சனி, ஜூன் 03, 2023

அயல்வாசி

 மலையாள படங்கள் அதியசைக்கவைக்கின்றன என்பதில் சந்தேகமே இல்லை என்று மீண்டும் மீண்டும் நிருபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.


ஹீரோயிசம் கிடையாது. கலர் கலர் சட்டை போட்டு கொண்டு அயல்நாடு டூயட் கிடையாது. அந்தரத்தில் பறந்து பறந்து செய்யும் சண்டை கிடையாது. பெண்களை வணிக பொருட்களாக காட்சிப்படுத்துதல் இல்லை.  இன்னும் என்ன என்னென்ன மசாலா வஸ்துக்கள் உண்டோ அதுவெல்லாம் அங்கே இல்லை. பெரும்பாலும் இல்லை என்று சொல்லலாம்.

அந்த மாதிரியான ஒரு படம் தான் அயல்வாசி.




பட்ஜெட் இரண்டு மூன்று கோடி தான் இருக்கும் போல் தெரிகிறது. ஷோபின் நடித்திருக்கிறார். குடும்ப கதை போல் விரியும் அயல்வாசி எடுத்துக்கொண்ட களம் வேறு என்ன என்று தெரியும்பொழுது 'அடேய், இப்படியெல்லாமா படம் பண்ணுவீர்கள்?' என்று கேட்கத்தோன்றுகிறது. தோன்றியது மட்டுமில்லாமல் அதை சுவாரஸ்யம் குறையாமல் ஹாஸ்யத்துடனும் நெகிழ்ச்சியுடனும் படம் பண்ணியிருக்கிறார் அறிமுக இயக்குனர் இர்ஷாத்.

மிடில் க்ளாஸ் பேமிலி. மாமியார் பொருட்டு கணவனைப்பிரிந்து வாழும் மனைவி, திருமணம் ஷீயா காத்திருக்கும் தங்கை, அதை நடத்த ஆகும் செலவு, இந்த நேரத்தில் குழந்தை மருத்துமனையில் நிமோனியா பொருட்டு அனுமதி, கையில் காசு இல்லாத கையறு நிலை. படம் எவ்வளவு சோகமாக சென்றிருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு திருமண நிச்சய நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் சின்ன ஸ்க்ராட்ச் ஆகி நிற்கிறது. அதன் பொருட்டு ஏற்படும் மனஸ்தாபத்தை களைய 'மூனைத் தொட்டது யாரு? என்கிற பாணியில்,  'ஸ்கூட்டரை பங்கம் பண்ணியது யாரு?' என்ற பங்கம் பண்ணியிருக்கிறார்கள்.

படம் முழுவதும் சிரிக்க வைக்கும் காட்சிகள் விரவி கிடக்கின்றன. 'சுவிங் கம்' பாடல் மற்றும் அதை படமாக்கிய விதம் அதகளம். இவரா அவரா என்று ஒவ்வோரையும் சந்தேகித்து அதனால் வரும் தொந்தரவுகள் என எல்லாவற்றையும் மிக light hearted ஆக காட்சிப்படுத்திய விதம் அருமை. படத்தின் இறுதி வரை, இறுதி வரை என்றால் 'தேங்க் யூ' போடுவதற்கு இரண்டு நொடிக்கு முன்புதான் யார் இடித்தார்? என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கான ஹிண்ட் படத்தின் நடுவிலேயே அப்பட்டமாக சொல்லாயிருந்தும் கூட கதையோட்டத்தில் நம்மால் உணர முடியவில்லை. தேர்ந்தெடுத்து த்ரில்லரில் கணிக்கப்படும் யுக்தியான 'back  ரெபெரென்ஸ்'சை மிகச் சாதாரண இந்த கதை கருவிற்கு உபயோகித்திருப்பது மற்றுமொரு ஆச்சர்யம்.  இர்ஷாத் ஒரு அருமையான கதை சொல்லி என்று நிருபிக்கிறார்.

இன்முகமாக ஒரு மனநிறைவுடன் தியேட்டரில் இருந்து வெளிவந்து பல காலம் ஆகிவிட்டது என்று நீங்கள் உணர்ந்தால், 'netflix' இல் வெளியாகியிருக்கும் இந்த 'அயல்வாசியை' ஜாலியாக ககுடும்பம் சகிதமாக டிக் அடிக்கலாம்.

கருத்துகள் இல்லை: