வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருபது வயதிலிருந்து ஒய்வு பெறும் அறுபது வயது வரை உள்ள அனைத்து வயது மனிதர்களிடையே பழகும் வாய்ப்பு அனிச்சையாக வாய்த்தது. மாங்கு மாங்கென்று இழுத்துப்போட்டு வேலை செய்யும் கணவான்களுக்கு மத்தியில் சட்டை கசங்காமல் சீட்டை தேய்த்து அறுபது வயதில் சந்தனமாலை அணியப்பெற்று ஒய்வு பெற்ற ஆட்களும் உண்டு. எண்ணற்ற மனிதர்கள். எண்ணற்ற கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள் தோய்ந்தோடிய அலுவலகம் இது.
குறிப்பாக ஒய்வு பெரும் முதுமக்களின் பார்வையில் இதனைச் சொல்லத் தோன்றுகிறது. எட்டு மணி நேர வேலை முடித்து ஓவர் டைமில் இன்னொரு நான்கு மணி நேர வேலை, விடுமுறை டூட்டி என்று உழைத்து உழைத்து ஓடாய் தேர்ந்த மனிதர்கள் ஏராளம். அலுவலகம் தான் இவர்களை அலைக்கழித்தது என்றால் வீட்டில் கணவன், தந்தை, தாத்தா என்ற கதாபாத்திரம் ஏற்று அவர்களுக்கு தனியாக உழைத்து உழன்றது தனிக்கதை. இளந்தாரி இளைஞனாக உழைத்து அனுபவித்தது தான் தங்களுக்காக செலவிட்ட அவர்களின் அதிகபட்ச நேரமாகும். அலுவலகம் சேர்ந்த மறுநாள் முதல் அந்த கொஞ்ச நஞ்ச நேரமும் அவர்களிடமிருந்து உருவப்பட்டு ஒய்வு பெறும் அறுபது வயதில் இறுதியாக கௌபீனத்தை உருவுவது வரை இடைநில்லாது ஒன் டு ஒன் பேருந்து பைபாஸில் செல்வது போல் வாழ்க்கை கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து முடிந்து விடுகிறது.
சட்டை கசங்காமல் வேலை பார்த்தவர்களைக் கூட விட்டுவிடலாம். ஓய்வுக்குப் பின் அவர்களது வாழ்க்கையில் பெருத்த மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஆனால் நேரம் காலம் தெரியாமல் உழைத்து திரிந்து ஓடாய் தேய்ந்தவர்கள் கதை தான் பரிதாபம். நாற்பத்தெட்டு வேகன்களை இழுத்த டபுள் இன்ஜினை டக்கென்று நிறுத்தி வைத்தாற் போல் இவர்களின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் படக்கென்று நின்று விடுகிறது. குடும்பத் தலைவன் பட்டம் மெல்ல மெல்ல கரைந்து நடு நாயகமாக வீற்றிருந்த நாற்காலியிலிருந்து மெதுவாக எழ வைக்கப்படுகிறார்கள். சென்டர் ஆப் அட்ராக்ஷன் குறைகிறது. உடல் உழைப்பு இல்லாது நண்பர்கள் சூழாது பதினோரு மணி காபி மூன்று மணி டீ நண்பர்கள் அரட்டை என எதுவும் இல்லாமல் ஒரு புது வழக்கத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்த திடுதிடுப்பை எதிர் கொள்ள முடியாத பலர் மனச்சோர்வு ஏற்பட்டு நோயாளியாக மாறி படுக்கையில் விழுந்து விடுகிறார்கள். மற்றும் சிலருக்கு இந்த இயலாமை மற்றும் அந்நியத்தன்மை கோபத்தையும் எரிச்சலையும் கணக்கில்லாமல் கொடுத்துவிடுகிறது.
ஓயாமல் ஓடிக்கொண்டே இருப்பவர் என்றால் ஓய்வுக்குப் பின் ஏதேனும் ஒரு காரியத்தில் ஈடுபடவைப்பது நல்லது. அதுவும் முக்கியமான பொறுப்பு என்றால் பெட்டர். பல பெரியவர்கள் கல்லாப் பெட்டியில் அமர வைப்பது இதற்காகத்தான். கோவில் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுவது, அன்பு இல்லங்களில் ஒரு பொறுப்பை கையில் எடுத்து தன்னார்வல உதவி செய்வது, அவ்வப்போது பயணம், வெவ்வேறு மனிதர்களுடன் அளவளாவல், வளர்ப்புப் பிராணிகள் என ஏதேனும் ஒன்றில் ஈடுபத்திக் கொள்ளலாம். இதுகாறும் அவரின் உழைப்பின் மூலதனத்தில் வாழ்ந்த குடும்ப உறுப்பினர்கள் இதனை பொறுப்பாக செய்து வைத்தல் நலம்.
தற்கால இளைஞர்கள் இதுபோன்றதொரு மாற்றத்தை முன் கூட்டியே யத்தனித்து ஓய்விற்குப் பின் மனதிற்கு பிடித்த ஏதேனும் ஒரு வேலையில் தன்னைத் தானே ஈடுபடுத்திக் கொள்ளுதல் நமது மனதிற்கும் உடலிற்கும் சமூகத்திற்கும் ஆரோக்கியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக