செவ்வாய், ஜூன் 27, 2023

பாவக்கதைகள்

 

கொஞ்சம் லேட் தான் என்றாலும் worth watch.

OTT வந்தது தான் வந்தது. ஊர்பட்ட வெபசீரிஸ்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அத்தனவற்றையும் பார்க்காமல் குற்ற உணர்ச்சி வேறு மேலிடுகிறதை தவிர்க்க முடியவில்லை.

அந்த வரிசையில் பாவக்கதைகள் பேசப்படவேண்டிய ஒன்றுதான்.

நான்கே நான்கு எபிசோட் தான். ஒவ்வொன்றும் பிரபலமான இயக்குநர்களால் இயக்கப்பட்டிருக்கிறது. சுதா கோங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன்.



சுதா கோங்குராவின் கதை ஒரு திருநங்கையை பற்றியது. திருநங்கையாக காளிதாஸ் ஜெயராம். எந்த காரணமும் இன்றி திருநங்கையாக உணர ஆரம்பித்த தருணம் முதல் ஊரே அவனை ஒதுக்கிவைக்கிறது. அவன் மீது நட்பாக இருக்கும் சாந்தனுவையும் ஊர் கேலி பேசுகிறது. சாந்தனு ஊரில் இல்லாத நாளில் அவனை கொன்றுவிடுகிறார்கள். பெற்றோர் உட்பட இதற்கு உடந்தையாக இருப்பது நமது சமூகம் திருநங்கைகள் மீது கொண்டுள்ள பேதத்தை பிரகடனம் செய்கிறது. திருநங்கையின் நட்பை, உணர்வை பிரதிபலிக்கும் வகையில் இது ஒரு முக்கியமான படைப்பாகிறது.

விக்னேஷ் சிவனின் எபிசோட் ஜாலியாக சென்றாலும் அப்பாவே மகளை கொள்ளும் அந்த ஒரு நிமிடம், சாதி வேரூன்றிருக்கும் ஆழத்தை அகழ்ந்து காணிக்கிறது. எப்பொழுதும் போல ட்விஸ்ட் எண்டிங் க்ளைமாக்ஸ். சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் என கலகலப்பான ஒரு எபிசோட். கல்கி கோச்செலின் தன்  பெயரை சொல்லும் நேரம் குபீர் சிரிப்பு கியாரண்டி.

கௌதம் மேனனின் கதை கொஞ்சம் சென்சிடிவ் சப்ஜக்ட். இயக்கி நடித்திருக்கிறார். கடைக்குட்டியான ஏழாம் வகுப்பு படிக்கும் பொன்னுத்தாயி மேல் உயிராய் இருக்கிறார். ஒரு கும்பலால் அந்த சிறு குழந்தை கற்பழிக்கப்படுகிறது. என்னவென்று விவரம் அறியாத வயதில் ஏற்படும் இந்த ரணத்தை களைய குடும்பம் தடுமாறுகிறது. 'அவள் முன்பு நிர்வாணமாக நிற்பதைப் போன்று உணர்கிறேன்' என்று கெளதம் சொல்லும் இடம் இன்னும் இறுக்கமாகிறது. இரண்டு காலுக்கு நடுவில் இல்லை கௌரவம், அது சிறகை விரித்து உயர்ந்து பிறப்பதில் தான் இருக்கிறது போன்ற காத்திரமான வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

வெற்றிமாறனின் 'ஓர் இரவு' எபிசோட் நம்பிக்கை துரோகத்திற்கு அத்தாட்சி. காதல் திருமணம் செய்துகொண்ட மகள், சாதி பெருமை பேசும் தன் வீட்டை விட்டு ஓடிவிடுகிறாள். சந்தோஷமாய் காலம் தள்ளும் மகள் சாய்ப்பல்லவியைத் தேடி தந்தை பிரகாஷ் ராஜ் வருகிறார். பழசை மறந்து தன்னோடு வீட்டுக்கு வா என்கிறார். நிறை மாத கர்ப்பிணிக்குபிறந்த வீட்டில் வளைகாப்பு செய்ய வேண்டும் என்று அழைக்கிறார். தயக்கத்துடன் வரும் சாய்ப்பல்லவிக்கு அவள் பிறந்த வீட்டிலேயே நேரும் துயரம் கொடூரமானது. நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் மேலதிக பதைபதைப்பை நமக்குத் தருகிறது.

நான்கு எபிசோடில் எது மேல் கீழ் என்று பார்க்க மனமில்லை. ஏனெனில் ஒவ்வொரு எபிசோடும் எடுத்துக்கொண்ட பேசுபொருள் நீங்களும் நானும் அவதானித்து விவாதிக்க வேண்டிய ஒன்று தான்.

10/10

கருத்துகள் இல்லை: