வாழை 2024
மாரி செல்வராஜை 2013ல் வெளிவந்த 'மறக்கவே நினைக்கிறேன்' வாரந்திரத் தொடர் மூலம் தெரியும். விலாசம் கொடுத்தது ஆனந்த விகடன். ஒவ்வொரு வாரமும் அவரது எழுத்துக்களை வாசித்த பொழுது அவ்வளவு கவலைகள் தோன்றி மறையும். இவ்வளவு கஷ்டமா? என்று எந்த ஒரு வாரமும் கேட்க மறந்ததில்லை. அப்படி ஒரு வாழ்க்கை.
வாழை பார்த்தேன். பார்த்தேன் என்பதை விட ஒவ்வொரு பிரேமையும் ரசித்தேன் என்று சொல்லுமளவுக்கு ஒரு வெள்ளந்தியான கிராமத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். அந்த கிராமத்து மனிதர்களது தேவைகள் நம்மைப் போன்று அளவுக்கு அதிகமாக ஆசைப்படுவது இல்லை. அந்த ஒரு முரண்பாட்டிலேயே இந்த படத்தை கொண்டாடடவும் துண்டாடவும் என்று இரண்டு சமூகம்.
வாழையைப் பொறுத்தவரை கதை என்று சொல்லுவதைக்காட்டிலும் பயணம் என்ற சொல் சரியாக இருக்கும். ஏனெனில் வாழைப் படத்தில் அவர்களது வாழ்நாளில் ஒரு சில நாட்களை மட்டுமே பார்க்க முடிகிறது. க்ளைமேக்சில் சிவனணைந்தான் போஸ்டர் ஓட்டும் அளவுக்கு பெரிய ஹீரோவாக வளர்ந்தது போல் எல்லாம் காண்பிக்கப்படவில்லை. சொல்லப்போனால் இன்னும் அவர்களது துயரம் களையப்படவில்லை. சிவனணைந்தான் என்ன ஆனான்? அவனைப்போன்று கருங்குளம் மற்றும் பல குக்கிராமங்களில் இருக்கும் சிறுவர்கள் என்ன ஆவார்கள்? என்று கேள்வியே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் தன்நலம் பேணும் வாழ்க்கையை முகத்தில் அறைந்து ஒரு வித அசௌகரியத்தை கொடுத்து விடுகிறது.
பல இடங்களில் இருந்த டீடைலிங் ரசிக்கும் படி இருந்தது. உதாரணமாக, சிம்னி விளக்கு ஏற்றப்படும் பொழுது பின்னால் தெரியும் அவன் அம்மா படுத்திருக்கும் கட்டிலின் செங்கல் கால், மாலை வீடு திரும்பும் பூங்கொடி டீச்சரின் வாடியப் பூச்சரம், சிவனணைந்தான் அப்பா பெட்டியில் ஒளிந்திருக்கும் CITU கொடி. வாழை இலை குடையில் நண்பனுடன் மழைக்கு ஒதுங்கியது, ஸ்கூலுக்கு எடுத்துச் செல்லும் நைந்த ஒயர் கூடை, கரும் பலகையில் தெரிந்த 'மிக மிக அதிகம் பேசியவர்கள்', வேம்புவின் பஃப் கைச்சட்டை, மருதாணி கொடுக்கும் பொழுது 'எடுத்துக்கண்ணே' என்று ஒரு வார்த்தையில் வேம்புவை கனிக்கு கொடுக்க சிவனணைந்தான் சம்மதம் தெரிவிப்பது, சேகரும் சிவனணைந்தானும் நடந்து வரும் வழியில் தண்ணீரை கடந்து செல்லும் இரு ரயில் பூச்சிகள் என இன்னும் நிறைய.
பஞ்சு மிட்டாய் பாட்டிற்கு பூங்கொடி டீச்சர் ஆடிய ஆட்டம் ரசிக்கும்படி என்பதைத் தாண்டி அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும் ஆண்டு விழாவிற்கு ஆசையாக நடனம் கற்றுத்தரும் அனைத்து டீச்சர்களுக்கும் அது சமர்ப்பணம். கொண்டடித் தீர்த்திருக்கிறார் மாரி. ஒரு கர்சீப் கொண்டு, சுகன்யா சினிமாப்பாடலை வைத்து இத்தனை கதை சொல்ல முடியுமா? முடியும் என்று மட்டும் இல்லாமல் ரசிக்கும்படியும் சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறார்.
சிறு மாரி செல்வராஜாக பொன்வெல் மற்றும் சேகர் கதாபாத்திரத்தில் ராகுல், பூங்கொடி நிகிலா, கலை கணி, வேம்பு திவ்யா, ஜானகி தாய் என எல்லாரும் டெய்லர் மேட். திருநெல்வேலி வட்டார மொழி
. வானத்தில் பருந்து போல் தெரியும் பல ஏரியல் ஷாட்கள் கிராமத்து பசுமையை அக்ஷரம் பிசகாமல் கண் முன்னே நிறுத்துகின்றன. ஆரம்பத்தில் தாரை தப்பட்டையுடன் உருமும் இசை இறுதிவரை வாழைக்கு மூடாக்கு போட்டு உரம் ஏற்றியிருக்கிறது.
க்ளைமேக்ஸைத் தவிர படம் நெடுகிலும் சேகர் கதாபாத்திரம் மூலம் அரங்கம் முழுவதும் சிரிப்பொலி தான். ஆனால் யோசித்து பார்த்தால் அத்தனை வலிகளுக்கு மத்தியில் அவ்வளவு மகிழ்ச்சியாக எப்படி வாழப்பழகிக் கொள்கிறார்கள்? என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. நாம் திருப்தியே அடையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய மெட்டியரிலிஸ்டிக் வாழ்க்கை மீது அத்தனை கேள்விகளை எழுப்பிகிறது. வாழை சுமக்க செல்லாத நாட்கள் எல்லாமே அவர்களுக்கு விடுமுறை தான். கொண்டாட்டம் தான். மருதாணி வைத்த கை போதும் அவர்கள் முகத்தில் புன்னகை வரவழைக்க.
2024இல் இதே ஆனந்த விகடனில் சம்மட்டி ஆட்டம் எழுத ஆரம்பித்திருக்கிறார். தனது வாழ்க்கையையே திரும்பி பார்க்கும்படியாக ஒரு தொடர். நாற்பது வயது தானே ஆகிறது. அதுக்குள் ஒரு சுயசரிதையா? அவ்வளவு அனுபவமா? என்ன எழுதப்போகிறார்? இல்லை இல்லை என்ன எழுதிவிடப்போகிறார்? என்று ஆரம்பத்தில் யோசித்தவனை சம்மட்டியால் அடித்தது போன்றிருந்தது அவரது ஒவ்வொரு வார்த்தைகளும். உரத்து சொல்வதற்கு வயது தேவையில்லை. வலிகள் போதும் என்பதை அன்று புரிந்துகொண்டேன்.
'சம்மட்டி ஆட்டம்' தொடரில் அந்த சினிமாப்பாட்டு புத்தகங்கள், பூங்கொடி டீச்சர், வேம்பு அக்காவின் கணித டியூஷன், CITU காம்ரேடாக அவர் வடித்திருக்கும் கனி கதாபாத்திரம் என ஒவ்வொன்றும் மாரியைத் துயர நிழல்களிருந்து எவ்வாறு மீட்டெடுத்தன என்று கூறியிருப்பார். பசியில் வாழைப்பழம் சாப்பிட்டு தப்பிப்பது போல் காட்சி அமைந்திருக்கும். ஆனால் உண்மையில் ஊர் கூட்டி திருட்டுப்பட்டம் கட்டி துயரம் தாளாது இறந்த ஒரு அண்ணனின் கதை அது.
இரண்டு மாதங்கள் முன்பு தான் வாழைத்தோப்பு, சுமை தூக்குவது பற்றி, கால்கள் இடறி விழுவது என சம்மட்டி ஆட்டத்தில் எழுதியிருந்தார். அந்த பகுதி இரண்டு வாரம் மட்டுமே வந்திருந்தது. மொத்தத்தில் அதை 5% என்று வைத்துக் கொள்ளலாம். அந்த இரண்டு வாரத்தில் மட்டும் வந்திருந்ததை மட்டும் வைத்தே ஒரு புனைவுடன் ஊரே கொண்டாடும் ஒரு சினிமாவாக கொடுக்க முடிகிறது என்றால் அறுதியிட்டுச் சொல்கிறேன். நிஜ வாழ்க்கைக்கு அருகில் இன்னும் பல உணர்ச்சிப்பூர்வமான கதைகளை அவரால் சொல்ல முடியும். அவ்வளவு அனுபவங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
நிற்க. இந்த படைப்பில் எங்கிருந்து சாதி தோன்றியது. தனது வாழ்க்கையை, சான்று இருப்போரின் வாழ்க்கையை ஊருக்கு காட்ட நினைத்ததில் எங்கே ஊடுறுவுகிறது அரசியல்? வாழை வெளியீட்டை ஒட்டி வெளிவந்த விமர்சனங்கள் சில, காழ்ப்புணர்வை வரைமுறையின்றி கொட்டித் தீர்த்தன. 'எடுப்பது விளிம்பு நிலை மக்களைப் பற்றி. ஆனால் வந்திறங்குவது பென்ஸ் காரில்' என்று ஒரு கன்டென்ட் சுற்றியது. என்ன மாதிரியான ஒரு மன நோய் பீடித்திருந்தால் இது போன்ற விஷ வார்த்தைகளை கக்கியிருக்க முடியும். இரண்டு தார்களை சுமக்க முடியாமல் சுமந்த அதே சிறு பைய்யன் தான் இன்று பல விருதுகளை வாங்கி குவித்திருக்கும் மாரி செல்வராஜ். அவர் பென்ஸ் காரில் வந்திறங்குவது எத்தனை சிவனனைந்தான்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்? ஆனால் அதை பொறுக்க முடியவில்லை பிணி கொண்டவர்களால்.
படம் முடிந்து வெளியில் வரும்போது எட்டு வயதுக்க மதிக்கத்தக்க ஒரு சிறு குழந்தை அதன் அப்பாவிடம் கேட்டது 'இன்னொரு லாரி போட்டு இருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காதுல?' உயிரைத் துச்சம் என மதிக்கும் முதல் முதலாளித்துவ வர்க்கத்தை நோக்கி எழுப்பப்பட்ட இந்த கேள்வி போதும் இந்த படத்தின் வெற்றியை பறைசாற்ற.
நீங்கள் எடுங்கள் மாரி செல்வராஜ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக