விகடனின் ஆகப்பெரும் வாசகன் என்ற முறையில் எனக்கு பெருமைதான் என்றாலும் இரண்டு மாதங்கள் முன்பு வந்த 'ருத்ரதாண்டவம்' சினிமாவின் விமர்சனம் சற்றே அந்த நம்பிக்கையை அசைத்து பார்க்கிறது.
நண்பர்கள் சிலரின் கண்ணோட்டத்தில் 'ருத்ரதாண்டவம்' படம் நன்றாகவே இருக்கிறது என்று அறிந்திருந்த வேளையில், வெறும் 29 மதிப்பெண்கள் மட்டுமே விகடன் கொடுத்திருந்த அதிர்வில் சற்று குழம்பித்தான் போயிருந்தேன். என்னுடைய To Do லிஸ்டில் ஓரிரு தினங்கள் முன்பு டிக் அடிக்கப்பட்டது.
படத்தை பார்த்த வரையில் அதன் கதையாக நான் புரிந்து கொள்வது இதைத்தான். மாநில கட்சியின் தலைவர் போதைப்பொருள் கடத்தல் வேலையில் ஈடுபடுகிறார். வட சென்னையின் ஒரு பகுதியில் போதைப்பொருள் பரிமாற்றத்தை தடுக்கும் பொருட்டு அங்கு மாற்றாலகிப்போகும் இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் (கதாநாயகன்), பஜாரில் போதைப்பொருள் விற்கும் இரு சிறுவர்களை விரட்டி பிடிக்கிறார். அந்த நிகழ்வின் விபத்தில் சிறுவர்களுக்கு அடிபடுகிறது. அவர்களுக்கு மருத்துவச்செலவும் செய்து போதைப்பொருள் கேஸில் FIR போடாமல், பெட்டி கேஸில் அவர்கள் சார்பாக ஸ்டேஷனில் அபராதமும் கட்டி அறிவுறுத்தி பெற்றோர்களுடன் அனுப்பிவிடுகிறார். ஆனால் ஒரு சில நாட்களில், புது போதை பொருளை முயன்று பார்க்கும் முயற்சியில் ஒரு சிறுவன் வலிப்பு வந்து இறந்து விடுகிறான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த கட்சியின் மாநிலத்தலைவர் இன்ஸ்பெக்டரை பழி வாங்கும் பொருட்டு, அவர் தாக்கிய காரணத்தினால் தான் அந்த சிறுவன் இறந்தான் என்று வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியசெய்கிறார். இதனால் ரிச்சர்ட் கைது செய்யப்பட்டு வேலையும் இழந்து மனைவியையும் பிரிந்து சிறையில் துன்பப்படுகிறார். அந்த பொய் வழக்கிலிருந்து வெளிவரும் பொருட்டு ரிச்சர்ட் மற்றும் தம்பி ராமையா ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று துலக்குகின்றனர். இறந்துபோன அந்தச்சிறுவன் ஞானஸ்தானம் பெற்றிருப்பதினால் இந்துமதத்தின் கீழ் வரும் சாதியின் பெயரால் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்தமுடியாது என்ற வாதத்தை முன்னிறுத்தி தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கும் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்கை முறியடிக்கிறது. மேலும் இதுபோன்று ஞானஸ்தானம் பெற்று இருபக்கமும் கிடைக்கும் சலுகைகளை பெற்றுக்கொள்ளும் மக்களை கிரிப்டோ கிறிஸ்டியன்ஸ் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது சான்றிதல்களில் முருகன் என்றிருக்கும். ஆனால் ஞானஸ்தானம் பெற்ற பிறகும், தங்கள் அடையாளத்தை பகிரங்கமாக துறக்கமாட்டார்கள். (மேலதிக விவரத்திற்கு தனிப்பெட்டியில் வரவும்)
விகடனின் விமர்சனத்தில் 'ஒடுக்கப்பட்ட மக்களின் அரணாக நிற்கும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் மீது போலி பிம்பம் கட்டமைக்கும்போதுதான் சட்டம் மீதான அவரின் அக்கரையிலுள்ள உள்நோக்கம் வெட்டவெளிச்சமாகிறது' என்று வெளிவந்திருக்கிறது. PCR சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைத்தான் தவறு என்று இயக்குனர் கூறியிருக்காரே ஒழிய அந்த சட்டமே தவறு என்று எங்குமே கூறவில்லை. தவிர ரிச்சர்டுக்காக நீதிமன்றத்தில் வாதாடும் வக்கீல் கூட தான் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் தான் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். மேலும் நாடே கொண்டாடப்படவேண்டிய சட்ட மேதை அம்பேத்காரை ஒரு சாரார் மட்டுமே அரசியல் லாபநோக்கங்களுக்காக தங்களுக்கு சொந்தமாக்கி கொண்டது எப்படி நியாயமாகும் என்ற தர்க்க ரீதியான வாதத்தை முன்வைக்கின்றார். மேலும் கடந்த தலைமுறையை காட்டிலும் தற்கால இளைஞர்களிடம் போதை மருந்து எந்த அளவுக்கு பரவலாக கிடைக்கிறது என்றும் அதன் தாக்கத்தினால் இன்றைய இளைய சமுதாயம் எப்படி சீர் கெட்டுப்போகின்றது என்றும் காட்சிப்படுத்தியுளார்.
வசனங்கள் மற்றும் மிகை நடிப்பு போன்ற சில குறைகள் இருந்தாலும் படம் பார்க்கும் எவருமே படம் சொல்ல வந்த கருத்தை தவறாக கருதக்கூடிய அளவில் எங்குமே காட்சிகள் இல்லை. அண்ணாத்தே படத்திற்கு 39 மதிப்பெண்கள் கொடுத்திருக்கும் நேரத்தில் இதற்கு சற்றேற்குறைய 40 மதிப்பெண்களாவது கொடுத்த்திருக்கலாம். வெறும் 29 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்திருக்கும் விகடனின் விமர்சனக்குழுவின் உள்நோக்கம் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகிறது.
லோ காஸ்டிங் லோ பட்ஜட் சினிமாவை இந்த அளவுக்கு ஒரவஞ்சனையுடன் கொஞ்சமும் முதிர்ச்சி இல்லாமல் விமர்சித்திருக்கும் விகடனுக்கு பொன் மகள் வந்தாள், மற்றும் சூரரை போற்று போன்ற படங்களின் காட்சிப்படுத்தபட்டிருக்கும் தற்குறித்தனங்களை விமர்சிக்கும் தைரியம் இருக்கிறதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக