செவ்வாய், செப்டம்பர் 24, 2024

விகடன்

 சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த காலம் அது.

சைதாப்பேட்டையில் இருந்து அத்திப்பட்டு வரை செல்ல வேண்டும். அத்திப்பட்டு என்பது திருவொற்றியூர் தாண்டி எண்ணூருக்கு அடுத்து இருக்கும் ஒரு கிராமம். போக்குவரத்துக்கு சப் அர்பன் ரயில் தான். கும்மிடிப்பூண்டி வரை செல்லும் வண்டியில் செல்வோம். சாலை மார்க்கமாக சென்றால் குறைந்த பட்சம் இரண்டரை மணிநேரம். ரயில் மூலமாக என்றால் முக்கால் மணி நேரம். அலுப்பு தெரியாது. பிரச்சினை அதுவல்ல. காலை 7.20க்கு சைதாப்பேட்டையில் ரயில் ஏறினால் 9.15க்குத்தான் அலுவலகம் செல்ல முடியும். ஆக காலை இரண்டு மணி நேரம். மாலை. இரண்டு மணி நேரம். ஆரம்பத்தில் பராக்கு பார்த்தபடி சென்றது நாட்கள் செல்ல செல்ல கடுக்க ஆரம்பித்துவிட்டது. வீட்டில் இருக்கும் நேரம் என்பது அரிதிலும் அரிதாகி விட்டது. ஆறு நாட்களும் காலை 7 மணி முதல் இரவு எட்டு மணி வரை என்பது வாடிக்கையாகி செரிக்க முடியாத எரிச்சல் மூண்டது.



கல்லூரி படித்து கொண்டிருந்த காலத்தில் பெருமாள்புரம் ஷிஃஷா வாடகை நூல் நிலையத்தை நடத்தி வந்த அம்மா கூறியது ஞாபகம் வந்தது. 'எல்லோருக்கும் பிடித்த வேலை கிடைத்து விடுவதில்லை. கிடைத்த வேலையை பிடித்து செய்தால் அதுவே நிம்மதி' என்று கூறினார். பசுமரத்தாணி போல் பதிந்த அந்த சொற்கள் சுடும் வெயிலில் ஞாபகம் வந்து ஆறுதல் கொடுத்தன. யோசித்தேன். தலைமை செயலகத்தில் அதே 'வாடகை நூல் நிலையம்' என்ற பல்ப் எரிந்தது. வேலைக்குச் சேர்ந்து ஒன்றரை வருடமாக புத்தகம் படிக்கும் பழக்கம் நின்று போயிருந்தது. அதுவே பல்பிட்டேஷனை அதிகரித்திருந்தது. மீண்டும் படிக்க ஆரம்பித்தால் என்ன? மூன்றாம் வகுப்பு முதல் கல்லூரி இறுதியாண்டு வரை மாய்ந்து மாய்ந்து படித்தது கண்ணில் தோன்றி மறைந்தது. அதுவும் கல்லூரி பருவத்தேர்வுக்கு படித்த காலங்கள் எல்லாம் வேறு ரகம். பருவத்தேர்வுக்கு படிக்கத் தயாராகும் பொழுது சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்பை (உயிர்மை பதிப்பகம்) எடுத்து பக்கத்திலேயே வைத்துக்கொள்வேன். செமஸ்டர் தேர்வுக்கு ஆறு ஏழு சேப்டர்கள் இருக்கும். ஒவ்வொரு சேப்டரை ரிவைஸ் செய்து முடிக்கும் போதும் ஒரு சிறுகதை. எனக்கு நானே ரிவார்ட் கொடுத்துக் கொள்வேன். ரிவார்ட் அந்த சிறுகதை தான். கடினமான பாடங்கள் அல்லது தேர்வுக்கு முன்னான பதட்டத்தை குறைத்து தலைவரின் எழுத்துக்கள் எனக்கு ஆசுவாசத்தை அளித்தன.
பிளாஷ்பேக் கொசுவர்த்தி சுருள் சுத்தி அடங்கியவுடன் உடனே கையில் இருந்த போனைத் திறந்து ஆண்டவரிடம் (கூகிள்) கேட்டதில் ஆரிய கவுடா சாலையில் முருகன் லெண்டிங் லைப்ரரி ஒன்று இருக்கிறது என்று சுட்டி காட்டியது. அன்று இரவே மாம்பலத்தில் இறங்கி நடந்தே அந்த லைப்ரரி சென்று அடைந்தேன். தலைவரின் (சுஜாதா) இரண்டு நூல்களை கையில் எடுத்த பக்கத்தை புரட்டி வாசம் பிடித்த பின்தான் இதயம் சீராகத் துடிக்கத் துடங்கியது.
அடுத்த நாள் ரயில் பயணம் மிகச் சுகமாய்த் தெரிந்தது. அதற்குள்ளேயே அத்திப்பட்டு வந்துவிட்டதா என்று தோன்றும் அளவுக்கு வாசிப்பு ஈர்த்தது. நம்ப மாட்டீர்கள். ஒரு முறை அத்திப்பட்டைத் தாண்டி அடுத்த ஸ்டேஷனான மீஞ்சூரில் வந்து இறங்கினேன். காரணம் 'இருபத்து நாலு ரூபாயத் தீவு'. துக்கங்கள் சந்தோஷமாக மாறின. எப்பொழுது ரயில் பயணம் தொடங்கும் என்கிற அளவுக்கு வாசிப்பு கட்டி போட்டுவிட்டது. கல்கி, உடையார், மருத்துவம், யோகம், மாந்திரீகம், கோட்டையும் புஷ்பநாத, bosch remedies, மகாபாரதம், சக்கரவர்த்தித் திருமகன், surely you are joking feynman என்று வாசிப்பு எங்கெங்கோ சென்றது. சுவாரஸ்யமாக இருந்தது. குருநாதர் போல ஒருவர் வழிகாட்டி கொண்டிருந்தார். சில நேரங்களில் முதல்வனோடு இருப்பது நம்மை நல்வழிப்படுத்தும். இருந்த நான்கரை வருடங்களும் அகவிருளகற்றி ஒளிபாய்ச்சினார். கெட்டியாய் பிடித்துக்கொண்டு பல புத்தகங்கள் வாசித்தேன். இருநூறு புத்தகங்கள் என்று ஞாபகம்.
சென்னையிலிருந்து மாற்றலாகி வந்த பிறகு பயணம் வெகுவாய் குறைந்தது. அது வாசிப்பை அறுத்து போட்டு விட்டது. வாசிப்புக்கென்ற சமயம் ஒதுக்க முடியவில்லை. வருடா வருடம் புது புது புத்தகங்கள் வாங்கி வாசிக்க முடியாமல் போய் அதுவே ஒரு குற்ற உணர்வை மேலெழ வைத்து உழன்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் வாசிப்போம் என்கிற நம்பிக்கை உடைந்து புது புத்தகங்கள் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். வாங்கிய புத்தகங்களை படிக்க முடியவில்லை. எண்ணி விடலாம் என்கிற அளவுக்கு கடந்த பதினோரு வருடங்களில் அதிகபட்சம் முப்பது புத்தகங்கள் இருக்கலாம். வாசிப்பின் அணுக்கம் இன்றி தாளாத் துயரில் இருந்த பொழுது தான் வேறொரு பரிணாமம் புரிந்தது. அட!!!
சென்னையில் ரயில் பயணம் செய்த போது பிசாசு போல் புத்தகத்தை புரட்டி கொண்டிருந்த காலங்களில் நண்பன் ஒருவனால் எனக்கு விகடனின் அறிமுகம் கிடைத்தது. அப்பொழுது வாங்கவில்லையென்றாலும் சென்னை விட்டு கிளம்பி வந்த பிறகு வாராவாரம் கடை கடையாய் ஏறி இறங்கி வாங்க ஆரம்பித்திருந்தேன். என்னையும் அறியாமல் அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது. இப்பொழுதெல்லாம் வருடாந்திர சந்தா. வீட்டிற்கே வந்து விடுகிறது. sacrosanct ஆக ஒவ்வொரு பக்கத்தையும் படித்து விடுவேன் அட்டைப் பட விளம்பரம் உட்பட. புத்தகம் படிக்க முடியாமல் வருத்தப்பட்டு கொண்டிருந்த எனக்கு புரிந்தது இதுதான். வாரத்திற்கு 100 பக்கங்கள். படங்கள் போன்றவற்றை கழித்து விட்டால் கூட 80 பக்கங்கள். மாதத்திற்கு 320 பக்கங்கள். வருடத்திற்கு 3840 பக்கங்கள். பதினோரு வருடத்தில் 42,240 பக்கங்கள். எத்தனை சிறு கதைகள். தொடர்கள். கட்டுரைகள். அரசியல் அனுபவங்கள். சினிமா துணுக்குகள். தேர்ந்தெடுத்த ஆளுமைகளின் பேட்டிகள். தாணுவின் 'உண்மையைச் சொல்வேன்', நெடுஞ்செழியனின் கல்வித்தொடர், மருத்துவர் சிவராமன் மற்றும் டாக்டர் அருண்குமாரின் மருத்துவத் தொடர்கள், லூசுப்பையன் காமிக்ஸ், வலைஞர்களின் வலைபாயுதே, சினிமா விமர்சனங்கள், விருதுகள், விழாக்கள், நீலகண்டனின் உரிமைகள் மறுக்கப்பட்ட மறந்துவிட்ட எளிய மக்களின் பாடுகளைப் பேசிய கட்டுரைகள், பல இளம் எழுத்தளார்களின் நேர்காணல்கள், கட்டுரைகள், வார்த்தைப் பிரயோகங்கள், இன்பாக்ஸ், அண்டனின் AI கலாட்டா, பாலகிருஷ்ணனின் தமிழ் நெடுஞ்சாலை, வெண்ணிலா அவர்களின் அணை இலக்கியம், வாசகனாய் விகடனில் மேடைப்பேச்சு என எவ்வளவு அனுபவங்கள்.
தனியாக புத்தகம் வாசித்திருந்தால் கூட எனக்கு இந்த பரந்துபட்ட வாசிப்பும் அறிமுகமும் அனுபவமும் ஒருங்கிணைந்து கிடைத்திருக்காது. எனது எழுத்தைப் பண்பட வைத்திருக்கிறது. யோசித்து பார்த்தால் விகடன் கிடைத்த மறுநாளே நான் எல்லாவற்றையும் வாசித்து விடுவதில்லை. ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக. சிறு குழந்தை ஐஸ் க்ரீமை அணு அணுவாக ரசித்து உண்ணுமே, அதுபோல ஒவ்வொரு பக்கமாக அந்த வாரம் முழுக்க ரசித்து ருசித்து புசிப்பேன். பின்னே ஆறு நாட்கள் கடத்த வேண்டுமே. இத்தனை வருடங்கள் படித்து வருகிறேன். ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொருத்தர் எழுதுகிறார்கள். ஆனால் எத்தனை ஆசிரியர்கள் மாறினாலும், எத்தனை எழுத்தாளர்கள் மாறினாலும் விகடனுக்கென்றே இருக்கும் அந்த மொழி நடை அப்படியே இருக்கிறது. தரம் என்றும் நிரந்தரம். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அலுவலகம் மற்றும் பல இடங்களில் ஏற்படும் ஏமாற்றம், கோவம், அழுகை, அவமானம், சோகம் போன்ற நெகட்டிவ் உணர்வுகளை தன்னுள் வாங்கி ஒவ்வொரு நாளையும் இந்த விகடனின் எழுத்துக்கள் புத்துணர்வாக்கி புதுப்பித்து என் கையில் கொடுத்து கொண்டிருக்கிறது.
புகைப்படத்தில் கடந்த பதினொரு வருட 550 விகடன் புத்தகங்களும் நானும்
மூச்சுடும் வரைக்கும் விகடனுடன் என்பதே பேருவுகை தான்.
❤️❤️❤️

கருத்துகள் இல்லை: