செவ்வாய், செப்டம்பர் 24, 2024

அரவிந்த் சாமியின் பேட்டி

 

கோபிநாத் நேர்காணல் எடுத்து சமீபத்தில் வெளிவந்த அரவிந்த் சாமியின் பேட்டி 'அடடா' போடா வைத்திருக்கிறது. ரசித்ததில் சில,
அரவிந்த் சாமி ஒரு சாதாரன மனிதனாக இப்பொழுது வாழ்கிறார். சாதாரண என்றால் எந்த உயிரையும் துன்புறுத்தாமல் தானுண்டு தன வேலையுண்டு என்ற வகையறா. அடிப்படை மனித சித்தாந்தமே அதுதானே. இந்த ஒன்று இருந்துவிட்டால் போதும். இனியெல்லாம் சுகமே. எடுத்துக்காட்டு இந்த சுந்தரபாண்டியபுரம் மாப்பிள்ளை.
ரசிகர் மன்றம் குறித்தான கேள்விக்கு அவருடைய பதில், இன்றைய பல தற்குறி ஹீரோக்களுக்கு செருப்படி. 'நீ கொடுக்கும் காசிற்கு எனக்கு தெரிந்த வரை திரையில் உன்னை மகிழ்விக்கிறேன். அதைத்தாண்டி உனக்கு கொடுப்பதற்கு என்னிடம் ஏதும் இல்லை. என்ன கொடுப்பதென்றும் எனக்கு தெரியாது. உன் வாழ்க்கையை நீ பார்' என்று கூறியருக்கிறார். வரேவேற்புகள்!!!
அவரது தந்தையான வி.டி. ஸ்வாமியின் 'ஒவ்வொருவரையும் மதிக்கக் கற்றுக்கொள்' என்ற அறிவுரை சிம்ப்ளி கிளாஸ். மனுஷனா இருங்க. மதிக்கக் கத்துக்கோங்க.
'தான் ஒன்றும் முற்றும் துறந்தவன் இல்லை. பருவ வயதில் கெட்ட விஷயங்களுக்கு வீட்டில் கொடுக்கும் பாக்கெட் மணி பத்தவில்லை. மாடலிங் செய்ய ஆரம்பித்தேன்'. உள்ளதை உள்ளபடி சொல்ல ஒரு guts வேண்டும்.
'என்று மற்றவர்களிடம் இருந்து validation எதிர்பார்கிறீர்களோ, அன்றே உங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறீர்கள்' என்கிறார்.
வெற்றி பெறுவதற்கு லக் தேவை. அந்த அதிர்ஷ்டம் என்பது சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பது. அதற்கு பில் கேட்ஸ் மூலம் ஒரு உதாரணமும் தருகிறார்.
Idle Mind is Devil’s Workshop என்பார்கள். அதை உணர்ந்து இங்கு கூறியிருக்கிறார். அம்மா என்றால் இவருக்கு உயிர். அம்மா இல்லாத வாழ்வு தனக்கு வேண்டாம் என்று நினைத்துக்கொள்ளும் அளவுக்கும் உயிர். விதி இவரது அம்மாவை இவரிடம் இருந்து பிரித்து விடுகிறது. அதே வருடத்தில் அப்பாவையும். 1993 வருடம். இவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மணிரத்னம் இவரை முழுவதும் எங்கேஜ் செய்திருக்கிறார். அந்த diversion அந்த நேரத்தில் இவருக்கு கிடைக்க வில்லையென்றால் இந்த ஆளுமை இன்று இருந்திருக்க வாய்ப்பு இல்லை. சாய்ந்து கொள்ள ஒரு தோள். மூழ்கிக்கொள்ள ஒரு வேலை.
அவர் கூறிய ‘Sands of Time’ என்கிற சித்தாந்தம். கோடானுகோடி நட்சத்திரங்கள், கோள்கள், பல பேரண்டங்கள் இருக்கும் இந்த வெளியில் நம்முடைய பிரச்சினை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல எனபதுதான் அந்த சித்தாந்தம்.
மழை பெய்யும் முன்னிரவில் சூடான தேநீர் குடித்துக்கொண்டே உற்ற நண்பனுடன் பேசியது போன்ற ஒரு நல்ல அனுபவம்.
கொடுத்துவைத்திருந்தால் பாருங்கள்.

Interview

கருத்துகள் இல்லை: