சமீபத்தில பார்த்த நீயா நானா டாபிக் டாபிக் தான் இது. கிட்டத்தட்ட டீன் ஏஜ் பெண்கள் தங்கள் அம்மாவை மிரட்டிக்கொண்டிருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். 'லிப்ஸ்டிக் போடாதே, மஸ்காரா உனக்கு எதற்கு? கண்மை ஏன்? பிளவுஸில் இந்த டிசைன் எதற்கு? ஜீன்ஸ் போடாதே, நடக்காதே ,மினுக்காதே, தளுக்காதே' என்று ஏகப்பட்ட கண்டிஷன்கள்.
பிரச்சினை இது தான். அம்மாக்கள் இளமையாக இருப்பதால் போகும் இடங்கள் எல்லாம் இவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருப்பது தான் குறையே. பல இடங்களில் இவள் உன் தங்கையா என்று பார்க்கிறவர்கள் உசுப்பேத்திவிட பல டீன் ஏஜ்கள் அட்டென்சன் சீக்கிங் அடிபட்டு விடுகிறது. இத்தனைக்கும் அந்த தாய்மார்கள் மிகை ஒப்பனையெல்லாம் செய்யவே இல்லை. ஷோ இதுபோல கம்ப்ளெய்ண்ட்டுகளுடன் நகர்ந்து கொண்டிருந்தாலும் இறுதியில் எமோஷன் டச் இல்லாமல் இல்லை. அது உண்மையும் கூட.
டீன் ஏஜ் மகள் சொல்கிறார். 'பிரீடம் இல்லை. எப்போதுமே போன் பண்ணி என்ன பண்ணுகிறாய்? எங்கு இருக்கிறாய்? என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்'. இதன் காரணமாக அவளது நண்பர்கள் இவளை கிண்டல் செய்வது இவளுக்கு மிகப்பெரும் கௌரவ குறைச்சலாக இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் தாயின் போனை அட்டென்ட் செய்வதில்லை. அப்படியே அட்டென்ட் செய்தாலும் ஒரு வார்த்தை இரு வார்த்தைகள் பேசி போனை வைத்துவிடவேண்டியது. 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று கோபி திரும்பி அவளது தாயிடம் கேட்கிறார். 'பீச் போறேன்னு சொல்லுவா. அனுப்பி வைப்பேன். பீச் போய் சேர்ந்தவுடனே ஒரு போன். கிளம்பின உடனே ஒரு போன். நான் வேற எதுவும் கேக்கல. அதே மாதிரி மதியம் போன் பண்ணி சாப்டியா அப்டினு கூட கேக்கறதில்ல. நான் கேட்டாகூட ஒரு வார்த்தைல பதில் சொல்லி வச்சிடுறா. ஆனா பிரெண்ட்ஸ்கிட்ட மட்டும் மணிக்கணக்கா போன் பண்ணி பேச டைம் கிடைக்குது என்று அழ ஆரம்பித்து விட கோபி சமாதானம் செய்து ஷோ ஒரு வழியாக முடிந்தது. பெற்ற மனம் பித்துதானே.
இது இவ்வாறிருக்க அலுவலக நண்பர் ஒருவர் பகிர்ந்தது மேலும் தூக்கி வாரிப்போட்டது. அவருடைய அண்ணன் மற்றும் அண்ணி. முறையே 50 மற்றும் 45 வயது. கல்யாண வயதில் ஒரு மகள். மகள் காதலித்து ஒரு பையனை கூட்டி வர, 'ஓகே. விசாரித்து விடுவோம்' என்று இவரும் விசாரித்து அவர்களுக்கு மணமுடிக்க ஒப்புக்கொண்டார். திடீரென அவரது அண்ணன் மாரடைப்பில் இறந்துவிட்டார். நடுத்தர வர்க்கம். அவரது அண்ணி மட்டும் தன்னந்தனியாக இருந்து எட்டு ஒன்பது மாதங்களில் மகளுக்கு ஊர் மெச்சும் அளவுக்கு மண்டபம் பார்த்து மணமுடித்து வைத்தார்.
விஷயம் அதுவல்ல. சரியாக அண்ணன் இறந்து ஒரு வருடம் கழித்து அண்ணி ஒருவரை இரண்டாம் தாரமாக மணமுடித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருப்பதாக குடும்பத்தில் சொல்ல, ஒரு வித தயக்கத்துடன் இணை அருமை புரிந்து குடும்பமும் ஓகே சொல்லிவிட்டது. ஆனால் பிரச்சினையே மகள் ரூபத்தில். இதை எப்படி புகுந்த வீட்டில் பகிர்ந்து கொள்வது? உனக்கு ஏன் இந்த வயதில் திருமணம்? என்னை என்ன நினைப்பார்கள். உனக்கு என்ன இப்போது தேவை. கமிட்மென்ட் வேண்டாம். நட்பு போதும் என்று பினாத்தல்.
ஆனால் அவரது அண்ணி உறுதியாக இருந்து விட்டார். 'இன்னும் பதினைந்து இருபது காலம் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். என்னுடைய இறுதி காலத்தில் கூட எனக்காக ஒருவர் இல்லை. நீயும் என்றுமே என்னை எப்படி இருக்கிறாய் என்று ஆத்மார்த்தமாக கேள்வி கேட்டதில்லை. உனக்கு உன் குடும்பம் என்று ஆகி விட்டது. அது தவறும் அல்ல. ஆனால் எனக்கென்று கேட்பதற்கு யாரும் இல்லை. இந்த நிலையில் என்னை ஏற்றுக்கொண்டு ஒருவர் மணம் முடிப்பதே ஆச்சர்யம். அதனால் என்னுடைய முடிவில் மாற்றம் இல்லை. என்னுடைய உடல் மற்றும் மன நலத்திற்கு இது அவசியம்' என்று தீர்மானமாக கூறி விட்டார். இதை கேட்டவுடன் நேராக வீட்டிற்கு வந்து இருந்த நகைகளையெல்லாம் எடுத்துவிட்டு பேங்கிற்கு சென்று வீட்டை தன் பேருக்கு மாற்றி எழுதுவது எப்படி என்பது வரை கேட்டு மகள் உறவை முறித்துக் கொண்டு சென்றுவிட்டார். ஆனால் அவரது அண்ணி தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்து தனது திருமணத்தை உற்றார் உறவினருடன் ஒரு சிறு குழுமமாக கூடி முடித்து விட்டார். நம் வாழ்க்கை நம் கையில் என்று அவரது அண்ணி உறுதியாக இருந்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். கீழே விழுந்து கிடந்தாலும் வாய் பேசும் அந்த நால்வர் வரப்போவதில்லை. தயவு செய்து இறக்கும் வரை வீடை மாற்றி எழுதி வைத்து விட வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள் என்று அறிவுறுத்தி வைத்தேன்.
இரண்டு விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன். தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு வேறு தான. ஆகவே முழுவதையும் குழந்தைகளுக்கு என்று செலவிடாமல் உங்களுடைய ஒரு ஜான் வயிறுக்கு என்று ஆயுள் முழுவதும் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இரண்டாவது வீட்டில் வளரும் வரை குழந்தைகளிடம் உங்களுடைய சுமரியாதை கெடாதவாறு செல்லம் கொடுத்தால் போதும். நாம் ஒன்றும் door mat அல்ல. போவோர் வருவோர் எல்லாம் துடைத்து விட்டுச்செல்ல.
அன்பே சிவம் தான். அதுவே நம்மை சவமாக்கி விடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக