வியாழன், ஜூன் 08, 2023

சமத்துவம்


தினமும் அலுவலகத்தில் பார்க்கும் மனிதர் அவர். ஆபிஸ் முழுவதும் கூட்டி பெருக்கி மொழுகி, குப்பைகளை உடனுக்குடன் களைந்து, கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கும் பணி அவருடையது. மிகவும் சின்ஸியரானவர்.செய்யும் வேலைகளைத் திருத்தமாகச் செய்பவர். OP அடிப்பதில்லை. வயது அறுபதை நெருங்கியிருக்கலாம். நம் தந்தையை நியாபகப்படுத்தும் வயது முதிர்வு. 



எங்கேனும் எதிரில் தென்பட்டால் 'வணக்கம் சார்' என்பார். இந்த 'சார்' என்பதில் எனக்கு எப்போதுமே  உடன்பாடு இருந்தது இல்லை. அதுவும் அத்தனை வயது முதிர்ந்தவர் சிறு வயதினரிடம் 'சார்' என்று விளிப்பது சற்று அல்ல அதீத தர்மசங்கடமான ஒன்று . வேலை செய்யும் இடத்தில் அப்படித்தான் என்று என்ன தான் நாம் சால்ஜாப்பு சொன்னாலும் மனது ஏற்க மாட்டேன் என்கிறது. வயத்துக்குண்டான மரியாதையம் கண்ணியமும் மிகவும் அவசியம். இதே சிறு வயதுக்காரர் பதிலுக்கு அவரை 'சார்' என்று விளிப்பாரா என்றால் கண்டிப்பாக இல்லை. அவர் பேரைச் சொல்லி விளிக்கின்றனர். இது என்னளவில் ஏற்புடையதன்று.

இதை விட ஒரு உறுத்தலான விஷயம். 'வணக்கம் சார்' என்று கூறும்போது அவர் என்றுமே என் கண்ணை நோக்கியதில் இல்லை. கை உயர்ந்து தலைக்கு அருகில் சென்று 'வணக்கம்' சொல்லும். அவரது கண் என்னை நோக்காது தரையில் நிலை குத்தி நிற்கும். தலையும் கவிழ்ந்தே இருக்கும். அந்த ஒரு கணம் இதுகாறும் இந்த சமூகம் பயிற்றுவித்து கொண்டிருக்கிற பல சமூக ஏற்ற தாழ்வுகளை என்னுள் மீளூட்டி மிரள வைக்கிறது.

கண் நோக்கி பேச இயலாத நிலைமைக்கு காரணமாக, கல்லாதோர் என்ற எண்ணத்தை காட்டிலும் அல்லது பொருளாதாரத்தில் நலிந்தவர் என்ற தாழ்வு மனப்பான்மையை காட்டிலும் அவரை துரத்திக்கொண்டிருப்பது சாதி பாகுபாடு மட்டுமே. அவருடைய 'வணக்கம் சார்' இதுபோன்ற  பல கேள்விகளை களைத்துப் போட்டு என்னிடம் குற்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அவரது தயக்கத்தை போக்கும் பொருட்டு அவரை காணும் இடங்களில் எல்லாம் இயல்பானதொரு உரையாடலை ஆரம்பிப்பேன். முதலில் ஓரிரு வார்த்தையில் பதில் கூறி ஒதுங்கியவர் நாளாக நாளாக தன்னியல்பில் பேசத் தொடங்கினார். 

இப்பொழுதெல்லாம் அவர் எதிர்படுகையில் வணக்கம் வைப்பதில்லை. மாறாக மெலிதானதொரு புன்னகை செயகிறார். 

மலரட்டும்.மனிதம் 



கருத்துகள் இல்லை: