***No spoilers***
தளபதியின் சினிமா கேரியரில் கிட்டத்தட்ட கடைசி படம். வினோத்துடன் மட்டும் ஒன்று பாக்கி. இனி மக்கள் பணி தான் என்று சினி வாழ்க்கைக்கு ஒய்வு அறிவித்தாகிவிட்டது. ஒரு farewell க்கு நெருங்கிய படம் எப்படி இருக்க வேண்டும்? தரமான செய்கையாக இருக்க வேண்டும் என்பது விஜய்க்கு மட்டுமல்ல எல்லோருடைய எதிர்பார்ப்பும் அதான்.
இப்பொழுதெல்லாம் கதைக்கு ஒரு நாயகன் போதமாட்டேன் என்கிறது. மல்டி ஸ்டாரர் என்றாகிவிட்டது. பிசினஸ் அப்படி. எல்லா இடங்களிலும் போனியாக வேண்டும். அதற்காக ஸ்டேட்டுக்கு ஒரு நாயகன் என்று போங்காட்டம் ஆடவில்லை நம் வெங்கட் பிரபு. இது 'அழகிய தமிழ் மகன்' படம். நாயகனின் உறுதுணையாக அவர் தேடிக்கண்டு கொண்டது எல்லாம் தமிழ் நாயகர்களை மட்டுமே. டாப் ஸ்டார் பிரசாந்த், நடனப் புயல் பிரபு தேவா, அஜ்மல், சங்கீத மேகம் மோகன், அப்படி போடு த்ரிஷா, கேப்டன் விஜயகாந்த், சிவகார்த்திகேயன், லைலா, கனிகா, சினேகா, ஜெயராம் என முழுக்க முழுக்க தமிழ் நாயகர்கள். கவுண்டருடன் முறைமாமனில் அடித்த லொள்ளுக்குப் பிறகு ஜெயராம் சுந்தரத் தமிழனாகிவிட்டார். ஹி ஹி.. கேப்டனின் AI என்ட்ரி சர்ப்ரைஸ் டோக்கன். சரி. ஜெய்லரில் ரஜினி போன் போட்டு ஒவ்வொருத்தரையாக துவம்சம் செய்திருப்பார். 'என்னடா தலைவர் இறங்காமல் மற்றவர்களை இறக்கி விடுகிறாரே. ஓகே ஏஜ் பாக்டர்?' என்று ரசிகமணிகள் யோசிக்குமுன்னே 'ர ர ர ர' என்று அனிருத் bgm போட்டு மாஸ் காமித்து, 'என்னல யோசிக்கீங்க. படத்தை பாருங்கவே' என்று மடை மாற்றிவிடுவார். ஆனால் goat வேறு ரகம். என்னதான் பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த் என்று இருந்தாலும் முழுக்க முழுக்க இறங்கி ஆடியிருப்பது என்னமோ தளபதி மட்டுமே. அவர்களுக்கும் சேர்த்து சண்டை செய்திருக்கிறார்.
ட்விஸ்ட் வைப்பத்தில் வெங்கட் பிரபுவிடம் உள்ள நேர்த்தியே நேர்த்தி தான். மங்காத்தாவிலேயே ஒரு ஆட்டம் காமித்திருப்பார்.Goatலும் அத்தனை ட்விஸ்ட். ஒரு சில யூகிக்க முடிந்தது. சில சர்ப்ரைஸாக இருந்தது. உறுத்தல் இல்லாத ட்விஸ்ட். கதை சொல்லலுக்காக காட்சிகள் முன்னும் பின்னும் ஓடினாலும் குழப்பம் இல்லாமல் கோர்த்ததில் எடிட்டர் வெங்கட் டெரக்டர் வெங்கட்டுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறார்.
ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கை நுனியில் கட்டிப்போட்ட வித்தைக்காவே வெங்கட் பிரபுவிற்கு ஒரு சலாம்.
இரைச்சல் இல்லாமல் பின்னணி இசை அமைக்கும் யுக்தியை யுவனிடம் முன்னணியில் நின்று கற்றுக்கொள்ளலாம். ரீமிக்சிலும் நான் தான் வே கிங் என்று 'சொர்க்கமே என்றாலும்' பாட்டில் விசிட்டிங் கார்ட் கொடுத்துவிடுகிறார் இந்த யுவன். விசில் போடு, மட்ட போன்றவை தாளம் போட வைக்கின்றன. BGM அதகளம். கார், பைக் சேஸ் சீன்கள் எல்லாம் bourne identity படக்காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன. சித்தார்த் நுனியின் கேமரா கைவண்ணம் கண்களுக்கு விருந்து.
மாஸான ஒரு இன்டெர்வல் பிளாக். தளபதி vs இளைய தளபதி என்று இண்டெர்வலில் தான் கேம் பிகின்ஸ் என்கிறார்கள். இறுதி காட்சியில் கூட எமோஷன்ஸ்க்கு இடம் கொடுக்காமல் பூமர், க்ரிஞ் என்று ஜென் zஐ உள்ளே இழுத்திருக்கிறார். வழக்கம் போல் வெங்கட் பிரபு பேமிலி எல்லோரும் இங்கே ஆஜர். பிரேம்ஜி, அரவிந்த், வைபவ், சுப்பு பஞ்சு, யுகேந்திரன் என அனைவருக்கும் வலிந்து திணிக்காமல் நெருடலில்லாமல் கதையினூடே பயணமாகும் படி ஒரு ரோல், இன்க்ளூடிங் பண்ணைபுரம் போர்ட். க்ளைமேக்சில் 'நீ யார் fan? என்று கேட்டு 'தல' என்று ஒரு சொல்லில் தல ரசிகர்களும் இங்கே சரண்டர். இறுதி காட்சிகளில் CSK மேட்சையும் கமென்டரியையும் க்ளைமேக்ஸ் சண்டை காட்சியுடன் புத்திசாலித்தனமாக இண்டர்லேஸ் செய்தது வெங்கட் அண்ட் கோவின் ஒண்டர்லா மாயாஜாலம்
.
அத்தனை கதாபாத்திரங்கள் நிறைந்து இருந்தாலும், படம் முழுக்க முழுக்க தளபதி தான். ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் அப்படி ஒரு கரிஷ்மா. என்ன ஒரு ஆட்டம். என்ன ஒரு எனெர்ஜி. என்ன ஆக்ஷன் சீக்வன்ஸ். 50 வயது என்றெல்லாம் சொல்ல முடியாது. டெபினிஷன் பார் பிட்னெஸ் என்றால் அது தளபதி தான்.
சரி. குறைகளே இல்லையா? புள்ளி வைத்தாற்போல, டீ ஏஜிங் தொழிநுட்பம் முழுக்க முழுக்க கை கூடவில்லை. 50 சதவீதம் தான் ஓகே. சில இடங்கள் கச்சிதமாக இருந்தாலும் சில இடங்களில் (அசைவுகளில்) பிசிறு தட்டுகிறது. ஜீவனின் க்ளோஸ் அப் காட்சிகளில் தென்படும். டீ ஏஜிங் தொழில் நுட்பத்தை விடுத்து தளபதியை தன இயல்பிலேயே விட்டிருந்தால் கூட அலேக்காக தட்டி தூக்கியிருப்பார். இரு விஜய் வரும் காட்சிகளில் எல்லாம் டூப் தெரிகிறது. மைல்கல் படம் என்பதால் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம். விஜய் அண்ணாவின் ஹேர்ஸ்டைல். விக்கா அல்லது பிளான்ட்டிங்கா என்று தெரியவில்லை. நமக்கும் ஓட்ட மாட்டேன் என்கிறது. கொஞ்சம் படிந்து வாரியிருக்கலாம். புகை பிடிக்கும் காட்சிகள், ஒரு லிப் லாக் காட்சி, கெட்ட வார்த்தைகள் போன்றவை தவிர்த்திருக்கலாம். வில்லத்தனத்தை இன்னும் இறக்குகிறேன் என்ற பெயரில் தீம் பார்க்கில் ஓவர் ஆக்டிங் தவிர்த்திருக்கலாம்.
கேரியரின் பீக்கில் அதுவும் 200 கோடி சம்பளம் வாங்கும் நேரத்தில் சினிமாவை விட்டு விலகுவது என்பது பெரும் முடிவு. கட்சி ஆரம்பித்து மக்களை முழுவதுமாக சுவீகரித்தது எம்.ஜி.ஆர் மட்டுமே. தனது 55வது வயதில் ADMK தொடங்கினார். அதே பாணியில் தளபதியும் 50வது வயதில் தமிழக வெற்றிக்கழகம் என்று இறங்கியிருக்கிறார். இருவரும் அரசியலில் இறங்கிய சூழ்நிலை வேறுவேறு. உச்சத்தில் இருந்த ஒருவர் முப்பது வருடங்களுக்கு மேலாக 'வருவேன் வருவேன்' என்று படம் ஓட்டிச் சென்றதற்கு மத்தியில் தைரியமாக இறங்கிய தளபதிக்கு ராயல் சல்யூட். அதுவும் ஆளும் கட்சி ஸ்திரமாக இயங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் கட்சி ஆரம்பித்தது என்பது சொல்லி அடித்த கில்லி தானன்றி வேறு என்ன. நெஞ்சில் குடியிருக்கும் அவரின் ரசிகர்களையும் தாண்டி மக்களை ஈர்ப்பாரா? நிச்சயமாக என்று பட்சி சொல்கிறது. பொறுத்திருந்து கொண்டாடுவோம்
.
மற்றபடிக்கு இதுதான் விஜயின் இறுதி படம் என்றால், ஒரு நல்ல நடிகனை, நடனக் கலைஞனை, பாடகனை, நாயகனை கண்டிப்பாக மிஸ் செய்வோம்
.
ஆல் தி பெஸ்ட் தலைவா
!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக