கடந்த மாதம், என்னுடன் முந்தைய நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு நண்பர் reference லெட்டர் எழுதிக்கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தார். Reference லெட்டர் எழுதுற அளவுக்கு எனக்கு வயது ஆகவில்லையே என்ற அதிர்ச்சியில் என்ன ஏது என்று விசாரித்தபொழுது வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கப்போவதாகவும் அதற்கு படிப்பு மற்றும் வேலை சம்பந்தப்பட்டவர்கள் reference கொடுக்க வேண்டும் என்றும் விளக்கினார். நீங்கள் என்னுடன் வேலை பார்த்தவர் என்ற முறையில் என்னைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றையும் இந்த படிப்புக்கு நான் எவ்வாறு உகந்தவனாக இருப்பேன் என்பதையும் எழுதலாம் என்றும் கூறினார். மேலும் எதற்காக அந்த படிப்பை நாம் தேர்ந்தெடுத்தோம் என்று ஒரு SOP (Statement of Purpose), இந்த படிப்பினால் என்ன வகையான திறமைகளை வளர்த்துக்கொள்ளுவீர்கள், இந்த படிப்பின் மூலம் உங்கள் நாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எவ்வாறு உதவிகரமாக இருப்பீர்கள், என்ன முன்னேற்றத்தை கொடுப்பீர்கள் என்று பல கேள்விகள்; அதற்கு தோராயமாக 500 வார்த்தைகளில் கட்டுரை எழுதி விண்ணப்பபடிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் விளக்கினார். அடேங்கப்பா என்றிருந்தது. நாட்டின் முன்னேற்றம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்று கூறும் நாம் அவர்களை நெறிப்படுத்த என்ன முயற்சிகளை எடுத்தோம் என்று யோசித்திருக்கிறோமா?. அதுகூட வேண்டாம். நாம் படிக்கும் படிப்பை விரும்பிதான் தேர்ந்தெடுக்கிறோமா?, அந்தத்துறையில் என்ன முன்னேற்றத்தை கொடுக்கப்போகிறோம் என்று குறிக்கோளுடன் தான் நாம் நம்முடைய கல்லூரியில் காலடியெடுத்து வைத்தோமா என்றால், 99 சதவீதம் இல்லை என்றே பதில் வரும்.
நிற்க.
கடந்த வாரம் எங்கள் சுற்றுவட்டாரத்தில் ஒரு விபத்து நடந்தது. நால்வழிச்சாலையில் மீடியனை தாண்டும் நேரத்தில் கவனக்குறைவாக எதிர்புறமாக பார்த்தது சாலையைக்கடக்க இறங்கியபோது டேங்கர் லாரியில் அடிபட்டு ஒரு பெண் இறந்துவிட்டார். மிக வருந்தத்தக்க இந்தத்துயரச்செய்தியால் வட்டாராமே சோகத்தில் மூழ்கியது. இதுசம்பந்தமான செய்தி வாட்சப்பில் வந்ததால் விழிப்புணர்வு பொருட்டு வீட்டுக்கருகில் குறுக்கு மறுக்காக சாலையில் ஓடி விளையாண்டுகொண்டிருந்த சுட்டிகளை கூப்பிட்டு கொஞ்சமே கொஞ்சமாக விளக்கிக்கூறினேன். சேர்ந்தாற்போல் எல்லோரும் 'உச்' என்று வருத்தப்பட்டனர். அதில் ஒரு வாண்டு கூறியது, "ஏன் நாம வேகமாக போற வண்டிக்கு தனியா, பஸ்ஸுக்கு தனியா, இதுமாதிரி நடக்கிறவங்களுக்கு தனியா ரோட் போட்ருக்கலாமே. அப்புறம் இந்த மேல ஏறிப்போவாங்களே, அது மாதிரி இரும்புல ஒரு பாலம் போட்டா இந்தமாதிரி ஆக்சிடென்ட் நடக்காதுல்ல" என்று கூறியது. வயது ஏழிருக்கலாம். ஒரு விபத்து, அந்த நிகழ்வை எதிர்கொண்டு வருந்தி கடந்தவிதம், பின் அதற்கு BRTS (Bus Rapid Transit System), Foot over Bridge என அதற்குத்தெரிந்த மொழிகளில் ஒரு தீர்வையும் இரண்டு நிமிடத்தில் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டது அந்த சுட்டி.
என்ன ஜாதி, என்ன கேட்டகிரி, என்ன மதம் என்று அப்பிளிக்கேஷன் பாரத்தில் நாம் நிரப்பும் வரையும், குழந்தைகளின் திறமை எதில் உள்ளது? அதில் அவனை/ளை முன்னேற்ற என்ன செய்யலாம் என்று பெற்றோர்கள் யோசிக்காத வரையிலும் நாட்டின் முன்னேற்றம் ஏட்டளவில் மட்டுமே இருக்கும்.
குழந்தைகள் என்னவோ இந்த சமூகத்தின் பிரச்சினைக்கான தீர்வுகளையும், நாட்டின் வளத்தை முன்னேற்றும் திட்டங்களையும் இயற்கையாகவே கொண்டிருக்கிறார்கள். நாம் தான் அவர்களை டாக்டர்களாகவும், இன்ஜினீயர்களாகவும் பணித்து முளையிலேயே கருக்கிவிடுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக