடியே போனா ஆதாம் ஏவாள் வரைக்கும் கோடு கிழிச்சிடலாம். வேணாம் ரொம்ப கஷ்டம். இதுக்கெல்லாம் மண்டையை உடைச்சிக்காம விதின்னு சொல்லிட்டு சிம்பிளா போய்டலாம்.



பெத்தவங்களோட ஒரு மறுப்பு, முடிவு காரணமா அந்த பொண்ணு விதவையா நின்னுச்சு. சம்பந்தமே இல்லாத ஒரு வேறொரு பையன் இந்த பொண்ணு காரணமா டிவோர்ஸ் ஆகிட்டான். குடும்பம் சிதறிடுச்சு. பத்து வருஷ கதை இதுதான். ஒரு பொண்ணும் பைய்யனும் லவ் பண்ணாங்க. நல்ல படிப்பு, வேலை எல்லாம் இருந்தும் ஜாதி காரணமா ரெண்டு பேரு வீட்டுலேயும் ஒத்துக்கலை. வேற வேற இடங்கள்ல திருமணம் நடந்துச்சு. அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆன ஒரே வருஷத்துல அவரோட கணவர் இறந்துட்டார். கைக்குழந்தையோட இந்த பொண்ணு கைம்பெண்ணா ஆகிடுச்சு. கல்யாணம் ஆனா அந்த பையன் என்னடானா நான் பார்த்தவரைக்கும் 3.0 நினைச்சு கவலைப்பட்ட மாதிரி பெருத்த சோகத்துலேயே இருந்தான். ரெண்டு வருஷம் ஆகியும் செழிப்பு இல்ல. அந்த பையனை அங்கேயே விட்டுட்டு இன்னோரு பக்கம் போவோம். இப்போ இந்த கைம்பெண்ணா ஆன பொண்ணு வேறொரு இடத்துக்கு மாற்றலாகி வருது. அங்க இன்னொரு பையன் கூட பழக்கம் ஏற்படுது. இது எல்லையைத் தாண்டி போகவும் குடும்பத்துக்குள்ள பூசலாகி பிரிஞ்சிட்டாங்க. இப்போ பிரிஞ்சவங்க குழந்தையைத் தூக்கிட்டு வேற ஊர் போய்ட்டாங்க. குழந்தை காடாறு மாசம் நாடாறு மாசம் லெவெல்ல இங்கிட்டும் அங்கிட்டும் இருக்குது. சபாபதி படத்துல காளி என் ரத்னம் சொன்ன மாதிரி மூணு பேமிலியும் பணால். எல்லாம் அந்த ஒரு மறுப்புல ஆரம்பிச்ச நொடி. அதுக்கப்புறம் எவ்வளவோ தருணங்கள்ல இவங்க எல்லாம் தங்களோட வாழ்க்கையை மாத்திக்க வாய்ப்பு கிடைச்சிருக்கும். ம்ஹூம். நடக்கலையே. ஆறாவது அறிவு தூங்கிப்போயி இந்திரியங்கள் மட்டும் வேலை செய்யறதுனால வந்த வினை.
ஒவ்வொரு நிமிஷமும் நொடியும் தருணமும் ரொம்ப முக்கியம். இன்னைக்கு போட்டது தான் நாளைக்கு விளையும். ஓரளவுக்கு விவரம் தெரிஞ்சப்புறம் எச்சரிக்கையா விளையாடறது நமக்கும் நம்மளை சுத்தி இருக்கிறவங்களுக்கும் நல்லது. ஏன்னா பட்டாம்பூச்சியோட சிறகுகள் பறக்கும்போது ஏற்படற அதிர்வுகள் எங்கேயோ மேகத்தை கூட்டி மழை பொழியறதுக்கு காரணமா இருக்குனு சொல்வாங்க.
அதான் கேயாஸ்.

கருத்துகள் இல்லை: