செவ்வாய், செப்டம்பர் 24, 2024

குழந்தைகள்

கொரோனா பாதித்திருந்த சமயம். இரண்டாவது அலை.

முதல் பாதிப்பு மனைவிக்கு. தாள முடியாத உடல் வலி. பத்து படிகள் கூட ஏற முடியாத அளவுக்குச் சோர்வு. பரிசோதனை செய்து பார்த்ததில் பாசிட்டிவ். பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்தியாகிவிட்டது.
முதல் அலை போல் இரண்டாம் அலை இல்லை. கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் அவலச் செய்தி. தொலைக்காட்சியை பார்க்கவே முடியவில்லை. தொற்றைத் தவிர்க்க தனிமைப்படுத்தி பூட்டிய கதவிற்கு முன் தண்ணீர் உணவு போன்றவை வைத்து விட்டு அங்கிருந்து சென்ற பின் எடுத்துக்கொள்ளுமாறு ஏற்பாடு. குழந்தைகள் இரண்டு நாட்களாக அம்மாவை நேரில் பார்க்க முடியவில்லை. அலைபேசியில் அல்லது வீடியோ காலில் மட்டுமே தொடர்பு. இதுபோன்றதொரு சூழலில் அம்மாவுக்கு கொரோனா பாதிப்பு என்றவுடன் குழந்தைகள் பதறி விட்டன. என்னென்ன எண்ண ஓட்டங்கள் அந்த குழந்தைகள் மனதில் ஓடின என்பதை பின்னர் கேட்டறிந்து கலங்கிவிட்டேன்.




இரண்டாவது நாளில் எனக்கும் உடல் வலி. ஆனால் காய்ச்சல் இல்லை. அடுத்த நாள் காலை ஹோம் டெஸ்ட் எடுக்கச் சொல்லி அப்பல்லோவை அழைத்து அவர் குழந்தைகளுக்கும் சேர்த்து எடுக்குமாறு அறிவுறுத்தி டெஸ்ட் எடுத்து விட்டோம். டெஸ்ட் எடுத்த காரணத்தினாலேயே நானும் குழந்தைகளும் இன்னொரு அறையில் தனிமைப்படுத்திக் கொண்டோம். அன்று மாலை ரிசல்ட். அனைவருக்கும் பாசிட்டிவ் என்று வந்திருந்தது. ஆனால் ஒரு வேளைக் காய்ச்சலைத்தவிர வேறு எதுவும் தொந்தரவு இல்லை. அதுவும் டோலோ போட்டு சரியாகியிருந்தது. இருந்தாலும் பீதி. ஆக, மூன்று நாட்கள் பத்தடி தூரத்தில் இருந்தாலும் குழந்தைகள் தாயிடம் இருந்து பிரிந்திருந்தன.
அலைபேசியில் டாக்டரிடம் கேட்டபொழுது 'நீங்கள் தனியாக இருக்கத் தேவையில்லை. கொரோனா பாசிட்டிவ் எல்லோரும் ஒன்றாக இருந்துகொள்ளுங்கள்' என்று கூறிவிட்டார். செய்தியை கேட்டானோ இல்லையோ, மகன் 'லெப்ட் ரைட் லெப்ட் ரைட்' என்று மார்ச் பாஸ்ட் செய்து மனைவி இருந்த அறையை நோக்கிச் சென்றான். கதவை ஒரு காலால் எட்டி உதைத்து 'சூப்பர் பாஸ், கமிங் இன்' என்று சொன்ன அந்த நொடி, அதுகாறும் மனதில் மண்டியிருந்த இருந்த எதிர்மறை உணர்வுகளை எட்டி உதைத்து சூழலை மிகவும் லகுவாக்கியது. அடுத்த பதினைந்து நாட்கள் அந்த பத்துக்கு பத்து ரூமில் செலிவிடப்பட்ட நேரம், உணர்வு என்பது நினைவுச்சிறையில் பொதிந்து போய் விட்டது.
எந்த மாதிரியான சூழலையும் ரம்மியமாக்குவதில் குழந்தைகள் பட்டாம்பூச்சிகள் போல. ஒரு நாளில் அரை மணி நேரமாவது குழந்தைகளுடன் செலட்டுப் பாருங்கள். அண்டை வீட்டுக் குழந்தைகளாக கூட இருக்கலாம். ஏன்? வரிசையில் நின்று கொண்டிருக்கும் பொழுது முன்னால் நிற்பவரின் தோளில் சாய்ந்து தூங்கும் பாப்பாவின் சிரிப்பு கூட போதும்.
நாம் தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் 'குழந்தைகளை நாம் பார்த்துக் கொள்கிறோம் என்று'. உண்மையில் குழந்தைகள் தான் நம்மைப் பார்த்துக் கொள்ளுகிறார்கள்

கருத்துகள் இல்லை: