புதன், பிப்ரவரி 28, 2024

மஞ்சுமல் பாய்ஸ் 2024


2006 உண்மை சம்பவத்தின் ரீகிரியேஷன். சுற்றுலாவுக்காக கொடைக்கானல் செல்லும் நண்பர்கள் குணா குகையில் ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அங்கிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதை பதைபதைக்கும் ஒரு த்ரில்லர் அனுபவத்தில் கொடுத்திருக்கிறது இந்த மஞ்சுமல் பாய்ஸ்.  



விக் எல்லாம் வைத்துக்கொள்ளாமல் எவ்வளவு கேஸூலாக படத்தில் நடிக்கிறார் இந்த சவுபின் சாஹிர். இவரது அண்மை வரவான அயல்வாசி, ரோமாஞ்சம், இல வீழா பூஞ்சிரா போன்றவை கவனிக்கத் தக்கவை. திருமண வீட்டில் ஒரு நடன நிகழ்ச்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. குடித்து விட்டு முழு வைபில் ஆட்டம் போடும் அந்த ஒன்பது பேரும், கொடைக்கானல் குணா குகையில் சிக்கிக்கொள்வது வரை அதே மோடில் இருக்கிறார்கள்.  

ஒன்பது பேரில் ஒரு நண்பன் மாட்டிக்கொள்ள அங்கிருந்த நண்பர்களுக்கு மட்டும் அல்ல நமக்கும் பதைபதைப்பு தொற்றிக்கொள்கிறது. ஜார்ஜ் மரியான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் தம்தம் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.  

இரண்டே இரண்டு நெருடல்கள். அப்படி ஒரு நிலைமையிலும் சரக்கு வாங்க நிர்பந்திக்கும் போலீஸ் மற்றும் அந்த விபத்திலிருந்து ஒரு எலும்பு முறிவு கூட இல்லது நடந்து வருமாறு அமைந்த இரண்டு காட்சிகள் மட்டும் திருஷ்டி. 

நண்பனை விட்டு அகலாத அந்த ஒரு நட்பு, அப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டாலும் ஒருவர் மாற்றி ஒருவர் மீது பழி போடாத பக்குவம், நட்பிற்கு முன் உயிரை துச்சமென மதித்தது என கற்றுக்கொள்ள இந்த பாய்ஸ் அதிகம் வைத்திருக்கிறார்கள். டக் ஆப் வார் எதிர்பாராத விதமாக கனெக்ட் செய்யப்பட்டிருப்பது அருமை.   

ஒரு விஷயம். பழனி அடிவாரத்தில் நின்று கொண்டு கோவிலுக்கு போகலாமா என்று நண்பன் கேட்க சுபாஷ் மறுக்கிறார். இறுதியிலும் ஓம் முருகா ஷாட் காண்பிக்கப்படுகிறது. குறியீடோ?? 

தியேட்டரில் இது வரை கூஸ்பம்ப்ஸ் உணர்ந்தது இல்லை. இறுதியில் 'மனிதன் உணர்ந்து கொள்ள' என்று ஆரம்பிக்கும் பொழுது தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது. மயிர் கூச்செரிய வைத்து விட்டது. இதுவரை கண்மணி படத்திற்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்த காதல் எமோஷன்களை கச்சிதமாக நட்பிற்கு திருத்தி எழுதியிருக்கிறார் இயக்குனர் சிதம்பரம்.  

சேட்டன் நாட்டிலிருந்து மற்றுமொரு தரமான சம்பவம். 

#manjummalboys #soubinshahir

கருத்துகள் இல்லை: