பழைய பாஸ் அவர். ஒய்வு பெற்றுவிட்டார். அடிக்கடி சொல்வார். 'டெல்லியில எனக்கு போஸ்டிங் போட்டு சாகடிச்சுட்டாங்க. குளிர்ல மூக்குல ரத்தம் வந்துருச்சு' இப்படி அடிக்கடி சொல்லுவார். அப்படி என்ன பொல்லாத குளிர் என்று நினைத்ததுண்டு. தனக்கு வந்தால் தானே தெரியும் என்பது போல் அனுபவித்து புரிந்துகொண்டேன்.
அலுவல் வேலை காரணமாக டெல்லி பயணம் மேற்கொண்டதுண்டு. ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் போய் வந்திருக்கிறேன். ஆனால் பாஸ் சொன்ன டிசம்பரோ அல்லது ஜனவரியிலோ போனது இல்லை.
இந்த முறை அதுவும் நடந்து விட்டது. ஷார்ட் நோட்டீஸில் டெல்லி செல்லுமாறு பணிக்கப்பட, அவ்வளவு உயரமான ஊட்டியிலேயே வெறும் உடம்பில் வாக்கிங் போயிருக்கிறோம், இது என்ன பம்மாத்து என்று செருக்காக சென்ற எனக்கு குளிர் ஒரு காட்டு காட்டிவிட்டது. குறைந்தபட்சம் 6' செல்ஸியஸ். அதிகபட்சம் 13' செல்ஸியஸ். எப்படி இருக்கும் பார்த்து கொள்ளுங்கள். விமானத்தில் இருந்து வெளிவந்த மதியம் மூன்று மணி, அவ்வளவு வெடவெடப்பு. நடுங்கிக்கொண்டே டேக்ஸி புக் செய்து 'பையா கிடுக்கி பந்த் கரோ' என்று கூப்பிக்கொண்டேன். அடுத்த நாள் தான் அலுவலகம் செல்லவேண்டும் என்பதால் நேரே அக்ஷர்தாம் பயணித்தேன். மார்பிளில் செய்யப்பட்ட ஒரு கோவில். உள்ளங்கை உயர சிற்பங்கள், நம் கும்பகோணத்து ஐராவதேஸ்வர் கோவில் சிற்பம் போல். இரு வித்தியாசங்கள். இங்கு கல்லில். அங்கு மார்பிளில். இங்கு கைகளில் செதுக்கியது. அங்கு CNC மெஷின். ஏர்போர்ட் தேவலாம் என்பது போல் அப்படி ஒரு செக்யூரிட்டி செக். மொபைல், பேக் என்று எதுவும் எடுத்து போக முடியாது. உள்ளே செல்லும்போது மணி மாலை ஐந்து. சாக்ஸ் மற்றும் ஷூ அணிந்திருக்கிறேன். அதையும் தாண்டி விரல்கள் நடுங்குகின்றன. உள்ளே நடுமத்தியில் இருக்கும் கோவிலுக்குள் செல்ல காலனியை கழட்டியே ஆக வேண்டும். வெறுங்காலை தரையில் வைத்தவுடன் ஏற்பட்ட அந்த குளிர் நடுக்கம், மரண படுக்கையிலும் மறவாது கண்மணியே ரகம். மார்பிளில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க வைக்க, பாதம் வழியாக குளிர் உச்சந்தலையில் ஏறுகிறது. வலம் வருவதற்குள் நமக்கு பால் ஊற்றிவிடுவார்களோ என்ற ஐயம். அப்படி ஒரு குளிர். அப்பொழுது தான் கவனிக்கிறேன். அனைத்து மக்களும் ஜெர்கின் மற்றும் க்ளவுஸ் அணிந்திருக்கிறார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து ஹோட்டலில் தஞ்சம் அடைந்து ஒரு ரூம் ஹீட்டரை வாங்கி சிவனின் முன்னால் உட்காந்திருக்கும் நந்தி போல் அதன் முன் அமர்ந்து பொழுதை கழித்தேன்.
அடுத்த நாளே க்ளவுஸ், ஜெர்கின் வாங்கி குளிரை விரட்ட முயற்சித்தேன். ம்ஹூம். தெர்மல் வியர் அணிய வேண்டும் போல். அப்பொழுதான் சூடு அடங்கும். மெட்ரோவில் ஒரு தமிழ் பேசும் பயணியை சந்திக்க நேர்ந்தது. சிவகங்கைக்காரர். சிம்லா பனிப்பொழிவை பார்த்து விட்டு வந்திருந்தார். குளிரை பற்றி விசாரித்தேன். பனியே பொழிந்தாலும் இங்கு நடுக்குவது போல ஷிம்லாவில் இல்லை என்றார். பொல்யூஷன் காரணமாக சூரிய கதிர்களே ஊடுருவ வழியில்லாமல் டெல்லி குளிரில் விரைத்து கிடக்கிறது. பொல்யூஷன் மூலமாக சுவாசிக்கும் காற்று மாசுபட்டது போதாதென்று இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு குளிர் மண்டியிருக்கிறது. ஒருவர் விடாமல் அனைவரும் பாக்கெட்டில் கைவிட்டு நடந்து செல்லும் மர்மம் அப்பொழுதுதான் விலகியது.
அலுவலகம் முடிந்து ஹோட்டல் செல்வதற்கு டேக்ஸி பிடிப்பதற்கு மாலை வெளியில் வரவேண்டும் என்று நினைத்தாலே சர்வ நாடியும் அடங்கி விடுகிறது. கண்ணு முன்னாடி வந்து போவோமா இல்லையா என்பது போல் முதல் நாள் குளிர் நினைவில் வந்து போனது. அவ்வளவு மோசமான குளிர். சாலையில் செல்லும் போது பத்தடிக்கு முன்னால் என்ன செல்கிறது என்று தெரியவில்லை. அவ்வளவு smog. (fog +smoke =smog ).
என்னடா குளிர் குளிர் என்று ரொம்ப பம்மாத்துகிறானே என்று நான் என் பாஸை நினைத்தது போன்று நினைத்தீர்கள் என்றால் அடுத்த முறை ஹாலிடேக்கு ஹில் ஸ்டேஷன் எதுவும் செல்லாமல் டிசம்பர் குளிரில் டில்லி முயற்சித்துப் பாருங்கள்.
கரோல் பாகில் உலாவும் தெரு நாய்க்கெல்லாம் கோட் போன்று ஒரு வித கெட்டியான துணியை தைத்து போட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த குளிரிலும் சாலை ஓரம் மக்கள் வானம் பார்க்க கமபளியை போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தனர்.
இம்மை போற்றுதும் என்று நினைத்துக்கொண்டேன்.
சொர்க்கமே என்றாலும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக