பத்து அல்லது பதினோரு வயது இருக்கும். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவே படுத்து தூங்கி கொண்டிருக்கிறேன். நடுச்சாமத்தில் என்னை யாரோ எழுப்புகிறார்கள்.
'ஏலே, எந்திரி' எங்கேயோ கேட்ட குரல்.
'டேய். எந்திரி. சிவா அண்ணன் வந்திருக்கான்', இது அம்மா.
காலனியில் இருக்கும் போது என்னைப் போன்ற வாண்டுக்களெல்லாம் அண்ணன் எப்போது வருவான் என்றே காத்திருப்போம். ஏனென்றால் ஒவ்வொரு முறை வரும்போதும் ஒரு கார். அமபாஸிடர், பத்மினி, பியட் கார், கான்டெஸ்ஸா அந்த டைமில் என்னென்ன பிரசித்தி பெற்ற கார் இருந்ததோ அத்தனையும் கொண்டு வருவான். அதோடு மட்டுமில்லாமல் எங்களையெல்லாம் ஏற்றி கொண்டு ஒரு அரை மணி நேரம் ரவுண்ட். கார் என்றாலே குதுகலம் ஆகிவிடும் நாங்கள், அதில் ஏறி ஒய்யாரமாக ஒரு ரவுண்டு என்றால் சும்மாவா. அதனால் தான் எப்போதுமே காத்திருப்போம்.
'ஏலே எந்திரிக்கியா இல்லையா. பொறவு வுட்டுட்டு போய்டுவேன்.'
கார் பயணம் மிஸ் ஆகி விடும் என்பதால் உடனே எழுந்துவிட்டேன். மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது. அப்போது என்ன கார் கொண்டு வந்திருந்தான் என்று ஞாபகம் இல்லை. ஆனால் முன்னால் ஏறி உட்கார்ந்து கொண்டேன். நேரே பாளை பஸ்டாண்ட் ராஜா டவர்ஸ் அருகில் மாடியில் ஒரு பரோட்டா கடை. ரெண்டு பரோட்டா. சால்னா. சிக்கன் சாப்ஸ். முழுக்கோழி போல் அத்தனை பெரிதாக இருந்தது. சரியான ருசி. பக்கத்து டேபிளில் இரண்டு பேர் ஏதோ சின்ன பாட்டிலை வைத்துக்கொண்டு குடிப்பதும் கடிப்பதுமாக இருந்தனர்.
அண்ணே, அந்த ஜூஸ் வேணும்'
சிரித்துக்கொண்டே, 'ஏலே.ஓம்பாட்டுக்கு சாப்புடு.' என்று சொன்னான். சாப்பிட்டு கிளம்பிவிட்டோம். கொண்டு போய் வீட்டில் விட்டு கிளம்பிவிட்டான். எத்தனை முறை தங்கச்சொல்லியும் வீட்டில் தங்கியதே இல்லை. 'சேட்டு கூப்டுவாரு. போகணும்' என்று போய்விடுவான்.
ஒரு சா மில்லில் ட்ரைவர் வேலை. ட்ரைவர் கதி சொல்லி மாளாதது. நேரத்துக்கு சாப்பாடு, காஃபி, தூக்கம் ஏன், குடலைச் சுத்தம் செய்யக்கூட நேரம் கிடைக்காது. இன்றும் யெல்லோ போர்ட் வண்டியில் பல டிரைவர்கள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சீட்டை சாய்த்து தூங்குவதை காண முடியும். அவர்கள் பிழைப்பு அதுதான் என்று எளிதாக நாம் கடந்து விடுகிறோம்.
பிரிதொரு முறை இன்னுமொரு சர்ப்ரைஸ் கொண்டு வந்தான். அதுவும் அதே போன்று ஒரு அகால இரவு வேலை.
'ஏலே எந்திரி. சிவா அண்ணன் வந்திருக்கான்'.
வெளியே வந்தால் ஒரு கார். வெள்ளை வெளேரென்று. கப்பல் போல நீளமாக. உள்ளே ஏறி உட்கார்ந்தால் அப்படி ஒரு வாசம். எங்கேயோ கூட்டிப் போனான். அது ஹாஸ்பிட்டல். சேட்டிற்கு பேரப்பிள்ளை பிறந்திருக்கிறது. ஹாஸ்பிட்டலே ஒரு பிரமிப்பாக இருந்தது. உள்ளே போனால் தரை அழுக்காகி விடுமோ என்று பயந்து விடும் அளவுக்கு பளிங்குக்கல் பளபளப்பு.
காரின் டிக்கியை திறந்து காண்பித்தான். இரண்டு பேர் தாராளமாக மூன்று பேர் ஒருக்களித்து படுத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு விசாலம். அது முழுவதும் சிவப்புக்கலர் அரசன் ஸ்வீட்ஸ் டப்பாக்கள். ரெண்டு பாக்ஸை எடுத்து என்னிடம் கொடுத்தான்.
'உங்க ஓனர் திட்ட மாட்டாரா?'
'தின்னுடே, அதெல்லாம் ஒன்னு சொல்ல மாட்டாரு' என்றான். வீட்டில் வந்து விடும்போது அம்மாவிடம் சொல்லிய வார்த்தை அன்று அப்படி ஒரு ஆச்சர்யத்தை கொடுத்தது. 'ஆஸ்பிட்டல்ல கரண்ட் போச்சுன்னா குழந்தை அழ ஆரம்பிச்சிருது. முழு நேரமும் ஏசி வேணும்னு கேக்குது'. பிறந்தவுடனே ஏசியா. அப்போ குழந்தை செக்கச்செவேனு இருக்கும்ல என்று யோசித்த பருவம் அது. ஏதேனும் நகைக்கடை வாசலை கடந்து சென்றால் விழும் அந்த ஜில்லென்ற ஏசி காத்துதான் அதிகபட்ச ஏசி அனுபவம். அப்பொழுதெல்லாம் நகை வேண்டுமென்றால் ஆசாரி தானே. 916 போல, தாராள மனத்திருந்தால் 816 இல் செய்து தருவார். இல்லையெனில் 716 தான். கேரட்மீட்டர் எல்லாம் அப்போது கிடையாது.
அந்த வயதில் கிளட்ச் அக்சிலேட்டர் கூட எட்டாத உயரத்தில் கார் ஓட்ட சொல்லி கொடுத்திருக்கிறான். ஸ்டியரிங் மட்டும் பிடித்து நேராக கார் ஓட்டும்போது நமக்கே ஒரு கெத்து பீலிங் வந்துவிடும். அந்த பீலிங்கில் ஸ்டியரிங் எங்குட்டாவுது திரும்ப, பிடறியில் ஒரு அடி. 'நேரா பாத்து ஓட்டுல'.
ரஜினிகாந்த் போல 'எப்போது வருவான் எப்படி வருவான்' என்று தெரியாது. அதே நேரம் வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டாக எல்லாம் வர மாட்டான். ஒரு நல்லது கெட்டதுக்கு கலந்து கொண்டு ஞாபகம் இல்லை. அவன் வேலை அவனை அப்படி வார்த்து எடுத்து வைத்திருந்தது.
மிகச்சிறிய வயதில் மொட்டை போடச்சென்றிருந்த போது தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது போல அண்ணனை அங்கு கண்டோம். ஒரு வேலையாக அந்த கோவிலுக்கு வந்தான் என்று கூறினான். ஏதோ விளையாட்டில் அவனிடம் கோபம் கொண்டு பேசவில்லை. பின்பு நான்கு மணி நேரம் பயணம் செய்து ஊர் திரும்பிய போது அவனில்லாத வெறுமை சக்கென்று கவ்விக்கொண்டது. அழ ஆரம்பித்தேன். 'எதுக்குல அழுவுற?', அம்மா. 'இல்லை. அண்ணன் கூட சண்டை போட்டேன். பேசாமையே ஊருக்கு போய்ட்டான். அதான்'. அதுக்கு மேல் சொல்லத்தெரியவைல்லை. 'இருக்கும்போது சண்டை போடு. போனப்புறம் உக்காந்து அழுவு'. என்றாள்.
ஒரு வேளை இப்போது வரை அதுதான் உண்மையோ. இருக்கும் வரை சண்டை போட்டுக்கொண்டே, சட்டென்று ஒரு நாள் இல்லாதபோது ஒப்பாரி வைத்து என்ன பயன்? இவற்றை ஏன் சொல்கிறேனென்றால், நேற்று மதியம் ஊரிலிருந்து ஒரு அழைப்பு. 'சிவா அண்ணன் தவறிட்டான்' என்று.
டக்கென்று தொண்டையில் ஏதோ பிடித்தது போன்று ஒரு உணர்வு. 'ஏலே போன எடுக்காம என்னல பண்ணிட்ருக்க? சின்னையாவை கூப்டு. பங்கரை என்ன செய்தான்?' போன்ற குரல் இனி கேக்காது. எமோஷனல் அட்டாச்மெண்ட் இல்லையென்றாலும் வரும் போகும் இடங்களெல்லாம் கலகலவென்று வைத்திருப்பான்.
நல்லவேளை அவனிடம் பேசவேண்டுமென்று என்று எதையும் தேக்கி வைக்கவில்லை. அலுவல் பிரச்சினைகள் இதற்கு உறுதுணையாக இருந்தது என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் ஆயுசுக்கும் அரித்துக்கொண்டே இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக