செவ்வாய், ஜூன் 13, 2023

ரியல் ஹீரோ


ஒவ்வொரு முறை சோர்ந்து போகும்பொழுதும் அத்தியாவசிய பணியில் தினமும் வேலை செய்து கொண்டு இருப்பவர்களைப் பார்த்து துவண்டு விடாமல் தாராளமாக உற்சாகம் கொள்ளலாம். தூய்மைப்பணியாளர்கள் கூட வாரத்தில் ஒரு முறை விடுமுறை எடுப்பது போல் தெரிகிறது. ஆனால் பால் மற்றும் தினசரி நாளிதழ் போடுபவர்கள் வருடத்தில் ஒரு முறையேனும் விடுப்பு எடுத்து கண்டதில்லை.

போட்டோவில் இருப்பவர் தான் தினசரி பேப்பர் போடும் நபர். பேப்பர் போடுவதற்காகத் தெரு தெருவெல்லாம் சுற்றுவார்கள் என்று மட்டும் புரிதல் இருந்தது. ஆனால் அதை கண்கூடாக பார்க்கும்பொழுது....



மிதிவண்டியில் தான் பேப்பர் போடுகிறார். ஒரு நாள் அதிகாலை எங்கள் வீட்டிற்கு பேப்பர் போட்டுவிட்டு சென்றார். அன்று ஒரு வேலை நிமித்தமாக எங்கள் வசிப்பிடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கும் மற்றொரு இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கும் பேப்பர் போட்டு கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் மிதிவண்டி அழுத்திக்கொண்டிருக்கிறார். பார்த்தவுடன் புன்னகைத்தார். அருகில் சென்று உங்களுக்கு எந்த நோயும் வராது சார் என்று முறுவலித்துவிட்டு கடந்துவிட்டேன். அதுமட்டுமில்லாமல் காலை எட்டுமணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை கம்பெனிக்குள் காண்ட்ராக்ட் தொழிலாளராக பணிபுரிகிறார்.

பிறிதொரு நாள் யோசித்துப்பார்க்கையில் இவர் கொஞ்சமும் ஓய்வெடுக்காமல் இதை எவ்வாறு தினப்படி செயகிறார் என்று ஆச்சர்யமாய் இருந்தது. ஒரு நாள் பணம் வாங்க வந்தவரைப் பிடித்து உட்காரவைத்து கேட்டே விட்டேன்.

'காலைல அஞ்சு மணிக்கு கிளம்புவேன் சார். வீட்டம்மா  நைட்டே சாப்பாடு கட்டி வச்சிடும். தோசை, இட்லி கட்டி வச்சிருக்கிற அன்னைக்கு மட்டும் பேப்பர் போட்டுட்டு கம்பெனிக்குள்ள போய் கேன்டீன்ல சாம்பார் சட்னி வாங்கி சாப்பிடுவேன். கூழ் இருந்துச்சுன்னா உப்பு போட்டு குடிச்சிடுவேன். வீட்லேந்து இந்த ஏரியா வரதுக்கு ஏழு கிலோமீட்டர். பேப்பர் போடுற ஏரியா பாத்தோம்னா சுத்தி சுத்தி ஒரு பத்து கிலோமீட்டர் வந்துடும். ஒரு நாளைக்கு 25லேந்து 30 கி.மீ. வரைக்கும் சைக்கிள் ஓட்டுவேன். கம்பெனிக்குள்ள சொல்ற வேலை செய்றேன். சாயந்தரம் போகும்போது பத்து பதினைஞ்சு வீட்டுல பேப்பர் கணக்கு பண்ணி பணம் வாங்கிட்டு போயிடுவேன். ரெண்டு பொண்ணு சார். ஒன்னு இன்ஜினியரிங். இன்னொன்னு BCA. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி கொடுத்து இப்போ மூணு பெயரன் பேத்தி இருக்காங்க. வயசான காலத்துல முடிஞ்சா நம்மள வச்சி கூழ் ஊத்தட்டும். பெருசா ஒன்னும் தேவை இல்லை. ரெண்டு தோசை சுட்டு கொடுத்தா போதும். சொந்த வீடு தானே. முப்பது வருஷம் ஓடிடுச்சு' என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கிளம்பினார்.

எனக்கு 'பக்' என்று இருந்தது. வெகு சாதாரணமாக ஒரு வாழ்வாங்கு வாழ்க்கையை கையாண்டு கொண்டிருக்கிறார். முப்பது வருடமும் இதே ரொட்டின் வேலை என்றால் ஒரு மாதத்திற்கு 750கி.மீ சைக்கிள் மிதிக்கிறார். இந்த முப்பது வருடமும் சேர்த்தால் 2,70,000 கி.மீ. ஒரு பேச்சுக்கு 2,00,000 கிலோமீட்டர் என்று எடுத்துக் கொண்டால்  கூட அசாதாரணமான எண்ணிக்கை தான். உடல் நலத்திற்கு உடல் நலம். மன நலம் என ஆரோக்யமான ஒரு lifestyle. எளிமையான எந்த வித பெருத்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு வாழ்க்கை. தினம் தினம் உத்வேகம் அளித்து அசரடிக்கின்றனர் இதுபோன்ற  எம்மக்கள்.

நாம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டிய களத்தில் நின்று கொண்டிருக்கிறோம். கோடி தூரம் ஓடி களைத்தாலும் ஆற அமர உண்டு களிக்கிறோமா என்பதை நிதானித்து உறுதிபடுத்திக் கொள்ளவேண்டிய நொடி இது.

குறை கூறாமல் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது. இணைந்து பயணிப்போம்.

 

 

கருத்துகள் இல்லை: