https://twitter.com/iParisal/status/1463394870064680963?t=w6zHqcY2Q1oWbnT8vwEjVw&s=09
முதல் மரியாதையை வேறு கோணத்தில் அணுகிய இந்த விமர்சனம் சுவாரஸ்யமாக இருக்கிறது. தேசிய விருதெல்லாம் வாங்கி எல்லோரும் கொண்டாடி அலுத்து சலித்தப்பிறகு, தூசி தட்டி மாற்றுப்பார்வையோடு தமது கருத்துக்களை முன் வைக்கிறார் விமர்சகர். வடிவுக்கரசிக்கு வக்காலத்து வாங்கலாமா இல்லையா என்று யோசித்து கொண்டிருந்த நேரத்தில், சுமார் 23 வருடங்களுக்கு முன் நான் பள்ளியில் படித்தபொழுது எழுதிய கட்டுரை நினைவலைகளில் வந்து போகிறது.
பத்து மார்க் கேள்வி என்று நினைக்கிறேன். தமிழ் பாடப்புத்தகத்தில் கதைகள் இடம்பெறும். புத்தகத்தின் கடைசி கதை அது. கதையின் கரு இதுதான். ஒரு தமிழ் புலவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். தமிழின் பால் தீரா பற்றுடையவர். ஆதலினால் தமிழை நேசிக்கும் பொருட்டு தனது மனைவி மக்களை கூட மறந்துவிடுகிறார். வீட்டை பொருளாதார ரீதியில் மற்றும் இறையாண்மையோடு(!!!) வழிநடத்தி செல்வது அவரது மனைவி. அப்படிப்பட்ட அர்ப்பணிப்போடு புலவர் தமிழை நேசித்து வளர்த்தார் என்று கதை முடிவுறும். இதை பற்றி இரு பத்திகள் மிகாமல் ஒரு கட்டுரை வரைக என்பது அந்த இறுதியாண்டு பரீட்சையின் கேள்வி.
எனக்கு அந்த கதை போன போக்கே பிடிக்கவில்லை. காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்த கேள்வி கேட்கப்படாமல் இறுதி பரீட்சையில் அந்த கேள்வி கேட்கப்பட்டது, காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல ஆகிவிட்டது. வீட்டில் குடும்பத்தை கவனிக்காமல், உன்னை நம்பி வந்தவளுக்கு சோறு போட யோக்கியதை இல்லமால், இரு உயிர்களின் உணர்வுகளை மதியாத புலவருக்கு திருமணம் ஒரு கேடா என்கிற ரீதியில் நாகரீகமாக(!!!) இருபக்கத்திற்கு பொரிந்து தள்ளிவிட்டேன். எரிகிற தீயில் என்னை ஊற்றுவது போல அந்த கதையில் ஒரு வரி கோபத்தை இன்னும் கிளறியிருந்தது. புலவர் வீட்டை விட்டு வெளிவரும்பொழுது வாசலில் இருக்கும் ரோஜாச்செடி வாடியிருக்கும். மலர்கள் தலை கவிழ்ந்து காய்ந்து போய் நிற்கும். அதை கண்டவுடன் புலவருக்கு ஒரு கவிதை தோன்றும் என்றெல்லாம் வயித்தெரிச்சலை கிளப்பியிருப்பார்கள். புலவரின் பொறுப்பற்ற இல்லற வாழ்க்கைக்கு ஒரு சோறு பதம் போல இந்த காட்சி வாசிப்பவர்களுக்கு உணர்த்துகிறது என்கிற ரீதியில் இரண்டாம் பக்கத்தில் இதற்கென்றே தனியாக ஒரு பத்தி விலாவரியாக கிளறிவிட்டிருந்தேன். தமிழ் வாத்தியார் திட்டினாலும் பரவாயில்லை என்று முடிவு செய்தாயிற்று. ஆனால் முழு ஆண்டு தேர்வின் திருத்தப்பட்ட பின்னூட்டங்கள் எப்பொழுதும் நமக்கு அளிக்கப்படுவதில்லை. அந்த பாடத்தில் தேர்ச்சியா தோல்வியா என்பதுடன் சஸ்பென்ஸ் முடிந்துவிடும். தேர்ச்சி. அவ்வளவுதான்.
முதிர்ச்சியடையாத நாட்களில் எழுதப்பெற்ற என்னுடைய முதல் விமர்சனம் என்பதால், அந்த தேர்வின் விடைத்தாளை யாரேனும் ஒரு நகல் பெற்று கொடுத்தால், கருமாத்தூர் காட்டுக்குள்ளே கறிவிருந்து அளிக்கலாம் என்ற உறுதியளிப்பை இங்கு நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக