இந்த ஹோட்டல் புதுசா இருக்கே? சாப்டீங்களா? நல்லாருக்கா? அப்டினு கேட்டா, அந்த நண்பர் சொல்ற பதில் சுவாரஸ்யமா இருக்கும். "அது எப்படி இருக்குன்னே தெரில. அதுல நம்ம போய் முதல்ல சாப்பிடறத விட யாரவது ஒருத்தர் சாப்பிட்டு நல்லாருக்கா நல்லால்லைய்யான்னு சொல்லுவாங்க. அப்ப போய்க்கலாம்" அப்டின்னுவார்.
அது மாதிரி "என்னங்க சார் உங்க சட்டம்?" படத்தோட ட்ரைலர் பாத்தபோது, இந்த படத்த யாராவது பாத்துட்டு நல்லாருக்கா? இல்லையானு சொல்லுவாங்கனு வெயிட் பண்ணி பார்த்தேன். சுக்கிரன் உச்சத்துல இல்ல போல. ட்ரிக் ஒர்க் அவுட் ஆகல. OTT ல பார்த்தாச்சு.
இவ்ளோ அனல் தெரிக்கிற வசனங்கள் கொண்ட இந்த படத்த தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிருந்தால் கண்டிப்பாக போராட்டம் வெடித்திருக்கும். OTTயில் வெளியானதால் கவண் ஈர்க்க தவறிவிட்டது.
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் படம் எடுத்த விதம் மற்றும் பேசுபொருள் இரண்டுமே அதகளம்.
முதல் பாதியில் ஹீரோவின் கலகலப்பான அலப்பறைகள். ஒவ்வொரு சீனுமே ப்ரெஷ். அதுவும் ரோகிணியின் ஜெனிலியா காமெடி சற்றும் எதிர்பார்க்காத ஆயிரம் வாலா சரவெடி. ஜாலியா ப்ரெஷ்ஷா ஒரு படம் எடுக்கமுடியுமா என்ற சவாலுக்கு பதிலாக முதல் பாதியை இயக்குனர் படைத்திருக்கிறார். இரண்டாவது பாதி முழுவதும் அரசு மற்றும் சமூகத்திற்கான சாட்டையடி. முதல் பாதியில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் இரண்டாவது பாதியில், ஆனால் முற்றிலும் வேறொரு பரிணாமத்தில், அதுவும் கனகச்சிதமாக.
ஒரு பக்கம் ஏழை சவுண்டி பிராமணன் சமூகத்தில் எதிர்கொள்ளும் இன்னல்களும் மறுபக்கம் பட்டியல் வகுப்பினர் சமூகத்தில் வதைபடும் காட்சிகள் என கொஞ்சம் சறுக்கினாலும் ஏதாவது ஒரு பக்கம் எல்லை மீறிவிடும் என்பது மாதிரியான cat on the wall திரைக்கதை. ஆனாலும் இரு பக்கமும் perfect balance. "குரல்ல தெய்வீகம் னா" என்றும் "நீ என் பிரென்ட் டா, உனக்குனா செய்றேன் கண்டாவாக்கெல்லாம் செய்ய முடியாது" என்ற இரண்டுமே தரமான கிச்சுகிச்சு சீன்ஸ். நடுவில், "உங்களுக்கும் சேர்த்துதாண்டா அவன் போராடறான்" என்று OBC க்கு ஒரு குட்டு.
ஏழை பிராமணன் என்றால் மற்றவரைக்காட்டிலும் உயிரைக்கொடுத்துதான் படிக்கவேண்டும், நாங்க போடுற காச மட்டும் ஏத்துக்குற கடவுள், நாங்க அர்ச்சனை பண்ணினா ஏத்துக்காதா, கருவறைக்கு உள்ள இருக்குறது மட்டும் தான் சாமி, மத்தவங்கள சாமின்னு கூப்பிட்றத நிறுத்துங்க, சாதிய ஒழிக்க முடியாது, அது சாமியோடு கலந்துடுச்சு போன்ற வசனங்கள் திரைக்கதைக்கு பலம். அதுவும் ரோகிணியின் பேரன் கேட்கும் "ஸ்விம்மிங் கத்துக்கிட்டவங்களாம் கடுப்பாக மாட்டாங்களா?" என்ற அந்த ஒரு கேள்விக்கு அரசாணை இயற்றிய அரசே விழிபிதுங்கும்.
பிரச்சினையை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வையும் இயக்குனர் முன்வைக்கிறார். அதாவது கோட்டா சிஸ்டத்தை பயன்படுத்தி பலனடைந்த பின்பு தங்கள் வாரிசையும் அதே கோட்டா சிஸ்டத்தில் பலனடைய செய்யக்கூடாது. அதே சாதியில் உள்ள மற்றொருவருக்கு அந்த வாய்ப்பைத்தர வேண்டும் என்பதே அது. எப்படி கடவுளுடன் சாதி கலந்துவிட்டதோ, அதுபோலவே ஆட்சியிலும் சாதி வேரூன்றிவிட்டது. சாதிமத வாரியாக கணக்கெடுத்து நடத்தப்படும் இந்த ஓட்டரசியலில் இது இந்தியாவில் எட்டாக்கனி தான்.
ஒரு சில குறைகள் தெரிந்தாலும், முதல் படத்திலேயே சொல்ல நினைத்ததை தைரியமாக சொல்லியதற்கு அதுவும் அரசுக்கு ப(பா)டம் எடுத்ததற்கு, புதுமுக இயக்குனர் பிரபு ஜெயராமனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கலாம்.
EWS மட்டுமே கோட்டா சிஸ்டமாக இருக்க வேண்டும் என்பதே இயக்குனர் மற்றும் நம்முடைய அவா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக