ஒரு பக்க அளவில் உள்ள கற்பனையான 200 வார்த்தைகளால் என்ன கொடுத்துவிடமுடியும்?
ஆண்டாண்டுக்கும் ஏன் தலைமுறை தாண்டியும் படித்து தெரிந்துகொள்ளவேண்டிய, காலச்சக்கரத்தில் உறைந்துபோன உண்மைச்சரித்திரத்தை பரிசாக கொடுக்க முடியும்.
5 வார்த்தைகள். அதை கோர்வையாகத்தொடுத்து 200 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு புனைவு வரையும் போட்டி. பதினைந்து நிமிடங்களில் புனைந்தது. போட்டியில் முதல் பரிசை தட்டி வந்துள்ளது. பரிசாக 'காவல் கோட்டமும், வால்கா முதல் கங்கை வரை' புத்தகங்கள். போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தேர்வர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த ஐந்து வார்த்தைகளை தொடுத்து சமைத்த கதை கீழே.
அவங்க வீட்டுபிள்ளை
தமிழழகனுக்கு அந்த காலை அவ்வாறு விடியும் என்று அவனே எதிர்பாராதது. இரவு அவனோடு படுத்து உறங்கிய இளைய மகன் நேயனை காணவில்லை. அவனது குடும்பமே அந்த நடைபாதையில் தான் படுத்து உறங்கும். பக்கத்து தெருவில் இருந்த பாழடைந்த பங்களாவை உறைவிடமாக்கிக்கொள்ளாலாம் என்று கூறியபோது அது அவனது மனைவி இலக்கியாவுக்கு பிடிக்கவில்லை. ஏழை என்றாலும் பணக்காரன் என்றாலும் மீனாட்சி கோடு கிழித்தபின் சுந்தரேஸ்வரர் அதைத்தாண்டுவதில்லை எனும்போது தமிழழகன் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த வழியாக செல்வோர் போடும் மீந்த உணவை உண்டுதான் அந்த குடும்பமே உயிர் வாழ்ந்தது. பெரிசாக சொல்லிக்கொள்ள உறவுகள் ஏதும் இல்லாததால் அந்த நடைபாதையே கதி என்று அந்த குடும்பம் கிிடந்தது.
இருந்தாலும் இளைய வளவல் என்ற காரணத்தினால், நேயனை முழு அன்போடு அந்த குடும்பம் நேசித்தது. மனைவி இலக்கியாவுக்கு இதுவரை மூன்று முறை பிரசவம் ஆகியிருந்தது. எல்லாமே இதே நடைபாதையில் நடந்த சுகப்பிரசவம். அதிலே நேயன் தான் கடைக்குட்டி. பிறந்ததிலிருந்து பாலைத்தவிர வேறு எதுவும் குடிததில்லை. அதுவும் ஒரு பெரியவரின் கரிசனத்தில் கிடைக்ககும் வேதா பாக்கெட் பால். ஜில்லென்று இருக்கும் பாக்கெட்டை பல்லாலேயே கடித்து குடித்துவிடுவான் நேயன். குடும்பமே எச்சில் உணவுகளை உண்டாலும், நேயனுக்கு எப்போதுமே இந்த பாக்கெட் பால் தான். அவ்வளவு அன்புடன் சீராட்டி வளர்த்த நேயனின் பிரிவு அந்த குடும்பத்தையே அந்த காலை வேளையில் புரட்டி போட்டிருந்தது.
தமிழழகனும் இலக்கியாவும் நாலு கால் பாய்ச்சலில் நேயனைத்தேட ஆரம்பித்தனர். எதிரில் தென்பட்ட இளங்கிள்ளி மற்றும் எழில்வேந்தனிடம் விசாரித்தனர். வயதான அந்த இருவர் தான் ஒருவகையில் அந்த தெருவுக்கே பாதுகாப்பு. இருவரும் தெரியாது என்று சொல்லவும் இலக்கியா ஓடாது நிற்கும் காருக்கு அடியில் உறங்கி கொண்டிருக்கும் உணர்வுக்கினியாள் மற்றும் குணமங்கையிடம் நேயனின் பிரிவை தாளாது அரற்றினாள். ஆனால், தமிழழகன் அவனது உள்ளுணர்வின் பேரில் அந்த பாழடைந்த பங்களாவை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் வேகமாக ஓடினான். அவன் எதிர்பார்த்தது போலவே அங்கு நேயன் கிழிந்து போன பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.
நேயன் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் ‘லொள், லொள்’ என்று உரக்க குறைத்துக்கொண்டே அந்த நாய்கள் குடும்பம், மீண்டும் நடைபாதையை நோக்கி ஓடத்தொடங்கியது.
அந்த ஐந்து வார்த்தைகள் - "குடும்பம்-உறவு-அன்பு-பிரிவு-மகிழ்ச்சி"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக