பள்ளிக்கால மற்றும் கல்லூரி நண்பர்களை தேடித்தேடி அழைத்து பேசுவது உண்டு.
பள்ளியில் பயிலும்போது PET பீரியடில் கைபிடித்து மைதானத்தை வலம் வந்த நண்பனையும், மதிய நேரம் உணவு உண்ணும் சமயத்தில் அளவளாவி மகிழ்ந்த நண்பனை, கல்லூரியில் காதலர்கள் போல ஒரே நிற சட்டை அணிந்து வகுப்பில் அலப்பறை செய்த நண்பனை, டியூஷன் செல்லும்போது மிதிவண்டியில் பின் அமர்ந்து சேமியா மற்றும் பால் ஐஸ் சாப்பிட்டுக்கொண்டே இருவரும் சேர்ந்து பெடல் போட்ட நண்பனை என ஒவ்வொரு ஞாபகங்கள் முன்னெழும் நேரத்தில் ஒவ்வொருவரையும் வருந்தி அழைத்து பேசுவதுண்டு. படிப்பைத்தவிர எந்த வித பொறுப்பும் இல்லாமல் சுற்றி வந்த காலங்களில் பகிர்ந்து கொண்ட நட்புணர்வு பல பேரிடம் இருப்பதில்லை என்பதை அழைப்பின் போது உணர்ந்துகொண்டேன். என்ன தான் பல காரணங்கள் கூறினாலும் மனது ஏற்பதில்லை. காலமும் சந்தர்ப்ப சூழ்நிலையும் அவர்களை மாற்றியிருக்கலாம். நூறில் தொன்னூறு பேர் உடலளவில் மற்றும் இன்றி மனதளவிலும் தடம் தெரியாமல் மாறியிருப்பார்கள்.
ஆயினும் தேடல் நின்றதில்லை. ஒருவகையில் கடந்து சென்ற அந்த பால்ய நினைவுகளை மீட்டெடுக்கும் உள்ளார்ந்த உணர்வாகக் கூட இருக்கலாம்.
அவ்வாறு தேடிய ஒரு தருணத்தில் பள்ளி கால நண்பன் ஒரு தெளிவைத் தந்தான். மிக நீண்ட நாட்கள் கழித்து பேசிக்கொள்ளும் பொழுது சந்தேகத்திற்கு இடமின்றி கேட்கப்படும் கேள்விகளுள் ஒன்று 'வேற யார்ட்ட பேசியிருக்க?' இன்னாரிடம் பேசியிருக்கிறேன் அல்லது நேரம் கிடைக்கவில்லை என்று பதில் சொல்லும் மற்றவர்களிடமிருந்து இவன் முற்றும் மாறுபட்டிருந்தான்.
'நான் யாரிடமும் பேசுவது கிடையாது' என்றான்.
'ஏன்?'
'ஒரு தடவ என்னோட க்ளோஸ் பிரென்ட் ஒருத்தன கூப்ட்ருந்தேன். உனக்கே தெரியும் அவனும் நானும் அவனும் ஸ்கூல் டைம்ல எவ்ளோ க்ளோசா இருப்போம்னு. ஆனா நான் பேசினப்போ அவன் ரொம்ப மாறியிருந்தான். அவன் மாறினதை என்னால நம்ப முடியலை. சொல்லப்போனா ஏத்துக்க முடியலை. நான் போன் பேசி ரொம்ப நாள் கழிச்சும் அவனோட இந்த சேஞ்ச் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சு. அன்னிலேந்து நன் யாருக்குமே போன் பண்றது இல்லை. அவங்களையும் தர்மசங்கடப்படுத்திட்டு என்னையும் வருத்திகிட்டு அல்லது ஏமாந்துட்டு...அப்டியே விட்டுட்டேன். எனக்குள்ள இருக்கற என்னோட அந்த பழைய நண்பனோட பிம்பம் உடைஞ்சிடாம பாத்துக்குறேன். அந்த மெமரிஸ அப்படியே சேமிச்சு வச்சுக்கணும்னு நினைக்கிறேன்' என்றான்.
என்னவென்று தெரியாத ஒரு அபிரிதமான குதூகலத்தைத் தரும் ஒரு காதலியின் ஞாபகங்களைப்போல அவன் தன் நட்பை புரிந்து கொண்டது ஆச்சர்யம் அளித்தாலும் பெருந்தெளிவை கொடுத்திருக்கிறது.
கடைசியாக உங்களுக்கும் எனக்கும் மிஞ்சி இருக்கிறது இந்த ஞாபகங்கள் மட்டும் தானே. அதை மனதென்னும் ட்ரங்கு பெட்டியில் பாதுகாப்போம். பின் ஒரு நாள் உச்சி முகர்ந்து பார்த்துக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக