திங்கள், ஜூன் 12, 2023

டெல்லி இன்பச் சுற்றுலா

2001வது வருடம் என்று நினைக்கிறேன். பதினோராம் வகுப்பு. ஜான்ஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. பாளையம்கோட்டை.

பள்ளியில் படித்து கொண்டிருந்த காலத்தில் சுற்றுலா அழைத்து செல்வர். பக்கத்திலேயே பார்க் சென்று ராட்டினம் ஏறி பாப்கார்ன் கொரித்துவிட்டு வருவோமே. அதுபோன்று இல்லை. முதலில் திருப்பரப்பு அருவி வரைக்கும் இட்டுச்சென்றவர்கள். பரவாயில்லை. இவர்களைத்தேற்றிவிடலாம் என்று நம்பிக்கை வந்த பின் அடுத்ததாக ஒன்பதாம் வகுப்பு படிக்கும்பொழுது சென்னை, ஹைதராபாத் என்றனர். அடுத்த வருடம் கோவா. பத்தாம் வகுப்பு என்பதால் அடியேன் புறக்கணித்துவிட்டேன். அதற்கு அடுத்த வருடம் ஆக்ரா டெல்லி என்று களைகட்டியது. எல்லாமே ரயில் பயணங்கள் தான்.



என்னுடைய ஞாபகத்தின் பேரில் சொல்வதென்றால் ஹைதராபாத்க்கு தோராயமாக 800 ரூபாய் மற்றும் டெல்லி சுற்றுலாவுக்கு 2000 ரூபாய். பயணம், தங்குமிடம் ஒரு சில எண்ட்ரன்ஸ் டிக்கட்டுகள் சேர்த்தி இந்த காசு.  கிட்டத்தட்ட 100 அல்லது 120 பேர் இருக்கும். டூர் போன அனைவருமே பத்திரமாகத் திரும்பி வந்திருக்கிறோம். இன்னமும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. மொபைல் போன் இல்லாத காலம். லேண்ட்லைன் போன் அரிதிலும் அரிது. GPSக்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா தான். எப்படி இவ்வளவு தூரம் பிசிரில்லாமல் ஒருங்கிணைக்க முடிந்தது வாத்தியார்களால் என்று ஆச்சர்யம் தான் இன்றும்? ஒவ்வொரு டூரும் குறைந்தபட்சம் நான்கு முதல் பத்து நாட்கள் வரை இருக்கும். பள்ளியில் இருந்து கிளம்பி பேருந்தில் சென்று ரயிலேறி அங்கு ஒரு பேருந்து பிடித்து தங்குமிடம் சென்று மற்றொரு பேருந்து பிடித்து லோக்கல் சுற்றிபார்த்து பின்பு அடுத்த ஊருக்கு. இப்படியே ஊர் ஊராகச் சென்று கண்டு களித்து மீண்டும் ரயில் பிடித்து ஊருக்கு திரும்பி பள்ளியில் வந்து இறக்கி விடுவார்கள். ஒரு வாத்தியரிடமும் மொபைல் போன் கிடையாது. இப்பொழுது இருக்கும் கம்யூனிகேஷன்ஸ் வசதியை ஒப்பிட்டால் அன்று பத்து சதவீதம் கூட கிடையாது. இருந்தும் perfect arrangements.

டெல்லி டூர் என்றது ஒரு சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. பத்தாம் வகுப்பு வரை அரை ட்ரவுசர் தான். சில பேர் ஸ்கூல் வாசல் வரை பேண்டுடன் வந்து கால் சட்டையை கழட்டி புத்தகப் பையில் வைத்து கொண்டு வருவதுண்டு.  டூர் போகும்போது கண்டிப்பாக யூனிபார்ம் தான். அப்பொழுதெல்லாம் ஐடி கார்ட் கிடையாது என்பதால். நினைத்துப் பாருங்கள். கிட்டத்தட்ட நூறு பேர். காஃபி கலர் கால் சிராய் அணிந்துகொண்டு நகர் முழுவதும் வலம் வருவோம். ஏதோ பேரணி போல. அதுவும் மெட்ரோ நகரில். தொடை தெரிவதனால் கூச்சமாக பலர் நெளிவர்.

சென்னையிலிருந்து டெல்லிக்கு குறைந்த பட்சம் முப்பது மணி நேரம் என்று நினைக்கிறன். இரண்டு மூன்று கம்பார்ட்மண்டுகளில் உட்கார்ந்து இருப்போம். ஸ்லீபர் கோச் தான். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து அந்த சிறு சௌச்சால்யவில் காலைக்கடன் முடித்து வாஷ் பேசினில் தன்னர் பிடித்து அங்கேயே குளித்து எப்படி? ஹமாம் சொப் போட்டு குளித்து தண்ணீரை காலி செய்திருப்போம். மற்ற பயணிகள் எழுந்து பார்க்கும்போது தண்ணீர் இருக்காது. நாங்கள் எல்லாம் பிரேஷாக. சில பேர் பாக்கெட்டில் இருக்கும் விபூதி பொட்டலத்தை எடுத்து நெற்றியில் திருமண் எல்லாம் வைத்து கோச்சே ரகளையாக இருக்கும்.

டூரை என்ஜாய் செய்வதற்கு உடல் நிலை எவ்வளவு முக்கியம் என்பது அன்று புரிந்தது. நண்பன் ஒருவனுக்கு காய்ச்சல். கொஞ்ச நஞ்ச காய்ச்சல் அல்ல. அப்படி ஒரு அனல். கண்களெல்லாம் சிவப்பாக இருப்பானோ மாட்டானோ என்கிற ரேஞ்சில் இருந்தான். மற்றொருவன் ஸ்டேஷனில் இருந்த தண்ணீரைப்பிடித்து குடித்து பின்பக்க குழாய்யை திறந்து விட்டிருந்தான். டூர் முடியும் வரை லோபரமைட் மாத்திரையும் டீ பன்னும் தான். ஊருக்கு வந்த பின்பு தான் பொற்றல் அடைபட்டது என்றால் பார்த்துக்கொள்ளலாம். ஸ்பஷ்டமாக ஞாபகமிருக்கிறது கே டி‌வி அப்பொழுதுதான் தொடங்கினார்கள். புதுப்புது படங்களாக எட்டு மணிக்கு. ஒரு தமிழர் ஹோட்டலில் செங்கோட்டை படம் பார்த்தது அலையலையாகத் தெரிகிறது.

ஜந்தர் மந்தர் என்று நினைக்கிறேன். எல்லோரையும் சுற்றிப்பார்த்து வரச்சொல்லிவிட்டனர். ஒரு ரவுண்ட் அடித்து வந்து பார்த்தால் கையில் இருந்த சோனாட்டா வாட்ச் காணோம். 650 ரூபாய். பரீட்சை எழுதுவதற்க்காக அப்பா வாங்கி கொடுத்தது. எனக்கு அழுகை வார ஆரம்பித்துவிட்டது. நண்பனிடம் கூறினேன். ஷெர்லாக் போல் கடைசியா எப்போ பாத்த?’ என்றான். ஒவ்வொரு இடமாகத்தேடினோம். கழிவறையில் இருந்து வெளியே வரும்போது நெரிசலில் ஒருவன் கை என் கைய்யை பிடித்தது ஞாபகம் வந்தது. அங்கு விழுந்திருக்கலாம் என்று உள்ளே சென்று மூக்கைப் பொத்திக்கொண்டே துழாவினோம். கிடைக்கவில்லை. பார்க்கில் கிடந்த மரக்குச்சி ஒன்றினை வைத்து யூரினல் குழாயின் உள்ளே கிளறி, ஒரு நிமிடம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கையில் பெருத்த அசௌகர்யமாக இருந்தது. கையைப் பிடித்த நொடியில் கழற்றி விட்டான் என்பது மெதுவாகத்தான் புரிந்தது. ரேடியமெல்லாம் இருக்கும். இரவு நேரம் ஒளிரும். மீதி டூர் சற்றே சோகமாகத்தான் கழிந்தது.

அந்த சோகத்தை விட ரொட்டி பருப்பு வேறு இன்னும் கவலையளித்தது. அந்த கவலையை போக்கும் விதமாக ஹோட்டல் தமிழ்நாடு என்னும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றனர். சாம்பார், ரசம் என்று களைக்காட்டியது. கட்டுரையின் நோக்கத்திற்கு வருகிறேன். உம்மென்றிருந்த என்னை mood lift செய்தது அங்கு பரிமாறப்பட்ட பொரியல்தான். கோவக்காய் பொரியல். இல்லை. வறுவல் என்று சொல்லலாம். இதுவரை கோவக்காயே சாப்பிட்டது கிடையாது. ஆனாலும் சுவையாக இருந்தது. காய்கறியின் பெயர் கூடத்தெரியவில்லை. பரிமாறுபவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு எங்குமே அதுபோல் ஒரு கோவக்காய் பொரியல் சாப்பிட்டதில்லை. ஆங்கோர் காட்டிடை பொந்தினில் வைத்தேன் என்பது போல் அது கனன்று கொண்டே தான் இருந்தது.

கடந்த வாரம் அந்த கனல் பற்றி எரிந்து அருகில் இருக்கும் காய்கறி கடை வரை சென்று ஒரு கிலோ கோவக்காய்யை வாங்க வைத்தது. கோவக்காய் சாப்பிடுவியா?’ என்று கேட்டதற்கு குழந்தைகள் உவ்வே என்றனர். கற்பூர வாசனை தெரியவில்லை என்று செறுமிக்கொண்டு, கெமிக்கல் போக நன்றாக கழுவி நீள நீளமாக அரிந்து ஒரு வாயகன்ற வாணலியில் என்னை ஊற்றி முழுவதையும் சலசலப்பு அடங்கும் வரை பொரித்து எடுத்தேன். வாயகன்ற வாணலி என்பது முக்கியம். எண்ணை போக வடித்து தனியாக ஒரு தட்டில் வைத்துவிட்டேன். இரும்பு கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்தபின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கினேன். வெங்காயம் வெட்கம் கொண்டு சிவந்தபின் பொரித்து வைத்த கோவைக்காய்யை அதனுடன் சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் அடுப்பை அணைத்துவிட்டேன்.

ஹோட்டல் தமிழ்நாட்டில் பார்த்த அதே டெக்ஸ்டர். சுவைத்துப் பார்த்தேன். பொரித்தும் வதங்கியும் புளிப்பும் கொதப்பலுமாக கோவக்காய் வேறு ஒரு தினுசில் பிரமதாமாக வந்திருந்தது. குளித்து குடி என்னும் சொல்லுக்கேற்ப குளித்துவிட்டு வந்து பார்த்தால் சட்டி காலி. நீ முந்தி நான் முந்தி என்று கபளீகரம் செய்துவிட்டனர்.

 

 

கருத்துகள் இல்லை: