புதன், பிப்ரவரி 21, 2024

சில்குரி

 


 

மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும் ஒரு மத்திய தர நகரம் தான் இந்த சில்குரி. வட்டம் என்ற கேட்டகிரியில் வருமளவுக்கு படத்தில் போடப்பட்டிருக்கும் ரவுண்டுக்குள் இருப்பது தான் சில்குரி. 



சில்குரியின் விஷேஷம் என்னவெனில், சுற்றுலாத்தலமான டார்ஜிலிங் மற்றும் கேங்டாக் போக வேண்டுமென்றால் அருகில் இருக்கும் ஓரே விமான நிலையம் உள்ள நகரம் இந்த சில்குரி தான். இங்கிருந்து கேங்டாக் நான்கு அல்லது ஐந்து மணி நேரம். சாலை மார்க்கம் தான். டேக்சி தான் பிரதான வருமான இங்குள்ள மக்களுக்கு. போகும் வழியெங்கும் டீஸ்டா என்றொரு நதி அருகிலேயே பயணிப்போம். வாட்டர் ராப்டிங் சமாச்சாரங்கள் இருக்கின்றன. லைப் ஜாக்கெட் கொடுத்தாலும் நமக்கு பேஸ்மன்ட் ஆடுகிறது.  அள்ளி குடிக்கலாம் என்பது போன்ற ஒரு அக்மார்க் தாமிரபரணி டேஸ்ட் இந்த நதிக்குண்டு. கேங்டாக் அடைந்து விட்டால் ட்சோங்கோ லேக், நதுலா பாஸ் எல்லாம் ஒரு மணி நேரப்பயணம். ட்சோங்கோ லேக்கில் யாக் ரைட் உண்டு. நதுலா பாஸ் என்பது சீன எல்லை. எப்பொழுதுமே பனிப்பொழிவு தான். இரவு -15'c வரை கூடச்  செல்லுமாம். எல்லையில் இருக்கும் ஒரு பில்டிங்கை இந்தியாவும் சீனாவும் பொதுவாக பங்கிட்டு காவல் காக்கிறது. மதில்சுவர் தாண்டினால் ஷூட் அட் சைட் ஆர்டர் தான். ஆறுகிலோவுக்கு குறையாமல் ட்ரெஸ் அணிந்து நம்மவர்கள் காவல் புரிகிறார்கள். புத்திசம் தான் மதம். பல மோனஸ்ட்ரிக்கள் இருக்கின்றன. மொட்டை போட்ட புத்த பிக்ஷுக்கள் நமக்கு புரியாத ஒரு பாஷையில் மந்திரம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.  

அதே போல் சில்குரியில் இருந்து டார்ஜிலிங் மூன்றரை மணி நேரம். போகும் வழியில் நேபால் பார்டரில் ஆதார் கார்ட் காமித்து உள்ளே சென்று வரலாம். வாய்ப்பிருந்தால் எல்லையில் காவல் புரியும் கேரளத்து சேச்சிகள் உடன் சம்சாரிக்கலாம். பசுபதிநகர் என்று அந்த மார்க்கெட்டை அழைக்கிறார்கள். சீன ஐட்டங்கள் அனைத்தும் கம்மி விலையில் கிடைக்கும். அதாவது இந்தியாவில் இம்போர்ட் தடை உள்ளவை இங்கு தாராளம். அங்கிருந்து சற்று தொலைவில் ஒரு சுற்றுலாத்தலமான மிரிக் லேக் இருக்கிறது. அப்படியே டார்ஜிலிங். அங்கிருந்து அதிகாலை சூரிய உதயத்தை இமய மலை பின்னணியில் காணலாம். ரெட் பாண்டா கரடி பிரசித்தம். ஆனால் ஜூ வில் மட்டும் தான் காண முடியும. டென்சிங் அவர்களின் சிலை மற்றும் mountaineering இன்ஸ்டிடியூட் பார்த்துவிட்டு வரலாம்.   

இன்னும் பல சுற்றுலாத் தலங்கள் செல்லுவதற்கு ஏதுவான ஒரு நகரம் தான் இந்த சில்குரி. நகரம் முழுக்க ராணுவ வீரர்கள். கையில் துப்பாக்கியுடன் சுத்திக்கொண்டிருந்தார்கள். ஏதேனும் பிரபலம் வருகிறாரா என்று விசாரித்தால் அப்படி ஒன்று இல்லையாம். அன்றாட காட்சிதான் இது என்று ட்ரைவர் அலுத்துக்கொண்டார். என்ன காரணம் எனக்கேட்டால் சில்குரி என்ற இந்த நகரத்தின் மீது சீனா எந்த நேரமும் போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது என்றார். கண்கொத்தி பாம்பாக சீனா இதை கண்காணித்து வருவதன் நோக்கம் இந்த சில்குரியை பிடித்துவிட்டால் கிழக்கில் இருக்கும் அருணாச்சல், மிசோரம், மணிப்பூர்நாகலாந்து, அசாம் என எல்லாமே இந்தியாவிலிருந்து துண்டிக்கப்பட்டு விடும். கணவாய் போல இருக்கும் இந்த சில்குரி தான் கிழக்கில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் இணைப்புப்பாலம். இந்தியாவின் ஒரு பக்கத்தை  கைப்பற்ற தான் இந்த முனைப்பு. ராணுவ வீரர்கள் பதட்டமாக இருக்க மற்றொரு பக்கம் பேட்டரியில் இயங்கும் ஷேர் ஆட்டோவும் ஆர்ப்பரிப்புடன் ஓடிக்கொண்டுதான் இருந்தது.

கருத்துகள் இல்லை: