Melodrama போல அல்லாது mundane வகை படம் என்று வரையறை படுத்திக்கொள்ளலாம். அதாவது இம்மைக்குறிய கதை. இயல்பானதொரு கதை. பேசப்படவேண்டிய ஒன்றும் கூட. தொந்தரவு இல்லாத விடுமுறை நாளில் ஏதேனும் மலை உச்சியில் நின்று கொண்டு பிடித்த கவிதையை வாசிக்கும் பொழுது என்ன மாதிரியான ஒரு மன நிலையை எட்டுவீர்களோ அது போன்றதொரு தொனியில் வேகத்தில் தான் படம் செல்கிறது. எந்த கணத்திலும் அதிர்வு இல்லை. ஆனாலும் கதாப்பாத்திரங்களின் மௌனம், பேச முடியாத உணர்வுகளை வெளிக்காட்டும் முகப்பாங்கு, இறுக்கமான சூழ்நிலை என படம் நம்மை வெகுவாக சஞ்சலப்படுத்துகிறது.
ஒரு நல்ல ஸ்க்ரிப்ட்டிற்கான, கேரெக்டரைசேஷனுக்கான உதாரணமாக இந்த படத்தை எடுத்துக்கொள்ளலாம். அதற்கும் மேலே நடிகர் தேர்வு ஒன்பது பொருத்தமும் பொருந்தி வந்துள்ளது.
மம்மூட்டி மற்றும் ஜோதிகா பிரதான கதாப்பாத்திரம். தேர்ந்த ஒரு அனுபவமிக்க நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார் மம்மூட்டி. படத்தில் நமக்கு மேத்யூ தேவசியாகவே தெரிகிறார். மிகை நடிப்பை குறைத்து நடித்திருந்தாலும் ஜோதிகாவிடம் சிற்சில இடங்களில் ஓமனாவுடன் சேர்ந்து ஜோவும் வெளிப்படுகிறார்கள். உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்திய விதத்தில் இதை சட்டை செய்யாமல் விட்டு விடலாம். முதல் மரியாதை சிவாஜியை என்ன சொல்லி நடிக்க வைத்தனரோ அதை ஜோவுக்கும் சொல்லியிருப்பார்கள் என்று தோன்றியது. பிரதான கதாப்பாத்திரத்தைத் தவிர வரும் மற்றைய கதாப்பாத்திரங்கள் அதிகபட்சமாக பத்து வார்த்தைகளே பேசியிருக்கிறார்கள். ஆனால் உணர்ச்சியின் தாக்கத்தை அவ்வளவு உணர முடிகிறது.
பதினாறு வயது பெண் குழந்தையின் பெற்றோர் மம்மூட்டி மற்றும் ஜோதிகா. வார்டின் பை எலெக்ஷனுக்காக நிற்கும் மேத்யூ (மம்மூட்டி), தனது விண்ணப்பத்தை தாக்கல் செய்வதில் படம் தொடங்குகிறது. அதே நேரத்தில் தான் ஓமனாவும் (ஜோதிகா) மேத்யுவை விவாகரத்து செய்யும் பெட்டிஷன் கொடுக்கிறார். இந்த வழக்கு மேத்யூவின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்று கூறும் அவரது கட்சிக்காரர்கள், மேத்யூவை அந்த வழக்கில் இருந்து சீக்கிரமாக வெளிவரச் சொல்கிறார்கள். கட்சி ஆபிஸ், மேத்யூவின் வீடு,குழந்தையின் பள்ளி, வக்கீலின் விசாரணை என கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்தும் ஓமனா மேத்யூவிடம் இருந்து இவ்வளவு காலம் கழித்து ஏன் விவாகரத்து கோரினார் என்று தெரியவில்லை.
இடைவெளிக்குப்பிறகு கோர்ட் விசாரணையில் தான் விவகாரத்தின் காரணம் நமக்குத் தெரிய வருகிறது. முதல் காரணம் மேத்யூ மற்றும் ஓமனாவிற்கு இடையில் physical intimacy கிடையாது என்பதும், இரண்டாவது காரணமாக மேத்யூ ஓரினச் சேர்க்கையாளர் என்பதும் அதை மறைத்து ஓமனாவை திருமணம் செய்துவிட்டார் என்பதும் தான். விசாரணையில் இதனை மறுக்கிறார் மேத்யூ. ஆனால் அவ்வாறு மறுக்கும் மேத்யூவின் மனதில் குற்ற உணர்ச்சி எழுகிறது என்பதனை முகபாவங்களிலும் உடல் மொழியாலும் கடத்தும் அந்த நடிப்பு தான் மம்மூட்டி. இந்த கட்டத்தில் தான் படத்தின் இரண்டாம் கட்ட பிரதான பாத்திரங்கள் ஏன் ஆரம்பத்தில் இருந்தே ஒரு வித மன இறுக்கத்தில் குற்ற உணர்ச்சியுடன் நேர்கொண்ட பார்வையை தவிர்த்து கவிழ்ந்த தலையுடன் நடமாடுகிறார்கள் என்பதனை உணர்ந்து கொள்ள முடிகிறது. முக்கியமாக தங்கன் என்கிற மேத்யூவின் பார்ட்னர் கதாபாத்திரமும், தேவசி என்கிற மேத்யூவின் தந்தை கதாப்பாத்திரமும்.
இந்த படம் முழுமைக்கும் சேர்த்து இரண்டே இரண்டு வசனங்களை மட்டுமே பேசியிருக்குமாறு தேவசியை காட்சிப்படுத்தியது அருமை. அதிலும் அந்த இரண்டு வசனங்களும் தனது மருமகள் ஓமனாவை சுதந்திரப்பறவையாக பறக்க உதவி செய்யும் சாட்சிப்பிரமானம் என்பது ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சனின் எழுத்து முதிர்ச்சி. சிறுவயதிலேயே மேத்யூ ஓரினச்சேர்க்கையாளர் என்பதனை அறிந்துகொள்ளும் தேவசி, திருமணத்திற்குப் பிறகு அனைத்தும் சரியாகிவிடும் என்று அவரை கட்டாயப்படுத்தி ஓமனாவிற்கு மணம் செய்துவைக்கிறார். கோர்ட்டில் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்பதனை பகிரங்கப்படுத்தியபிறகு அந்த உண்மையை எதிர்கொள்ள முடியாமல் இரவு வராந்தாவில் உட்கார்ந்திருக்கும் தனது தந்தையிடம் மேத்யூ வெடித்து அழும் காட்சி அழகியல். வயது முதிர்வின் காரணமாக தள்ளாடி நடந்து வந்து தனது மகனை ஆற்றுப்படுத்தும் வசனமில்லாத அந்த காட்சி நம்மையும் நெகிழ வைத்து விடுகிறது.
தன் தங்கை ஓமனவுக்காக இறுதிவரை ஆதரவாக பேசாத ஓமனாவின் அண்ணன் இறுதியில் தன் தவறை உணர்ந்து இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து கொள்ளுமாறு மேத்யூவிடம் கேட்கும் அந்த இடம், ஓமனாவிடம் கேட்கும் மன்னிப்பாகவே உணர முடிகிறது. காலம் கடந்த ஒன்றென்றாலும் சபாஷ்.
இறுதி காட்சியில் ஓமனாவின் அருகில் அமர்ந்து மேத்யூ கேட்கும் அந்த 'சாரி', ஒரு ஓரினச் சேர்க்கையாளனாக இந்த உலகை எதிர்கொள்ள பயந்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கிய குற்ற உணர்ச்சியுடன் மன்னிப்பு கேட்கும் அந்த காட்சி செல்லுலாய்டு ஹைக்கூ கவிதை. அதிலும் அந்த நேரத்தில் வெடித்து அழும் மேத்யூவின் 'ஓ கடவுளே' என்ற கூக்குரல் காதில் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது.
முதிர்ச்சியுடன் இருவரும் தம் தம் வழியில் பிரிந்து செல்கிறார்கள். ஓமனாவிற்கு ஒரு வரன் பார்த்து அவரிடம் பேசச்சொல்லிவிட்டு எழும் மேத்யூ, தனது பார்ட்னர் தங்கனுடன் காரில் விடைபெற்று செல்லும் ஒரு லாங் ஷாட்டில் படம் முடிகிறது.
ரோர்ஸ்சாச் படத்தில் மம்மூட்டி நடித்திருக்கும் ஒரு காட்சியே, இந்த வயதில் எவ்வாறு இவ்வளவு போல்டாக தன்னை கட்டிக்கொள்ள முடிகிறது என்ற எண்ணவைத்தது. 400 படங்கள் மேல் நடித்துள்ள 72 வயதுள்ள மம்மூட்டி இந்த வயதில் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த கதாப்பாத்திரம் அனைத்து விரல் வித்தை நடிகர்களுக்குமான சம்மட்டி அடி. அதுவும் ஸ்க்ரிப்ட்டிற்கு வலு சேர்க்கும் விதமாக அவரின் அளப்பரிய நடிப்பு இன்னும் சுகம்.
காதல் படத்தின் ஒவ்வொரு காட்சியும் கவிதை போல் தொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலும் இரவு நேரங்களில் ஓமனா செய்யும் பிரார்த்தனைகள் அதனை ஒட்டி பின்னணியில் ஒலிக்கும் பூச்சிகளின் சத்தம் அந்தசச்சூழலில் நம்மை அப்படியே பொருத்திக் கொண்டுவிடுகிறது. இயற்கையான மலைப்பிரதேசம், மனதை வருடும் பாடல் வரிகள், உறுத்தலில்லாத பின்னணி இசை, அதிர்ந்து பேசாத மக்கள் என இயக்குனர் ஜோ பேபியின் இந்த உலகம் அற்புதமாயிருக்கிறது. தன் பாலின ஈர்ப்பில் ஜோ கொண்டிருக்கும் முதிர்ச்சி, அதனை கையாண்ட விதம், பிரகடனப்படுத்திய காட்சிகள் என ஒவ்வொன்றும் தங்கச் சுரங்கம். சிந்திக்க, நம்மை தெளிவுபடுத்திக்கொள்ள, மேலும் உரையாட என்று ஒரு அருமையான படத்தை படைத்திருக்கிறார் இயக்குனர் மற்றும் குழு.
வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக