சந்தானத்தின் A1 படத்தில் வரும் இந்த பாடல் தான் தலைப்பு. வித்தியாசமான இசையுடன் A1 படத்தில் கொஞ்சம் ஜாலியான மூடில் வரும் இந்த பாடல் ஒரு படத்தின் தலைப்பாகி நமக்கு வெளிச்சம் போட்டு காட்டும் மறுபக்கம் கொஞ்சம் இறுக்கமானது.
பாலியல் தொழிலாளியின் அன்றாட வாழ்க்கையை இன்னும் சற்று அணுக்கமாக அணுகியிருக்கிறது இந்த மாலை நேர மல்லிப்பூ. அந்தப்பெண் எவ்வாறு அந்த தொழிலுக்கு தள்ளப்பட்டால் என்ற முன்கதைச்சுருக்கம் இல்லை. தேவையுமில்லை. ஒரே கரணம் பணம் மட்டுமே. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படும் பணத்தேவைகள். எதோ ஒரு சந்தர்ப்பத்தில் விலை மாதாக மாறிவிடுகிறாள். அந்த பெண்ணுக்கும் ஒரு தாய் இருப்பாள், குழந்தை இருக்கிறது அதை தாண்டி ஒரு நல்வாழ்வை வாழத்துடிக்கும் மனதிருக்கிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறது இந்த மாலை நேர மல்லிப்பூ.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகனிடமிருந்து தான் செய்யும் தொழிலை மறைத்துவைக்க சொல்லும் பொய்களுக்கான தடுமாற்றம் மற்றும் பதைபதைப்பு என வினித்ரா மேனன் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். சொல்லப்போனால் அவர் இல்லாமல் ஒரு காட்சிகள் கூட படத்தில் இல்லை. கொரோனா காலகட்டத்தில் இவர்கள் பாலியல் தொழிலாளர்கள் என்ன மாதிரியான இன்னலுக்கு ஆளாகியிருப்பார்கள், நாட்களை எவ்வாறு கடத்தியிருப்பார்கள் என்ற ஒன்லைனை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் சஞ்சய் நாராயணன். ரெண்ட் கேட்டும் ஹவுஸ் ஓனர் செய்யும் காட்சி மீண்டும் மீண்டும் வந்து சலிப்படைய வைத்தாலும் அதுதான் உண்மை. ரவை பாக்கெட்டை வைத்து மூன்று நாட்களை கடத்தினேன்; இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கையறு நிலையாக அவள் உதவி கேட்பது கொரோனா காலத்தில் விளிம்பு நிலை மக்கள் பட்ட பாட்டை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் இருக்கிறது அதனால் க்ளையன்ட்டை இரவு வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் என்ற சந்தர்ப்பமும் சூழலும் நாம் கேட்டறியாதது. கர்ணா என்ற சிறுவன் மற்றும் அவனின் பாலியல் தொழில் செய்யும் தாய்; இவர்கள் இரண்டு பேருக்கு இடையேயான உறவு அசௌகர்த்தை நோக்கிச் செல்லும் ஒரு இடைவெளியில் படம் அமைக்கப்பட்டிருக்கிறது.
சுருக்கமாகச் சொல்வதென்றால் அரை மணி நேர சுகத்திற்காக நாம் அறிமுகமாகிக்கொள்ளும் ஒரு பாலியல் தொழிலாளியின் பார்க்க விரும்பாத மீதி இருபத்தி மூன்று மணி நேர வாழ்க்கை தான் மாலை நேர மல்லிப்பூ, ஆஹா OTT தளத்தில்.
#malaineramalipoo #Ashwin #vinithramadhavanmenon

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக