ஊருக்கு போகும்போது கறிய (non veg) எடுத்துட்டு போகக்கூடாதுனு சொல்லுவாங்க. நாம கேட்டாத்தான.
வேலைக்கு சேந்த புதுசு. திருநெல்வேலிலேந்து சென்னைக்கு 234ரூபா டிக்கட் கொடுத்து SETC Ultra Deluxe பஸ்ல மட்டும் தான் போய்ட்ருந்தேன். வசதி அவ்ளோதான். அப்போ அதிகமா பிரைவேட் பஸ்ஸும் கிடையாது. பர்வீன் இல்லனா PVT. 2008 இருக்கும். புதுசா SETC ல AC பஸ் விட்டாங்க. 550 ரூபா டிக்கட் இருக்கலாம். ACல போனதே இல்லை. ஊருக்கு வந்திருந்தேன். ஞாயிற்றுக்கிழமை வேற. ஆன்லைன்லாம் வரலை. மதியம் பஸ் ஸ்டாண்ட் போய் க்யூல நின்னு சாயிங்காலம் பஸ்ஸுக்கு புக் பண்ணிட்டு வந்துட்டேன். அன்னைக்கு வீட்டுல மட்டன் குழம்பு.
அம்மா, 'டேய் சாப்டுட்டு போ. எடுத்துட்டு போகாத. பேய் வரும்னு சொல்லுவாங்க'
'எது பேயா? இல்லை வந்துதான் பாக்கட்டுமே' அப்படிங்கற ரேஞ்சுல மூணு தோசை, மொழுக மொழுக நல்லெண்ணெய் ஊத்தி, மட்டன் குழம்பை தோசைல நடுவாக்குல வச்சி இலைல மடிச்சு பேக்கிங் ரெடி பண்ணியாச்சு.
'டங்கா டுங்கா தவிட்டுக்காரி' மோட்டல்ல மக்கள் சாப்பிட நிப்பாட்டுவாங்க. அங்க நம்ம பார்சலை ஓப்பன் பண்ணிட வேண்டித்தான்னு பிளான்.
முதல் முறை AC பஸ். மூடிக்க கம்பளி. ஆஹா. இதுதாண்டா டிராவல் அப்படிங்கற நினைப்புல கண்ணாடி ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துட்டே வரேன். ஒரு எட்டு மணி இருக்கும். சாத்தூர் தாண்டினப்புறம் மழை ஆரம்பிச்சது. மோட்டல்ல எப்ப நிப்பாட்டுவாங்க. எப்பா மட்டன் மேல காய் வைக்கலாம்னு நானு. ஆனா விதி விளையாண்டுச்சி.
ட்ரைவர் ரோட்டு ஓரமா இருந்த எலக்ட்ரிக் போஸ்ட்ல வண்டிய சொருகி நிப்பாட்ட 'குய்யோ முய்யோ'னு சத்தம். 'எல்லாம் வெளில வாங்கனு' கூப்புடுறாங்க. தட்டுத் தடுமாறி பேக்க எடுத்துட்டு கீழ இறங்கி ரோட்டோரம் நின்னு பாத்தா வண்டி மூணு டயர்ல நிக்குது. ஒரு டயர் தரைக்கு மேல தூக்கிக்கிட்டு நிக்குது. அடப்பாவிங்களா. AC ஹோட்டல்ல உக்காந்து சாப்பிடுற மாதிரி கற்பனை பண்ணிட்டு வந்தா இப்போ நாலுரோட்டுல நடுவுல உக்கார வச்சிருந்தாங்க. மழை பெய்யுது. பசிச்சிது. ஆனா பஸ்ஸு குடை சாஞ்ச நேரத்துல சாப்பாடு பொட்டலம் எங்கேயோ சீட்டுக்கு அடில போயிடுச்சு. ஆகா மொத்தம் மட்டன் பணால். சுத்திலும் கும்மிருட்டு. யாருக்கும் ஒன்னும் ஆகல. அப்டியே ஒரு ரெண்டு மணி நேரம் மழைல வெய்ட் பண்ணி, அடுத்த வந்த 3x2 சீட்டர் உள்ள பஸ்ல கடைசி சீட்ல ஏத்தி விட்டாங்க. கவுண்டமணி சொல்ற மாதிரி 'நான் எங்க எப்படி வர வேண்டியவன்?' எமோஷன் தான். காலைல ஆறு மணிக்கு வர வேண்டிது பத்து பதினோரு மணி ஆயிடுச்சு.
மெட்ராஸ் வரவரைக்கு கடைசி சீட்ல ஜம்பிங் ஜபாங் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக