செவ்வாய், நவம்பர் 30, 2021

மாரடைப்பு

 அதிகாலை வேளையில் உறவினரிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு என்றாலே கொஞ்சம் பதற்றம் தான். அதுவும், 'ஹலோ' என்று சொல்லுக்கு பிறகு, 'என்னாச்சு? எப்போ?' என்ற இரண்டு வார்த்தைகள் வந்தது என்றால் உறுதிப்படுத்திவிடலாம். உறவினர் மரணம். பெரும்பாலும் மாரடைப்பின் காரணமாக. 

இந்த மாரடைப்பு அதிகாலை வருவதன் காரணம், நல்ல உறக்கத்தில் இருக்கும்பொழுது 'வெடுக்' என்று படுக்கையை விட்டு எழுவதின் காரணத்தினால். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்பொழுது நாற்பத்தைந்து அல்லது அம்பது என்று இருக்கும் இதயத்துடிப்பு நாம் விருட்டென்று எழும்போது, ரத்தத்தை உடல் முழுவதும் உடனடியாக பம்ப் செய்யும் பொருட்டு வேகமாக இயங்கத்துவங்குகிறது. ஐந்தே செகண்டில் 160 km வேகத்தில் காரை இயக்குவதைப்போல. சற்றே அதிகம் வேலை பார்த்து ஓய்ந்து போன இதயம் 'முடியலப்பா, கொஞ்சம் ரெஸ்ட்' என்று நம்மை போட்டுத்தாக்கி விடுகிறது. பெரும்பாலும் வயதானவர்கள் இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைப்பதற்கான முதற் காரணம் இயற்கை உபாதையை கழிக்க. அவ்வாறு ஒரு உணர்வு வந்ததானால், முழித்தவுடன் படுக்கையிலேயே ஒரு நிமிடம் அசையாமல் படுத்திருந்து, பின் ஒரு நிமிடத்திற்கு உடலை ஒரு பக்கம் சாய்த்து படுத்து, பின் ஒரு நிமிடம் எழுந்து உட்கார்ந்து என் மூன்று நிமிடங்கள் கழித்துதான் எழுந்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சற்றே நிற்க.





கடன் திருப்பி கொடுக்கவேண்டுமே, பெண்ணின் திருமணத்தை நடத்த வேண்டுமே, பெயரன் பெயர்த்தியை கொஞ்ச முடியமா, வீட்டுக்கடன் தீருமா, மகனுக்கு வேலை கிடைக்க வேண்டுமே, குடும்ப சச்சரவுகள் தீர வேண்டுமே போன்ற எந்த கவலைக்கும் இடம் கொடுக்காமல் தூக்கத்தில் ஏற்படும் மரணம் நல்ல இறப்பு என்று மற்றவர்களால் அறியப்படுகிறது. 'அவனுக்கென்னப்பா, நிம்மதியா போய் சேந்துட்டான்' என்று வயதானவர்கள் பொறாமைக்கூடப்படுகிறார்கள்.  


ஆனால், இந்த மாரடைப்பு எப்பொழுது யாருக்கு எந்த அளவில் பாதிக்கும் என்று தெரியாத நிலையில் தான் இன்றைய வாழ்வு முறை உள்ளது. சரி, என்ன மாதிரியான முன்னேற்பாடுகள்(!!!) செய்து கொள்ளலாம்?


மணமாகாதவர் மற்றும் முப்பது வயதிற்கு கீழே என்றால் தன்னுடைய கடன் (கொடுக்கல் வாங்கல்) மற்றும் சேமிப்பு தகவல்களை நண்பர்களிடம் பெற்றோரிடம் எப்பொழுதுமே தெரிவித்து வைத்திருப்பது நல்லது. வாங்காத கடனை வாங்கினான் என்றோ, வாங்கிய கடனை மறைப்பதோ போன்ற இடர்பாடுகளை அஸ்தி கரைந்த பின்பு நாம் இல்லாத நேரத்தில் எழும் சச்சரவுகளை தவிர்க்க உதவலாம். மேலும் ஒரு டைரி போட்டு தன் குறிக்கோள் மற்றும் ஆசைகள் என்ன போன்ற இத்யாதிகளை எழுதி வந்தால் பின்னாட்களில் அதை படிப்போர் 'அடேடே', 'உச்', 'நல்ல மனுஷன்' என்று இறந்த பிறகு மட்டும் மனதார பாராட்டும் மக்களிடமிருந்து அவர்கள் கண்களில் வேர்வை துளிர்க்க வைக்கலாம். 


முப்பது முதல் ஐம்பது வயதுடையவர்கள் என்றால் சற்றே ஹை ரிஸ்க். கைக்குழந்தை முதல் பதினைந்து வயது வரை குழந்தைகள் இருப்பார்கள். முக்கியமான நிதி சார்ந்த முடிவுகளை துணையிடம் கலந்து ஆலோசித்து எடுப்பது நலம். இன்சூரன்ஸ் கட்டும் பணம் தெண்டம் என்று நினைத்தாலும், டேர்ம் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் போன்றவை குடும்பத்தை நிர்கதியாக்காமல் உதவிடும்.  ஷேர் மார்க்கெட், ம்யூஷுவல் பண்ட், எல்.ஐ.சி பாலிசி, PPF, பாண்ட் பாத்திரங்கள்,  சீட்டு போன்ற எந்த வகையான சேமிப்பு வழிகளில் பணத்தை சேமித்து வைத்திருந்தாலும் தெளிவாக அட்டவணை போட்டு சொல்லிவிடுவது உத்தமம். போலவே, எந்தெந்த வங்கியில் அக்கவுன்ட், அதற்கான கடவுச்சொல், ATM கார்ட் பின், நெட் பேங்கிங்க்  போன்றவற்றையும் பகிர்ந்துவிடவேண்டும். ஏனெனில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் தற்போதைய தேதியில் உரிமை கோரப்படாத பணம் மட்டும் தோராயமாக ஒன்றரை லட்சம் கோடி.  


ஐம்பது அறுபது வயதுடையவர்கள் என்றால் குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் அவர்களின் திருமணத்திற்கான செலவு போன்றவை முன் நின்று பயமுறுத்தும். குழந்தைகள் வயது மற்றும் மனதளவில் முதிர்ச்சி பெற்றவர்களாக இருக்கும் காரணத்தினால், நடந்தவற்றை ஏற்றுக்கொண்டு குறுகிய காலத்தில் மனதளவில் மீண்டு வந்தாலும், சரியான நிதி திட்டமிடல் இருந்தால் மட்டுமே குழந்தைகளின் எதிர்கால கனவுகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு அமையும்.  முன்சொன்னது போல எங்கெங்கு சேமிப்பு செய்திருக்கிறோம் என்பதை துணையிடமோ உற்ற நண்பர்களிடமோ பகிர்ந்துகொண்டுவிட வேண்டும்.


இருபது வயது கீழே உள்ளவர்களை பாதிக்கும் அளவுக்கு மாரடைப்பு இல்லை என்றாலும்  அன்றன்றைக்கு பிரவுசிங் ஹிஸ்டரியை மட்டும் க்ளியர் செய்து வைப்பது, 'இவனா இப்படி?' போன்ற புறம்பேச்சுக்களை தவிர்க்க உதவும்.  


எது எப்படியோ,  இந்நாளே கடைசி நாள் என்பது போல மகிழ்ச்சியாகவும் மற்றவர்களிடத்தில் அன்பைப்பரிமாறியும் நடந்து கொள்வது உகந்தது.  




கருத்துகள் இல்லை: