அரசியல் இல்லை. மலையாள சினிமா. நேரு என்றால் உண்மை என்று அர்த்தம். ஜீத்து ஜோசப் படம். திரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசமாக வெளியாகியது. இருக்கட்டும்.
ஜீத்து ஜோசப் படத்தின் மேல் வைக்கப்படும் எதிர்பார்ப்பே அந்த கடைசி நேர ட்விஸ்ட் தான். ட்விஸ்ட் எண்டிங் க்ளைமாக்ஸ் சீன்ஸ் மூவியில் பெஸ்ட் என்றால் கெவின் ஸ்பேசியின் 'தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ்' என்று சொல்வேன். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அருகில் வைத்து பார்ப்பது திரிஷ்யம். ஒவ்வொரு சீனும் த்ரில்லர் என்றால் இறுதி காட்சி அப்படி ஒரு உணர்வை கொடுக்கும். கிட்டத்தட்ட அவரது பெருமபாலான படங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை தான். ஆனால் ஜீத்துவாலேயே திரிஷ்யத்தின் பின்பு ஏற்பட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதே கண்ணோட்டத்தில் நேருவை அணுகினால் ஏமாற்றமே மிஞ்சும். இதில் அது போன்ற ஒரு சர்ப்ரைஸ் எண்டிங் ஏதும் கிடையாது. ஒரு கோர்ட் ரூம் டிராமா. சொல்லப்போனால் கோர்ட்டில் நடைபெறும் விஷயங்களை சாமானிய மக்களிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆவலில் ஜீத்து இயக்கிய படம் தான் இந்த நேரு.
பார்வையற்ற ஒரு இளம்பெண். வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் ஒருவன் அவளிடம் தவறாக நடந்து கொள்கிறான். குற்றம் சாட்டப்பட்டவர் இன்னார் தானென்று முதலிலேயே நமக்கு சொல்லப்பட்டுவிடுகிறது. ஆனால் எந்த ஒரு சாட்சியுமின்றி எவ்வாறு குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுக்கின்றனர் என்பது தான் நேரு. அந்த பார்வையிழந்த பெண்ணுக்காக வாதாடும் வக்கீலாக மோகன்லால். நாட்டின் பெஸ்ட் கிரிமினல் லாயரான தனது குருவை எதிர்த்து போராடும் சிஷ்யன் பாத்திரம். குருவும் நம்மை ஈர்க்கவில்லை. சிஷ்யனும் ஒரே ஸ்செட்யூலில் படம் முடிக்க வேண்டும் என்ற நோக்கில் நேருவுக்காக அதிகம் ப்ரயத்தனப்பட்டது போன்று தெரியவில்லை. குற்றத்தை நிருபிக்க எடுத்துக்கொண்ட சங்கதிகளும் நம்மை ஈர்க்கவில்லை. ப்ரியாமணிக்கு ஒரு ரோல் கொடுத்திருக்கிறார்கள். எதற்கென்றே புரியவில்லை. கோர்ட் ரூமில் குருவும் சிஷ்யனும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் அனல் பொறி மிஸ்ஸிங். உனக்கு ஒரு சான்ஸ் எனக்கு ஒரு சான்ஸ் என்கிற ரீதியில் வாதம் செய்திருக்கின்றனர்.
ஆனால் கண்ணுக்கு முன்னே அநியாயம் நடந்திருப்பதை அனைவரும் உணரமுடிந்தாலும் சாட்சிகள் இல்லாத காரணத்தால் ஒரு குற்றவாளி எவ்வாறு இந்திய சட்ட நடைமுறையிலிருந்து எளிதாக தப்ப முடிகிறது என்பதும், ஒரு ரேப் விக்டிமை எந்த அளவுக்கு மனதளவில் அட்டாக் செய்து அவரை நீதிமன்றம் பக்கமே திரும்ப முடியாதபடி செய்ய முடியும் என்பதையும், அவற்றையும் தாண்டி தனது மன வலிமையால் மட்டுமே அந்த பார்வையற்ற பெண் குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்பதற்கு உறுதுணையாக நிற்கிறாள் என்பதையும் அழுத்தமாய் பதிந்திருக்கிறார் ஜீத்து.
என்ன இருந்தாலும் கோர்ட் ரூம் ட்ராமாவா, மோகன்லால் சினிமாவை, ஜீத்துவின் சினிமாவா அல்லது சமூக அவலங்களை பறைசாற்றும் ஆவணமா போன்ற கேள்விகளுக்கு நடுவில் சிக்கிக்கொள்கிறது இந்த நேரு.
இவன்,
ஸ்ரீதான்யா ரசிகர் மன்றம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக